பிரசாதங்கள்



சிறுதானியப் பயன்பாடு இப்போது பரவலாகிவருகிறது. கார்த்திகை தீபத்திருநாளை (03.12.2017) ஒட்டி சம்பிரதாயமான பிரசாதங்களுடன் சிறுதானிய பிரசாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அரிசி பொரி உருண்டை

என்னென்ன தேவை?
அரிசி பொரி - 4 கப், பாகு வெல்லம் - 1¼ கப், தண்ணீர் - 1/2 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடித்து, மீண்டும் கொதிக்க வைத்து ஒரு கம்பி பாகு காய்ச்சி, நெய் சேர்த்து இறக்கவும். இதில் அரிசி பொரியை கொட்டி கிளறி, சிறிது சூடாக இருக்கும் போதே, அரிசி மாவை கையில் தொட்டு பொரி கலவையை உருண்டைகளாக பிடித்து ஆறியதும் பரிமாறவும்.

தேங்காய் லாடு

என்னென்ன தேவை?
பெரிய முழு தேங்காய் - 1, பனை வெல்லம் - 200 கிராம், தண்ணீர் - 1/2 கப், நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
துருவிய தேங்காயை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடித்து கொள்ளவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கம்பி பாகு காய்ச்சி, கெட்டியாக வரும்போது தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறவும். சிறிது சுருண்டு வந்ததும் இறக்கி நெய் சேர்த்து கலந்து சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: சாதாரண வெல்லம், பேரீச்சை வெல்லத்திலும் செய்யலாம்.

சிம்லி

என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 2 கப், கறுப்பு எள் - 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1½ கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் - சிறிது உப்பு சிட்டிகை.

எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, 1 சிட்டிகை உப்பு, தேங்காய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் நெய் சேர்த்து மொறு மொறுவென்று சுட்டு எடுக்கவும். மாவு அனைத்தையும் சுட்டு எடுத்து கொள்ளவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். இத்துடன் எள்ளையும் வறுத்து பொடித்து மாவில் சேர்த்து கொள்ளவும். ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து அனைத்தையும் கலந்து இடித்து கொள்ளவும். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

அவல் பொரி உருண்டை

என்னென்ன தேவை?
அவல் பொரி - 4 கப், பாகுவெல்லம் - 1¼ கப், தண்ணீர் - 1/2 கப், பல் பல்லாக கீறிய தேங்காய் - 1/4 கப், அரிசி மாவு - 1 ேடபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
தேங்காயை நெய்யில் சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடித்து, மீதியுள்ள நெய் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, பாகு பதம் வந்ததும், அவல் பொரி, வறுத்த தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே கையில் அரிசி மாவை தொட்டு கொண்டு, அவல் பொரி கலவையை உருண்டைகளாக பிடித்து ஆறியதும் பரிமாறவும்.

ஓட்ஸ் அப்பம்

என்னென்ன தேவை?
ஓட்ஸ் - 1½ கப், பொடித்த பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், துருவிய கேரட் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, தேங்காய்த்துருவல் - 1/4 கப், தயிர் - 1/2 கப், தண்ணீர் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?
ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் வைக்கவும். குழிப் பணியாரச் சட்டியை சூடு செய்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு சிறு கரண்டி மாவை ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் வெங்காயத்தை பொடித்துச் சேர்க்கலாம்.

சிறுதானிய அப்பம்

என்னென்ன தேவை?
சாமை அல்லது தினை - 1 கப், பொடித்த வெல்லம் - 1/2 கப், பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப், பொரிக்க நெய் - தேவைக்கு, வாழைப்பழம் - 1, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?
தினையை 4 மணி நேரம் ஊறவைத்து கழுவி வடித்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து கொள்ளவும். மாவு, வெல்லக்கரைசல் கலந்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஏலக்காய்த்தூள், தேங்காய், மசித்த வாழைப்பழம் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். குழிப்பணியாரச் சட்டியை சூடு செய்து 1 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு சிறு கரண்டி மாவை ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் உடைத்த முந்திரி சேர்க்கலாம்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்