ஆன்மிக பயணமிது...ஆனந்த பயணமிது!பயணமிது! பயணமிது! ஆன்மிக பயணமிது!
ஆனைமுகனை வழிபட்டு
சிதறுகாய் உடைத்து தொடங்கும்
தெய்வீகப் பயணமிது!
புண்ணிய பயணமிது!
நெற்றி நிறைய திருநீறும்
நெஞ்சகத்தில் பக்தி ஊறிய
நல்லோர் கூட்டம் ஒன்றுகூடி
நல்வழி காட்டும் பயணமிது!
நலங்கள் கோரும் பயணமிது!
குருவின் திருவடி வணங்கு
திருவருள் வழித்துணை காட்டும்
அரோகரா கோஷம் போடு
அறுபடை வீட்டையும் நாடு
ஆறுமுகனை மனமுருக பாடு!
பறவைகள் துவக்கும்
பனி காலை பயணமிது
பசி, தூக்கம் மறந்து
பகவானை தேடும் பயணமிது!
பரந்தாமன் நிழலாடும் பயணமிது!
வாழ்க்கை பயணம் முடியுமுன்
வரங்கள் சேர்க்கும் பயணமிது
வளமான இயற்கை வனப்பால்
அமைதி அள்ளும் பயணமிது
பிறவிப்பயன் பெறும் பயணமிது!
நாடி, நரம்பு அடங்கும் முன்
தேட வேண்டிய பயணமிது!
ஆடிப்பாடி கொண்டாடி
அனுபவம் பெறும் பயணமிது!
ஆன்மிக பயணமிது! ஆனந்த பயணமிது!
மலைமேல் நிற்கும் சாமி
மங்கலம் தரும் மலையப்ப சாமி!
‘நாமாலு சுவாமிக்கு தோமால சேவா’ என
சுந்தர தெலுங்கில் பக்தர் கோஷம் கேட்கிறது!
மனம் பூக்கிறது, உள்ளத்தில் ஒளி நிறைகிறது!
நாராயணா, நமசிவாய நாமங்கள்
உள்ளந்தோறும் எதிரொலிக்கும் பயணமிது!
அன்பு பயணமிது! அறிவார்ந்த பயணமிது!
இறைவன், பக்தன் அன்புறவுப் பயணமிது!
குலம் வாழ வழிவழியாய் தொடரும் பயணமிது!
ஆராய்ச்சி நோக்கி விண்வெளிப் பயணம்
ஆத்மஞானம் திறக்கும் ஆன்மிக பயணம்!
நவகிரக பாதையில் வாழ்க்கைப்பயணம்
நள்ளாறு நற்துணையாகும் நம்பிக்கை பயணம்!
உள்ளாறு பாய்ந்து சரணடையும் பயணம்!
ஆழ்கடல் நோக்கிய பயணம்
கைநிறைய முத்து அள்ளித்தரும்!
ஆன்மஞானம் தேடும் பயணம்
அடுத்தடுத்த பிறவிக்கு துணையாகும்!
ஆன்மிக அனல் சுட்ட மனதில்
வேர்க்கடலை தோலாய் பற்றுகள் பிரியும்!

- விஷ்ணுதாசன்