அன்பு செய்வோம், ஆனந்தமாக வாழ்வோம்!



மன இருள் அகற்றும் ஞானஒளி

மனம் பற்று அற்று இருக்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் எண்ண உணர்வுகள் மனதில் அலைமோதினால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு இறைவனுடைய உதவியை நாட வேண்டும். அவனுடைய திருப்பெயரை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

ஆண்டாள் நாச்சியார்கூட,
வாயினால் பாடி மனதினால்
சிந்திக்க போய பிழையும் புகுதருவான்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பவாய்

-என்கிறார் ஆணித்தரமாக. நமக்கு பிடிக்காததை விடுவது துறவு அல்ல. வசதி வாய்ப்புகள் இருந்தும் செல்வச் செழிப்பில் திளைத்தாலும் மனம் மட்டும் அந்த மாலவனிடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் இல்லறத்திலேயே நல்லறமாக குடும்பத்தை செம்மையாக நடத்திச் செல்ல முடியும். சமீபத்தில் ஒரு செய்தியை படித்தபோது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரைச் சேர்ந்தவர் சுமித் ரத்தோர் வயது 35 அவருடைய மனைவி அனாமிகா வயது 34 இவர்களுக்கு மூன்று வயதில் அபயா என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது.

பெரும் தொழிலதிபரான சுமித் ரத்தோர் லண்டனில் உயர் படிப்பு படித்தவர் கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் மேல் சொத்து உடையவர். ஏகபோக செல்வச் செழிப்பில் இருக்கும் அவரும் அவருடைய மனைவி அனாமிகாவும் ஜெயின் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். கணவன்-மனைவி இருவரும் அத்தனை சொத்தையும், ஒரே மகளான அபயாவையும் உறவினரிடம் விட்டுவிட்டு இல்லறத்திலிருந்து விலகி துறவற வாழ்க்கை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். நினைத்துப் பாருங்கள், நூறு கோடிக்கும் மேல் சொத்து, ஒரே மகள்.

அவர்கள் விரும்பியிருந்தால் நினைத்தபடியெல்லாம் வாழலாம் ஆனால் இவர்கள் மனம் விரும்பி துறவு மேற்கொள்கிறார்கள்! தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை, பிரிவு என்ற புலம்பல் சத்தம் காதைக் கிழிக்கிற இக்காலத்தில் இப்படி ஒரு அதிசய தம்பதியை வியக்காமல் எப்படி இருக்க முடியும்? இவர்களைப் போல் அனைவரும் இல்லறத்தை விட்டுவிட்டு துறவு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை; அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

நம்முடைய ஆதங்கமெல்லாம் இல்லறத்திலேயே நல்லறமாக சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்தால் நம் வாழ்க்கை சொர்க்கமாக  இருக்குமே என்பதுதான். இதற்கு அடிப்படைத் தேவை பரஸ்பரம் அன்புதானே? திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ளது திருக்குவளை என்ற அழகிய சிற்றூர். தேவாரப் பாடல் காலத்தில் அதற்கு திருக்கோளிலி என்று பெயர். தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த திருஞான சம்பந்தர் அற்புதமான தேவாரப் பதிகத்தை திருக்குவளை இறைவன் மீது பாடிப் பரவசப்பட்டிருக்கிறார் அந்த அற்புதமான  தேவாரப் பாடல் இதோ:

நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம்; மடநெஞ்சே! அரன்நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே!

‘பேதை நெஞ்சமே, நம்முடைய வாழ்க்கைப் பயணம் எங்கே தொடங்கும் எங்கே முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை. இந்த குறுகிய வாழ்க்கையில் தேவையற்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டு கஷ்டப்படவேண்டாம். திருக்குவளையில் உள்ள இறைவனுக்கு அன்பு செய்வோம், அவனுடைய அருளைப் பெற முயற்சிப்போம். அதன்மூலம் நம்முடைய வம்சம் பெருகும் வாழையடி வாழையாக இன்பமாக இருக்கலாம். துன்பங்கள் துயரங்கள் நம்மைவிட்டு அகலும்’ என்கிறார் நம்பிக்கையோடு.

அதாவது, சக மனிதர்கள் ஆரம்பித்து ஈசன்வரை நாம் பரிமாறிக்கொள்ளவேண்டியது தூய்மையான அன்பு ஒன்றைத்தான். வள்ளல்பெருமானான ராமலிங்க அடிகளார், ஒருநாள் தன் அணுக்கத் தொண்டரை அழைத்து, ‘அமாவாசையை அழைத்து வா,’ என்று உத்தரவிட்டார். உடனே குடிசை வாழ் மக்களின் தலைவரான அமாவாசையை அழைத்து வந்தார்கள். பணிவாக நின்ற அமாவாசையை கனிவோடு பார்த்தார் வள்ளலார். ‘‘இறந்துபோன மாடுகளை என்ன செய்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

நம்முடைய தொழிலைப் பற்றி சரியாக கணித்து கேட்கிறாரே வள்ளல்பெருமான் என்று ஆச்சரியப்பட்ட அமாவாசை, ‘‘அதையெல்லாம் வெட்டி, விற்று விடுவேன். இறந்துபோன மாடுகளை வைத்துதான் என் பிழைப்பே நடக்கிறது சாமி,’’ என்கிறார். உடனே வள்ளல்பெருமான் அமாவாசையிடம் ‘‘இனி இறந்துபோன மாடுகளை வெட்டி விற்க வேண்டாம். அவையெல்லாவற்றையும் புதைத்துவிடுங்கள்.

புலால் உண்பதையும் விட்டுவிடுங்கள்,’’ என்று அறிவுறுத்தினார். அதோடு தனக்கு வேண்டியவரிடம் சொல்லி அமாவாசைக்கு மாற்று வேலையையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் வள்ளல்பெருமான். ஒருவருக்கு அறிவுரை சொல்வதோடு, அந்த அறிவுரைப்படி நடக்கத் தயாராகிறவருக்கு மாற்று வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொடுப்பதுதான் என்பது அன்புமயமான வள்ளல் பெருமான் போன்றவர்களின் அரிய சமுதாய சேவை. அன்பு ஒன்றுதான் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் மாமருந்து. ஆழ்வார்கள்கூட எம்பெருமானைப் பற்றி பாடி பரவசப்படும்போது,

‘‘அன்பவாய் ஆர் அமுதம் ஆவாய்
அடியேனுக்கு இன்பு ஆவாய்’’
எல்லாமும் நீ ஆவாய்’’

-என்றுதான் கண்ணீர் மல்க அவனை அழைத்து அனுபவித்து ஆனந்தப்படுகிறார்கள். திருவண்ணாமலை என்னும் அருள்சுரக்கும் மலையில் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் பலவித அற்புதங்களை நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள். ஏழை எளிய மக்களின் நலன் கருதி அவர்களுக்காகவே அவர்கள் மீது அன்புகொண்டு அவர் செய்த உதவிகள் ஒன்றா, இரண்டா ஒருமுறை சேஷாத்திரி சுவாமிகளைப் பார்க்க விசுவநாத முதலியாரும் அவருடைய மனைவி சாரதாம்பாளும் வந்திருந்தார்கள்.

சாரதாம்பாளுக்கு தீராத காசநோய். எத்தனையோ மருத்துவரைப் பார்த்தும் நோய் குணமாகவில்லை. ஆனால், சுவாமிகளின் அருட்பார்வையிலும் சுவாமி சொன்ன பத்திய வைத்தியத்தாலும் நோய் குணமாகியது. தன்னை நாடி வருகிற பக்தர்களின் வேதனையைப் போக்கி நிம்மதியை  அளித்த இந்த அரிய சேவை, சுவாமிகளின் கனிவான அன்புள்ளத்தைதான் காட்டுகிறது. நாமும் சக மனிதர்கள் மீது அன்பு செய்வோம், அறவழியில் நடப்போம்.

- ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்