பகவத் கீதை 58



பகவானுக்கென்று எதை அர்ப்பணிப்பது?

ச்ரோத்ரதீனீந்த்ரியாண்யன்யே ஸம்யமாக்னிஷு ஜுஹ்வதி சப்தாதீன் விஷயானன்ய இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி (4:26)

‘‘இந்திரியங்களைப் பொறுத்தவரை அக்னிக்கு ஆஹுதியாக்குவதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, அந்த இந்திரியங்களையே புலனடக்கம் என்ற அக்னிக்கு ஆஹுதியாக்குவது; இன்னொன்று, இந்திரியங்கள் ஈர்க்கும் விஷயங்களை அந்த இந்திரியங்கள் என்ற அக்னிக்கு ஆஹுதியாக்குவது!’’

உடல் இயங்குவதற்கான அவசியத் தேவைக்காகத்தான் ஐம்புலன்களையும் இறைவன் படைத்திருக்கிறான். அதேசமயம் அவற்றை முறைப்படுத்தவும், கையாளவும் நம்மையே பொறுப்பாளியாக்கியும் உள்ளான். நம் உடல் என்றால், அதன் எல்லா விஷயங்களுக்கும் நாம்தானே பொறுப்பு மேற்கொள்ளவேண்டும்! அதன் வளர்ச்சி-தளர்ச்சி, நலன்-கேடு, மேன்மை-இகழ்ச்சி, பலம்-பலவீனம் என இந்த ஆக்கபூர்வ-அழிவுபூர்வ விஷயங்களுக்கு நம் இந்திரியங்களே அடிப்படை காரணம், அவற்றை முறையாக இயக்கத் தெரியாத ‘நாம்’ அடுத்த காரணம்!

எந்த விஷயத்தாலும் உடனே ஈர்க்கப்படுபவை நம் புலன்கள்தான். அவ்வாறு ஈர்க்கப்படாவிட்டால் நாம், நாமல்ல; ‘அது’தான்! ஆனால், அப்படி ஈர்க்கப்பட்டாலும், அவற்றை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து, அடுத்து அவை எதனாலும் ஈர்க்கப்பட்டுவிடாதவகையில் கட்டுப்படுத்தி வைப்பது ஒருவகை.

இதுதான் இந்திரியங்களையே புலனடக்கம் என்றும் அக்னிக்கு ஆஹுதியாக்குவது. அதேசமயம், பலவிஷயங்களில் புலன்கள் ஈர்க்கப்பட்டாலும், அந்த விஷயங்களால் எந்த பாதிப்பும் அடையாமல் தன்னைக் காத்துக்கொள்வது இரண்டாவது வகை. அதாவது இந்திரியங்களையே அக்னியாக பாவித்து அவற்றிற்கே அவை ஈர்க்கும் விஷயங்களை ஆஹுதியாக்குவது! புலனடக்கமும் அக்னி; புலன்களும் அக்னி!

புலன்களை அடக்கும் ஆற்றல் பெற்றவர்கள் அவற்றை எந்த விஷயமும் ஈர்த்துவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கும், ஆனால், விழித்திரையில் எந்தக் காட்சியும் பதிவாகாது; காது கேட்டுக்கொண்டுதான் இருக்கும், ஆனால் கேட்பவை மூளைக்குச் செல்லாது; வாய் பேசிக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோதான் இருக்கும், ஆனால், பேச்சில் உணர்ச்சிவசப்படுதலோ, சாப்பாட்டில் சுவையோ இருக்காது; மூக்கு சுவாசித்துகொண்டுதான் இருக்கும், ஆனால், எந்த வாசனையையும் உணராது; மேனி ஸ்பரிசம் காணும், ஆனால், சிலிர்த்துக்கொள்ளாது.

இதுதான் புலனடக்கம் என்ற அக்னிக்கு அவை ஈர்க்கும் விஷயங்களையே அர்ப்பணித்துவிடுவது! அதாவது, காண்பது, கேட்பது, நுகர்வது, புசிப்பது, பேசுவது, ஸ்பரிசிப்பது எல்லாவற்றையுமே பரந்தாமன் ஸ்மரணையாக பாவிப்பது!

இந்தவகையில் கண் கேட்கும், வாய் நுகரும், மூக்கு பேசும், காது பார்க்கும் என்ற விசித்திரமான அனுபவமும் ஏற்படும். அதாவது, இந்திரிய உணர்வுகள் எல்லாம் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டு விடும். முரண்பாடான கருத்துதான். ஆனால் ஒன்றுமே இல்லை அல்லது எல்லாமே ஒன்றுதான் என்னும்போது, முரண்பாட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது? இது முதல் வகை.

ஈர்க்கும் விஷயங்களுக்குப் புலன்களை  ஈடுபடுத்துவது. அவற்றின் அந்தந்தக் கடமைகளைச் செய்ய அனுமதிப்பது; ஆனால், அந்த ஈர்ப்பால் அந்தப் புலன்களுக்கும் சரி, ‘தனக்கும்’ சரி, எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு காத்துக்கொள்வது. அதாவது, புலன்கள் என்ற அக்னிக்கு அவை ஈர்க்கும் விஷயங்களையே அர்ப்பணித்துவிடுவது!

 பார்ப்பதெல்லாம் பரந்தாமன் வடிவம், கேட்பதெல்லாம் அவன் நாமம், பேசுவதெல்லாம் அவன் பெருமை, சுவைப்பதெல்லாம் அவன் கருணை, நுகர்வதெல்லாம் அவன் நறுமணம் என்று புலன் இயக்கங்களையெல்லாம் அவனுடைய பலன்களாக பாவிக்கும்போது, புலன்கள் எந்த விஷயத்தில் ஈர்ப்பு கொண்டால்தான் என்ன? இது இரண்டாவது வகை.

இந்திரியங்கள் அனுபவிப்பதையெல்லாம் மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் இந்திரியங்களின் கடமைகள் நிறைவுக்கு வரும். பார்ப்பதை அழகு என்றோ, அழகு இல்லை என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் கண்களின் கடமை ஈடேறுகிறது. 

நுகர்வதை நறுமணம் என்றோ, துர்நாற்றம் என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் மூக்கின் கடமை நிறைவேறுகிறது. கேட்பதை இனிமை என்றோ, சகிக்கவில்லை என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் காதுகளின் கடமை பூர்த்தியாகிறது.

 ருசிப்பதை சுவையானது என்றோ, சுவையற்றது என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான், பேசுவதை இனிமையானது என்றோ, இனிமையற்றது என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் வாயின் கடமை முழுமையடைகிறது. மேனியால் தொடும்போது அல்லது மேனி தொடப்படும்போது சுகம் என்றோ, வலி என்றோ மனம் ஸ்பரிசிக்கும்போதுதான் மேனியின் கடமை நிறைவேறுகிறது.

 ஆனால், அதே மனம், இந்திரியங்களின் அனைத்து உணர்வுகளையும் பரந்தாமனின் சுவைகளாகவே ஸ்பரிசிக்குமானால், அது இந்திரியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்
கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மனதின் இந்த ஸ்பரிசமே, அது எந்த அளவுக்கு ஆழ்ந்து ஸ்பரிசிக்கிறதோ அதைப் பொறுத்தே, அந்தந்த உணர்வுகளைப் பற்றிய நீடித்த நினைவாகவோ அல்லது நினைவுத் தப்புதலோ ஏற்படுகிறது.

புலனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருதுவதை கண்கள் பார்க்காமலிருப்பதா?  அல்லது, எதைப் பார்த்தாலும் நல்லனவற்றை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக்கொண்டு வேண்டாததை ஒதுக்கிவிடுவதுதான் புலனடக்கமா?

அல்லது எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் பரந்தாமனையே மனம் உருவகித்துக்கொள்வது, அந்தப் பரம்பொருளையே ஒரே முனைப்பாக்கி அறிந்துகொள்வதுதான் புலனடக்கம் என்று சொல்லலாமா? இவையெல்லாவற்றிலும் மேலான புலனடக்கம் என்பது எது? எங்கும், எதிலும், எப்போதும் எல்லா இந்திரியங்களிலும் பகவானை மனம் ஸ்பரிசிப்பதுதானே!

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்னௌ ஜுஹ்வதி ஞானதீபிதே (4:27)

‘‘ஞானிகள், இந்திரியங்களின் இந்தச் செயல்களை, அவற்றால் மனம் ஸ்பரிசிக்கும் உணர்வுகளை, தம் ஞானத்தால் பிரகாசமான பரமாத்மா என்ற தம் ஆன்மாவில், அந்த யோகாக்னியில் ஆஹுதியாக்குகிறார்கள்.’’ ஞானி என்பவர் யார்? தன்னை உணர்ந்தவர், தன்னையே பரமாத்மாவாக உணர்ந்தவர்.

அஞ்ஞானி என்பவர் யார்? தன்னையே உணராதவர், அதனாலேயே பரமாத்மாவையும் உணர முடியாதவர்!  ஞானி, தீபம் ஒளிர, தான் எண்ணெயாகிறார். ஹோமம் வளர தான் நெய்யாகிறார். அதாவது, எண்ணெயே, நெய்யே தீபமாகிறது, அக்னியாகிறது.

 தான் அப்படியே பரமாத்மாவுடன் கலந்துவிடுவதுதான் ஞானியின் இயல்பு. இந்தப் பக்குவம், இந்த வித்தை, கைவராதவர்கள் அஞ்ஞானிகளாகவே இருக்கிறார்கள். தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். இறைவனுக்கு மலர்களை சமர்ப்பிக்கிறோம். நறுமணம் கமழும் ஊதுவத்திகள் ஏற்றி வைக்கிறோம்.

பிரசாதங்கள் சமைத்து படைக்கிறோம். இது சராசரியான பூஜைமுறை. ஆனால், ஞானி எனப்படுபவர், ஆத்ம நிவேதனமே செய்பவர். தனக்குள் இந்த தன் ஜன்மத்தில், அப்போதைக்குத் தற்காலிகமாகக் குடிகொண்டிருக்கும், அழிவேயில்லாத ஆன்மாவையே இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். அவருக்குத் தெரியும் ஆன்மா பகவானுக்கு மட்டுமே சொந்தமானது, தான் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று.

அதைவிட, தன் உடலில் இருக்கும் மதிப்புவாய்ந்த அரியதொரு விஷயம் ஆன்மாதானே? முந்தைய ஜன்மத்திலிருந்து இப்போது நமக்கு வந்து, அடுத்த ஜன்மத்தில் இன்னொரு உடலுக்குள் செல்லவிருப்பதல்லவா அது! அதனால் அது எத்தனை மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்!

உடலும், அதன் உறுப்புகளும், அவை இயங்குவதற்கு இன்றியமையாததான உயிரும் என்றேனும் ஒருநாள் அழியப்போகிறவைதான் என்றாலும், ஆன்மா மட்டும் சாசுவதமானதாகத் திகழ்கிறதே, அது எத்தனை மதிப்பு வாய்ந்தது! அழியக்கூடியவற்றையும், அவற்றின் உணர்வுகளையும் பரந்தாமனுக்கு அர்ப்பணிப்பதைவிட, இந்த ஆன்மாவை அர்ப்பணிப்பதுதான் எத்தனை உயர்வானது!

அஞ்ஞானி தனக்குரியதாகத் தான் கருதிக்கொள்ளும் மலர்களையும், ஊதுவத்தி, கற்பூரம், சாம்பிராணி முதலானவற்றையும், பிரசாதங்களையும் இறைவன் முன் சமர்ப்பித்துவிட்டு அவற்றுக்கெல்லாம் பிரதிபலனாகத் தனக்கு ஏதேனும் நன்மைகளை இறைவன் செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பான். பகவானுக்கு எதைத்தான் சமர்ப்பிப்பது?

 நம் இந்திரியங்களால் அடையாளம் காணமுடிந்த பொருட்களைத்தான் நம்மால் காணிக்கையாக்க முடிகிறது. அதிகபட்சமாக கண்ணப்பன், கண்களை இறைவனுக்குக் காணிக்கையாக்கினான்; ஏகலைவன், இறைவனுக்கொப்பாகத் தான் மதிப்பிடும் குருவுக்குத் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கினான். இன்றும் பலர் தம் உடலை வருத்தி விரதம் இருக்கிறார்கள். பட்டினி கிடக்கிறார்கள். இரவெல்லாம் விழித்திருந்து இறைநாமம் சொல்கிறார்கள். மொட்டை அடித்துக்கொள்கிறார்கள்.

அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள். தீச்சட்டி சுமக்கிறார்கள். தீக்குழியில் இறங்குகிறார்கள். அலகு குத்திக்கொள்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், பாதம் நோக திருத்தல யாத்திரை மேற்கொள்கிறார்கள். வண்ணப்பொடிகள், பூச்சுகளைப் பூசிக்கொண்டு (குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா கோலாகலம்) தங்களை தோற்றத்தை கோரப்படுத்திகொள்கிறார்கள்.

இப்படித் தன்னை இழந்து, உடல்கூறு தியாகம் செய்துகொண்டு, ‘எல்லாம் நீ கொடுத்ததுதானே, உனக்கே அர்ப்பணிக்கிறோம்’ என்ற பாணியில் பலரும் இறைப்பணி ஆற்றுகிறார்கள். இந்த நஷ்டங்கள் எல்லாம் அவர்கள் தமக்குரியதாகக் கருதிக்கொள்ளும் தங்கள் உடல் சார்ந்த விஷயங்களைத்தான்.   

ஆனால், ஞானியைப் பொறுத்தவரை எதுவுமே அவருக்குச் சொந்தமில்லை. ஆகவே இந்திரியக் கடமைகள் எதுவுமே அவரை பாதிக்காது. ஏனென்றால் அவருக்கு ‘நான்’ இல்லை. அதனாலேயே இந்திரிய உணர்வுகளும் இல்லை. ‘நான்’ என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள உதவுபவைதான் இந்திரியங்கள். பிறவி எடுத்த பிறகு, அது முடியும்வரை ஜீவித்தாகவேண்டிய கட்டாயத்தின் உதவு காரணங்கள்.

இச்சைகளைப் பூர்த்திசெய்துகொள்வதன் வடிகால்கள். இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று கருதுபவனே ‘நான்’, ‘எனது’ என்று சொந்தத்துக்கும், உரிமைக்கும், சலுகைக்கும் அடிமையாகிறான்.

இந்த அடிமைத்தனமே அவனை ஏமாளியாக்குகிறது, வருத்தப்படவைக்கிறது, பொறாமை - பகை கொள்ளவைக்கிறது. இந்திரியங்களையும், மனதையும் ஆன்மாவுக்குள் ஒடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் காண்கிறான் ஞானி. ஆகவே அவனால் எளிதாக ஆன்மாவை பகவானுக்கு அர்ப்பணிக்க முடிகிறது. அதாவது, தம் இயல்பை மேலானதாக மாற்றிக்கொள்ளும் வழி தெரிந்தவன் ஞானி.

(தொடரும்)