வலம்புரிச் சங்கு எப்படித் தோன்றியது?



சங்குத் தகவல்கள் சில...

அமிர்தம் அடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் தோன்றின. திருமகள் வந்தாள், வலம்புரிச் சங்கும் வந்தது. மகாவிஷ்ணு. இடக்கையில் சங்கையும், வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார்.

சங்கு பெயர் தோன்றிய கதை என்ன?

சங்காசுரன் தேவர்களைப் போரில் முறியடித்து வேதங்களைத் திருடிக்கொண்டு கடலுக்கடியில் போய் பதுங்கிக் கொண்டான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பகவான் மீன் உருவம் (மத்ஸ்ய அவதாரம்) எடுத்து சங்காசுரனை வதைத்தார்.

பிறகு அவனுடைய காது, தலை ஆகியவற்றில் இருந்த சங்கு போன்ற உருவமுள்ள எலும்பினை எடுத்து ஊதினார். அதனின்றும் ‘ஓம்’ எனும் ஓசை எழுந்தது. அந்த ஓசையிலிருந்து வேதங்கள் வெளிப்பட்டன.  சங்காசுரனிடமிருந்து தோன்றியதால் ‘சங்கு’ எனப் பெயர்பெற்றது.

சங்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

திருமால் தன் நான்கு கரங்களில் ஒன்றில் எப்பொழுதும் சங்கு ஏந்தியுள்ளார். மனிதன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நேர்மை எனும் தர்மநெறியைக் குறிப்பது ‘சங்கு’. சங்கொலி தீயவற்றின் அழிவையும், நல்லவற்றின் வெற்றியையும் குறிக்கிறது.

வைணவச் சின்னத்தில் கருடாழ்வார், சக்கரம், திருமண், சங்கு, அனுமன் என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், பொதுவாக சங்கு-சக்கரம் என்றே கூறுவார்கள். ஆகவே, இந்த வழக்கில் சங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. சிவபெருமான் முழங்கிய சங்கின் ஓசையிலிருந்து எழுந்த ஓங்காரமே உலகின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்ததாகவும் புராணம் கூறுகிறது. சங்கினை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடலலைகளின் ஓசையைக் கேட்பது போன்றே உணர்வோம்.