உள்ள(த்)தைச் சொல்கிறோம்



நிறைவு தந்துவிட்டீர்கள்

திருமலை மலையப்பனை எந்த முறைப்படி தரிசனம் செய்யவேண்டும் என்று விளக்கியது ‘வேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா…’ கட்டுரை. இதன்மூலம்  கோவிந்தராஜப் பெருமாள், அலர்மேல் மங்கைத் தாயார், வராஹர் கோயில்களைப் பற்றியும் விவரமாகத் தெரிந்துகொண்டோம். வாழ்வில் எல்லா வளமும், நலனும், ஏற்பும், உயர்வும் ஏற்பட வேண்டுமென்றால், பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காலந்தவறாது செய்ய வேண்டும். மூதாதையர்கள் மனம் வருத்தப்பட்டால், அந்தக் குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற பெரிய உண்மையை சாஸ்திரங்கள் வழி விளக்கிய (மகாளய பட்சம் கட்டுரை) ஆன்மிகம் இதழின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

‘தினமும் கடவுளுடன் பேசுவோம்’ - பொறுப்பாசிரியரின் தலையங்கம் ‘ஆன்மிகம்’ இதழுக்கு மகுடமாக இருந்தது. கடவுளை வணங்குவதன் மகத்துவத்தை பல கோணங்களில் விவரித்திருந்தாலும், படகோட்டியின் நம்பிக்கையான பிரார்த்தனைபோலத்தான் நம் பிரார்த்தனையும் அப்படித்தான் திகழ வேண்டும் என்ற உவமை வெகு சிறப்பு. ‘வேங்கடரமணா, ஸ்ரீநிவாசா மலையப்பா’ என்ற கட்டுரையில் கோவிந்தராச பெருமாள் (உற்சவர்), பத்மாவதி தாயார் (மூலவர், உற்சவர்), வராஹர் (மூலவர்) வேங்கடவன் நேத்ர தரிசனம், விமான வேங்கடேசர், தீப  அலங்காரத்தில் வேங்கடவன் கோயில் என அனைத்து படங்களையும் வெளியிட்டு, திருப்பதி பெருமாளை நேரில் தரிசித்த நிறைவு தந்துவிட்டீர்கள்.

‘பராசக்தி’ பட வசனம்போல் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகி வருகிற வேளையில் அன்றைய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கோயில் கணக்குகள் மிகவும் நேர்மையாகக் கையாளப்பட்ட சரித்திர உண்மைகளை சென்ற இதழ் ‘கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்’ கட்டுரை கனமாக பதிய வைத்தது. -அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72 - கே. சிவகுமார், சீர்காழி-  ப.மூர்த்தி, பெங்களூர் -  இராம.கண்ணன், திருநெல்வேலி - வா.மீனாவாசன், வந்தவாசி.