மன இருள் அகற்றும் ஞான ஒளி 32 நின்னைச் சரணடைந்தேன், நிமலா..!முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
    இன்னம் நான் உனது சேவடி ஏத்திலேன்
செந்நலார் வயல்சூழ் திருக்கோளிலி
    மன்னனே அடியேனை மறவலே!
- அப்பர் தேவாரம்

தேவனுக்கு ஆரமாய் அமைந்திருக்கிற தேவாரமே, திகட்டாத தேன்சுவை கொண்டது. அதுவும் அப்பர் தேவாரம் கேட்கவா வேண்டும்! உள்ளம் உருகி உருகி சிவபெருமானிடம் சிந்தையை செலுத்திய பேரருளார் இல்லையா அவர்! ‘திருக்கோளிலி என்கிற திருக்குவளை ஊரில் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே, உன்னை நான் இதுவரை நினைக்கவில்லை’ என்ற தன் ஆற்றாமையைச் சொல்ல வந்த அப்பர் பெருமான், ‘முன்னமே நினையாது ஒழிந்தேன்’ என்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? ‘இதுவரை வேறுவேறு வாசனைகளில் மனதை செலுத்திவந்தேன். நிலையான அருளையும் பொருளையும் தருகிற பரம ஈசனே உன்னை இதுகாறும் நினைக்கவில்லை, அதற்காக என்னை மன்னித்து விடு’ என்கிறார் அவர். அப்பர் பெருமான் சொல்வதில்தான் எத்தனை யதார்த்தமான உண்மை இருக்கிறது! நாம் எல்லாவற்றையும் மறந்து மனம் ஒன்றி அந்த ஈசனிடம் இதயத்தைப் பறி கொடுத்திருக்கிறோம். கணக்கெடுத்தால் ஒருவராவது மிஞ்சுவாரா என்பது சந்தேகம்தான்.

‘ஒன்றியிருந்து நினைமின்கள்’ என்கிறது தேவாரப் பதிகம். மனம் ஒன்றி மனதை அவனிடம் செலுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன?

கவனத் தடுமாற்றங்களும், சிந்தனைச் சிதறல்களும் நம் மனதை கலங்கடிக்கிறதே, மீள்வதற்கு எது வழி? நிலையான பேரின்பத்தைத் தருகிற அந்தப் பரம்பொருளில் மனம் பற்று வைக்க வேண்டும். ‘இன்னம் நானுதுசேவடி ஏத்திலேன்’ என்கிறார் அப்பர். அதாவது, இதுவரை உன் திருவடியை வணங்குகிற சூழ்நிலை எனக்கு ஏற்படவில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்கிறார்.

யாரால் இந்த நிலைமையை மாற்ற முடியும்? இந்த உலகம் இயங்குவதற்கு காரணமான பரம்பொருளான சர்வேஸ்வரனால்தான். அவனை நாம் நினைக்கிற சூழ்நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும். ‘மன்னனே அடியேனை மறவலே’ என்கிறார். உன்னை நான் நினைக்காவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும்.

 ‘அடியேனை குறிக்கொளே’,
‘திகழொளியே சிவனே உன் அபயம் நானே’
‘அஞ்சல் என்றாலவாயில் அப்பனே அருள் செயாயே’
‘ஒரு பற்றிலாமையுங் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே’
‘ஈசனே உன்றன் பாதம் ஏத்துமாறு அருள் எம்மானே’
‘ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை
சிற்றம்பலத்துக் கூத்தா’
- என்றெல்லாம் அப்பர், த

ன் தேவாரம் முழுவதிலும் ஈசனுடைய அருளுக்காக ஏங்கித் தவிப்பதைக் காணமுடியும். என் உயிர் அடங்குமுன் உன்னைப் பற்றிய சிந்தனை என்னிடம் மலர வேண்டும். அந்த பரம பாக்கியத்தைக் கொடு. இதுவரை எங்கெங்கோ எது எதற்கோ  என் மனம் வசப்பட்டுவிட்டது. இத்தனை நாள் அது என்னிடமே இல்லை.

முதலில் மனதை என் வசமாக்கு. பிறகு உன் வசமாக்கு என்று மனம் மருகி மன்றாடுகிறார். அப்பர் பெருமானுக்கே இந்த நிலைமை என்றால் அனைத்துவகை பலவீனங்களாலும் சூழப்பட்ட நம்மைப் பற்றி என்ன சொல்வது? நாம் இன்னும் மண்ணிலும், பொன்னிலும், பெண்ணிலும்தானே நம் கவனத்தை குவித்து வைத்திருக்கிறோம்.

வசதியாக  வாழவேண்டும் என்பதற்காக நிம்மதியை நாம் பறிகொடுத்து விட்டோம். எவ்வளவு கசந்தாலும் இதுதான் உண்மை! அப்படி வாழக்கூடாது என்கிறார் அப்பர் பெருமான். சொன்னது மட்டுமில்லாமல் சொன்னபடி வாழ்ந்தும் காட்டினார். இன்றைக்கும் உழவாரப் பணிக்கு முதல் முன்னோடி அவர்தானே! தொண்டு செய்தே பழுத்த பழம், அப்பர் பெருமான்.

ஈசன் அடி போற்றி
எந்தையடி போற்றி
சிவன் சேவடி போற்றி

- என்பதெல்லாம் அப்பர் பெருமானின் ரத்த நாளங்களில் ஊடுருவிய பக்திப் பிரவாகமல்லவா? தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பலவும் இதுவரை இருண்டு கிடந்து இப்போது ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்கின்றன என்றால், அதற்கு முழுமுதல் காரணம் அப்பர் பெருமான் போன்ற அருளாளர்கள்தான். சித்த சுத்தி ஏற்படுவதற்கு சிவனை சுற்ற வேண்டும். அவன் ஆலயத்தில் இருக்கும் குப்பைகளை நீக்கினால், நம் மனக்கூடையில் குவிந்திருக்கிற குப்பைகள் தாமாக வெளியேறிவிடும்.

 ‘நாடி வாழ் நெஞ்சமே! நீ நன்னெறி ஆகுமென்றே’ - மனமே அவனை நாடு, நெஞ்சமே அவனிடம் தஞ்சம் கொள், அவனை சரணடை என்கிறார். நாம் செய்த தவறுகளுக்காக, பேராசைக்காக, யார்யாரிடமோ கூச்சமில்லாமல் சரணடைகிறோம்.

ஆனால், யாரிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பாதுகாப்பு உண்டோ, அவனிடம் அதாவது, ஈசனிடம் சரணடை என்கிறார் பெருமான். அது அவ்வளவு எளிதில் நடைபெறுகிற காரியம் இல்லைதான்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால்தான் சாத்தியப்படும்.  அறையின் அடர்ந்த இருளை, ஒரு சிறிய அகல் விளக்கு எப்படி விரட்டிஅடிக்கிறதோ, அதைப்போல் மனஇருள் போக்கும் ஞானஒளியாக விளங்க, திடமான பக்தி வேண்டும். பகட்டான பொருள்களின் மீது வைக்கும் பற்றைப் பரம்பொருளிடம் வைத்து பக்தி செய்ய முன்வர வேண்டும்.

ராமாயண இதிகாசத்தில் ராமன் பரதனைப் பார்த்து சொல்கிறேன்: ‘‘நாங்கள் இங்கு மரவுரி தரித்து மகிழ்ச்சியாக உள்ளோம். பட்டாடைகளால் நீ மகிழ்ச்சியாக உள்ளாய். நம்மிடையில் மகிழ்ச்சி பொதுவாக உள்ளதால் வேறுபாடு என்பது இல்லை. எவனது அவா அளவு கடந்ததாக உள்ளதோ, அவனே ஏழ்மையானவன். மனத்தின்கண் செல்வந்தன், வறியவன் என்று எவரும் இல்லை.’’

இதுதானே உண்மை! வாழ்வு வளம் பெற வேண்டுமானால், மனம் அமைதியடைய வேண்டுமானால், நிம்மதி நிலைக்கவேண்டுமானால் அப்பர் காட்டிய வழியில் பயணம் செய்வது  ஒன்றுதான் சாலச்சிறந்தது. அப்பர் வழியில் பயணம் செய்ய, டோல்கேட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அப்பர் வழியில் உண்மையாக மனம் ஒன்றி பயணம் செய்தால் அருளும் பொருளும் நம்மைத் தேடிவரும்.  இது சத்தியம்!