அனைத்து வளங்களையும் அருளும் நட்சத்திரப் பரிகாரக் கோயில்கள்(குங்குமம் வார இதழில் (அமரர்) திரு மயன் அவர்கள் எழுதிய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்)

ஒவ்வொருவருடைய குண இயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அவரவர் சார்ந்திருக்கும் நட்சத்திரத்திற்கு இருக்கிறது. அந்த நட்சத்திரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெறவோ அல்லது நிவர்த்தி செய்துகொள்ளவோ, அந்தந்த நட்சத்திரத்தைத் தம் ஆளுமைக்குட்படுத்திய தெய்வங்களின் அனுக்கிரகத்தால் இயலும். இந்தவகையில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும், தனித்தனியே அவற்றிற்குரிய திருத்தலங்களும், தல விருட்சங்களும் உள்ளன. அவரவர் அந்தந்த நட்சத்திரத்துக்குரிய திருக்கோயில் சென்று, இறைவனை வழிபட்டு, தலவிருட்சத்தையும் தரிசித்துப் பயன் அடையலாம்.

இந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்கென்றே தனித் தனியே ஒரு சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ள கோயில்கள் சில உண்டு. அங்கே சென்றால், அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து நட்சத்திரங்களுக்குமான சிவலிங்கங்களை ஒரே இடத்தில் தரிசித்திடலாம்.
தங்களது நட்சத்திர நாளன்று நட்சத்திரத்துக்குரிய சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, நெய் விளக்கேற்றியும், வேள்வி செய்தும் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

அப்படிப்பட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. ஒன்று, புற்றிடங்கொண்டார் என்ற பெயரில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் கோயில். சென்னைக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவொற்றியூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இரண்டாவது,  மத்தியார்ஜுனராக ஈசன் கோயில் கொண்டுள்ள திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கான இந்த இரு பொதுக்கோயில்கள் தவிர, குறிப்பிட்ட ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பரிகாரக் கோயில்கள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்:

1. அஸ்வினி :

ஸ்ரீரங்கம்: தன்வந்த்ரி பகவான் சந்நதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலினுள் அமைந்துள்ளது. இந்த தன்வந்த்ரிதான் பாற்கடலிலிருந்து அமுதம் கொண்டு வந்தவர். இவர் கொடுத்த அமுதத்தால்தான் அஸ்வினி தேவர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தப் பணிக்கு மூலாதாரமாக விளங்கிய தன்வந்த்ரி, சங்கு சக்கரதாரியாக அமிர்த கலசம் ஏந்தியபடி இங்கு சேவை சாதிக்கிறார். இவரை உளமார வழிபடலாம். முடிந்தால் தங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் செய்தும் அவரை வணங்கலாம்.

கூத்தனூர்: திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற சிற்றூரிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அதுவும் அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று சென்று பிரார்த்தித்துக்கொண்டால் நல்லது.

கொல்லிமலை: இங்கு உறைந்து அருள்பவர் அறப்பளீஸ்வரர். சேலம் மற்றும் நாமக்கல் நகரில் இருந்து கொல்லிமலைக்கு பேருந்து வசதி உண்டு. மலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது. கொல்லிமலை, எட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எட்டி மரத்தை வழிபடுவதும், அதற்கு நீரூற்றுவதும் சிறந்த பரிகாரச் செயல்களாகும்.

2. பரணி

பட்டீஸ்வரம்: கும்பகோணத்துக்கு அருகே உள்ள தலம். இங்கு அருள்பாலிக்கும் துர்க்கையை வழிபடலாம்.

திருத்தங்கல்: நெல்லிமரம் தலவிருட்சமாக விளங்கும் தலம். இறைவன், கருநெல்லிநாதர். கருநெல்லி மரங்கள் சூழ்ந்த வனத்தில் சுயம்புவாகத் தோன்றியதால் அவருக்கு அந்தப் பெயர். அன்னை மீனாட்சிக்கும் இங்கே தனி சந்நதி உண்டு. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இக்கோயில்.
கருநெல்லிநாதர் ஆலயம் அமைந்துள்ள குன்றின் மறுபக்கம் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இங்கும் சென்று பெருமாளை தரிசிக்கலாம். திருமகள் இங்கு தங்கி பெருமாளை நோக்கித் தவமிருந்ததால், இந்த இடம் திருத்தங்கல் எனப் பெயர்கொண்டது. வைணவத் தலங்களில் தாயார் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பது இத்தலத்தில்தான். செங்கமலத்தாயார் தனி சந்நதியில் அப்படி அருட்காட்சி அருள்கிறார்.

3. கார்த்திகை

காஞ்சிபுரம்: கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கான பரிகார தல விருட்சம், அத்தி. அதனால், ஆதி அத்திவரதரை காஞ்சி சென்று வணங்குவது நற்பலன்களை அள்ளித்தரும்.

திருவொற்றியூர்: சென்னைக்கு வடக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. புற்றையே இடமாகக் கொண்டு, தீண்டாத் திருமேனியாக, சுயம்புமூர்த்தியாக புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர் விளங்கும் இக்கோயிலின் தலமரமும் அத்திதான்.

கானாட்டுமுள்ளூர்: அத்திமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட மற்றொரு திருத்தலம். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்த திருத்தலம் இது. பதஞ்சலி முனிவருக்கு இத்தலத்தில் அருள் செய்ததால் இறைவன்,  பதஞ்சலிஈஸ்வரர் என்று திருநாமங் கொண்டுள்ளார். இதுபோல் அத்தி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபடலாம் அல்லது எங்கேனும் தனியே அத்தி மரம் காணப்பெற்றால், அந்த மரத்தை வலம் வந்தும் வழிபடலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் முருகப் பெருமான். ஆகவே, முருகன் உறையும் தலங்கள் எல்லாமே இந்த நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகாரத் தலங்கள்தான். குறிப்பாக திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது, இவர்களுக்கு அபரிமிதமான, அபூர்வ பலன்கள் கிடைக்க வழி காட்டும்.

4. ரோகிணி

ரோகிணிக்குரிய பரிகார விருட்சம் நாவல் மரம். நாவல் மரத்திற்கு நீரூற்றுவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு நற்பயன் தரும். தமிழகத்தில் நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட தலங்கள் பல உள்ளன. திருநாவலூர், திருவானைக்காவல், ஜம்பை ஆகியன அவற்றில் முக்கியமானவை.
    
ஜம்புகேஸ்வரர் என்ற திருநாமத்தோடு  இறைவன் திருவானைக்காவல் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலம் இது. ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி வழியே ஜம்புகேஸ்வரரை முதலில் தரிசித்த பின்னரே, தென்புறம் உள்ள வாயில்வழியே சென்று, நேராக வழிபட வேண்டும். அன்னையே இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், உச்சிகால வழிபாட்டில் அர்ச்சகர் பெண்வேடமிட்டு, இறைவனை பூஜிப்பது நடைமுறையில் உள்ளது. திருச்சிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மணலூர்பேட்டைக்கு மேற்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ள தலம் ஜம்பை. நீருக்கடியில் ஜம்புநாத ஈசுவரரை, வாளை மீன் வடிவில் ஒரு முனிவர் வழிபட்ட தலம் இது.

கழுகுமலை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு மேற்கில் 19 கி.மீ. தொலைவில், ஜம்புநாத ஈஸ்வரர், அகிலாண்டேசுவரி அருள்பாலிக்கும் திருத்தலம். தலமரம் - நாவல்.

செம்பாக்கம்: செங்கல்பட்டிற்கு கிழக்கே, திருப்போரூர் சாலையில் 18 கி.மீ. தொலைவிலுள்ள தலம். வதம் செய்யப்பட்ட சூரனின் சிரம் விழுந்ததால் சிரம்பாக்கம் என்றானது. செம்பாக்கமாக மருவிவிட்டது. மூலவர் - ஜம்புகேசுஸ்வரர். சென்னைக்கு மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ள கொரட்டூரிலும் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

தஞ்சாவூருக்கு வடக்கே, கும்பகோணம் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது நெல்லிச்சேரி. இங்கும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஜம்புநாதர்.
கிருஷ்ணனின் திருநட்சத்திரம் ரோகிணி ஆனதால், கண்ணன் குடிகொண்டுள்ள தலங்களிலும் வழிபடலாம்.

அவற்றில் சில: மன்னார்குடி: திருவாரூருக்கு தென்மேற்கில் 27 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். வாசுதேவபுரி, தட்சிண துவாரகை என்றும்
அழைக்கப்படுகிறது.

பெருமாள் அகரம்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரிக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ருக்மணி-சத்யபாமா சமேதராக வேணுகோபாலன் சேவை சாதிக்கிறார்.

திருவரங்கம்: திருக்கோயிலூர் அருகில், பெண்ணாற்றங்கரையில், அமைந்துள்ள ரங்கநாதப் பெருமாள் கோயில்.

திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி என்ற பஞ்ச கிருஷ்ணத் தலங்களும் வழிபட உகந்தவை.

5. மிருகசீரிஷம்

அம்பர் மாகாளம்: பிரம்ம வரம் பெற்றிருந்த இந்த அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, மகா காளேஸ்வரரை  மகாகாளி வழிபட்ட தலம். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ளது. இத்தலத்தில் மகா காளேஸ்வரர்-அச்சம் தவிர்த்த நாயகி அருள்பாலிக்கின்றனர். காளி தனி சந்நதி கொண்டிருக்கிறாள். தலவிருட்சம் - கருங்காலி மரம். கரிய நிறத்தவளான காளி, அரக்கர்களை வதம் செய்துவிட்டு, இத்தலத்திற்கு வந்து மகா காளேஸ்வரரை விருட்ச ரூபமாக வழிபட்டாள். கரிய காளியாகிய அந்த மரம் கரிய காளி என்றழைக்கப்பட்டு, பின்னாளில் கருங்காலியாகியது. இந்தத் தல விருட்சமே மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகார விருட்சம்.

பிறைச் சந்திரனை அணிந்தவாறு இறைவன் அருள்பாலிக்கும் தலங்கள் பலவும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட சிறந்த தலங்கள் ஆகும். அந்தத் தலங்களில் சில:

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் - மரகதாம்பிகை திருக்கோயில். பஞ்சலிங்கத் தலமாகவும் திகழும் தலம்.

கிருஷ்ணகிரி: தர்மபுரிக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில் சந்திரமெளலீஸ்வரர் - பார்வதியம்மை திருக்கோயில்.

முசிறி: கரூர் மாவட்டம், காவிரியின் வடகரையில் உள்ள தலம். கற்பூரவல்லி சமேதராக சந்திரமெளலீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

தாழமங்கை: தஞ்சை-பாபநாசம் சாலையில், அய்யம்பேட்டை அருகில் உள்ளது சந்திரமெளலீஸ்வரர் கோயில்.

எண்கண்: திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் முகுந்தனூருக்கு வடக்கே உள்ளது. இங்குள்ள ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயிலில், கருடவாகனராக, மூலவர் பெருமாள் காட்சி தருகிறார். இந்த சிறப்பு கொண்ட ஒரே திருத்தலம்.

6. திருவாதிரை

சேங்காலிபுரம் தலத்தில் உள்ள ரங்கநாத சுவாமி திருக்கோயிலும், வரதராஜப் பெருமாள் கோயிலும் வரலாற்றுப் பின்னணி கொண்டவை. ஒப்பிலாமணியம்மை உடனுறை சோழீஸ்வரர் திருக்கோயில், பெரிய நாயகி உடனுறை துந்துபீஸ்வரர் திருக்கோயில், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் திருக்கோயிலுடன், தத்தாத்ரேயர் திருக்கோயில் ஒன்றும் இங்கே தனிச்சிறப்புடன் விளங்குகின்றது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தோர், பரிகாரம் வேண்டி இந்த சேங்காலிபுரம் தலத்தில் வழிபடலாம்.

திருவாதிரை நட்சத்திரத்துக்குரிய பரிகார மரம் ‘செங்காலி’ ஆகும். மிகவும் அபூர்வமாகவே தல விருட்சமாக இம்மரம் அமையும். சென்னை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்சங்களைப் பராமரிக்கிறார்கள். இதுபோல இருக்கக்கூடிய தலங்கள் தவிர, செங்காலி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில்களைக் காண்பது அபூர்வமே.

இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடலரசன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அனைத்தையும் வழிபடலாம். சிவபெருமானுக்குரிய இதே திருவாதிரை நட்சத்திரத்தில்தான், திருமாலின் வாகனம் எனப் போற்றப்படும் பறவையரசன் பெரிய திருவடியான கருடனும் அவதரித்திருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயில் செல்லும்போது சிவலிங்கத்தையும், பெருமாள் கோயில் செல்லும்போது திருமாலின் வாகனமான கருடபகவானையும் மனதார வழிபடலாம்.

7. புனர்பூசம்

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார விருட்சம் மூங்கில் என்பதால், மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட திருநெல்வேலி
நெல்லையப்பர் கோயில் அவர்களுக்குப் பிரதான பரிகாரத் தலம்.

திருப்பாசூர்: சென்னைக்கு மேற்கில் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. தீண்டாத் திருமேனியாக, மூங்கில் அடியில் முளைத்தெழுந்தவர், பாசூர்நாதர்.

சோழமன்னன் கரிகாலனுக்கு உதவிட, இறைவன் பாம்பாட்டியாக வந்த தலம். மது, கைடபரைக் கொன்ற பாவம் தீர, திருமால், ஈஸ்வரனை வழிபட்ட தலம்.
திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு தென்கிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கிருபாபுரீஸ்வரர் - மங்களாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம். சிவபெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு வழக்காடி, தடுத்தாட்கொண்ட தலம். சுந்தரர், இறைவனை ‘பித்தா பிறைசூடி’ என அழைத்து, பதிகம் பாடிய திருத்தலம்.

சீர்காழி: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள தேவாரத் திருத்தலம். திருஞானசம்பந்தர் அவதாரத்தலம். அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி, ‘தோடுடைய செவியன்’ எனும் தேவார முதல் பதிகத்தைப் பாடிய தலம். ஊழிக்காலத்திலும் அழிந்திடாத தலம் எனப் புகழ்பெற்றது.
பிரம்மபுரீஸ்வரர்-திருநிலை நாயகி அருள்பாலிக்கும் தலம்.

திருவேட்களம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கில் 3 கி.மீ. தொலைவு. இறைவன் பாசுபதேஸ்வரர், அன்னை நல்லநாயகி. வேடனாக எழுந்தருளி, அர்ச்சுனனோடு போரிட்டு, அவனுக்கு பாசுபதாஸ்திரம் அருளிய தலம்.

திருந்துதேவன்குடி: கும்பகோணத்திற்கு அருகில் நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் கற்கடேஸ்வரர். வாழ்க்கையின் கடுமையான பிரச்னைகளிலிருந்து அவர் காத்திடுவார்.

ராமபிரானை மையமாகக் கொண்டுள்ள திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில், தில்லைவளாகம், வடுவூர், அதம்பார், குடந்தை ராமசாமி கோயில் ஆகியவற்றில் ராமபிரானை வணங்கியும், இந்த நட்சத்திரக்காரர்கள் பலன் பெறலாம். திருவள்ளூர், மதுராந்தகம், முடிகொண்டான் ஆகிய தலங்களில் கோதண்டராமனாக அருளும் ராமபிரானையும் சேவிக்கலாம்.

8. பூசம்

திருவாவடுதுறை: இந்த ஆலயத்தின் மதில்களில் உள்ள நந்திகள் அனைத்துமே, திருமாளிகைத் தேவருக்காகத் திரண்டு ஓர் உருவமாக விஸ்வரூப நந்தியாக அமைந்துள்ளது. திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் ஆலயத்துக்கு, நந்தித்தலமாக அமைந்துள்ளதும் திருவாவடுதுறையே. எனவே, பிரதோஷ கால வழிபாட்டை இங்கு நிறைவேற்றுவது தனிச்சிறப்பு பெறுகிறது. இங்கு இறைவன் கோமுக்தீஸ்வரர் என்று திருநாமங்கொண்டுள்ளார். அன்னை ‘அதுலகுஜ நாயகி’ என்ற பெயருடன் தனி சந்நதி கொண்டுள்ளார். கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், நரசிங்கம்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. சாலையின் தெற்கே அமைந்துள்ள வளைவினுள்ளே சென்று, ரயில் பாதையைக் கடந்து சென்று திருக்கோயிலை அடையலாம்.

ஒழுந்தியாப்பட்டு: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள தலம். தேவாரப் பதிகம் பெற்றது. அரசடி தீர்த்தமும், அரச மரமும் கொண்டது. அரசிலி நாதர் என்று திருநாமம் கொண்டுள்ள ஈஸ்வரன், பெரிய நாயகியுடன் அருள் பாலிக்கிறார்.

ஆவூர்: கும்பகோணம் - திருக்கருகாவூர் சாலையில் உள்ள திருத்தலம். பசுபதீஸ்வரர் - மங்களாம்பிகை அருள்பாலிக்கும் தலம். காமதேனு வழிபட்ட தலம் என்பதால் ஆவூர் எனப்படுகிறது. ஐந்து பைரவர்கள் சந்நதி கொண்ட சிறப்பு பெற்றது.

கோனேரிராஜபுரம்: கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவு. உலகப் புகழ்மிக்க மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. உமாமகேஸ்வரர் - மங்களாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

பரிதிநியமம்: பருத்தியப்பர் என்று அழைக்கப்படும் தலம். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுக்கு வடக்கே 4 கி.மீ. பரிதி (சூரியன்) வழிபட்ட தலம். பாஸ்கரேஸ்வரர் - மங்களாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு தென்மேற்கில் உள்ள தேவாரத் திருத்தலம். இறைவன், திருமேனிநாதர், இறைவி, துணைமாலை நாயகி. ரமண மகரிஷி அவதாரத் திருத்தலம்.

அழகர்கோயில்: திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் தலம். மதுரைக்கு வடகிழக்கில் 20 கி.மீ. கோட்டையுடன் கூடிய பெரிய கோயில். பஞ்சாயுதங்களுடன் பரமசுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர், ‘அழகர்’ எனும் சுந்தரராஜப் பெருமாள். 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

திருச்சேறை: கும்பகோணம்-திருவாரூர் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சாரநாதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். காவிரித்தாய், அழகு சிற்பமாக அரசமரத்தடியில் வீற்றிருக்கிறாள். ஐந்து தேவியருடன் பரந்தாமன் காட்சி தரும் ஒரே திருத்தலம்.

9. ஆயில்யம்

திருப்புறம்பயம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு வடமேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்புலிங்கமாக சாட்சிநாதர் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்திக்குரிய 24 தலங்களில் இதுவும் ஒன்று.

திருப்புகலூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திற்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘அக்னீஸ்வரர்’ அருள்பாலிக்கும் தலம். ‘வாஸ்து கோயில்’ எனப் புகழ்பெற்றுள்ளது.

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம், திருநெல்வேலிக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சங்கரலிங்கத்துக்கும் கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணர் சந்நதி உள்ளது. இங்கே பிரசாதமாக வழங்கப்படும் புன்னை மரப்பட்டை செல்லரித்து உருவான புற்றுமண், எப்படிப்பட்ட நோயையும் தீர்க்கவல்ல அருமருந்தாகும்.

திருப்புனவாசல்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் சதுரக்கள்ளி, குருந்தமரம், மகிழமரம் மற்றும் புன்னை மரங்களை தலவிருட்சமாகக் கொண்ட பழம்பதி இது.

புள்ளபூதங்குடி: கும்பகோணத்திற்கு வடமேற்கில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘வல்வில் ராமன்’ புஜங்க சயனராக சேவை சாதிக்கிறார். புன்னைமரம், தலவிருட்சம்.

திருவிடந்தை: சென்னைக்கு தெற்கில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 42 கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். ஆதிவராகப் பெருமாள், அகிலவல்லி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். நித்யகல்யாணப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

நாகூர்: நாகை மாவட்டம், நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4 கி.மீ. புன்னாகவனம் என்றழைக்கப்பட்ட, நாகநாதர்-நாகவல்லி அருள்பாலிக்கும் தலம். தலமரம் புன்னை.

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஆயுட்காலத்தில் ஒருமுறை, பரிகாரத் தலங்கள் ஏதாவதொன்றில் ‘சர்ப்பசாந்தி’செய்துகொள்வது நல்ல பலன் தரும். இவர்கள் முருகனை வழிபடுதலும் சிறப்பு.

10. மகம்

திருவெண்காடு: நாகை மாவட்டம், சீர்காழிக்குத் தென்கிழக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் சோம, சூரிய, அக்னி தீர்த்தங்களும், ருத்ரபாதமும் உள்ளன. இறைவன், திருவெண்காட்டீஸ்வரர். இறைவி, பிரம்ம வித்யாம்பிகை. இங்குள்ள அகோர மூர்த்தி, சௌம்யகாளி சந்நதிகள் சிறப்பு பெற்றவை. நவகிரகங்களில் புதன் தலமாக, புதனுக்கென்றே தனி சந்நதியோடு விளங்குகிறது. காசிக்கு சமமான ஆறு தலங்களில் திருவெண்காடும் ஒன்று.

திருக்கச்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ. தொலைவு. திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சூர் எனப்பெயர் கொண்டது. அஞ்சனாட்சி தனி சந்நதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கூர்மதீர்த்தம் புனிதமானது.

திருவரத்துறை: கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு கிழக்கே 10 கி.மீ. தூரம். இறைவன் அறத்துறை நாதர், தீர்த்தபுரீஸ்வரர் எனப் பெயர்கள் கொண்டுள்ளார். அன்னை ஆனந்தநாயகி. சப்தரிஷிகள் வழிபட்ட, திரு ஆலந்துறை உள்ளிட்ட ஏழு தலங்கள், இந்தத் திருவரத்துறையைச் சுற்றி அமைந்துள்ளன.

கீழப்பழுவூர்: அரியலூர் மாவட்டம், அரியலூருக்கு தெற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ளது. ஆலந்துறை நாதராக ஈஸ்வரன் அருந்தவநாயகியுடன் அருள்பாலிக்கிறார். தாயைக் கொன்ற பழிநீங்கிட பரசுராமர் பூசித்த பெருமை கொண்ட தலம் இது.

திருஆலம்பொழில்: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகில் 5 கி.மீ. தொலைவு. மேற்கு நோக்கியபடி ஆத்மநாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஞானாம்பிகை தனி சந்நதி கொண்டுள்ளாள். அஷ்டவசுக்களால் பூசிக்கப்பட்ட தலம்.

திருஅன்பிலாந்துறை: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவு. சத்யவாகீஸ்வரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். செவிசாய்த்த விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். திவ்ய தேச வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அன்பில், திருமாலயன்துறை என்றும் அழைக்கப்படுகிறது. அழகிய மணவாளராக சுந்தரராஜப்பெருமாள் சேவை சாதிக்கும் தலம். தாயார், அழகியவல்லி நாச்சியார்.

திருவாலங்காடு: கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ளது. மூலவர், வடாரண்யேஸ்வரர். முன்பு ஆலமரக்காடாக இருந்த இத்தலத்தில் திருநடனம் புரிந்த ஈசன், ‘வடஆரண்யேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்தே இருக்கும். அன்னை, வண்டார் குழலியம்மை.

11. பூரம்

புரசை எனப்படும் பலாசமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலங்கள் அனைத்துமே பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலங்கள்.
நாலூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம்-திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறைக்கு அருகில் உள்ளது. மாடக்கோயில். பலாசவன நாதர்-பெரியநாயகி அருள்பாலிக்கும் தலம்.

கஞ்சனூர்: கும்பகோணம்-மயிலாடுதுறை (கல்லணை சாலையில்) உள்ள திருத்தலம். சுக்கிரன் பரிகாரத் தலம் என்றும் புகழ் பெற்றிருக்கும் வைப்புத்தலம். அக்னீஸ்வரர் - கற்பகாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

தலைச்சங்காடு: நாகை மாவட்டம், மயிலாடுதுறை - திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1 கி.மீ. தூரத்தில் (சீர்காழி - நாகை சாலையில்) உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சங்கருணாதேசுவரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். தலமரம், புரசு என்ற பலாசமரம். சிவபெருமானை வழிபட்டு ‘பாஞ்சஜன்யம்’ பெற்ற திருமால், இத்தலத்தில் தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். வெண்சுடர்ப் பெருமாள், நாண்மதியப் பெருமாள் என்று திருநாமம். தாயார், தலைச்சங்க நாச்சியார் என்ற திருநாமத்துடன் தனி சந்நதி கொண்டுள்ளார். சோழநாட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று இது.

புரசைவாக்கம்: இப்புவியில் 1008 சிவலிங்கத் திருமேனிகளை அமைத்து வழிபட்ட பகீரதன், அவ்வாறு வழிபட்ட 1008வது திருமேனியே இந்த ‘கங்காதீஸ்வரர்’ என்று தலபுராணம் கூறுகிறது. பகீரதனின் சிறப்பினை உலகோர்க்கு எடுத்துக்கூறிட, அவனது திருவுருவமும் இந்தக் கோயிலில் உள்ளது. தினமும் அதற்கும் வழிபாடு நடைபெறுவது மற்றொரு சிறப்பு ஆகும். சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இந்த புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயில்.

12. உத்திரம்

கரவீரம்: திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, வடகண்டம் என்பது புராணப் பெயர். உத்திர நட்சத்திர பரிகார விருட்சமான, அரளி (பொன் அலரி) மலர்ச் செடி இங்குள்ளது.

காஞ்சிபுரம்: நெல்லுக்காரத் தெருவில் உள்ள இரட்டை மண்டபம் அருகில் உள்ள அரிசாபந்தீர்த்தார் திருக்கோயில். பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள திருமால் வணங்கிய தலம்.

திருவக்கரை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் 25 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கோயிலின் உள்ளே பிரயோகச் சக்கரத்துடன் கூடிய வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திற்கு தென்கிழக்கே 24 கி.மீ தொலைவில் உள்ள செய்கையம்பதி. தேவேந்திரன் மற்றும் கௌதமர் வழிபட்ட தலம். வான்மீகநாதர், தல இறைவன்.

கூவத்தூர்: செய்யூருக்கு வடக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயில்.

மயிலாடுதுறை: கௌரி மாயூரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகை மாவட்டத்தில் உள்ளது. மயிலுருவில் அன்னை ஈசனை பூஜித்த தலம். துலா ஸ்நானம் - முடவன் முழுக்கு சிறப்பு பெற்றது.

13. ஹஸ்தம்

திருவேற்காடு: வேதபுரீஸ்வரராக இறைவன் கோயில் கொண்ட, வேல மரங்கள் நிறைந்த தலம்தான், வேற்காடு என்கிற திருவேற்காடு. ராவணனை வதம் செய்தபிறகு, அந்த சிவ பக்தனைக் கொன்ற சிவ அபராதம் நீங்க, ராமர் வழிபட்ட பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று.
திருவேற்காடு என்றதுமே சட்டென்று நினைவுக்கு வருவது தேவி கருமாரியம்மன்தான். அந்தக் கருமாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே வேதபுரீஸ்வரரும் கோயில் கொண்டிருக்கிறார்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரான இங்கு அமைந்துள்ள, கோட்டை கோயில் என்றழைக்கப்படும், வேளாலீஸ்வரர் - காமாட்சியம்மன் திருக்கோயில். குடவேல மரத்தின் கீழ் கோயில் கொண்டதால் வேளாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் இத்தல நாயகன். இங்கு கல்யாண காமாட்சியாக அன்னை அருள்பாலிக்கிறாள். இங்கு மற்றொரு சிறப்பம்சம், ‘ராஜதுர்கை’ அம்மன். சூலமும் சங்கும் ஏந்தி, சூலத்தால் மகிஷாசுரனை வதம் செய்த நிலையில், அவனது தோள்மீது ஒரு திருப்பாதத்தை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுக்கு ஒரு முறை ஆடிமாதம், மூன்றாவது செவ்வாய் அன்று மட்டுமே, அவளது அழகுக் கோலத்தை முழுமையாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

செய்யாறு: காஞ்சிபுரத்திற்கு தெற்கே 28 கி.மீ. தொலைவிலுள்ள, திருவத்திபுரம் என்று அழைக்கப்படும் தலம். சம்பந்தர் பெருமான் ஆண்பனையைப் பெண்பனையாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். இறைவன் - வேதபுரீசுவரர், இறைவி - இளமுலை நாயகி. வேத தீர்த்தம்.

புவனகிரி: கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வேதபுரீஸ்வரர் - மீனாட்சியம்மன் அருள்பாலிக்கும் தலம்.

ஏமப்பூர்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவும் வேதபுரீஸ்வரரின்
திருக்கோயில்தான்.

எழிலூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம்.

திருவாதவூர்: மதுரைக்கு வடகிழக்கில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் அவதாரத் தலம். புருஷாமிருக தீர்த்தம், இங்கே தனிச்சிறப்பு. இறைவன், வேதநாதர். இறைவி, ஆரணிவல்லி.

14. சித்திரை

திருமாற்பேறு காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது ‘திருமால்பூர்’ என்று தற்போது அழைக்கப்படும்.
தல விருட்சம் வில்வம்.

அண்ணன்கோயில்: நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள அண்ணன் பெருமாள் கோயில். வில்வ மரத்தடியில் திருமால் சூரியவம்சத்து சுவேதனுக்கு காட்சி தந்த தலம்.

தாடிக்கொம்பு: திண்டுக்கல்லுக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில். நாயக்கர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்ற திருத்தலம்.

திருநாராயணபுரம்: கரூர் மாவட்டம், முசிறிக்கு மேற்கில் 15 கி.மீ தொலைவில் உள்ளது. காளமேகப் பெருமாள், பூதேவி-தேவி சமேதராக சேவை சாதிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதி தனிச்சிறப்புடையது.

நாச்சியார் கோயில்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நிவாசப் பெருமாள், தாயாரை மணம்புரியும் கோலத்தில் காட்சி தரும் தலம்.

திருவலம்: சென்னை-காட்பாடி ரயில்பாதையில் திருவல்லம் ரயில் நிலையத்திற்கு 3 கி.மீ. வடகிழக்கே உள்ளது. திருவல்லநாதர், வல்லாம்பிகையுடன் அருள்பாலிக்கும் தலம்.  

திருவக்கரை: திண்டிவனம்-புதுச்சேரி  பாதையில் உள்ள புகழ்பெற்ற வக்ரகாளி தலம். சந்திரசேகரர், வடிவாம்பிகையுடன் கொலுவீற்றிருக்கிறார்.
திருக்கோயிலூர்: பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. வீரட்டேசுவரர், இறைவன். சிவானந்தவல்லி, இறைவி.

திருவையாறு: தஞ்சாவூருக்கு வடக்கே 11 கி.மீ. ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி அருள்பாலிக்கும் திருத்தலம். ஆடி அமாவாசை நாளில் அப்பர் பெருமானுக்கு எம்பெருமான் கைலாயக் காட்சி அருளிய தலம்.

திருவெறும்பூர்: திருச்சிராப்பள்ளி-தஞ்சை சாலையில் 10 கி.மீ. தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு எறும்பீசரை பூசித்த தலம்.
திருநெடுங்களம்: திருவெறும்பூருக்கு கிழக்கே 10 கி.மீ. நித்ய சுந்தரர்-ஒப்பிலாநாயகி தரிசனம் நல்கும் தலம்.

திருப்பூந்துருத்தி: தஞ்சாவூருக்கு வடக்கே, கண்டியூருக்கு மேற்கில் 3 கி.மீ. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இறைவன், புஷ்பவன நாதர். இறைவி, சௌந்தரநாயகி.

திருக்கண்டியூர்: தஞ்சைக்கு வடக்கில்  10 கி.மீ. அட்ட வீரட்டத்தலங்களில், பிரம்மாவின் தலையைக் கொய்த தலம். இறைவன் பிரம்ம சிரக்கண்டீஸ்வரர், இறைவி, மங்களநாயகி.

திருவலஞ்சுழி: கும்பகோணத்திற்கு மேற்கில் 6 கி.மீ. வெள்ளைப் பிள்ளையாரால் புகழ்பெற்ற தலம். சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.
இறைவன், செஞ்சடைநாதர். இறைவி, பெரிய நாயகி.

நன்னிலம்: மயிலாடுதுறை-திருவாரூர் இடையே அமைந்த திருத்தலம். மதுவனநாயகி சமேத மதுவனேஸ்வரர் அருள்புரிகிறார்கள். தேவர்கள் தேனீக்களாய் வழிபட்ட தலம்.

15. சுவாதி

திருஇடையாறு: சுயம்பு லிங்கமாக அருள்பாலிப்பவரே இடையாற்று நாதர் என்ற மருதீசர். நல்லறிவைத் தரும் ஞானாம்பிகையாக அன்னை அருள்பாலிக்கும் தலம் இது. தலமரம் - மருதமரம். இக்கோயிலில் சுகப்பிரம்மருக்குத் தனி சந்நதி உள்ளது. மறைஞானசம்பந்தரின் அவதாரத் தலம் என்ற தகவல், திருஇடையாறுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

திருவிடைமருதூர்: கும்பகோணத்திற்கு வடகிழக்கே 9 கி.மீ. குடந்தை-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ளது. இது ஒரு பஞ்சலிங்கத்தலம்
என்பது கூடுதல் விசேஷம். வரகுணபாண்டியனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கியருளிய திருத்தலம். அஸ்வமேத பிராகாரம், பிரணவப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் ஆகியவற்றை பக்தி சிரத்தையுடன் வலம் வருவதால், முன்வினை தோஷம் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். தல மரம் - மருதமரம். மகாலிங்கசுவாமி, மருதவாணராக அருள்பாலிக்கும் தலம் இது. தல நாயகி, பிருஹத்குஜாம்பிகை, தனிச்சந்நதி கொண்டுள்ளார். சந்திர பகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்களும் ஒரே மண்டபத்தில் அமையப் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

திருப்புடை மருதூர்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே 7 கி.மீ. தொலைவில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட தலம். தைப்பூசத்தன்று தரிசனம் செய்தல் தனிச் சிறப்பு வாய்ந்தது.

பெரிய திருக்கோணம்: அரியலூருக்குத் தென்கிழக்கே 17 கி.மீ. மருதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம். ஆதிமத்யார்ச்சுனேசுவரர் - பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

கடத்தூர்: கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவில், அமராவதி ஆற்றின் கரையில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்.

பிள்ளையார்பட்டி:  சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூருக்கு கிழக்கே 8 கி.மீட்டரில் உள்ள மருதங்குடி எனப்படும், மருதீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம். இத்தலத்தில் கற்பக விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

நயினார்கோயில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்குக் கிழக்கே 12 கி.மீ. தொலைவில் மருதமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட நாகநாதர் திருக்கோயில். வாசுகி தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்று இரு திருக்குளங்கள்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகில் உள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்.

16. விசாகம்:

நத்தம்: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் என்ற கஜாரண்யத் தலம். திருச்சியிலிருந்து ஆலங்குடி மகாஜனம் வழியாகவும், புள்ளம்பாடியிலிருந்து வெங்கடாசலபுரம் வழியேயும் இத்தலத்தினைச் சென்றடையலாம். ‘ஸ்ரீநந்தையூர்’ எனப் பெயர் பெற்றிருந்தது, தற்போது நத்தம் ஆகிவிட்டது. இங்கே ‘ஆதிமூலப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் கஜேந்திரவரதப் பெருமாள் காட்சி தருகிறார். பள்ளிகொண்ட திருக்கோலத்தில், கஜேந்திரனின் தலைமீது கரம் வைத்து ஆசிதரும் பாவனையில் பெருமாள் சயனித்திருக்கிறார். தாயார், ஆதிலட்சுமி என்ற திருநாமத்துடன் தனிச் சந்நதி கொண்டுள்ளார். யோக நரசிம்மர் சந்நதியும் இங்கே உள்ளது.

கபிஸ்தலம்: தஞ்சை மாவட்டம், பாபநாசத்திற்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் அமைந்த வைணவ திவ்ய தேசத்தலம். விளாமரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கபிஸ்தலம் என்று பெயர்பெற்றது. வாலிக்கு எம்பெருமான் காட்சியளித்த தலம் இது. மூலவர் கஜேந்திரவரதப் பெருமாள். கிழக்கு நோக்கி, பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார். தாயார் ரமாமணிவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி.

அத்தாளநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ. ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவரதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இவர், வழிப்போக்கருக்கும் ‘அத்தாளம்’ என்ற இரவு உணவை அருளியவராம்.

தீயத்தூர்: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலுக்கு அருகில் உள்ளது. தீயும் (அக்னி), அயனும் (பிரம்மா) வழிபட்ட திருத்தலம். சகஸ்ரலட்சுமீசுவரர் அருள்பாலிக்கிறார்.

திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. திருமகள் வழிபட்டு நிலைபேறெய்திய தலம். லட்சமிபுரீசுவரர் - உலகநாயகி அருள்பாலிக்கும் தலம்.

17. அனுஷம்:

திருக்கண்ணங்குடி: இங்கே, கிருஷ்ணன் லோகநாதப் பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள காயா மகிழ மரத்தடியில்தான் எம்பெருமான், திருமங்கையாழ்வாரின் பசியைப் போக்கி, களைப்பை நீக்கினார். காய்ந்தாலும் பட்டுப்போகாத மரம் அது! முனிவர்களின் பக்திக் கயிற்றினால் கிருஷ்ணன் கட்டப்பட்ட கதையை இந்த மகிழ மரம் இன்றும் நினைவூட்டுகிறது. இது திருவாரூருக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள திவ்யதேசத் தலம். எட்டு தீர்த்தக் கிணறுகள் கொண்ட தனிச்சிறப்பு பெற்ற ஆலயம். தலவிருட்சமான மகிழமரம், பெருமாள் சந்நதிக்குப் பின்புறம் உள்ளது.
திருவொற்றியூர்: சென்னைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் புற்றிடங்கொண்டார், ஆதிபுரீசுவரராக அருள்பாலிக்கும் தலம். தலவிருட்சம் - மகிழமரம். 
திருவண்ணாமலை: திருமாலும், நான்முகனும் ஈசனின் அடி-முடி தேடியபோது, அவர்களுக்கு எட்டாத நிலையில், அண்ணாமலையாக இறைவன் தோன்றிய தலம். அஷ்டவசுக்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். 

திருப்புனவாசல்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென் கிழக்கே 38 கி.மீ. நான்கு யுகங்களுக்கும், நான்கு தல விருட்சங்களைக் கொண்ட பழம்பதி. தஞ்சை பிரகதீசுவரருக்கு அடுத்து மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி உள்ள கோயில். ஆகண்டல விநாயகர், சதுர்முக லிங்கம், விநாயகர் சபை, குடவரைக் காளி முதலிய சந்நதிகள் தலச்சிறப்பை மேலோங்கச் செய்கின்றன.

திருக்கண்ணமங்கை: திருவாரூருக்கு வடமேற்கில் 7 கி.மீ. தலவிருட்சம் - மகிழமரம். முப்பத்து முக்கோடி தேவர்களும் தேனீக்களாக வந்து சேவிக்கும் திருத்தலம். பக்தவத்சலப் பெருமாளும், அபிஷேகவல்லித் தாயாரும் சேவை சாதிக்கும் ஸப்தாம்ருத க்ஷேத்திரம்.

நீடூர்: மயிலாடுதுறைக்கு வடக்கே 5 கி.மீ. மகிழவனம் கொண்டது. ஊழிக்காலத்திலும் அழியாது நீடித்திருக்கும் என்பதால் நீடூர் எனப்பட்டது. நின்றகோலத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

நாச்சியார்கோயில்: கும்பகோணத்திற்கு தென்கிழக்கே 9 கி.மீ.ல் உள்ளது திருநறையூர். திருமலைராயனாற்றின் வடகரையில் உள்ளது. தலமரம் - மகிழம். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள், தாயாரை மணம் புரிந்துகொள்ளும் நிலையில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கல் கருடன் ஆகியவை சிறப்புச் சந்நதிகள்.

18. கேட்டை:

பிட்சாண்டார் கோயில்: திருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது, உத்தமர் கோயில் எனப்படும் மும்மூர்த்தித் தலம். பிட்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு நோக்கியும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். திருமகளே ஈசுவரனுக்கு பிட்சை அளித்ததாக தலபுராணம் கூறுகிறது. சப்த குருத்தலம் என்றும் பெருமை கொண்டது. சரஸ்வதி தேவிக்கு இங்கே தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள புத்திரகாமேஷ்டீஸ்வரர், தசரதனால் வழிபடப்பட்டவர். இவர், மக்கட்பேறு வழங்கிடும் மகேசன்.

வழுவூர்: ஈசன் யானையை உரித்து, முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்த திருத்தலம். மயிலாடுதுறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்த்தம் இரண்டும் தனிச்சிறப்பு கொண்டவை. ஈசன், கிருத்திவாசன் என்று திருநாமம் கொண்டுள்ளார். ‘கஜ சம்ஹார மூர்த்தி’ தரிசனம் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும். அமாவாசை நாட்களில் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். வில்லேந்திய கோலத்தில் சனீஸ்வரரை இங்கே வழிபடலாம்.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை, ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வீற்றிருப்பவரும், தேவர்களின் தலைவரும், வஜ்ராயுதம், அங்குசம் என்னும் ஆயுதங்களைக் கைகளில் தரித்திருப்பவரும், 1000 கண்களையுடையவருமான இந்திரன் ஆவார். இந்த உலகை இந்திரன் தன் இயற்கை வளங்களால் நிர்வகிக்க, அவனுக்காக உலகை அளித்தவர் வராஹப் பெருமாள். ஆகவே, கேட்டை நட்சத்திர அன்பர்கள், லட்சுமி வராஹப் பெருமாளையும் வழிபடலாம். பரிகார விருட்சம் - பராய் மரம்.

19. மூலம்:

நாகப்பட்டினம்: சௌந்தர்யராஜனாக நாராயணன் தரிசனம் தரும் நாகப்பட்டினம் தலத்தில்தான் ஆதிசேஷன் தவமிருந்து, பரந்தாமனுக்கு சேவை செய்யும் பேரருள் பெற்றார். இங்கே மூன்று திருக்கோலங்களில், எம்பெருமான் சேவை சாதிக்கிறார். இக்கோயிலின் தல விருட்சம் மாமரம். மூல நட்சத்திர அன்பர்களுக்கு பரிகார விருட்சம் மாமரம்.

காஞ்சிபுரம்: தான் பிடித்து வைத்த சிவலிங்கத் திருமேனி நீரில் கரைந்திடாமல் காத்திட, தன் இரு கரங்களாலும் அதனைச் சுற்றி அணைபோலத் தடுத்து, தன் மார்புடன் தழுவிக்கொண்டாள் அம்பிகை. மனமகிழ்ந்த ஈசனும், அன்னை தழுவக் குழைந்த ஈசனாக, அங்கேயே அன்னையைக் கரம்பற்றி, மணக்கோல நாதராக, அருள்பாலித்தார். அன்னை ஈசனை நோக்கி தவமிருந்தது மாமரத்தடியில். அந்த மாமரம்தான், இன்றும் நாம் காஞ்சிபுரம் திருத்தலத்தில் காணும் தலவிருட்சம் ஆகும். மரத்தின் நான்கு கிளைகளிலிருந்தும் நான்குவித சுவை உள்ள மாங்கனிகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமாந்துறை: திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது வடகரை மாந்துறை எனப்படும் தலம். ஆம்ரவன ஈசுவரரே திருமாந்துறைநாதர்; அன்னை அழகம்மை. 

ஆச்சாள்புரம்: சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம். சிவலோகத்தியாகேசர் அருள்பாலிக்கும் தலம். இக்கோயிலில் திருஞான சம்பந்தர் திருமணம் மற்றும் சிவஜோதி தரிசன ஐக்கிய நிகழ்ச்சிகள், வைகாசி மூலம் நட்சத்திரத் திருநாளில் நடைபெறுகின்றன.

மயிலாடுதுறை: மயூரநாதர், அபயாம்பிகையுடன் அருள்பாலிக்கும் திருத்தலம். இங்கே முடவன் முழுக்கு, துலா ஸ்நானம் தனிச்சிறப்பு பெற்றவை.

பாமணி: பாதாளேச்சுரம் எனப்படும் இத்திருத்தலம் மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தனஞ்சய முனிவராக வெளிப்பட்ட தலம். சர்ப்ப தோஷம் நீக்கும் தலம். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

கோயிலூர்: திருத்துறைப்பூண்டி-ஒரத்தநாடு வழியில் உள்ள தலம். ராமபிரான் சேது அணை கட்டுவதற்கு முன்பு, இறைவனிடம் இத்தலத்தில்தான் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. மந்திரபுரீசுவரர், பெரிய நாயகி அம்பிகையுடன் அருள்பாலிக்கும் தலம். ‘சூதவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

குலசேகரப்பட்டினம்: திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவில் உள்ளது. விஜயகாசிகொண்ட பாண்டீசுவரர் அறம் வளர்த்த நாயகியுடன் அருள்பாலிக்கும் தலம்.

பொழிச்சலூர்: சென்னைக்கு தெற்கில், பல்லாவரத்திற்கு மேற்கில் 3 கி.மீ தொலைவில். ஆனந்தவல்லி சமேதராக அகஸ்தீசுவரர் அருள்பாலிக்கும் தலம்.

20. பூராடம்:

நகர்: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம். அப்பிரதீசுவரர் அருளாசி வழங்கும் அற்புதத்தலம்.

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தலம். பழமையும் பெருமையும் வாய்ந்த சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் தலம்.
‘சிதம்பர ரகசியம்’ இங்கே விசேஷம். சபாநாயகராக அருள்பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவகாம சுந்தரி அருளாசி வழங்குகிறாள்.
கடுவெளி: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு வடக்கில் 3 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆகாசபுரீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டைத் தாண்டிச் சென்றால், இடது புறம் கை காட்டி ‘இரும்பை‘ என்று சுட்டிக்காட்டும் பாதையில் 2 கி.மீ பயணித்து, இத்தலத்தை அடையலாம்.

21. உத்திராடம்:

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு, அவர்களுடைய மூதாதையரே முதல் தெய்வம். ஒவ்வொருவருக்கும் மூலாதாரம் மூதாதையர் என்பதுபோல இந்த பிரபஞ்சத்திற்கே முதலானவர் விநாயகப் பெருமான். இவரே உத்திராட நட்சத்திர அன்பர்களின் பரிகார தெய்வம்.

கோயம்பேடு: சென்னைக்கு மேற்கில் 8 கி.மீ. குறுங்காலீசுவரர் - தர்மசம்வர்த்தனி அருள்பாலிக்கும் தலம். லவ-குசர் மண்ணை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்ட கோயில். வடக்கு திசை நோக்கிய சன்னதி. தலமரம் - பலா.

காங்கேயநல்லூர்: காட்பாடிக்கு தென் கிழக்கே 4 கி.மீ. தூரம். காங்கேசுவரர் - பாலகுஜாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம். முருகப்பெருமான் வழிபட்டதால் இத்தல இறைவன் ‘காங்கேசப் பெருமான்’ என அழைக்கப்படுகிறார்.

பேளூர்: சேலத்திற்கு கிழக்கே 32 கி.மீ. தொலைவு. கணம்புல்ல நாயனார், இத்திருத்தலத்தைச் சேர்ந்தவர். சுயம்புலிங்கமாக தான்தோன்றீசுவரர், அறம் வளர்த்த அம்மையுடன் அருள்பாலிக்கும் தலம்.

திருஇன்னம்பூர்: கும்பகோணத்திற்கு வடமேற்கே 6 கி.மீ.ல் உள்ள தலம். எழுத்தறி நாதேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலம். ஐராவதம் வழிபட்ட தலம். அன்னை சுகந்த குந்தளாம்பிகை. நித்திய கல்யாணி என்றும் தனியாக அம்மன் சன்னதி உள்ளது.

திருப்பூவனூர்: மன்னார்குடிக்கு 10 கி.மீ. வடக்கே உள்ளது. சதுரங்க வல்லபநாதர் அருள்பாலிக்கும் தலம். கற்பகவல்லி, ராஜராஜேசுவரி என இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ள வித்தியாசமான தலம். 

திருக்கடிக்குளம்: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12 கி.மீ. தொலைவு. ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.

திருப்பூவணம்: மதுரைக்கு கிழக்கே 19 கி.மீ. பூவணநாதர், சௌந்தர நாயகியோடு அருள்பாலிக்கிறார். ‘ரசவாதம்’ செய்து காட்டியருளிய திருத்தலம்.

திருக்கோஷ்டியூர்: சிவகங்கையிலிருந்து 19 கி.மீ. தூரம். அஷ்டாங்க விமானம் அமைந்த வைணவ திவ்ய தேசம். தேவர்கள் ஒன்றாகக் கூடி, பரந்தாமனை வேண்டி, இரணியனை சம்ஹரித்திடக் கோரிய தலம். உலகோருக்கு ஸ்ரீராமானுஜர், எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த திருத்தலம்.

22. திருவோணம்

திருமுல்லைவாயில்: சென்னைக்கு மேற்கில் ஆவடியை ஒட்டியுள்ள திருத்தலம். மாசிலாமணி நாதர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில், இரண்டு அதிசய ‘வெள்ளெருக்கு தூண்கள்’ உள்ளன. மூலவர் சந்நதியின் இருபுறமும் உள்ள இந்தத் தூண்கள், தொண்டைமான் சக்கரவர்த்தியால் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதாம்.

கொடியிடை நாயகி - மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்கும் இந்த திருமுல்லைவாயில் திருத்தலத்தையும் வணங்கலாம். எருக்கஞ்செடியை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்கள் இந்த நட்சத்திர அன்பர்கள் வழிபட ஏற்ற தலங்களாகும்.

எருக்கத்தம்புலியூர்: எருக்கஞ்செடிகளாக இருந்து முனிவர்கள் வழிபட்டதாலும், வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பூஜித்ததாலும், எருக்கத்தம்புலியூர் என இத்தலம் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது, ராஜேந்திரப் பட்டணம் என்றும் அழைக்கப்படும் எருக்கத்தம்புலியூர். மூலவர் நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமங் கொண்டுள்ளார். அன்னை நீலமலர்கன்னி அம்பிகை. தலமரம், வெள்ளெருக்கு.

23. அவிட்டம்

ஈசனின் திருவடியைக் காண நாராயணன் பூமியைக் குடைந்து உருவாக்கிய பெரும் பள்ளமே, ‘அரதைப் பெரும் பாழி’ என்ற திருத்தலமாக அமைந்தது. தஞ்சை மாவட்டத்தில், அம்மாபேட்டைக்கு வடகிழக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ‘அரித்துவாரமங்கலம்’தான் அது.

பஞ்ச ஆரண்யத் தலங்களாகக் கருதப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், ஆலங்குடி, கொள்ளம் புதூர், அரித்துவாரமங்கலம் ஆகியவற்றை ஒரே நாளில் தரிசிப்பது தனிச்சிறப்பு. அரித்துவாரமங்கலம் அருகில், பேரொளி கண்டு அஞ்சிய விஷ்ணு, ‘பயஹரி’ என்ற பெயருடன் ஒரு திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

அரித்துவாரமங்கலம் திருத்தல கருவறையில் பாதாள ஈஸ்வரர் முன்னே, வராக உருவில் அரி தோண்டிய அந்தப் பள்ளம் இன்றும் உள்ளது. அது வட்ட வடிவக் கல்லால் மூடப்பட்டிருக்கிறது. அன்னை அலங்காரவல்லி, தனி சந்நதி கொண்டுள்ளாள். வன்னிமரம், தல விருட்சம். இது சிவபெருமானுக்கும் சனிபகவானுக்கும் உரிய மரம். பஞ்சகாலத்தில், வன்னிப் பழங்களை உண்டு மக்கள் பசியாறியதாக வரலாறு. வில்வம் கிடைக்காதபோது, வன்னி இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். இங்குள்ள வன்னிமரம், மிகவும் பழமையானது. அதனைச் சுற்றி வலம் வருவதே பல நற்பலன்களைத் தரும். அன்னைக்கு பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று இரண்டு சந்நதிகள். மூலவர் விருத்தகிரீஸ்வரர்.

திருவான்மியூர்: சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரைத் தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர் என்று பெயர்கள் கொண்டு ஈசன் அருள்பாலிக்கும் தலம். அன்னை திரிபுரசுந்தரி. மார்க்கண்டேயருக்கு வன்னிமரத்தடியில் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த தலம்.

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், திருவையாற்றிற்கு மேற்கில் 10 கி.மீ. தொலைவு. அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.
திருப்பூந்துருத்தி: திருவையாற்றுக்கு மேற்கில் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று. புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள்பாலிக்கும் தலம்.

திருக்கொள்ளிக்காடு: திருவாரூர் மாவட்டம், கச்சனத்திற்கு மேற்கே 8 கி.மீ. தொலைவு. அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் தலம். சனி பகவான் சந்நதி தனிச்சிறப்பு கொண்டது.

திருமறைக்காடு: தஞ்சாவூருக்கு தென்கிழக்கில் 100 கி.மீ. வேதாரண்யம் என்ற கடற்கரைத் தலம். வேதங்கள் வழிபட்டு, திருக்காப்பிட்டுக் கொண்ட கோயில். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று.

கொடுமுடி: ‘பாண்டிக் கொடுமுடி’ என்று அழைக்கப்படும் கொங்கு நாட்டுத் தலம். மகுடேஸ்வரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். வன்னிமரத்தடியில் பிரம்மா காட்சி தருகிறார். பிரம்மதீர்த்தம் சிறப்பு கொண்டது.

24. சதயம்

பரிகார விருட்சம் கடம்ப மரம். முருகப் பெருமானை ‘கடம்பா’என்றும் அழைப்பார்கள். ஆகவே, சதயம் நட்சத்திரக்காரர்கள் முருகப் பெருமானை இஷ்ட தெய்வமாகக் கொள்ளலாம். எமபயம் போக்கும் மிருத்யுஞ்சயரும் இவர்களின் இஷ்ட தெய்வமே!

கடம்பனூர்: சூரபதுமனை அழித்ததால் ஏற்பட்ட சூரஹத்தி தோஷம் நீங்கிட, முருகப் பெருமான் ஐந்து தலங்களில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த திருத்தலங்கள் நாகை மாவட்டத்தில் உள்ளன. அவை கோவில்கடம்பனூர், ஆதிக்கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர் என்பனவாகும். அங்கெல்லாம் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் முருகப்பெருமான். சதயம் நட்சத்திர அன்பர்கள் அருள் வேண்டி முருகனை இங்கு வழிபடலாம். 

கடம்பர்கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் அமைந்துள்ள, கடம்பை தட்சிணகாசி என அழைக்கப்படும் தலம். தலவிருட்சம் கடம்ப மரம். கடம்பவனநாதராக, ஈசன் முலையம்மையோடு அருள்பாலிக்கும் திருத்தலம்.

மேலக்கடம்பூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலுக்கு தென்மேற்கில் 5 கி.மீ. தூரம். தேர்வடிவில் அமைந்த திருத்தலம். அமிர்தகடேஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். கோடிலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்திட இந்திரனைப் பணித்தார் விநாயகர். அருகிலேயே ருத்ரகோடீசுவரரை பிரதிஷ்டை செய்து சாபவிமோசனம் பெற்றான் இந்திரன்.

பிட்சாண்டார் கோயில்: திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி.மீ. உத்தமர்கோயில் என அழைக்கப்படும் வைணவ சிறப்பு மிகுந்த சந்நதிகள் அமைந்துள்ள மும்மூர்த்தித் தலம். பிரம்மா, சரஸ்வதிக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன.

கூடல்: மதுரை மாநகரில் அமைந்துள்ள வைணவ திவ்விய தேசத்தலம். ‘கிருத மாலா’ எனும் ஆறு, இரண்டாகப் பிரிந்து இத்தலத்தை ஒரு மாலைபோல் சுற்றிக்கொண்டு மீண்டும் ஒன்று சேருவதால், கூடல் என்று பெயர். கடம்ப மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு, அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த கோலத்திலும், நின்ற கோலத்திலும், சூரிய நாராயணராகவும் சேவை சாதிக்கிறார் வைகுந்தநாதர். தாயார் மதுரவல்லி. அருகிலேயே உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் ஆலயமும் மிகச் சிறந்த பரிகாரத் தலம்.

25. பூரட்டாதி

திருக்குவளை: ‘திருக்கோளிலி’என்பது புராணப் பெயர். தஞ்சை மண்டலத்தில் பிரதானமான ஏழு சிவத்தலங்களில் ஒன்று. இவற்றை சப்தவிடங்கத்தலம் என்பார்கள். கோள்களின் (நவகிரகங்களின்) குற்றங்களைப் பொறுத்து அருள் செய்ததால் ‘கோளிலிநாதர்’ என்று ஈசனுக்குப் பெயர். நவகிரக தோஷங்களை அகற்றும் பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. அன்னை வண்டமார் பூங்குழலி என்று அழகுப் பெயர் பூண்டிருக்கிறார். ‘தேற்றா’ மரமே இங்கு தலவிருட்சம். பூரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சமும் அதுவே. தியாகராஜப் பெருமான், அவனிவிடங்கராக (உலகப் பாதுகாவலராக) இங்கே அருள்பாலிக்கிறார். இத்தலத்து விநாயகர் தியாக விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.  திருவாரூர் மாவட்டத்தில், கச்சனம் அருகே உள்ளது.
திருக்குவளை தவிர அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கோயில்களில் உள்ள மஹாலட்சுமி அல்லது தாயார் சந்நதிகளில் உளமுருக பிரார்த்தனை செய்துகொண்டும் வாழ்வில் வளங்களைப் பெறலாம்.

26. உத்திரட்டாதி

திருநாங்கூர்: வைணவ திவ்ய தேசம். பராசவனம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் 11 திவ்ய தேசங்கள் உள்ளன. திருநாங்கூரில் எம்பெருமான், நின்ற கோலத்தில், நிலமகள், திருமகளோடு, புருஷோத்தம பெருமாள் என்ற திருநாமங்கொண்டு சேவை சாதிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி, தனி சந்நதி கொண்டுள்ளாள். திருக்கோயிலின் வடக்கே உள்ள திருக்குளம், திருப்பாற்கடல். தலவிருட்சம் வேம்பு.

எதிரில் ‘நம்பினார்க்கன்பன்’ கோயில் என்ற சிவாயலமும் உள்ளது. மகாதேவ பீடம் என்று அதனை அழைப்பர். இந்தக் கோயில் தவிர வேறு பல சிவன் கோயில்களும் இத்தலத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. அதாவது பதினொரு வைணவக் கோயில்களுக்கு சமமாக, பதினொரு சிவாலயங்கள்! சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று இயைந்து தழைத்தோங்கிய திருத்தலம் இது. திருநாங்கூர் திருத்தலம் நாகை மாவட்டம், சீர்காழிக்கு தென் கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில்: புள்ளிருக்கு வேளூர் என அழைக்கப்படும் தேவாரத் திருத்தலம் இது. நாகை மாவட்டத்தில் உள்ளது. ‘செவ்வாய்’ பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள செல்வ முத்துக் குமாரஸ்வாமி, தனிச்சிறப்பு பெற்றவர். இத்திருத்தலத்தில், வேம்படி ஆதி வைத்தியநாதரும், சித்தாமிர்த தீர்த்தமும் திருச்சாந்துருண்டை என்ற பிரசாதமும், எல்லா நோய்களையும் வினைகளையும் தீர்க்க வல்லவை என்பார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை, விஷ்ணுவின் அம்சமாக இருப்பதால், திருமாலையும், திருமகளையும், காமதேனுவையும் அவர்கள் இஷ்டதெய்வங்களாகக் கொள்ளலாம்.

27. ரேவதி

திருச்செங்கோடு: ஈரோட்டில் இருந்து 25 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. அரனுடைய உடலில் ஒரு பகுதியைப் பெற்றிட அம்பிகை தவம் இயற்றிய மலை, அவளுடைய தவத்தால் சிவந்தது. அதனாலேயே அது செங்கோடு எனப்பெயர் பெற்றது. அதுவே, தற்போது ‘திருச்செங்கோடு’ என்று அழைக்கப்படுகிறது. ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற, இரு மலைச்சிகரங்களைக் கொண்ட இந்த மலை நாககிரி என்றும் பெயர்கொண்டிருக்கிறது. ஏன் நாககிரி? மலையிலுள்ள படிகள் வழியே மேலே சென்றால், கற்பாறையில் உருவாகியுள்ள அறுபதடி நீள ஐந்து தலை பாம்பு ஒன்றையும் காணலாம். இதனால்தான் அந்தப் பெயர். அதனைக் கடந்து 280 படிகள் ஏறிச்சென்றால், மேலே மலைக்கோயிலை அடையலாம்.  இடையே, வழக்குகளைத் தீர்த்திடும் ‘18 படி கருப்பன்’ கூட இருக்கிறார்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோலூன்றியபடி பிருங்கி முனிவர் அவரைத் தொழுதபடி நிற்கிறார். அம்பிகை தனி சந்நதியில் கொலுவீற்றிருக்கிறாள். கூடவே செங்கோட்டு வேலனையும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நாகேஸ்வரர் சந்நதிகளையும் தரிசித்துவிட்டு, மலைமீதுள்ள பாண்டீஸ்வரரையும் வணங்கி வரலாம்.

இலுப்பைப்பட்டு: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு மேற்கில் 13 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு அருகில் உள்ளது. தலவிருட்சம் இலுப்பை ஆனதால் இலுப்பைப்பட்டு என வழங்கப்படுகிறது. பஞ்சபாண்டவர் பூஜித்த ஐந்து லிங்கங்கள் உள்ளன. தருமபுத்திரர் பூஜித்தவரே மூலவர் நீலகண்டேஸ்வரர். அம்மன், அமுதகரவல்லி.

இரும்பை மாகாளம்: திண்டிவனத்திலிருந்து 30 கி.மீ. தொலைவு. கடுவெளிச்சித்தர் தவம்புரிந்த தலம். இலுப்பை என்பதே இரும்பை என்று ஆயிற்று எனவும் கூறுவர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தலைநகரம், அனந்தபத்மநாப சுவாமி ஆலயம். தல விருட்சம் இலுப்பை.