உன்னத மகிமை வாய்ந்த உதி!2017-2018 (அக்டோபர்) - ஷீரடி சாயிபாபா மஹாசமாதியான நூறாவது ஆண்டு

தானத்தில் சிறந்தது அன்னதானம். ஷீரடி சாயிபாபாவினுடைய பிரார்த்தனைகளில் அன்னதானமே முக்கியமானது. இதனை விளக்கும் ஒரு சம்பவம், சாய்சத் சரிதத்திலிருந்து: பாபாவின் பக்தரான சந்தோர்கர், தினந்தோறும் அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் பாபாவிடம் ‘‘நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு வைத்துவிட்டு அதிதிகளுக்காக காத்திருப்பேன். ஆனால். அவர்கள் வருவதே இல்லை. ஏன் பாபா இவ்வாறு நடக்கிறது’’ என்று சந்தோர்கர் வெகுளித்தனமாகக் கேட்டார். ‘‘நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’’ என்று அவரிடம் திரும்பிக் கேட்டார் பாபா. ‘‘நமது சாஸ்திரங்களும், வேதங்களும் இப்படித்தானே பாபா சொல்லி இருக்கிறது, அதைத்தான் நான் கடைபிடிக்கிறேன்’’ என்றார் சந்தோர்கர்.

 ‘‘நானா, சாஸ்திரங்களில் தப்பில்லை, வேதங்களிலும் குறையில்லை. ஆனால். அவற்றின் உண்மையான பொருளை சரியாக நீ புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். அதனால்தான் அதிதிகளுக்காக தினமும் காத்திருப்பதாக விசனப்பட்டுக் கொள்கிறாய்.

அதிதி என்பவன் யார்? மனித உருவத்தில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவத்தில் இருப்பவைகூட அதிதிகள்தான். நீ உணவளிக்கும்போது அதனை உண்பதற்காக பசியுடன் யார் அல்லது எது வந்தாலும் அது அதிதிதான். நிறைய காக்கைகள் வரும்போது நிறைய அன்னத்தை அவற்றிற்கு வழங்கு. உயிருள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று நினை. அப்படிச் செய்தால் அதிதிகளுக்கு உணவளித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்’’ என்று பாபா விளக்கமளித்தார்.

மனித ரூப அதிதிகளுக்காகக் காத்திருக்காமல், பசியோடு, உணவுதேடி வரும் எந்த ஜீவனுக்கும் அளிப்பதே அன்னதானம் என்பதைப் புரிந்துகொண்டார் சந்தோர்கர். கால் மேல் காலைப்போட்டு அமரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்த உருவப்படம் மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது.

பாபா அவர்கள் தனது வலதுகாலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடதுகையை வலதுகால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். திரு.ஹேமாந்த் பந்த் (சாய் சத்சரித ஆசிரியர்), பாபாவின் இடதுகை ஆள்காட்டி விரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவே உள்ள வலதுகால் பெருவிரலை, இரண்டு மரக்கிளைகளுக்கு இடையே உள்ள சூரியனை பார்ப்பதுபோல் தரிசித்து பாபாவின் ஆசிஒளியைப் பெறலாம் எனக் கூறுகிறார்.

மேலும் ஹேமாந்த் பந்த் அவர்கள், பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச்சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தின் மீது வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தை தணிக்கச் சொல்கிறார்.

ஒருவர் ஷீரடி சாயிபாபாவின் பரம பக்தர். அவரது மனைவி பிரசவம் ஆன இரண்டு நாட்கள் கழித்து வயிறு உப்பி மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் இவரது மனைவியை வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச்சொல்லச் சொல்லிவிட்டார். இதனைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டனர். பக்தர் ‘‘பாபா தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்றுங்கள்’’ என்று சத்தம் போட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தார். கூடியிருந்த அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். பக்தர் அவரது மனைவியின் வலது மணிக்கட்டில், ஷீரடி பாபா புனித கயிற்றைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் உதி என்ற சாம்பலைத் தடவினார். (ஷீரடி பாபா ஆலயங்களில் எப்போதும் அணையாது ஓர் அடுப்பு எரிந்துகொண்டிருக்கும். அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைத்தான் உதி என்கிறார்கள்) சிறிது உதியை மனைவியின் வாயில் இட்டார். அடுத்த ஐந்தாவது நிமிடம், மனைவியின் உப்பிய வயிறு சகஜ நிலைக்கு வந்தது. எல்லோரும் கண்ணீருடன் பாபாவை பிரார்த்தித்தனர்.

ஷீரடி சாயிநாதர் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவோரை பாபா கைவிடவே மாட்டார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு ஒருவர் கற்றுத்தந்த மிகவும் சக்தி வாய்ந்த ஷீரடி சாய் மந்திரம் இதோ. இதை 9 முறை தினசரி பாராயணம் செய்ய, வாழ்வில் அற்புதங்கள் நடப்பதை உணரலாம்.
‘‘ப்ரதமம் சாயி நாதாய துவிதியம் துவாரக மாயினே
திரிதீயகம் தீர்த்த ராஜ சதுர்த்தகம் பக்த வத்சலா
பஞ்சமம் பரமத் மாயா சஷ்டமம் ஷீரடி வாசாய
சப்தமம் சத்குரு நாதாய அஷ்டமம் ஆனந்த நாதாய
நவமம் நிராதம்பராய தசமம் தத்த அவதாராய
ஏதானி தச நாமாணி திரிசண்டியம் யஹா படேன் நேரஹா
சர்வ கஷ்டோ பயமுக்தோ சாயி நாத குரு கிருபா.’’

மேலும் ‘சாய் சத்சரிதத்தின்’ 11 மற்றும் 15வது அத்தியாயங்களை 48 நாட்கள் தினமும் பாராயணம் செய்தால் சூரியனைக் கண்ட பனிபோல கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடுகின்றன என்பது ஷீரடி சாயிபாபா பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

- ப்ரியா கிஷோர்