மகாபாரதம் 75



புதிய தோற்றம் கொள்ளும் பாண்டவர்கள்!

வனப்பர்வம் முடிந்து விராடபர்வம் துவங்குகிறது. இந்த வனப்பர்வத்தை ஆழ்ந்து படிப்பவர்கள் வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு, அதில் ஜெயிப்பதற்கு வல்லமை உடையவர்களாக இருப்பார்கள். கோபம் குறைந்து, பொறாமை அற்று, உலகத்தின் இயல்புகளை தெளிவாகப் புரிந்துகொண்டு எந்நேரமும் நிதானமாகவும், சமாதானமாகவும் இருக்கின்ற வல்லமையை பெற்றிருப்பார்கள்.

வனப்பர்வத்தை மறுபடி, மறுபடி படிக்க உலக வாழ்க்கையின் சூட்சுமங்கள் அத்தனையும் ஒருவருக்குப் புரிந்துவிடும். துன்பங்கள் என்பது பிராரப்த கர்மா. முன்வினை பயன். எனவே, மறுத்தல் தேவையில்லை. அதனால் அந்த முன்வினைப்பயன் இன்னும் அதிகமாகுமே தவிர, குறையப்போவதில்லை என்பது புரிந்துவிடும். எப்போது அந்த கர்மாவை அதாவது வினைப்பயனை ஏற்கிறோமோ, அப்போது அது துன்புறுத்தலாக, கனமாகத் தெரியாது.

அமைதியாக, அடக்கமாக இருப்பதின் தாத்பர்யத்தை விராடபர்வம் சொல்கிறது. மிகச்சிறந்த வீரர்கள், அற்புதமான புருஷர்கள், செயலில் சோர்வில்லாதவர்கள், சரியான கோபத்தை கொண்டவர்கள், அதேநேரம் அதில் எந்தக் குறைபாடும் இல்லாதவர்கள், அதை வெளிப்படுத்த நிதானம் உடையவர்கள், ஒரு க்ஷத்திரியரின் சகல நல்ல குணங்களையும் கொண்டவர்கள், யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களெல்லாம் க்ஷத்திரியர்கள்தான் - அந்த க்ஷத்திரிய குணத்தை மிகத் தெளிவாக விராடபர்வம் தெரிவிக்கும்.

திரௌபதி அருகே இருக்க பஞ்ச பாண்டவர்கள் கைகூப்பினார்கள். அதுவரை தங்களோடு வந்து போய்க்கொண்டிருந்த பிராமணர்களை ஒன்று கூட்டினார்கள்.

அவர்களை விழுந்து வணங்கினார்கள். அவர்களுக்கு அர்க்யம், பாத்யம் என்ற மரியாதைகளை செய்தார்கள். எதற்கு திடீரென்று, என்ன வேண்டும் என்பதாக பிராமணர்கள் பார்க்க, ‘‘எங்கள் வனவாசம் முடிந்தது. நாங்கள் ஒளிந்து மறைந்து வாழ்கின்ற ஒரு வருடம் நாளையிலிருந்து துவங்க இருக்கிறது. நாங்கள் இந்த சோதனையிலும் வெற்றி பெறவேண்டும். எங்கள் எதிரிகளிடம் சிக்காமல் எங்கள் ராஜ்ஜியத்தை நாங்கள் போரிட்டு மீட்க வேண்டும்.

சூதில் தோற்றதுபோல இந்த அஞ்ஞான வாசத்தில் நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டோ அல்லது எதிரிகளால் கண்காணிக்கப்பட்டோ, எங்களுடைய வனவாசம் உடைந்து விடக்கூடாது. அப்படி இந்த அஞ்ஞான வாசத்தில் துரியோதனாதிகள் எங்களை கண்டுபிடித்தால் மறுபடியும் பன்னிரண்டு வருடங்கள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். அதற்கு பதில் நாங்கள் இறந்து போகலாம்.

எனவே அந்தணர்களே, தயவுசெய்து உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி எங்களை ஆசிர்வதிக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெறுவோமா, எங்கள் ராஜ்ஜியத்தை மீட்போமா, எங்கள் கௌரவத்தை நிலைநாட்டுவோமா என்பது குறித்து எங்களிடம் சொல்ல வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே தருமபுத்திரர் மனம் கலங்கி மயங்கி விழுந்தார். அவரை பீமன் அள்ளி எடுத்து முகத்தில் நீர் தெளித்து, நெஞ்சு தடவி, நல்ல வார்த்தைகள் சொல்லி சமாதானப்படுத்தினான். அர்ஜுனன் அவருக்கு தன் காண்டீபத்தை காட்டி ஹூங்காரம் செய்தான். வெற்றி பெறுவோம் என்று அந்த குரல் அவருக்குத் தெரிவித்தது. அது நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் தந்தது.

அந்தணர்கள் வேதகோஷங்களை எழுப்பினார்கள். பரமாத்மாவை துதித்தார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்ட தருமபுத்திரர் கைகூப்பினார். அந்தணர்களில் தலைமையாக இருந்தவர் எழுந்து நின்று, ‘‘வெகு நிச்சயம் நீங்கள் ஜெயிப்பீர்கள். நீங்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். உண்மையில் அதற்காகவே இப்படிப்பட்ட வேதனைகளை தாங்கியிருக்கிறீர்கள். நீங்கள் வித்வான்கள்.

சாமார்த்தியம் உள்ளவர்கள். எங்கே, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த அஞ்ஞான வாசத்தை வெகு அழகாகத் தாண்டுவீர்கள். நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து, அமைதியான ஊராக தேர்ந்தெடுத்து அங்கே அருகருகே வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதிகம் விலகிவிட வேண்டாம்’’ என்று பேசினார்.

அந்தணர்களை வலம் வந்து பஞ்சபாண்டவர்கள் நமஸ்கரித்தார்கள். தூய்மையான மனதும், புத்திக்கூர்மையும், செயல்திறமையும் உடைய அந்த ராஜகுமாரர்கள், பலம் வாய்ந்த அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் இயல்பான குணங்களை மறைத்துக்கொண்டு பொதுமக்களில் ஒருவராக, எதுவும் அறியாதவராக, வீரம் என்பதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் வண்ணமாக விராட தேசத்தில் பிரவேசிக்க திட்டமிட்டார்கள். சுற்றி அமர்ந்து யார் யார் என்ன வேடம் என்று விவரம் சொன்னார்கள்.

‘‘தந்தத்தாலும், தங்கத்தாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பாய்ச்சிகளை கையில் வைத்துக் கொண்டு நான் விராட மன்னனுக்கு சூதாடுகின்ற தோழனாக இருப்பேன். சூதாடுகின்ற நமைச்சல் எனக்கு இன்னமும் தீரவில்லை.

 இந்த ஒரு வருடமும் இடையறாது மன்னனோடு காலையும், மாலையும் சூதாடிக்கொண்டு, அப்படி அவன் வராவிட்டால் தனியே உட்கார்ந்து சூதாடிக்கொண்டு என் பொழுதை கழித்துக்கொண்டிருப்பேன்.

எவனோ கிழவன் இடையறாது பாய்ச்சிகளோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்று என்னை ஏறிட்டும் பார்க்காமல், அனைவரும் சென்றுவிடுவார்கள். யுதிஷ்டிரன் என்கிற பஞ்சபாண்டவர்களுடைய தலைவன் இப்படியா இருப்பான் என்று கண்டுபிடிக்க முடியாதபடி நான் ஒளிந்துறை வாழ்வு செய்வேன்’’ என்று தருமபுத்திரர் சொன்னார்.

‘‘இந்த வனவாசத்தில் நான் ஒழுங்காக சாப்பிடவில்லை. எனக்கு விரும்பிய உணவு கிடைக்கவேயில்லை. ஏதோ பசியாறினேனே தவிர, விரும்பிய உணவை நான் உண்டதேயில்லை. என்னுடைய ருசி எனக்கு மறந்தே போயிற்று. இந்த ஒரு வருடம் நான் ருசித்து உண்ணவேண்டும். ஆசைதீர உண்ணவேண்டும்.

அடிக்கடி உண்ணவேண்டும். ராஜபோகமான உணவு உண்ணவேண்டும். நான் அரசனுக்கு உணவு சமைப்பவனாக இருந்து அவ்வப்போது எனக்காகவும் சமைத்துக் கொள்வேன். இன்னொருவர் சமைத்து உண்பதைவிட நல்ல ருசியாக சாப்பிடுபவன் தனக்குத்தானே சமைத்துக் கொண்டு உண்ணுவதுதான் சிறந்ததாக இருக்கும்.

 நான் அப்படிப்பட்ட சமையற்காரனாக விராட தேசத்து அரண்மனையில் அரசனுக்குத் தகுந்த சமையல்காரனாக இருப்பேன். போய் கை கட்டி கூனிக் குறுகி நின்று, நான் நல்லதொரு சமையற்காரன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன்.

எங்கே சமைத்துக் கொண்டு வா என்று சொன்னால் அரை நாழிகையில் சமைத்துப் போடுவேன். சமையல் பண்டத்தின் வாசனையாலும், மொடமொடப்பாலும், அது நெய்யில் ஊறி மிதப்பது பார்த்தும் அவர்கள் ஆவலாக கைவைப்பார்கள். உண்ட பிறகு வாய்விட்டு பாராட்டுவார்கள். பிறகு என்னை விடவே மாட்டார்கள்,’’ என்று சொல்லி பீமன் உரக்கச் சிரித்தான். எல்லோரும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டார்கள்.

‘‘எனக்கு ஒரு சாபம் இருக்கிறது. நான் இஷ்டப்பட்ட நேரத்தில் அந்த சாபத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு கந்தர்வியை நான் புறக்கணித்தேன். உன்னில் மோகவசப்பட்ட பெண்ணை புறக்கணிப்பது பாவம் என்று உனக்குத் தெரியவில்லையா, கூடலுக்கு வா என்று கெஞ்சிக் கேட்கிற பெண்ணை புறக்கணிப்பது அதர்மம் அல்லவா, அது துரோகம் அல்லவா.

வெட்கத்தை விட்டு ஒரு பெண் தன்னை வெளிப்படுத்துகிறபோது அதைப் பூர்த்தி செய்யாமல் அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவது கேவலமல்லவா. அவள் எவ்வளவு துடித்துப் போவாள். உன் பௌருஷத்தின் மீது கர்வம் கொண்டுதானே என்னை புறக்கணிக்கிறாய். உன் அழகுக்கு நான் ஈடில்லை என்றுதானே என்னை புறக்கணிக்கிறாய். அர்ஜுனா, நீ என்னை புறக்கணித்ததால் அவமானப்படுத்தியதால் அலியாகப் போவாய் என்று சாபமிட்டாள். நான் தவித்துப் போனேன்.

மனம் கலங்கினேன். என்மீது காதல்கொண்ட அவள் இரக்கப்பட்டாள். சரி, இது உடனடியாக நிகழ வேண்டாம். எப்பொழுது விரும்புகிறாயோ, அப்பொழுது ஒரு வருட காலம் மட்டும் நீ அவ்விதம் ஆணும் அற்ற, பெண்ணும் அற்ற ஒரு நிலையில் இருப்பாய். உன் உடம்பு ஆணாக இருந்தாலும் உன் அசைவுகள் பெண்ணாக இருக்கும். உன் குரல் பெண்ணாக மாறும்.

உன்னுடைய நடையும், உடையும், விருப்பங்களும் பெண்ணுடைய விருப்பங்களாக இருக்கும். ஒரு வருடம் கழித்து நீ மறுபடியும் உன்னுடைய பழைய நிலைக்கு வருவாய். விருப்பம் தெரிவித்த பெண்ணை ஒருபொழுதும் விலக்காதே என்று சொல்லி மறைந்தாள். இதோ விராடதேசத்தில் நான் என்னை முற்றிலும் மறைத்துக் கொள்ள அதுதான் நல்ல சந்தர்ப்பம். இல்லையெனில் என்னுடைய பௌருஷத்தில் ஈடுபட்டு வேறு யாராவது என்மீது நாட்டம் கொள்வார் என்றால், நான் யார் என்பது தெரிந்துபோகும்.

அல்லது நானே என்னுடைய புத்தியின் தடுமாற்றத்தால் அழகிய பெண்ணைப் பார்த்து மயங்கினால் அப்போதும் என் இருப்பு தெரிந்து போகும். அர்ஜுனனா பெண் வேடம் இட்டு இருப்பது என்று எவரும் நினைக்க மாட்டார்கள். சந்தேகம் வராது. இதைவிட நான் ஒளிந்து கொள்ள மிகச் சிறந்த வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை,’’ என்றான் அர்ஜுனன்.

திரௌபதி முகம் பொத்திக்கொண்டு அழுதாள். மிகுந்த அழகானவனும், திறமையானவனும், புத்திக் கூர்மையுள்ளவனும், விவேகமுள்ளவனும், வீரமுள்ளவனுமான அந்த இளைஞன் தன்னை அதற்கு நேர்பதமான ஒரு பெண்ணைப்போல முழுவதும் பெண்மை இல்லாத பெண் சாயல் உள்ள ஆணைப்போல இருக்கப் போகிறான் என்பது அவளுக்கு துக்கத்தை கொடுத்தது. ‘‘சௌந்தரி, அழாதே. இதை சாபமாகவே நான் நினைக்கவில்லை.

இந்த நேரத்தில் இது எனக்கு வரம். அந்த தேவதையை நான் மனதாற வணங்குகின்றேன். அவளை வாழ்த்துகின்றேன். இவையெல்லாமே திட்டமிடப்பட்டு நடந்ததோ என்று சந்தேகிக்கின்றேன். வேறு எந்தவிதமாக என்னை மறைத்துக் கொண்டாலும் அது வெளியே தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆணும், பெண்ணுமற்ற இந்த அலித்தன்மையை நான் ஏற்று நடந்து கொண்டால் அது எவருக்கும் நெல்முனையளவும் சந்தேகம் வராது.

‘‘எங்கள் ஐவரில் துரியோதனனின் ஒற்றர்கள் என்னைத்தான் தேடுவார்கள். எவனாவது வில் வீரன் இருக்கிறானா என்று தேடுவார்கள். நான் எங்கேனும் ஒரு மரத்தின் உச்சியில் நம்முடைய ஆயுதங்களை நான் கட்டிவிட்டு பெண்களுக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு லேசாக ரோமங்கள் முளைத்த முகத்துடன், கனத்த பெண் குரலுடன், பெண் உடை உடுத்தி, ஒயிலாக நடந்து செல்வேன். எத்தனை பெண்களை நான் நேசித்திருக்கிறேன்.

இந்த சமயத்தில் என்னுடைய நடவடிக்கைகள் மூலம் அவர்களை நினைத்துக் கொள்வேன். இந்தப்பெண் இப்படி உட்கார்ந்தாள். அந்தப் பெண் அப்படி ஆடினாள். இவள் இப்படி பாடினாள். இவள் இப்படி உடுத்திக் கொண்டாள் என்றெல்லாம் ஒவ்வொரு செய்கையின் போதும் அந்தப் பெண்களை நான் மனதுக்குள் ஸ்வீகரிப்பேன். வாழ்த்துவேன். சௌந்தரி, இது எனக்கு அவமானம் என்று கருதாதே. எனக்கு கிடைத்த மிகப்பெறும் பேறு என்று தான் நான் கருதுகிறேன்,’’ அர்ஜுனன் அவளை அமைதிப்படுத்தினான்.

அர்ஜுனன் சந்தோஷமாகச் சொல்ல, நான்கு சகோதரர்களும் நீண்ட நெடிய பெருமூச்சு விட்டார்கள். தங்களின் கதாநாயகனான அர்ஜுனன் கற்பனைக்கு எட்டாத ஒரு அலித்தன்மை வாய்ந்த ஆணாக நடக்கப் போகிறான் என்பதை யோசித்து அவர்களுக்கு வேதனையாக இருந்தது. ‘‘நான் குதிரைகளை கவனித்துக் கொள்வேன். இந்த வனத்தில் குதிரைகளோடு பழக்கமில்லை. நடந்தே பல தூரங்கள் போக வேண்டியிருந்தது. குதிரைகளை கண்டவுடனே என் மனம் உற்சாகத்தில் ஆழ்ந்துவிடும்.

உடனே தாவி அமரவும், அவற்றை விரட்டிக்கொண்டு போகவும் மனம் துடிதுடிக்கும். ஜெயத்ரதன் மூலமாக தேரும், குதிரைகளும் கிடைத்தன. அவை போதவில்லை. ஆயிரம் ஆயிரம் குதிரைகள் இருக்கின்ற பண்ணைக்குள் அந்த குதிரைகளின் வாசனையை முகர்ந்துகொண்டே, அவற்றை தடவிக் கொண்டே, நான் போகவேண்டும்.

அந்த எண்ணம் ஒரு வெறியாக என் உடம்பில் இருக்கிறது. ஒரு குதிரைக்காரனை நகுலன் என்று யார் சந்தேகப்படுவார்கள்? யார் வந்து குதிரைக் கொட்டகையில் பஞ்சபாண்டவர்களை தேடுவார்கள். எனவே, நான் ஒளிவதற்கு அதுவே சரியான இடம்.” என்றான் நகுலன்.

‘‘ஞானத்தில் சிறந்தவனே, ஜோதிடத்தில் வல்லவனே, நாள் கணக்கும், நட்சத்திர கணக்கும் துல்லியமாக நெஞ்சில் தரித்துக் கொண்டிருப்பவனே, உன் ஞானத்திற்கு முன்பு என்ன வேடம் பூண்டாலும் தெரியுமடா. என்ன செய்யப் போகிறாய்?” சகாதேவனைப் பார்த்துக் கேட்டார் தருமர்.
‘‘பசுக்கொட்டில். அதுதான் என் இடம். பசுவை பார்க்க வருபவர்கள் ஒருபொழுதும் பசுவை விட்டுப் பராமரிக்கிறவனை பார்க்கமாட்டார்கள். பசு லக்ஷ்மிகரமான விஷயம். அது பார்க்கிறவரை கவர்ந்துவிடும்.

பசுவின் மேலிருந்து கண்ணை எடுக்க முடியாது. பசுவை பராமரிக்கிறவன் முக்கியமாகப்படாது. இந்த பசுவிலிருந்து அந்த பசுவிற்கு, அந்த பசுவிலிருந்து இன்னொரு பசுவிற்கு என்று கண்கள் தாவுமே தவிர, பசுவிற்கு கீரை நறுக்கிப் போடுகிறவனை மக்கள் கவனிக்க மாட்டார்கள். எனவே, நான் பசுக் கொட்டிலில் ஒரு மேய்ப்பவனாக, பராமரிப்பவனாக, பெருக்கி சுத்தம் செய்பவனாக, அவற்றைக் குளிப்பாட்டி குதூகலப்படுத்துபவனாக இருக்கிறேன்,” என்றான் சகாதேவன்.

‘‘ஞானமுள்ளவனே, நீ ராஜகுமாரனடா” தருமபுத்திரர் கண்ணில் நீர் வழிய பேசினார். ‘‘யாராக இருந்தாலும் பசு செல்வமல்லவா. க்ஷத்திரியனோ, வைசியனோ, பிராமணனோ அவன் வாழ்வின் ஆதாரம் பசுக்கள்தானே.

அந்தப் பசுக்களை நான் நேசிக்கிறேன். அவற்றுக்கு நடுவே வாழப்போகிறேன் என்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னைப் பற்றிய கவலையை விடுங்கள். நீங்களே அந்தப் பக்கம் வந்தால்கூட என்னை கண்டுகொள்ள முடியாது’’ என்று சொல்லி கண் சிமிட்டினான். அவன் குதூகலத்தை எண்ணி அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள்.

‘‘சௌந்தரி, அற்புதமானவளே, மிக வலிவான ஐந்து புருஷர்களுக்கு மனைவியாக இருந்தும் உன்னை காப்பாற்றிக்கொள்ள நீ என்ன செய்யப் போகிறாய்? நீ இருக்கும் இடத்தில்தான் நாங்கள் இருப்போம் என்று தெரிந்து கொண்டு உன்னை எளிதாக துரியோதனன் கண்டுகொள்வான்.

அர்ஜுனனுக்கு வலைவீசு. அப்படி இல்லையென்றால் திரௌபதி எங்கே என்று பார் என்று உங்கள் இருவரையும்தான் மையமாக வைத்து ஒற்றர்களை தேடச் சொல்வான். நீ என்னவாக இருப்பாய் ராஜகுமாரி?’’ என்று தருமர்  பிரியத்தோடு கேட்டார்.

‘‘இந்த ராஜகுமாரி ஒரு வேலைக்காரியாக இருப்பாள்,’’ என்று திரௌபதி சொன்னதும் அவர்கள் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்கள். மலை முகட்டையும், வானத்தையும், மரத்தின் உச்சியையும் கவனித்தார்கள். பொங்கி வரும் அழுகையை மூக்கு உறிஞ்சியும், தொண்டையை செருமியும் குறைத்துக்கொண்டார்கள்.

ஆயினும் அழுதார்கள். புருஷர்கள் கவலைப்படுவதைப் பார்த்து திரௌபதி குதூகலமடைந்தாள். அவர்கள் ஐந்து பேரும் மகாவீரர்கள். மகாரதிகள். அவர்கள் ஐந்து பேரும் தன்னை எத்துனை வேகமாக நேசிக்கிறார்கள். தன்னைப்பற்றி எப்படி கவலைப்படுகிறார்கள் என்பதில் பெரும் நெகிழ்ச்சியடைந்தாள். நிறைவடைந்தாள்.

தனக்காகத் தன் புருஷன் வருத்தப்படுகிறான் என்பது எந்தப் பெண்ணுக்கும் மிகப் பெரிய ஆறுதல். அது பரிசுபோல ஒரு ஆனந்தம். அந்த ஆதரவு அவள் மனதை விட்டு நீங்காது இருக்கும். அவன் புருஷன்பால் மிகுந்த ஈடுபாடு ஏற்படும். ஒன்றுக்கு ஐந்து புருஷர்கள் உள்ள திரௌபதி தன்னுடைய கணவர்கள் அத்தனை பேரும் முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து கைகொட்டி கலகலவெனச் சிரித்தாள்.

‘‘இது என்ன, எதற்கு எல்லோரும் முகத்தை தூக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? நான் வேலை செய்வது உங்களுக்குத் தெரியாதா. உங்களுக்கு சிஷ்ருஷை செய்யவில்லையா. உங்களுக்கு பாலும் பழமும் எடுத்து வரவில்லையா. உங்களுக்கு கால் பிடித்து விடவில்லையா.

உங்களுக்கு குளிப்பதற்கு நீர் எடுத்து வைக்கவில்லையா. உங்களுக்கு முதுகு தேய்த்து விடவில்லையா. உங்களுக்குச் செய்வதுபோன்ற அதே சிஷ்ருஷையை விராடதேசத்து மன்னனின் மனைவிக்கோ, மகளுக்கோ செய்யப் போகிறேன். விராட தேசத்து மன்னனின் மனைவி மிக நல்லவள். மிக அமைதியானவள்.

வேலைக்காரர்களை மதிப்பவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அரசனும், அரசியும் உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் மரியாதை செய்கின்ற குணம் உடையவர்கள். என்னை எப்படி நிந்திப்பார்கள். எவ்விதம் வேதனைப்படுத்துவார்கள். அம்மாதிரியான மனோநிலையில் நான் இருக்க மாட்டேன்.

‘‘எத்தனை பேர் எனக்கு வேலை செய்திருக்கிறார்கள். எத்தனை தாதிகள் நான் சிறப்பாக வாழ உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பெல்லாம் என் நெஞ்சுள் இருக்கிறது. அவர்களில் சிறந்தவர்களெல்லாம் எனக்கு நல்ல சிநேகிதர்கள்.

அவர்களை நினைத்துக் கொண்டு அவர்கள் எப்படி எனக்கு உதவி செய்தார்களோ, அதேபோல நானும் விராட தேசத்து மன்னனின் மனைவிக்கு என்னுடைய பராமரிப்பைச் செய்வேன். திரௌபதியா, அவள் அரசகுமாரி அல்லவா.

இடதிலே இருக்கும் பொருளை வலதிலே வைக்கக்கூட அவள் ஆளைத் தேடுவாளே என்று மக்கள் நினைத்திருக்க, நம் எதிரிகள் யோசித்திருக்க, நான் சாதாரண உடையில் விராட தேசத்து மன்னனின் மனைவியின் அறையை பெருக்கிக் கொண்டும், ஆசனங்களை துடைத்துக் கொண்டும், அவளுக்கு கையில் சித்திரம் எழுதியும், கண்ணுக்கு மை இட்டும், தலைவாரி பின்னியும் இருப்பதை கவனிப்பார்களா என்ன?

‘‘இல்லை. நான் அப்படி இருப்பதுதான் சிறந்தது. என் மூலம் உங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. நாம் இருப்பது தெரிந்து விடக்கூடாது. உங்களை எல்லாம்விட நான் கவனமாக பாதுகாப்பாக இருப்பேன். வேறு எந்த இடத்தையும்விட விராட தேசத்தின் ராணி இடம்தான் பாதுகாப்பானது. அது மிக சௌகரியமான சுதந்திரமான இடம்.

அங்கே நான் எனக்கென்று ஒதுக்கப்பட்ட பஞ்சணையில் சுகமாக உறங்குவேன். மண்தரையிலும், புல்தரையிலும், மரக்கட்டை மீதும் தூங்கி பழக்கமான எனக்கு அந்த பஞ்சணை மிகப்பெரிய சுகமாக இருக்கும்.

நல்ல உணவு என்னை மறுபடியும் கம்பீரமாக்கும். உடம்புக்கு தடவும் எண்ணெய் போன்ற பொருட்களும், அலங்கரித்துக் கொள்ள வேண்டிய விஷயங்களும் அங்கு நிரம்பக் கிடைக்கும். நல்ல வேலைக்காரிக்கு அரசியர்கள் அதை அள்ளிக் கொடுப்பார்கள். நான் ராஜகுமாரி என்றாலும் அந்த கர்வத்தை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஒரு வேலைக்காரியைப்போல விராடதேசத்தில் இருப்பேன்.

என்னை நீங்கள் வாழ்த்த வேண்டும். நீங்கள் எல்லோரும் அருகில் இருக்கிறீர்கள் என்ற எண்ணமே எனக்கு நிம்மதியான தூக்கத்தையும், நல்ல பசியையும் கொடுக்கும். பசித்து உண்டு, அயர்ந்து தூங்கி நான் முன்னிலும் எழில் பெற்றவளாவேன். ஆனால், அதிகம் சிங்காரித்துக் கொள்ளாமல், உரத்துப் பேசாமல், அலட்டிக் நடக்காமல் ஒரு வேலைக்காரியைப் போலவே அமைதியாக இருப்பேன்’’ என்று சொன்னாள்.

அவர்கள் திரௌபதியை நோக்கி  கை கூப்பினார்கள். அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோதனைக் காலம். அவர்கள் மிகுந்த ஒற்றுமையோடும், ஒருவர் மீது ஒருவர் பற்றுதலோடும், பாசத்தோடும் அந்த காலத்தை கடக்க முடிவு செய்தார்கள். ‘‘அரசன் இருக்கும் இடத்தில்தானே அரசி இருக்க முடியும். அரசி இருக்கும் இடத்தில்தானே நீயும் இருப்பாய்’’ என்று தருமபுத்திரர் சமாதானமானார்.

‘‘யாராக இருந்தாலும் சமையலறை பக்கம் வரவேண்டும் அல்லவா. சமையல்காரன் சாப்பாடு கூட்டத்திற்கு போக வேண்டுமல்லவா. சமையற்கூடத்திற்கு அரசனும் அரசியும் வரும்போது நீயும் வருவாயல்லவா. அப்பொழுது உன்னை தரிசிப்பேனே’’ என்று பீமன் சமாதானப்படுத்திக் கொண்டான்.

(தொடரும்)