எலும்பு அறுவை சிகிச்சையை செவ்வாய்க்கிழமையில் செய்தால் நல்லது என்கிறார்களே, சரியா?



செவ்வாய்கிழமையில் எலும்பு சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்வது நல்லதே. எலும்பு மஜ்ஜை சம்பந்தமான அறுவை சிகிச்சைகளை சனிக்கிழமையிலும், எலும்போடு நரம்புகளும் தொடர்பு கொள்ளும் அறுவை சிகிச்சைகளை புதன்கிழமையிலும் செய்யலாம்.

ஆனால் அந்த நாட்கள் நோயாளிக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாட்களாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் இதுபோன்ற விதிகளை அவசர சிகிச்சை காலத்தில் பார்க்கக்கூடாது. உயிருக்கு பாதிப்பு இல்லாதவகையில், செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். ? சில பிரபலமானவர்கள் தம் கணவர் மறைவுக்குப் பின்னரும் பூவும் பொட்டும் வைத்துக் கொள்கிறார்களே! - கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி-17.

பிரபலமானவர்கள்தான் என்றில்லை, சமுதாயத்தில் பல பெண்கள், கணவனை இழந்திருந்தாலும் பூவும், பொட்டும் வைத்துக்கொள்கிறார்கள். இந்தப் பெண்களுக்குத் தம் கணவர்மீது நிச்சயம் மரியாதை உண்டு.

எனக்குத் தெரிந்த குடும்பத்து நபர் ஒருவர், தான் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு முன்னால் தனது மனைவியிடம் தான் இறந்த பின்னும் தொடர்ந்து பூவையும், பொட்டையும் வைத்துக்கொண்டால்தான் தனது ஆத்மா சாந்தியடையும் என்று சொன்னதன் பேரில், தான் விரும்பாவிட்டாலும், தனது கணவனின் ஆணைக்கு உட்பட்டு இன்றுவரை தொடர்ந்து இந்த மங்கலச் சின்னங்களை தரித்து வருகிறார். இது சரிதானா என்று விவாதிக்குமுன் பூவும், பொட்டும் கணவனுக்கு உரியதா என்பதைப் பற்றி யோசிப்போம்.

 பூவும், பொட்டும் கணவனுக்கு உரியது, சுமங்கலிப் பெண்கள் மட்டுமே இவற்றை சூடிக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டால், திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் இவற்றை அணியக்கூடாதா என்ற கேள்வி எழும். திருமணம் ஆகாமல், காலமெல்லாம் கன்னியாக வாழும் பெண்கள் பூவையும், பொட்டையும் வைத்துக்கொள்ளலாம் எனும்போது, அவை இரண்டும் கணவருக்குரியது என்பது எப்படி சரியாகும்? அதேபோல விவாகரத்து ஆன பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும்கூட பூ-பொட்டு அணிகிறார்கள்.

ஆக, கணவருக்கும், பெண்கள் பூ, பொட்டு வைத்துக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. திருமணமான சில பெண்கள் தம் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதோடு, நெற்றியின் வகிட்டிலும் குங்குமத்தை இட்டுக் கொள்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்ளும் பெண்களும் இவ்வாறு செய்கிறார்கள்.

ஆக, கணவனுக்கும், நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் கூடுதல் பொட்டிற்கும் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது என்றே சொல்லலாம். கைம்பெண்கள் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதில்லை. பெண்களின் வயதிற்கும், பூ, பொட்டு வைத்துக் கொள்வதற்கும் சம்பந்தமுண்டா? நிச்சயமாக இல்லை.

 இந்தப் பழக்கத்திற்கு தர்மசாஸ்திரம் சொல்லும் விதிமுறைகள் என்னென்ன? ஆண்களுக்கு பிரம்மச்சரியம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம் என்ற நான்கு நிலைகள் உண்டு. ஹிந்து தர்மத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு நேரடியாக சந்யாச அதிகாரம் கிடையாது. பெண்களுக்கு கன்னிகை, சுமங்கலி ஆகிய இரண்டு நிலைகளும், அதற்கு அடுத்தபடியாக கணவனை இழந்தோருக்கு கைம்பெண் என்ற நிலையும் மட்டுமே உண்டு.

 இவற்றில் முதல் இரண்டு நிலைகளுக்கு உரிய அடையாளச் சின்னங்களாக வண்ண ஆடைகள், அலங்காரங்கள், அறுசுவை உணவுகள், தாம்பூலம் தரித்தல் என்ற விதிகள் உண்டு. இந்த இரண்டு நிலைகளையும் கடந்து, கைம்பெண்ணிற்கு மட்டுமே சந்யாச அதிகாரம் வந்து சேர்கிறது. சுமங்கலியாக வாழும் பெண், கணவன் உயிருடன் இருக்கும்வரை தான் விரும்பினாலும் சந்யாச யோகத்தை அடைய இயலாது.

அதேபோல ஒரு கன்னிகையும் நேரடியாக சந்யாச யோகத்தைப் பெற இயலாது. ஆக, ஒரு பெண் சந்யாச யோகத்தை கடைபிடித்து அதன் மூலமாக முக்திக்கு வழிதேட முயற்சிக்க வேண்டுமென்றால் அதற்கு அவள் கைம்பெண்ணாக இருந்தால் மட்டுமே முடியும்.

ஒரு ஆண் சந்யாசி எந்த கோலத்தில் வாழ வேண்டுமோ, அதே விதிமுறைகள்தான் சந்யாச யோகத்தை மேற்கொள்ளும் பெண்ணிற்கும் சொல்லப்பட்டுள்ளது. மொட்டைத்தலை, திருநீறு, காவி வஸ்திரம், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களைத் துறத்தல், புஷ்ப மாலைகளை அணியாதிருத்தல் (சந்யாசிகளுக்கு புஷ்ப மாலை அணிவிக்கக் கூடாது), உணவுக்கட்டுப்பாடு போன்றவை அந்த நிலைக்கான விதிகள்.

ஒரு பள்ளி மாணவன் எவ்வாறு அந்தப் பள்ளியின் சீருடையை அணிந்துகொள்ள வேண்டியது கட்டாயமோ, அவ்வாறே சந்யாச யோகத்தை மேற்கொள்வோரும் இந்த அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதாவது, சந்யாச மார்க்கம் மூலமாக இறைவனிடம் பக்தி கொண்டு முக்தி தேட விரும்பும் பெண்களுக்கு மாத்திரமே இந்த கோலம் விதிக்கப்பட்டுள்ளதே தவிர, எல்லா கைம்பெண்களும் இத்தகைய கோலத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு.

முக்கியமாக இளம் வயதில் கணவனைப் பறிகொடுத்த பெண்ணை, ஆசாபாசத்தைத் துறந்து சந்யாசம் மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது பெருந்தவறு. கணவனின் மீது மரியாதை இருந்தாலும், இளம்வயதிலேயே கைம்பெண் ஆகவேண்டியிருப்பின், தனது பிள்ளைகளை வளர்க்கும் கடமையை ஒரு பெண் நிறைவேற்ற வேண்டியிருப்பதால், அவளால் சந்யாச யோகத்திற்குள் நுழைய முடிவதில்லை.

பந்தபாசத்தினை முற்றிலுமாகத் துறந்து இல்லற தர்மத்தில் இருந்து வெளியில் வருகின்ற அதிகாரம் கைம்பெண்ணுக்கு மட்டும்தான் உண்டு, அவ்வாறு இல்லற தர்மத்தைத் துறக்க எந்த ஒரு கைம்பெண் விரும்புகிறாரோ, எந்த ஒரு பெண் சந்யாசத்தை ஏற்றுக்கொள்ள விழைகிறாரோ அவர் மட்டும் அதற்குரிய விதிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதே சரி.

ஆக, கணவனை இழந்த பெண்கள் பூ, பொட்டு வைத்துக்கொள்வது, அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதே அன்றி, இந்த விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. பந்தபாசத்தை விடாதவரை அவர்கள் அவ்வாறு பூ, பொட்டு வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

தெய்வ நம்பிக்கை இருந்தால் வெற்றி உறுதி என்கிறார்கள் அப்படியானால் ஜோதிட நம்பிக்கை கூடாதா? ஜோதிடம் வேறு, தெய்வம் வேறா?
- நாராயணன், மயிலாடுதுறை.

நிச்சயமாக. ஜோதிடம் வேறு, தெய்வம் வேறு. ஜோதிடம், அறிவியல், தெய்வம், ஆன்மிகம். ஆன்மிகத்தையும், அறிவியலையும் இணைக்கும் பாலம்தான் ஜோதிடம். ‘ஜோதிடர்கள் பொய்யாகலாம், ஜோதிடம் பொய்யாகாது’ என்பார்கள் விவரம் அறிந்தவர்கள். அறிவியலை ஆழ்ந்து படித்தவர்கள் ஜோதிடத்தை நம்புவார்கள்.

எந்தவொரு அறிவியலையும் மனிதனால் புதிதாக உருவாக்க முடியாது. இயற்கையாக அமைந்திருக்கும் பொருட்களை ஆராய்வதால்தான் Physics பாடத்தினை இயற்பியல் என்று அழைக்கிறோம். இந்த இயற்பியலோடு தொடர்புடையதுதான் ஜோதிடமும். ஜோதிடம் அல்லது ஜ்யோதிஷம் என்ற வார்த்தைக்கு ஒளியியல் அல்லது ஒளி சார்ந்த அறிவியல் என்று பொருள்.

வானசாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கோளுக்கும், நட்சத்திரக் கூட்டங்களுக்கும் ஒளி உண்டு. கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது மனிதர்களின் மீது தமது தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய தாக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் நடவடிக்கை அமையும் என்பதே ஜோதிடத்தின் அடிப்படைக் கருத்து.

ஆக, ஜோதிடம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்த உலகத்தில் உயிர்வாழும் மனிதர்களுக்கு அறிவியல் எப்படி பொதுவானதோ, அதைப்போல ஜோதிடமும் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. ஜோதிடம் மூலம், தனக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை அறிந்துகொள்ளும் மனிதன், அவற்றுக்குத் தீர்வுகாண முற்படும்போதுதான் ஆன்மிகம் அறிவியலுக்குள் நுழைகிறது.

பிரச்னையைத் தீர்க்க கடவுளால் மட்டும்தான் முடியும் என்ற தெய்வ நம்பிக்கையால் அவரவருக்குப் பிடித்தமான கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். தான் சார்ந்த மத நம்பிக்கைக்கு உட்பட்டு பரிகாரம் செய்கிறார்கள்.

அதாவது, மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் தரப்படும் ரிசல்ட்தான் ஜாதகக் கணிப்பு எனலாம்! அந்த ரிசல்ட்டின் உதவியுடன் தனது உடல் உபாதைகளை அறிந்துகொள்ளும் மனிதன் அதற்குரிய மருந்துகளைச் சாப்பிட்டு சரிசெய்து கொள்ளும் முறைதான் பரிகாரம்! மருத்துவத்தில் அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபங்சர் என பல துறைகள் இருப்பதுபோல, பரிகார முறைகளும் மாறுபடுகின்றன. அவரவருக்கு பிடித்த முறையைப் பின்பற்றுகிறார்கள்.

ஜோதிடமும் மற்ற அறிவியல் பிரிவுகளைப் போல, கடவுளின் கட்டுப்பாட்டிற்குள் வரும் ஒரு துறைதான் என்பதால், தெய்வ நம்பிக்கை இருந்தால் வெற்றி உறுதி என்ற கருத்து முற்றிலும் உண்மையானதே. அதேநேரத்தில் ஜோதிட நம்பிக்கை வேண்டுமா, கூடாதா என்பது அவரவர் புரிந்துகொள்ளும் தன்மைக்கு உட்பட்டது. அறிவியலை நம்புபவர்கள் ஜோதிடத்தையும் நம்புவார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை.

ராசிபலன்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடுமா? இருவருக்கும் ஒன்றுதானா? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ராசிபலன்கள், ஆண், பெண் இருபாலாருக்கும் ஒன்றே. கிரஹங்களின் செயல்கள் ஆணுக்கு ஒருவாறாகவும், பெண்ணுக்கு வேறுமாதிரியாகவும் அமைவதில்லை. ஜாதகத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களும் அவ்வாறே பலன் அளிக்கின்றன. ஆண்-பெண்ணுக்குரிய கடமைகளுக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களில் லேசான மாற்றம் இருக்கலாமே தவிர, ஆண்களுக்குத் தனியாகவும், பெண்ணிற்குத் தனியாகவும் ராசிபலன்கள் அமைவதில்லை. 

உலகில் நல்லவர்கள் அதிகமா? தீயவர்கள் அதிகமா? - சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

FOR EVERY ACTION, THERE IS EQUAL AND OPPOSITE  REACTION என்பது நியூட்டனின் முன்றாம் விதி. இந்த அறிவியல் விதி இயற்கையின் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்திற்கும் பொருந்தும். இரவு-பகல், இன்பம்-துன்பம், வெயில்-மழை, நன்மை-தீமை போன்ற இருவேறு துருவங்கள் எவ்வாறு இந்த உலகில் நிறைந்திருக்கிறதோ, அவ்வாறே நல்லவர்களும், தீயவர்களும் இந்த உலகில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் வெயில் அதிகமாகவும், மழை குறைவாகவும் இருக்கலாம், பகல் பொழுது அதிகமாகவும், இரவு பொழுது குறைவாக அமையலாம், ஆனால் பொதுவாக, இந்த இரண்டு துருவங்களும் சம அளவில்தான் இந்த உலகில் இடம்பிடித்திருக்கின்றன.

இந்த அடிப்படை விதிப்படி, உலகில் நல்லவர்களும், தீயவர்களும் சம அளவில் உள்ளார்கள் என்பதே உண்மை. நம் பாரத தேசம், ஒரு புண்ணிய பூமி என்பதால் இங்கே நல்லவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பது நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

வலம்புரி சங்கிகை வீடு, கடைகளில் வைத்து பூஜிக்கலாமா? - இரா.வைரமுத்து, ராயபுரம்.

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிக்கலாம். வலம்புரி சங்கு வழிபாட்டிற்கு ஆசார, அனுஷ்டானங்கள் தேவை என்பதால், நான்குபேர் வந்து செல்லும் கடையில் வைப்பதைவிட, நம் வீட்டுப் பூஜையறையில் வைத்து தினசரி பூஜை செய்து வருவதே நல்லது. தெய்வ விக்கிரகங்களைப் போலவே வலம்புரி சங்கும் பூஜைக்கு உரியது... வலம்புரி சங்கு வைத்து பூஜிக்கும் வீட்டில் உள்ளவர்களை நோய் நொடிகள் அண்டாது.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு எந்தவிதமான தோஷங்களும் கிடையாது என்று சொல்கிறார்களே... இதில் பிதுர் தோஷமும் அடக்கமா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும். - என்.லட்சுமணன், திருவண்ணாமலை.

இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு, ஆணானாலும், பெண்ணானாலும், திருமணப் பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் விதி இருக்கிறதே தவிர, இவர்களை எந்த தோஷமும் அண்டாது என்று விதி இல்லை. யோகங்களும், தோஷங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. ஏனைய அனைவரையும் போல சுவாதி நட்சத்திரக்காரர்களும் பாதிக்கப்படுவர். இவற்றில் பித்ருதோஷமும் அடங்கும்.

இறந்தவர் படத்தைக் கிழக்கு நோக்கி வைக்கலாமா? சிலர் வைக்கக்கூடாது என்கிறார்களே! - கே.விஸ்வநாத், அல்சூர்.

இறந்தவர் படத்தை எந்த திசை நோக்கியும் வைக்கலாம். தெற்கு என்பது இறந்தோர் ‘வாழும்’ உலகம் இருக்கும் திசை, அதாவது யமலோகம் இருக்கும் திசை. அந்தத் திசை நோக்கித்தான் இறந்தவர் படத்தை வைக்கவேண்டும் என்று சொல்வது தவறானது. இறந்தவர் படத்தை கிழக்கு நோக்கி வைப்பதில் தவறில்லை.

ஆனால் இறந்தவர் படத்தை இறைவனோடு சேர்த்து பூஜை அறையில் வைப்பதுதான் தவறு. பூஜையறையில் இறைவனின் உருவங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும். நம் முன்னோர் படங்களை, பூஜையறை தவிர்த்து மற்ற இடங்களில் எந்தத் திசை நோக்கியும் வைக்கலாம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? - வா.சியாமளா, வந்தவாசி.

MARRIAGES ARE MADE IN HEAVEN  என்பதன் தமிழாக்கமே, திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிற சொற்றொடர். ஹிந்து தர்ம சாஸ்திரத்தில் இந்த சொற்றொடர் எங்கும் காணப்படவில்லை. ஹிந்து தர்மத்தைப் பொறுத்தவரை சொர்க்கத்தை அடைவதற்கான ஒருவழிதான், திருமணம் என்பது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தனக்குரிய கடமையைச் சரிவர செய்வதற்கு உரிய பாதையை வகுத்துத் தருவது கிரஹஸ்தாச்ரம தர்மம் என்பது. இந்த கிரஹஸ்தாச்ரமத்திற்குச் சரியான நுழைவாயில்தான் திருமணம். ஹிந்துமதத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பதே சொர்க்கம்தான். சொர்க்கலோகம் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்குமோ, அங்கு எவ்வாறு விதவிதமான உணவுவகைகள் கிடைக்குமோ, எவ்வாறு அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பார்களோ, அவ்வாறே நமது திருமணங்கள் அமையவேண்டும் என்கிறது நம் சம்பிரதாயம். அதனால்தான் திருமணத்தில் மணவறையை மிகுந்த அலங்காரத்துடன் அமைக்கிறார்கள்.

 எல்லோரும் புத்தம்புது ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு காட்சியளிக்கிறார்கள். விதவிதமான உணவுவகைகள் பரிமாறப்படுகின்றன. அந்தவகையில் நமது ஹிந்துமத திருமணங்கள் அனைத்தும் சொர்க்கலோகத்தில் இருப்பதுபோல இன்பத்தைத் தருவதால் இந்தச் சொற்றொடரை நாமும் ஏற்றுக் கொள்ளலாம்!

தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் என் கணவர் என்னுடைய அண்ணனுக்கு கொள்ளியிடும்படி ஆகிவிட்டது. இது தவறு, மச்சினனுக்கு செய்யக்கூடாது என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். இதனால் எங்களுக்கு தொந்தரவு உண்டாகுமா? ஏதேனும் பரிகாரம் உண்டா? - ஜனதா, மதுக்கூர்.

அதி உன்னதமான புண்ணிய காரியத்தைச் உங்கள் கணவர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் அவர் செய்த இந்த சத்காரியத்தினால் வந்துசேரும். அவர் செய்ததில் தவறேதும் இல்லை. உங்கள் அண்ணனுக்கு வாரிசு இல்லாத நிலையில், தவிர்க்கமுடியாத சூழலில் உங்கள் கணவர் கொள்ளி வைத்தது முற்றிலும் சரியே.

இதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மச்சினனுக்கு கொள்ளி வைத்த காரணத்தால் ஒரு வருடத்திற்கு தீட்டுகாக்க வேண்டிய அவசியமும் கிடையாது. வழக்கம்போல் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடலாம். உங்கள் கணவர் செய்த இந்த நற்செயலினால் உங்கள் வம்சம் நல்லபடியாக வாழும். கவலை வேண்டாம். இதற்கு பரிகாரம் ஏதும் தேவையில்லை.