சப்த கயிலாய தலங்களுக்கு சந்தோஷப் பயணம்



முதலில் - மண்டகொளத்தூர்
பார்வதிதேவியின் அருணாசலத்தை நோக்கிய பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாகக் காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது. பச்சையம்மனாக அம்பாள் அமர்ந்து அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப் பெருமான் தன்னுடைய வேலை எய்தான். வேல் குன்றுகளை துளைத்துச் சென்று குன்றைச் சுற்றிலுமுள்ள ஏழு ரிஷிகளின் சிரசைக் கொய்தது. ‘முருகப் பெருமானால் நிவர்த்தியாகும் என்று அன்றே பிரம்மனால் அந்த ரிஷிகளுக்கு உரைக்கப்பட்ட சாபம் அது.

அனந்தாமாபுரத்தைச் சேர்ந்த அந்தணர்களான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை முருகனின் ஞானவேல் கொய்தது. சிரசும், உடலும் தனித்தனியாயின. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்த தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது. உடலை நீத்த அந்தணர்களின் உடல் ஏழு இடங்களில் ஒதுங்கின. உமையின் சேய் ஆன முருகனால் உண்டான தீர்த்தமாதலால் சேயாறு என்றழைக்கப்பட்டது. செஞ்சிவப்பாக பாய்ந்ததாலும் சேயாறு என்றானதாகவும் கூறுவர்.

செஞ்சிவப்பு கலந்த நீர் பெருகி ஓடிவருவதைக் கண்ட முருகன் அதிர்ச்சியடைந்தான். ஆனால், பார்வதிதேவி தன்னுடைய ஞான திருஷ்டியால் நிகழ்ந்ததை அறிந்தாள். ‘‘கவலைப்படாதே கந்தனே. யாவும் நல்லதற்கே. அந்த அந்தணர்கள் முக்தி பெற்று விட்டனர். ஆனாலும், உலகத்தின் பார்வையில் அது கொலையாகும். ஆகவே, பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்கம் அமைத்து பூஜிப்பாயாக’’ என்றாள். கூடவே தன் புத்திரன் முருனுக்கு ஏற்பட்ட தோஷங்கள் தீரவும், ஈசனோடு அருணையில் கலந்து அவரது இடப்பாகம் பெறவும் வழிநெடுக அம்மையும் சப்த லிங்கங்களை அமைத்து பூஜித்தாள். அவை முறையே சப்த கயிலாய க்ஷேத்ரங்கள் என்றழைக்கப்படுகின்றன.

இந்த ஏழு தலங்களும் தென் கரையில் அமைந்துள்ளன. அவை முறையே மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோவில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டு என்றழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர் எங்கு நோக்கினும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாகத் திகழ்ந்திருக்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி, தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட கோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. சுற்றுச் சுவர்களிலெல்லாம் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் நான்கு கால் மகாமண்டபத்தை காணலாம்.

அருகிலேயே பிரதோஷ நந்தி அருள்பாலிக்கிறார். நேராக மூலவரான தர்மநாதேஸ்வரரை தரிசிக்கிறோம். அருகே செல்லச் செல்ல பார்வதி தேவியின் தவத்தின் தீவிரம் அந்த சந்நதியை சுற்றிலும் காட்டாறுபோல அரூபமாக பொங்கிச் செல்வதை உணரலாம். ஈசனின் அருளைத் தேக்கி அம்பாள் சந்நதிக்கு நகர்கிறோம். பிராகாரச் சுற்றிலேயே அம்பாள் தனிக்கோயில் கொண்டருள்கிறாள். ஸ்ரீதர்மஸம்வர்த்தினி தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் பேரருள் பெருக்கியபடி அமர்ந்திருக்கிறாள். தன் பக்தர்களின் அனைத்து பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியைப் பரப்புகிறாள். இத்தலம் போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இரண்டாவதாக, கரைப்பூண்டி
இத்தலம் சேயாற்றின் தென்கரையில் அமைந்திருப்பதால் கரைப்பூண்டி என்றழைக்கப்படுகிறது. சோழர்களும், விஜயநகர மற்றும் சம்புவராய மன்னர்களும் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர். தெற்கு நோக்கிய நுழைவாயிலின் மீது அழகிய பிரபையும் கூடிய மண்டபத்தில் ரிஷபாரூடராக ஈசனும் அருகேயே விநாயகர் மற்றும் முருகப் பெருமானும் சுதை வடிவினராக அருள்கிறார்கள். கோயில் மதிற்சுவர் மீது ஆங்காங்கு ரிஷப சுதைச் சிலைகளையும் காணலாம். கோயிலின் உள்ளே நுழைந்ததும் கிழக்கு நோக்கிய திருமுகங்களோடு மூலவரும், அம்பாளும் தனித்தனி சந்நதிகளில் தரிசனம் தருகின்றனர்.

ஈசன் கருவறைக்கு முன்னர் அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலிலேயே விநாயகர் மற்றும் வள்ளி-தெய்வானை கொல்விருக்கின்றனர். மூலவர் கரைகண்டேஸ்வரர், பேரருள்பாலிக்கிறார். ஈசனின் சந்நதியைக் கடந்து அம்மையின் சந்நதி நோக்கி நகர்கிறோம். அம்பாள் பாலசுந்தரி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். தானே பூஜித்து தானே அருளும் மகத்தான சந்நதி இது. தவஒளியை அம்மையின் திருமுகத்தில் இப்போதும் காணலாம். தன்னை நாடிவரும் பக்தர்களின் வாழ்வில் வளம் பெருக்கி மகிழ்ச்சி ஒளி பரப்பக் காத்திருக்கும் தோரணை நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. இரண்டு சந்நதிகளையும் தரிசித்து விட்டு பிராகாரத்தை வலம்வரும்போது தேவகோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம்.

ஈசனின் சந்நதிக்கு எதிரிலேயே பக்கத்திற்கு ஒருவராக சூரிய பகவானையும், சனி பகவானையும் தரிசிக்கலாம் - இது ஓர் அபூர்வ அமைப்பாக விளங்குகிறது. தல விருட்சம், வில்வமரம். இத்தலத்தின் மற்றொரு சிறப்பாக ஸ்ரீவியாசராயர் காலத்திய ஆஞ்சநேயர் சந்நதி இக்கோயிலுக்கு அருகேயே அமைந்துள்ளது, இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும். அருகேயே ஸ்ரீசங்கர்ஷண உடையரு என்கிற ஸ்ரீமத்வ சமய ஆச்சாரியரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இத்தலத்தில் வடக்குதிசை நோக்கி ஓடும் சேயாற்றில் ஐப்பசி மாத துலா ஸ்நானம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தலம் திருவண்ணாமலை அருகேயுள்ள போளூரிலிருந்து தேவிகாபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மூன்றாவதாக - தென்பள்ளிப்பட்டு
யுகக் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி இன்றும் தென்பள்ளிப்பட்டு எனும் தலத்தில் கைலாசநாதர் எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறார். பார்வதிதேவிக்கு மகாவிஷ்ணு அந்தர்முகமாக இந்த க்ஷேத்ரத்தை வழிகாட்டியதால் இத்தலத்திலேயே பள்ளிகொண்ட பெருமாளாக கோயில் கொண்டார். ஆகவே, இந்த தலத்திற்கு தென்பள்ளிப்பட்டு என்கிற திருப்பெயர் ஏற்பட்டது.

கைலாசப்பதியே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதால் கைலாசநாதர் எனும் திருநாமத்திலேயே கருவறையில் அருள்பாலிக்கிறார். கவலைகளை களைந்து வாழ்வில் இனிமை கூட்டும் கயிலைநாதன் இவர். இந்தச் சந்நதியில் பெருஞ்சக்தியொன்று காலதேசவர்த்தமானங்களை கடந்து ஆறாகப் பெருகிக் கொண்டிருப்பதை சற்று நேரம் அங்கு அமர்ந்தால் அறிந்து கொள்ளலாம். அம்பிகையின் திருநாமம் கனகாம்பிகை. எளிய கோலத்தில் பெரெழிலோடு பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறாள். ஈசனும், அம்மையும் தனித்தனி சந்நதிகளில் கொலுவிருக்கின்றனர்.

இத்தல ஈசனை ஸ்ரீமத் சபாபதி ஞான தேசிகர் சுவாமிகள் என்பார் வணங்கி வந்தார். இவருடைய சமாதி என்கிற பிருந்தாவனம் இத்தலத்தில், கோயிலுக்கு அருகேயே அமைந்துள்ளது. இவர் மாபெரும் ஞானியாகவும் வேதாந்தத்தில் பலரை பயிற்றுவிக்கும் திறனோடும் விளங்கினார். போளூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் எனும் ஊரிலுள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கி.மீ. சென்றால்
தென்பள்ளிப்பட்டை அடையலாம்.

நான்காவதாக - பழங்கோயில்
பழமையான கோயிலாக இது இருந்தாலும் பழங்கோயில் என்பதற்கான காரணம் கோயிலின் கல்வெட்டிலேயே விளக்கப்பட்டுள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கைலாயங்களில் மத்திய கைலாயமாக இத்தலம் விளங்குகிறது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்ல, பலிபீடமும், பிரதோஷ நந்தியையும் தரிசிக்கலாம். சற்றே நகர்ந்து உள்ளே செல்லும்முன் வலதுபுறத்தில் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கலாம். இடதுபுறம் அமர்ந்துள்ள காளியை வணங்கலாம். மூலவரின் கருவறைக்கு அருகேயே ஞானசம்பந்தர்,அப்பர், சித்தி விநாயகர் ஆகியோரையும் வணங்கி உள்நோக்கி நகரலாம்.

அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன் அழகிய பெரிய அளவிலான துவாரபாலகர்கள் கம்பீரமாக அமைந்துள்ளனர். இந்த மண்டபம், வேதபாராயணம் செய்வோர் அமர்வதற்கான இடமாக ஆதியில் விளங்கியிருக்கிறது. மூலவராக பாலக்ரிதீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்க மூர்த்தி ஷோடச லிங்கமாகும். சந்நதியின் சாந்நித்தியம் நெஞ்சை நிறைக்கிறது. எத்தனையோ மகான்கள் அமர்ந்த புண்ணிய சந்நதி என்கிற வியப்பு நம்மை சிலிர்க்கவைக்கிறது.

ஈசனின் அருட் பொழிவில் நனைந்து வெளியே வருகிறோம். வெளிப் பிராகாரத்தை சுற்றி வரும்போது தனித்தனி சந்நதிகளில் வடக்கே நால்வர், தென்மேற்கே விநாயகர், மூலவர் சந்நதிக்கு நேர் மேற்கே பின்புறத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி ஆகியோரை தரிசிக்கலாம். வடமேற்கே ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத சிவசுப்ரமணியரை வணங்கலாம். தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் ஈசான்ய மூலையில் மன்னர் காலத்திய கிணறு அமைந்துள்ளது. தனிச் சந்நதியில் அம்பாள் பாலாம்பிகை எனும் திருநாமத்தோடு பேரெழில் பொங்க அருள்பாலிக்கிறாள்.

நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி நடத்துகிறாள். இந்த சந்நதியே தனிக்கோயில் அமைப்போடு அந்தராலயம், ஆறு கால் மண்டபம், துவார பாலகியர் சிலைகளோடு அழகாக அமைந்திருக்கிறது. ஆலயம் சோழ மன்னன் மதுராந்தகன் உத்தம சோழ மன்னனால் (கி.பி. 969 - 985) கட்டப்பட்டதாகும். 2001ம் வருடத்திய இத்தலத்தின் கும்பாபிஷேக திருப்பணிகளின்போது சில பஞ்சலோக மற்றும் கற்சிலைகள் கிணற்றிலிருந்து கிடைத்திருக்கின்றன. இத்தலத்தில் வருடாந்திர திருவிழாக்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை-போளூர் பாதையிலுள்ள கலசப்பாக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ஐந்தாவதாக - நார்த்தாம்பூண்டி
நாரதர், முருகப் பெருமானைக் குறித்து பன்னிரண்டு வருடங்கள் கிருத்திகை விரதம் இருந்ததாகவும், முருகப் பெருமான் நாரதருக்கு காட்சி தந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே நாரதரின் பெருமையை உணர்த்தும் விதமாக நார்த்தாம்பூண்டி என்று தலத்தின் பெயர் விளங்குகிறது.  ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. கோயிலுக்கு அருகே நிற்கும்போதே அந்த சூழலின் ரம்மியமும், தென்றலின் தீண்டலும் நெஞ்சுக்குள் நிம்மதியை பரப்புகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை அடுத்து தொன்மை வாய்ந்த இக்கற்கோயில் பல்லவர், வள்ளால மன்னர்களால் கட்டப்பட்டு சோழ, விஜய நகர, சம்புவராயர் அரசர்களால் பராமரிக்கப்பட்டது.

முகலாய தளபதி மாலிக்காபூர் தென்னிந்திய படையெடுப்பின்போது அதிகம் பாதிக்கப்பட்ட கோயில் இது என்கிறார்கள். அழகிய மதில்கள் சூழ்ந்த கோயிலுக்குள் மேற்கு பிரதான மதிற்சுவரை ஒட்டியவாறு கொத்தளத்து விநாயகர் என்கிற கோட்டைகாத்த பிள்ளையாரை தரிசிக்கலாம். குறுநில மன்னன் ஒருவனின் ஆட்சி பறிபோகாமல் காத்துத் தந்ததால் கோட்டை காத்த விநாயகர் என்கிறார்கள். மூலவரின் சந்நதி முன்னால் மகா மண்டபம், தூண்களில் அழகான சிற்பங்களோடு திகழ்கின்றது. அதனை அடுத்து நடராஜரின் தரிசனத்திற்காக அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து அர்த்த மண்டபமும், மூலக் கருவறையும் அமைந்துள்ளன.

கைலாசநாதர் மணம்வீசி அருள்பாலிக்கிறார். புராண புருஷரான நாரதர் இங்குதானே அமர்ந்திருப்பார். அம்மையும், முருகனும் எங்கு அமர்ந்து எப்படி பூஜித்திருப்பார்கள். இதோ நமக்கும் இந்த பாக்கியம் கிட்டியதே என்று மேனி சிலிர்க்கிறது. சகலத்திலும் நிறைந்திருக்கும் பிரம்மம் இதோ இங்கு லிங்க ரூபத்தில் நமக்காக எளிமையாக வெளிப்பட்டிருக்கிறதே என்று உள்ளம் உவகை கொள்கிறது. வேண்டுதல், வேண்டாமை என்பதை இத்தல ஈசனே பார்த்துக் கொடுப்பதில் நிகரற்று விளங்குகிறார். பிரார்த்திக்கக்கூட வேண்டியதில்லை. பாத்திரம் பார்க்காது நம்மை நிறைத்து அனுப்புகிறார்.

மனம் அங்கேயே லயித்துவிட்டாலும் மெல்ல அன்னையின் சந்நதி நோக்கி நகர்கிறோம். அம்பாள் பெரியநாயகி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். அபய வரத ஹஸ்தத்தோடு பேரெழில் பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறாள். அம்பாள் கோயிலுக்கு முன்னால் மகாமண்டபம் அமைந்துள்ளது. இதில் விநாயகர், முருகர், நால்வர், சப்த கன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கோயிலை வலம் வருகையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வேணுகோபால சுவாமியின் தனிச்சந்நதி உள்ளது. தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.

கோயிலின் ஒரு மூலையில் இலந்தை மரத்தடியில் நாரதர் ஈசனையும், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானையும் வணங்கும் சிற்பத்தைக் காணலாம். இத்தலத்தின் ஒட்டுமொத்த விஷயத்தையுமே இந்தச் சந்நதி விளக்குவதுபோல அமைந்துள்ளது. அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்தாலேயே உலகம் மறந்துபோகும் அளவுக்கு சாந்நித்தியத்தோடு திகழ்கிறது. கோயிலை வலம் வந்து கொடிமரத்தடியில் வீழ்ந்து வணங்கும்போது நாரதரின் வீணை நம் அகத்தில் ஒலிப்பதை உணரமுடிகிறது. தென்பள்ளிப்பட்டு தலத்திலிருந்து 5 கி,மீ. தொலைவிலும், திருவண்ணாமலை-போளூர் சாலையில் நாயுடுமங்கலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் நார்த்தாம்பூண்டி அமைந்துள்ளது.

ஆறாவதாக - தாமரைப்பாக்கம்
தாமரை என்பதே ஆன்மிகத்தின் மிக உயர்ந்த நிலையின் வெளிப்பாடு ஆகும். உள் பிரக்ஞையை மூடி மறைத்துக்கொண்டிருக்கும் மாயை முற்றிலும் அழிந்து, பேரறிவான ஞானம் விளங்கும் முற்றான முடிவு நிலையைத்தான் தாமரை மலர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த அகத் தாமரையின் மையத்தே எழுந்தருளியிருப்பவர்தான் தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர். திருவண்ணாமலை எனும் அக்னி க்ஷேத்ரத்தோடு தொடர்பு கொண்ட தலமாதலால் அக்னீஸ்வரர் என்று பெயர் வந்திருக்கலாம்.

சில வருடங்களுக்குமுன் கும்பாபிஷேகம் கண்ட கோயில் இது. மிகவும் சிதிலமுற்றிருந்தாலும், அதன் தொன்மை அமைப்பை மாற்றாமல் புனரமைத்திருக்கிறார்கள். சோழர்களின் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளை ஆலயத்துள் காணலாம். அவற்றிலிருந்து, குலோத்துங்க சோழனால் கோயில் கட்டப்பட்டது என்றும், நித்திய பூஜைக்காக அவர் நிலமானியம் அளித்ததாகவும் தெரிய வருகிறது. சிற்பச் சோலை என்றே இக்கோயிலை வர்ணிக்கலாம். கொடிமரம், பலிபீடம் கடந்து கருவறை நோக்கி நுழைகிறோம். மூலவராக லிங்கத் திருமேனியில் அக்னீஸ்வரர் பெருஞ் சக்தியோடு விளங்குகிறார். இந்த அக்னியை வழிபடுவோருக்கு அவர் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஞானாக்னி
வெளிப்படத் தொடங்கும்.

தனிக்கோயிலில் அம்பாள் திரிபுரசுந்தரி, அழகும், கருணையும் கொண்டு விளங்குகிறாள். இந்த இரு சந்நதிகளையும் தரிசித்து வெளியே பிராகாரத்திற்கு வந்தால் கருவறை கோஷ்ட தெய்வங்கள் அத்தனையும் கொள்ளை அழகோடு திகழ்வது கண்டு உள்ளம் மகிழலாம். தேவகோஷ்டத்தில் நான்கு அடி உயர நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் நுணுக்கமான, கலையம்சம் மிக்க சிற்பங்களுக்குச் சான்றாக விளங்குகின்றன. அவற்றிலும் லிங்கோத்பவரின் சிற்ப நுணுக்கம் எவ்வாலயத்திலும் காண முடியாது.

மூலவரின் விமானம் அகலமான அடிப்பகுதியுடன் மிகப்பெரிய உருண்டை வடிவில் ஒரு கலசத்துடன் மலர்ந்திருக்கிறது. லிங்கோத்பவருக்கு மேற்குப் பகுதியில் இத்தலத்தை பூஜித்த திருமாலுக்கென்று தனிக் கோயில். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக பெருமாள் அருள்பாலிக்கிறார்; இத்தலத்தின் முக்கிய தெய்வமாகவும் கொண்டாடப்படுகிறார். எப்படி சிவபக்தி புரிவது என்பதை மிகத் துல்லியமாக திருமால் நமக்குக் காட்சித் தருகிறார். இந்த தாமரைப் பாக்கத்து ஈசனை தாமரை மலர் கொண்டு பூஜிக்க ஈசனை அடைய வேண்டிய மார்க்கம் புலப்படும்.
தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மற்றும் ஆரணிக்கு அருகேயுள்ள போளூருக்குத் தென்மேற்கே 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நிறைவாக - வாசுதேவம்பட்டு

சேயாற்றின் கரையிலேயே இத்தலமும் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீபக்தவச்சலேஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்கிறார். பழங்காலத்தில் ஆட்கொண்டேஸ்வரர் என்று இந்த ஈசன் போற்றப்பட்டிருக்கிறார். சப்த கயிலாய க்ஷேத்ரங்களில் ஏழாவதான இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. வாசுதேவராஜா என்பவர் இவ்வூரை ஆட்சி செய்திருக்கிறார். இவர் வாழ்ந்ததன் சாட்சிகளாக ஒரு இடிந்த கோட்டையும் அதனருகே எட்டு அடி உயரமுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சிலையும் உள்ளன.

சிறந்த வைணவ பக்தரான இவர், ஸ்ரீவீர நாராயண பெருமாள் கோயிலைக் கட்டியதாலேயே இவ்வூர்வாசுதேவம்பட்டு என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெருஞ்சிறப்பே இத்தல ஈசனை சித்திர, விசித்திர குப்தர்கள் பூஜித்து சாபவிமோசனம் பெற்றார்கள் என்பதுதான்.  எமலோகத்தில் ஜனன-மரண கணக்குகள் எழுதுவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சபிக்கப்பட்ட சித்திர-விசித்ர குப்தர்கள் இத்தலத்திற்கு வந்து, மனம் நெகிழ்ந்து பூஜித்து சாபவிமோசனம் பெற்று இக்கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதிபெற்று எழுந்தருளியிருக்கின்றனர்.

தெற்கு நோக்கிய பிரதான நுழைவாயில் மண்டபத்தில் ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கியவாறு விநாயகர், சோமாஸ்கந்தர், முருகர், நந்தி தேவரின் சிலைகள் அமைந்துள்ள பிரபை மட்டுமே காணப்படுகின்றன. உள்ளே நுழைகையில் 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர் சிலைரூபமாக அமர்ந்துள்ளதைக் காணலாம். அடுத்துள்ள நான்கு கால் மண்டபத்தில் துவார பாலகர்களும், மூலவரை வணங்கியவாறும் நந்தியும் உள்ளனர். மண்டபத்தின் தெற்கு மேடையில் நால்வர் சிலைகளும் வடக்கில் காசி லிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி சிலைகளும் உள்ளன.

ஈசனின் சந்நதியை நெருங்கும்போதே உடலெங்கும் அருள் வெம்மை பரவுகிறது. ஈசன் ஆட்கொண்டேஸ்வரர், லிங்கத் திருமேனியில் பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார். விபூதியின் வாசம் அவ்விடத்தை நிறைத்து கணநேரம் நம்மையறியாது நம் கண்கள் மூடுகின்றன. கர்ப்பகிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும் அழகிய துவார பாலகர் நின்றிருக்க கருவறையில் ஆட்கொண்டேஸ்வரர் பாரினையே பரிபாலித்துக் கொண்டிருக்கிறார். ‘என்ன துயர் வந்தாலும் என்னிடம் சொல்’ என்று கேட்கும் பாவத்தில் ஈசன் நிலைபெற்றிருக்கிறார்.

அவரைத் தொழுது வலம் வருகையில் விநாயகரும், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகரும் தனிச் சந்நதிகளில் அருள்கின்றனர். ஈசான்யத்திலுள்ள நவகிரகங்களையும், ஸ்தல விருட்சமான வில்வமரத்தையும் வணங்கி வலம் வரலாம். தனிக் கோயிலில் அம்பாள் சௌந்தரநாயகி, அரசிபோல, பேரழகு மிளிர கம்பீரமாக நின்றிருக்கிறாள். ஒரு சரணாகதியாக அவளிடம் நம் மனதை அர்ப்பணித்துவிட்டால் போதும், யுகம்தோறும் நாம் மறந்தாலும், தான் மறக்காது காத்தருள்வாள்.

பிரம்ம சக்தி அருவுருவாக பிரவாகமாக ஓடும் அற்புத சந்நதி அது. அம்பாள் நான்கு கரங்களோடு கிழக்கு நோக்கி அருள் கிறாள். அவளை தரிசித்து வெளிவரும்போது தாயை பிரிந்து செல்லும் சேயைப்போல ஆழ்ந்த பாசம் நம்மைச் சூழ்கிறது. கோயிலை வலம் வந்து கொடிமரத்தின் அடியில் வீழ்ந்து துதிக்க ஆட்கொண்டேஸ்வரரின் அருள்பார்வை நம் இதயத்தை மென்மையாக ஊடுருவுவதை எளிதாக உணரலாம்.

- கிருஷ்ணா