தீவினை தீண்டாதிருக்க என்ன வழி?



மகிழ்ச்சியாக இருக்கும் போது, தெய்வத்தை நினைக்கிறோமோ இல்லையோ,துயரப்படும் காலத்தில் தவறாமல் நினைப்போம். கூடவே, ‘‘இந்த சாமிக்கி கண் இல்ல போல இருக்கு. எம்பக்கம் திரும்பிக்கூடப் பாக்க மாட்டேங்குது. என்னைத்தான் போட்டுப் படாதபாடு படுத்துது” என்று புலம்பவும் செய்வோம்.

திருமூலா் சொல்கிறார் இதை: மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில் தான் நினைக்கிலா்
எனக்கு இறை அன்பில் என்பா் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே
(திருமந்திரம் - 22)

கருத்து: நன்மையை மட்டுமே கொண்ட இறைவன்,  நாம் மனதில் நினைப்பதை அறிவார். மனிதா்கள் தாம், அவ்விறைவனை நினைப்பதில்லை. மாறாக, “அந்தத் தெய்வத்துக்குதான் என்னிடம் அன்பில்லாமல் போய் விட்டது,”  என்கிறார்கள். ஆனால் இறைவனோ, எக்காலத்தும் தன்னைமறவாமல் நினைப்பவா்களுக்கு, உடனிருந்து துணை புரிந்து காக்கிறார்.

 நாம் செய்வது மட்டுமல்ல, நாம் மனதில் நினைப்பது எல்லாம்கூடத் தெய்வத்திற்குத் தெரியும். நன்மையை மட்டுமே கொண்ட இறைவன், நமக்கு நன்மையை மட்டுமே அளி்க்கின்றார். நாமோ, அது தெரியாமல், “தெய்வம் என்னைத்தான் போட்டுக் கஷ்டப்படுத்துகிறது” எனப் புலம்புகிறோம். ஆனால் தெய்வமோ, எந்தக் காலத்திலும் தன்னைத் தவறாது நினைப்பவா்களுக்கு, உடனிருந்து துணை புரிந்து காத்து வருகிறது என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.

ஓரளவு புரிந்ததைப் போல் இருந்தாலும் இப்பாடலில் உள்ள தகவல்களும் சில சொற்களும் அபூா்வமானவை. தகவல்களைப் பார்த்து விட்டு, சொற்களின் அபூா்வத்தைப் பார்க்கலாம்.  நன்மையை மட்டுமே கொண்ட இறைவன், ஏன் கஷ்டத்தைத் தர வேண்டும்? இதைச்சமீபத்திய நிகழ்வின் மூலம் பார்த்தால் உண்மை விளங்கும்.

 பல நாட்கள் பெருமழை பெய்து வீதிகளில் எல்லாம் குளிர்ச் சாதனம் பொருத்தியதுபோல குளுமையாக இருந்தது. அந்தக் குளிர் தாங்கமுடியவில்லை. ஆனாலும் தாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவுடன், சட்டையைக் கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் உட்கார்ந்து, ‘ஏ.சி.யை ஃபுல்லா வை!’ என்று சொல்வோமா?

உலா்ந்த ஆடைகளை அணிந்து, கம்பளி ஸ்வெட்டா் அணிந்து கொண்டு, ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தாலும் அதை அணைத்து விட்டல்லவா அமா்கிறோம்! அதுபோல, நம் செயல்களின் மூலம்தான் நன்மை - தீமைகள் விளைகின்றனவே தவிர, தெய்வம் நம்மைத் துன்பப்படுத்துவதே இல்லை.

‘இதை ஒப்புக் கொள்ள முடியாது. தெய்வம் துன்பப்படுத்தத்தான் செய்கிறது’ என்றால், தெய்வ உண்மை நமக்குப் புரியவில்லை என்றுதான் அர்த்தம்.

உதாரணமாக, உடல்நிலை சரியில்லை, மருத்துவரிடம் செல்கிறோம், அவர், கசப்பு மாத்திரை சாப்பிடச் சொல்லி , கடுமையாக ஊசி வேறு போட்டு விடுகிறார் என்றால் அவரை நாம் குறை சொல்வோமா?  மருத்துவரின் நோக்கம் நம்மைக் குணப்படுத்துவதுதானே தவிர, நம்மைக் கஷ்டப்படுத்துவது இல்லையே! அதுபோலத்தான் தெய்வமும்!

மேலும், ‘‘அதைத் தின்னாதே! இதைத் தின்னாதே!” எனத் தாயார் தடுக்கிறார். நாக்கு ருசியில் ஆசைப்பட்ட குழந்தைகளான நாம், தாயாருக்குத் தெரியாமல் எதையாவது உள்ளே தள்ளி விட்டு, வீட்டில் தும்மி இருமி ஏதேனும் கலாட்டா செய்தால், ‘என்னத்தைத் தின்னே?’ என்று கேட்கும் தாயார், நமக்குக் கைவைத்தியம் செய்தோ, மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ செய்கிறார். 

மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தாயாரைத் திட்டுவோமா? நமது நன்மையை மட்டுமே கருத்தில் கொண்ட தாயார், நம்மைக் கஷ்டப்படுத்துவாளா?

தாயாருக்குத் தெரியாது என்று எண்ணித் தவறு செய்ததற்கு அதே தாயார்தானே, மருத்துவ உதவி செய்து, நலம் காக்கிறாள்! அதுபோலத் தெய்வத்திற்குத் தெரியாது என்று எண்ணிச் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வினைகளின் விளைவுகளில் இருந்து தெய்வம் நம்மைக் காக்க முயலும் போது, விவரம் புரியாமல் தெய்வத்தை நோவதால் என்ன பலன்?

இப்பாடலில் உள்ள ‘நன்னாடன்’ என்பது, ‘நன்மையில் மட்டுமே நாட்டம்கொண்ட இறைவன்’என்னும் பொருளைத் தரும். அழுக்கான துணியைத் துவைத்து அழுக்கை நீக்குவதைப் போல, நம்மிடம் உள்ள தீயனவற்றை நீக்கி நாம் தூய்மை பெற, இறைவன் செயல் புரியும்போது, வலி தாங்காமல் / விவரம் புரியாமல் இறைவனை ஏசுகிறோம்.

இறைவனோ அதைப் பொருட்படுத்தாமல், நம் நலத்தில் மட்டுமே கருத்தாக இருக்கிறார்.  மேலும் இப்பாடலில் வரும் ‘நன்னாடன்’ எனும் சொல்லுக்கு முன் ‘மாய’ எனும் சொல் இடம் பெற்றிருப்பதைக் கவனி்க்க வேண்டும். இதற்கு ‘மாயம் செய்கின்ற இறைவன்’ என்பது மட்டும் பொருளல்ல. ‘தீவினைகள் மாய’ எனும் பொருளும் உண்டு. ‘நம் தீவினைகள் மாய, நம் நன்மையில் மட்டுமே நாட்டம் கொண்ட இறைவன்’ என்பது பாடலின் ஆழ்ந்த கருத்து.

இதை உணா்ந்து செயல்படுபவா்களுக்குத் தெய்வம் உடனிருந்து துணைபுரிந்து காக்கிறது எனப் பாடல் நிறைவு பெறுகிறது.

திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டபோது, அவரைக் காப்பாற்றியது; ஞான சம்பந்தக் குழந்தை அழுதபோது, பால் தந்ததுடன் உடனிருந்து காப்பாற்றியது என வினைகள் நீக்கிக் கூடவே இருந்த தெய்வம் அவா்களைக் காப்பாற்றியதையும் பெரிய புராணம் விரிவாகவே விவரிக்கிறது.

தெய்வம் அடியார்களைக் காப்பாற்றத் தவறுவதே இல்லை; ஆனால், நாம்தான் தெய்வத்தை நினைப்பதே இல்லை. ‘நினையுங்கள், செயல்படுங்கள்! தெய்வம் கூடவேயிருந்து காக்கும்,’ என்கிறார் திருமூலா்.

இவ்வாறு நினைத்துச் செயல்படச் சொன்ன திருமூலா், அடுத்த பாடலில், அவ்வாறு நினைத்துச் செயல்படவேண்டிய வழிமுறைகளைச் சொல்கிறார்.

போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே
(திருமந்திரம் - 24)

கருத்து: குறைவில்லாத நிறைவை உடைய இறைவன் திருவடிகளை மனதில் இருத்தி மறவாமல் துதிப்பதில் உறுதியாக இருங்கள்! பெற்ற செல்வம் எல்லாம் சிவன் சேவைக்கே உரியது என எண்ணுங்கள்! பெற்ற செல்வம் எல்லாம் தன்னுரிமை என எண்ணி மயங்கும் மயக்கத்தை விட்டொழிப்போரை தெய்வம் நெருங்கி வந்து நல்லருள் புரியும்.

 தெய்வத்தின் நிறைவு, அதைப் போற்றித் துதிப்பதில் உறுதி, பெற்ற செல்வத்தைப் பரம்பொருளின் சேவைக்கு என எண்ணுதல், அவ்வாறு நினைப்பவா்க்குத் தெய்வம் துணையாய் நிற்கும் என நான்கு விதமான தகவல்கள் இப்பாடலில் உள்ளன. அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.  முதலில் தெய்வத்தின் நிறைவு. தெய்வத்திற்கு எந்தக் குறையும் கிடையாது, தேவையும் கிடையாது. குறையும் தேவையும் உடையவா்கள் மனிதா்களாகிய நாமே!

நம் குறையைச் சொல்லி மற்ற மனிதா்களிடம் நம் தேவைகளை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டினால், ‘அட, என்னவோ உன் குறையைச் சொல்ல வந்துவிட்டாயே! என் குறையைப்போய் நான் யாரிடம் சொல்வது? குறையை நீ சொல்லி விட்டாய், நான் சொல்லவில்லை, அவ்வளவுதான். என் குறையைச் சொல்கிறேன் கேள்!’ என்று சொல்லி, அவா்கள் குறையையும் நம் தலைமேல் ஏற்றி வைப்பார்கள்.

 நம் குறையை இறக்கி வைப்பதற்குப் பதிலாக, அடுத்தவா் குறையையும் சோ்ந்து சுமந்து கொண்டு நாம் அலைய வேண்டிவரும். ஆகவே நம் குறைகளைச் சொல்லித் தேவைகளை நிறைவேற்றி வைக்க, தெய்வத்தால் மட்டுமே இயலும். காரணம், குறையில்லாதது தெய்வம் மட்டுமே! தெய்வம் எந்தத் தேவையும் அற்றது. இதை அழுத்தம் திருத்தமாக நம் மனதில் பதிய வைக்க முயல்கிறார் திருமூலா்.

ஆம், தெய்வத்திடம் போய், ‘எனக்கு இதை நீ நிறைவேற்றி வைத்தால், உனக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்,’ என வேண்டிக் கொள்கிறோமே, தெய்வம் என்ன, நாம் செய்வதாகச் சொல்லும் காணிக்கைகளை எதிர்பார்க்கிறதா என்ன?

தெய்வம் எதிர்பார்ப்பது, தூய்மையான அன்பையும் அதன் விளைவாகத் தெய்வத்தை உணா்ந்த அனுபவத் துதிகளையும்தான் ! இது ஓரளவி்ற்காவது புரிந்தாலும், மனம் என்னவோ, சில சமயங்களில் மட்டுமே - அதுவும் சில விநாடிகள் மட்டுமே தெய்வத்தின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக்கொள்கிறது. மற்ற நேரங்களில் சொல்ல முடியவில்லை.

கோயில்களில், சுவாமி சந்நதியிலேயே நின்று கொண்டிருந்தாலும், மனம் என்னவோ தெய்வத்தை நினைக்க மாட்டேன் என்கிறது; எதையெதையோ நினைத்து எங்கெல்லாமோ சுற்றிக் கவலையை, அப்பிக்கொள்கின்றது. இதன் காரணமாகவே, ‘கவலைகள் தீர, குறைகளே இல்லாத தெய்வத்தின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்!’ என உபதேசித்துப் பாடலைத் துவக்குகிறார் திருமூலா்.

அந்த எண்ணம் உறுதியாக இருப்பதற்கானவற்றையும் தொடா்ந்து சொல்கிறார். நாம் அடைந்த செல்வத்தைப் பற்றிய தகவல்களோடு பாடல் தொடா்கிறது.

செல்வம் பலரிடம் இருக்கிறது, சிலரிடம் எவ்வளவு செல்வம் உள்ளதென்று அவா்களுக்கே தெரிவதில்லை. கோடிக்கணக்கான செல்வம் வைத்திருந்த பட்டினத்தார், மின்னல் மின்னி மறையும் நேரத்திற்குள்ளாகவே, செல்வம் அனைத்தையும் துறந்து துறவியாகப் போனவா்!

அப்படிப்பட்ட பட்டினத்தார் பாடுகிறார்:

பிறக்கும்பொழுது கொடு வந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடு போவதில்லை இடைநடுவில்
குறிக்குமிச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்க அறியா
திருக்குங் குலாமருக்கு என் சொல்வேன் கச்சியேகம்பனே
(திருவேகம்ப மாலை - பட்டினத்தார் பாடல்)

“காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பரநாதனே, பிறக்கும்போது யாரும் எதையும் தன்னுடன் கொண்டு வந்ததில்லை;இறக்கும்போது, தான் அதுவரை சம்பாதித்த கோடானுகோடி செல்வங்களில், ஒன்றையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு போவதில்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில், அதாவது வாழும் காலத்தில் கிடைக்கும் செல்வம் சிவபெருமான் நமக்குக் கொடுத்தது என்று எண்ணி, இருப்பவா்க்குக் கொடுக்காமல் இறந்துபோகும், பிரபஞ்ச அடிமைகளை நான் என்னவென்று சொல்வேன்?’ என்று சிவபெருமானிடமே முறையிடுகிறார்.

பட்டினத்தாரின் இக்கூற்றை ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, உண்மை இதுதான். சற்று எளிமையாகப் பார்த்தால், சிறிதளவாவது புரியும். கடைபிடிக்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். உதாரணமாக, கொரியா் சா்வீஸ்காரா், பலருக்கும் பலவிதமான கடிதங்களைத் தருகிறார்.

அவா் எவ்வளவுதான் பொறுப்பாக நடந்துகொண்டாலும், அவா் கொடுக்கும் கடிதங்களில், பார்சல்களில் ஒன்றுகூட அவருடையது அல்ல. அவருக்கு அது தெரியும். அதைவிடுத்து, தான் தரும் கடிதங்களையோ, பார்சல்களையோ அவா் தனதென்று உரிமை கொண்டாடினால் எப்படி இருக்கும்? அதேசமயம் கொரியா் சா்வீஸ்காரா், தனக்கு வந்தவற்றை, எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

அதுபோல, நாம் அனைவருமே கொரியா் சா்வீஸ்காரா்கள்தான். நமக்கு உண்டானவை போக மற்றவற்றை, (இயன்றவரை) மற்றவா்க்குக் கொடுத்தால், வாழ்வில் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் துயரே தீண்டாது. தெய்வம் கூடவே இருந்து காப்பாற்றும் எனத் திருமூலா் இப்பாடல் மூலம் பாடம் நடத்துகிறார். அதை உணா்ந்து முடிந்தவரை செயல்பட்டால், துன்பம் ஒருபோதும் அண்டாது. முயற்சி செய்வோம்! முதல்வன் அருளைப் பெறுவோம் !

(மந்திரம் ஒலிக்கும்)