நினைப்பதும் செயல்படுவதும் ஒன்றயிருத்தல் வேண்டும்!



 மகாபாரதம் - 71

சீதை சுருண்டு மனம் கலங்கி விழுந்ததைக் கண்டு சுற்றியுள்ள வானரங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள். ராமருடைய சீற்றத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தார்கள். அந்த சமயம் பிரம்மா அங்கு வந்து ராமருக்கு தரிசனம் தந்தார். அக்னி, வாயு, எமன், வருணன் போன்ற தேவர்களும் வந்தார்கள். பிரகாசமான ரூபத்தோடு தசரத மன்னர் அங்கு வந்தார். கின்னரர்களும், கந்தர்வர்களும் அந்த சபையை நிறைத்தார்கள். அப்பொழுது சீதை ராமரை நோக்கிப் பேசினாள்: ‘‘உங்களைத் தொட்டுக் கொண்டிருந்த காற்று இலங்கையில் உள்ள என்னையும் தொட்டுக் கொண்டிருந்தது.

நான் தவறு செய்தவளாக இருந்தால், நான் பாவியாக இருந்தால் அக்னி, நீர், ஆகாயம், பூமி, வாயு அனைவரும் சேர்ந்து என் உயிரை எடுக்கட்டும். நான் உங்களைத் தவிர வேறு எவரையும் மனதாலும் நினைக்கவில்லை. இதற்கு தேவர்கள் சாட்சி சொல்லட்டும். ’’அப்பொழுது வாயு, சீதை பாபமற்றவள் என்று சொன்னார். அக்னிதேவன் ஒரு சிறிய குற்றமும் சீதையிடம் உண்டாகவில்லை. மைதிலி பாபமற்றவள் என்று சொன்னார்.

‘ராவணனுக்கு ஒரு சாபம் இருக்கிறது ராமா’ என்று பிரம்மா அருகே வந்து பேசினார். ‘‘மாற்றரசர் மனைவியை ராவணன் தொடுவானானால் அவன் தலை சுக்கு நூறாகி விடும் என்ற ஒரு விதி இருக்கிறது. எனவே, ஒரு காலும் ராவணன் அத்து மீறி இருக்க முடியாது. ராவணன் உன்னால் கொல்லப்பட்டான். தலை வெடித்து சாகவில்லை. எனவே, சீதை தூய்மையானவள் என்பதை புரிந்து கொள்’’ என்று சொன்னார்.தசரதர் முன் வந்தார். ‘‘உனக்கு நன்மை உண்டாகட்டும் ராமா. நீ அயோத்தி சென்று அரசாள வேண்டும். சீதையோடு போய் பட்டாபிஷேகம் ஏற்க வேண்டும்.

சீதை தூய்மையானவள்’’ என்று மிகப் பிரியத்தோடு பேசினார். ‘‘ராமா, உன்னுடைய வனவாசத்தின் பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. நீ அயோத்திக்கு புறப்படும் நேரம் வந்து விட்டது. நீ சீதையை சேர்த்துக் கொள்,’’ என்று சொல்ல, ராமர் கைநீட்ட, சீதை அவருக்கு அருகே வந்து நாணத்தோடு நின்றாள். சீதை சொல்ல, திரிசடைக்கு தனமும், மரியாதையும் ராமச்சந்திர மூர்த்தி செய்வித்தார். அபிஞ்சனுக்கு அவன் விரும்பிய வரங்கள் கொடுத்தார்.

‘‘உனக்கு என்ன வரங்கள் வேண்டும் ராமா?’’ என்று பிரம்மா கேட்க, ‘‘அடிபட்டு இறந்த வானரங்கள் மறுபடியும் உயிர் பெறட்டும். என் மனம் எப்பொழுதுமே தர்மத்தில் நிலைக்கட்டும். நீங்கள் ஆசிர்வதியுங்கள்,’’ என்று ராமன் சொல்ல, அவ்வாறே ஆகட்டும் என்று பிரம்மா வரம் கொடுத்தார். இறந்து போன வானரங்கள் அனைத்தும் உயிர் பெற்றன. ராமருக்கு அருகே வந்த சீதையைப் பார்த்து ஹனுமார் புளகாங்கிதம் அடைந்தார். கண்ணில் நீர் பெருக்க கை கூப்பினார். சீதைக்கு மனம் நெகிழ்ந்தது.

‘‘ஹனுமான் என்னுடைய அருளால் உனக்கு எப்பொழுதுமே திவ்விய போகங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும். ராமச்சந்திர மூர்த்தி கீர்த்தி இருக்கும்வரை நீ நீடித்து வாழ்வாய், சிரஞ்சீவியாக இருப்பாய்,’’ என்று ஆசிர்வதித்தாள். வானர வீரர்கள் பார்க்கும் பொழுதே தேவர்களும், பிரம்மாவும், தசரதரும் மெல்ல மறைந்தார்கள். தேவர்களின் குதிரைகள் பூட்டிய தேரை எடுத்து வந்த மாதலி ராமரை  ‘‘ராமா, பூமியிலுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யட்சர்களும், ராட்சஸர்களும், நாகர்களும் உங்கள் புகழ் பாடிக் கொண்டேயிருப்பார்கள்.

உங்கள் பெயர் ஒலிக்காத இடமே இந்த பிரபஞ்சத்தில் இருக்காது,’’ என்று வாழ்த்தி ஆசிர்வதித்து விடை பெற்றான். இந்திரலோகத்துக்கு போனான். ராமர் புஷ்பக விமானத்தில் ஏறி கிஷ்கிந்தாவை அடைந்து அங்கு அங்கதனுக்கு அரச பட்டம் கொடுத்தார். போகும் வழி முழுவதையும் சீதைக்குக் காட்டிக் கொண்டு, அவளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அயோத்திக்கு வந்து இறங்கினார்கள். ஹனுமனை தன் தூதுவனாய் முன்கூட்டியே அயோத்திக்கு அனுப்பி தன் வருகையை தெரிவித்தார் ராமர். பரதன் மரவுரி தரித்து துயரத்தோடும், அழுக்கோடும் எந்த அரச அலங்காரமும் இல்லாது இருப்பதைப் பார்த்து கண்ணில் நீர் வடித்தார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவி சந்தோஷமடைந்தார்கள். ராமருக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்தார்கள். சுக்ரீவனையும், விபீஷ்ணனையும் தத்தம் வீடு திரும்ப கட்டளை இட்டு அயோத்தியை மிகச் சிறப்பாக ஆண்டு வந்தார் ராமர். புஷ்பக விமானத்தை குபேரனுக்கே திருப்பிக் கொடுத்தார். கோமதி நதிக்கரையில் ராமர் பல்வேறு அஸ்வமேத யாகங்களை செய்தார். அயோத்தி நகரம் இடையறாது அவர் புகழை பாடிக் கொண்டே இருந்தது. ராமருடைய புகழ் பிரபஞ்சத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

‘‘இனிமையான தருமா, ராமரை விடவாஉன்னுடைய துக்கம் அதிகம்? எந்தத் தவறும் செய்யாத ராமர் பதினான்கு வருடம் வனவாசம் அனுபவித்தார். நீ வனவாசம் அனுபவித்தது உன்னுடைய தவறால். உன் சூது விருப்பத்தால். உன்னைச் சுற்றி பலமாக நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்த கேடு கெட்ட ராஜன் உன் மனைவியை அபகரித்தபோது, அவர்களை அடித்து துவம்சம் செய்து மீட்டு வந்தார்கள். ராவணன் சீதையை தூக்கிப் போனபோது அங்கு எவரும் ராமருக்கு உதவி செய்யவில்லை. உனக்கு சகோதரர்கள் இருக்கிறார்கள்.

ராமருக்கு குரங்குகளும், கரடிகளும்தான் துணையாக இருந்தன. அவைகளை வைத்துக் கொண்டே எதிரியை வதம் செய்தார். ராவணனை ஒழித்தார். என்னைப் போல் கஷ்டம் அனுபவித்தவர்கள் உண்டோ என்று தயவு செய்து பேசாதே. ராமருக்கு முன்னால் உன் கஷ்டம் தூசு. ஒரு காரணத்திற்காகத்தான் நீ வனத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாய். இந்த கோபத்தை நீ துரியோதனன்மீது செலுத்து. அவனை சார்ந்தோரை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற வேகத்தைக் கொள். அது முக்கியம். அதுதான் உன் வனவாசத்திற்கு பிரதானமான காரியம். இங்கு வேறொரு விஷயம் நடக்கப்போகிறது. அதற்கு நீ காரணம். உன் கோபத்தை வளர்த்துக் கொள்.பலவீனமடையாதே’’ என்று சொன்னார்.

ராமருடைய கதையைக் கேட்ட தருமர் முகம் பொத்திக் கொண்டு அழுதார். மற்றவர்களும் அழுதார்கள். நிதானமாகி முகம் துடைத்துக் கொண்டு முனிவரை நமஸ்காரம் செய்து, ‘‘நான் தவறு செய்தேன். எனக்கு வனவாசம் கிடைத்தது. ஆனால் திரௌபதி என்ன தவறு செய்தாள்? அவளை இந்த ராஜன்வரையிலும் இம்சைபடுத்துகிறார்களே! துச்சாதனன் தரையில் இழுத்து வந்தானே. ஒரே ஒரு உடை உடுத்திய, மாதவிலக்கில் இருந்த பெண்மணியை அசிங்கப்படுத்தினானே. இப்பொழுது என் கேள்வி வேறு. என்னை விட்டு விடுங்கள். திரௌபதி செய்த பாவம் என்ன? இவளைவிட கஷ்டப்பட்டவர்கள் இங்கு உண்டோ?’’ என்று உரத்த குரலில் கத்தினார்.

முனிவர் வாய்விட்டு சிரித்தார். “சரி, உனக்கு இன்னொரு கதை சொல்கிறேன்” என்றார். “மத்தள தேசத்து மன்னன் அஸ்வபதி. அவன் தர்மவான். வேதசாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவன். மன்னனாக இருந்தாலும் புலனடக்கத்தோடு ஹோமங்களில், மந்திர ஜபங்களில் ஈடுபட்டு மிகுந்த நெறியுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தவன். எவருக்கும் தீங்கு எண்ணாதவன். அவனுடைய தேசத்தில் எல்லா நேரமும் சுபீட்சம் இருந்தது. வெறுமே குழந்தைகள் பெறுவது என்று இல்லாமல் நன்மக்கள் பேறு என்பதை விரும்பி அஸ்வபதி இடையறாது காயத்ரி ஜபம் செய்து வந்தான். மந்திர ஜபமாக மட்டுமல்லாது தினந்தோறும் ஹோமங்களாகவும் நடத்தினான்.

பல அந்தணர்களை வைத்து பல திரவியங்களைச் சொரிந்து மிகப்பெரிய யாகமாகவும் அதைச் செய்தான். அவனுடைய பக்திக்கு உருகிய காயத்ரி தேவி அவன் முன்பு தோன்றினாள். ‘மிக மகிழ்ந்தோம் அஸ்வபதி. உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்’ என்று கேட்டாள். ‘உங்களுடைய தரிசனமே எனக்கு மிகப் பெரிய வரமாக இருக்கிறது. ஆயினும் நன்மக்கட் பேறு விரும்பித்தான் அப்படி ஒரு சங்கல்பம் செய்துதான் நான் இந்த ஜபத்தை, ஹோமத்தை, யஞ்ஞத்தை இடையறாது செய்து வந்தேன். எனக்கு நல்ல குழந்தைகள் வேண்டும்.’’
அப்படியா? இதைப் பற்றி நீ ஹோமங்கள் செய்யும்போதே நான் பிரம்மாவிடம் பேசியிருக்கிறேன்.

உனக்கு என் அம்சம் உள்ள ஒரு கன்னிகை மகளாகப் பிறப்பாள்... அஸ்வபதி குறுக்கே பேச வேண்டாம். நன்மக்கட்பேறு என்பது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வம்சவிருத்திக்கு பெண்ணும் உதவக்கூடும். மறுப்பேதும் சொல்லாமல் நான் கொடுக்கின்ற வரத்தை ஏற்பாயாக,’’ என்று கட்டளையிட, அவன் சரி என்று தலையசைத்தான். தன்னைவிட தான் வணங்குகின்ற தெய்வத்திற்கு தன்னைப் பற்றி தெரியும் என்று முழுவதுமாக நம்பினான். அவன் மனைவிக்கு மிக அழகாக ஒரு பெண் குழந்தையாக சாவித்திரி பிறந்தாள். அற்புதமாக வளர்ந்தாள். அவளுடைய அழகு எல்லோரையும் கை கூப்ப வைத்தது.

மத்தள தேசத்தில் அற்புதமான அரசகுமாரி வளர்ந்து வருகிறாள் என்பதை கேள்விப்பட்டு மற்ற அரசர்கள் தூதுவர்களை அனுப்பி அவளை பார்த்துவரச் சொன்னார்கள். பிரமிப்பான அவளுடைய அழகும், அவளுடைய நடவடிக்கைகளும், பூஜைகளும், அவளிடமிருந்து வெளிப்படுகின்ற சாந்நித்தியத்தையும் பார்த்துவிட்டு வந்தவர்கள் இவள் வெறும் அரசகுமாரி அல்ல என்று தீர்மானித்து, இவளுக்கு வேறு எவனாவது காத்திருப்பான், நம்முடைய இளவரசனுக்கு இவள் வேண்டாம் என்று விலகிப் போனார்கள். யாரும் வரவேயில்லை. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறாயா என்று தகப்பனை நோக்கி வரவேண்டும்.

அதுதான் அழகு. அல்லாது ஒரு தகப்பன் தன் பெண்ணை கொண்டு போய் இவளை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்பது உயர்ந்தது அல்ல. அது கொஞ்சம் தாழ்மையான விஷயம். மத்தள தேசத்து அரசன் காத்திருந்தான். யாரும் வரவில்லை. எனவே, ‘‘வயது முதிர்ந்த அனுபவசாலிகளான நம் மந்திரிகளுடன் நீ பல தேசங்களுக்குப் போய் அங்கே உனக்குப் பிடித்த கணவனை தேர்ந்தெடுப்பாயாக.உன் விருப்பத்தைச் சொல்லி அவன் விருப்பத்தை கேட்டு வருவாயாக. இங்கு வந்த பிறகு திருமண ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,’’ என்று மகளிடம் சொல்ல, அவள் மந்திரிகளுடன், தீர்த்த யாத்திரை போவது போல கிளம்பினாள்.

கோயில்களை தரிசித்தாள். பல பட்டினங்களைப் பார்த்தாள். குளங்களில், நதிகளில் மூழ்கி எழுந்து பூஜை செய்தாள். தனக்கு பிடித்த ஒருவனை தேர்ந்தெடுத்து அவள் அரண்மனைக்குத் திரும்பினாள். அவள் அரண்மனை திரும்பும் நேரம், தகப்பன் அஸ்வபதியோடு நாரத மகரிஷி அமர்ந்திருந்தார். அவள் உள்ளே நுழைந்து தந்தையையும், நாரதரையும் நமஸ்கரித்து தான் கொண்டு வந்த பிரசாதங்களை ஒரு தட்டில் வைத்து நீட்டினாள். நாரதர் தொட்டுக் கொண்டார். அஸ்வபதி இட்டுக் கொண்டார்.

 ‘‘இவள் உன் மகள் அல்லவா. பேரழகியாக இருக்கிறாளே. முகத்தில் அற்புதமான காந்தி வீசுகிறதே. இவளுக்கு திருமணம் செய்ய வேண்டாமா? அதற்கான நேரம் வந்து விட்டதாகத் தெரிகிறதே. என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?’’ என்று அஸ்வபதியை கேட்க, ‘‘அது குறித்த கவலையோடுதான் நான் இருக்கிறேன். இவளை பெண் கேட்டு எவரும் வரவில்லை. ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். எனவே, இவளையே அனுப்பி தேர்ந்தெடுத்து வா என்று சொன்னேன். இவள் என் மந்திரிகளோடு தீர்த்த யாத்திரை போய் திரும்பி இருக்கிறாள். இவள் முகத்தைப் பார்த்தால் யாரோ ஒருவனை தேர்ந்தெடுத்திருப்பாள் என்று தெரிகிறது.

அந்த நாணம் முகத்தில் தெரிகிறது. இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்,’’ என்று சொல்ல, சத்தியவான் என்ற இளவரசனை தேர்ந்தெடுத்ததாக மகள் மெல்லிய குரலில் கூறினாள். யார் சத்தியவான்? மகத தேசத்து மன்னன் த்யுத்மசேனனின் மகன் சத்தியவான். அவன் சத்தியமே பேசுவதால் அவனுக்கு அந்தப் பெயர். அவன் குதிரைகள் மீது விருப்பமுடையவன். குதிரைகளை பொம்மையாகவும், ஓவியமாகவும், கற்சிற்பமாகவும் உருவாக்குபவன். அதற்காக அவனுக்கு சித்ரசேனன் என்ற பெயரும் உண்டு. த்யுத்மசேனனுக்கு எதிரிகள் அதிகம். அவர்கள் ஒன்று சேர்ந்து அவனை ராஜ்யத்திலிருந்து விரட்டிவிட, இளம் வயது மகனோடு வனத்திற்கு வந்து விட்டான்.

அங்கு தன் மனைவியோடும், மகனோடும் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டான். பேரரசனாக இருந்தாலும் வனவாசியாக சத்யவான் வாழ்ந்து வந்தான். அவனுடைய பேச்சு, நடவடிக்கை, முகபாவம் இவற்றில் மனம் பறிகொடுத்து தேசம் இல்லாது போனாலும் சத்திரியன் சத்திரியனே என்று அவனை மனதால் வரித்து, அதை அவனிடமும் சொல்லி அரண்மனைக்கு அழைத்து வந்திருந்தாள் சாவித்திரி. நாரதர் இது சரிவராதே என்று சொல்லி கண்மூடிக் கொண்டார். அஸ்வபதி கலவரமானார். ‘‘எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்? இவள் தேர்ந்தெடுத்தது நல்லவனைத்தானே?’’ என்று பயத்தோடு கேட்டார்.

‘‘மிகமிக நல்லவன், சத்தியசந்தன். அமைதியானவன். பொறுப்பானவன். தாய்க்கும், தந்தைக்கும் மிகப்பெரிய மரியாதை செய்பவன். உயர்ந்த குணங்களுடையவன். தர்மாத்மா. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தப் பெண் அவனை புருஷனாக அடைந்தாலும் அவள் மிகப் பெரிய அதிர்ஷ்சாலி என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இந்த எல்லா குணங்களையும் தாண்டி ஒரு குறை இருக்கிறது.’’ “என்ன குறை?” அஸ்வபதி மெல்லிய குரலில் கேட்டார். “இன்றைய தினத்தோடு இன்னும் ஒரு வருடம் கழித்து அவன் ஆயுள் முடியப்போகிறது. இன்னும் ஒரு வருடம்தான் அவன் ஜீவிப்பான். எனவே, ஆயுள் குறைவான ஒரு ஆணை உன் மகள் தேர்ந்தெடுத்து விட்டாள் என்பது தான் குறை.’’

எப்படி திருமணம் செய்வது? மகள் விதவையாவாள் என்று தெரிந்து திருமணத்தை ஒரு தந்தையால் செய்ய முடியுமா? மனம் ஏற்குமா? “சாவித்திரி, நீ மறுபடியும் தீர்த்த யாத்திரை மேற்கொள். வேறொரு கணவனை தேர்ந்தெடுத்துக் கொள். சத்தியவான் வேண்டாம்” என்று அஸ்வபதி பேசினார்.  “இல்லை தந்தையே. நான் மனதால் அவரை வரித்துவிட்டேன். என் எண்ணத்தைச் சொல்லிவிட்டேன். ஒருமுறை மனதால் வரித்த பிறகு அதை மாற்ற என்னால் இயலாது. மனம் என்ன சொல்கிறதோ அதுதான் சொல். சொல் என்ன சொல்கிறதோ அதுதான் செயல். அதனால் செயலுக்கு காரணமான மனதை புறக்கணித்து விட்டு இஷ்டப்படி செய்ய முடியாது.

நானும் என் செயல்களும் இணையாகவே பயணப்பட வேண்டும். மனம் ஒன்று நினைத்திருக்க, செயல் ஒன்று செய்திருப்பது கேவலமான வாழ்க்கை. அது தூய்மையானது அல்ல. எனவே, எனக்கு திருமணம் என்று ஒன்று இருந்தால் அது சத்தியவானோடுதான். எனவே, நீங்கள் திருமணம் பேசி முடியுங்கள்” என்று சொல்லி, அவரிடம் விடை பெற்று நகர்ந்தாள். அஸ்வபதி கவலையோடு உட்கார, நாரதர் அவரை தேற்றினார். “இவ்வளவு ஜொலிப்பான, ஒளிமிகுந்த கன்னிகையை மகளாகப் பெற்றிருக்கிறாய். இது தவறாகப் போகுமா? மனம் மாற முடியாது என்ற பெண்ணை மனம்மாறச் சொல்வது தர்மமாகுமா? எனவே, அவள் விருப்பப்படி திருமணம் செய்து கொடு. அவளுடைய மன உறுதி, அவளுடைய தபஸ் அவளுக்கு நல்லதையே கொடுக்கும்,” என்று சொல்லி நாரதர் விடைபெற்றார்.

ஒருவாறு மனம் தேறி அஸ்வபதி அந்த வனம் நோக்கிப் போய் சாளுவ தேசத்து அரசன் த்ருத்யும்னிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார். “ஐயா, எங்களுக்கு பார்வை மங்கி வருகிறது. வயதான காரணத்தினால் தள்ளாமை இருக்கிறது. அரசகுலத்தில் வாழ்ந்தாலும் எவரையும் துன்புறுத்தாத ஒரு அமைதியான வாழ்க்கையை நானும், என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம். என் மகன் எங்களுக்கு முழு துணையாக இருக்கிறான். இளவரசனாக இருந்து சகல போகங்களையும் அனுபவிக்க வேண்டியவன், எங்களுக்காக இந்த வனத்தில் ஒரு சாதாரண வேடனைப் போல திரிகிறான்.

அவனுக்கு கொண்டுபோய் பெண் கொடுத்தால் அந்தப் பெண்ணுக்கு எந்த சுகசௌகரியங்களும் இருக்காது. இந்த வீட்டை பாருங்கள். எந்த வசதியும் இல்லாத ஒரு குடில் இது. இதை அரண்மனையாக கருதி உங்கள் பெண் வாழ வேண்டும். என்ன தலையெழுத்து. இது வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்கள் மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்று பொறுமையுடன் பேசினார் த்ருத்யும்னன். தன் மகள் தீர்மானித்து விட்டதையும், சத்தியவானைத் தவிர வேறு ஆணை மனதாலும் நினையேன் என்று சொல்ல, சாளுவ தேசத்து அரசனும், அவன் மனைவியும் வியப்படைந்தார்கள். “அப்படியானால் அவளை முழு மனதோடு நான் வரவேற்கிறேன். உன் மகளை நீ எப்படி வளர்த்தாயோ அதேபோல மிகுந்த பிரியத்தோடு நானும் என் மருமகளை வளர்க்கிறேன்.

அவளுக்கு எல்லா உதவிகளும் செய்ய முயற்சிக்கிறேன். அவளை அழைத்து வா. திருமணம் நடக்கட்டும்” என்று சொல்ல, படைவீரர்கள் போய் நன்கு அலங்கரிக்கப்பட்ட சாவித்திரியை தோழிமாரோடு கூட்டி வந்தார்கள். அந்தணர்களை முன்னிறுத்தி, அக்னி வளர்த்து அந்த வனத்தை ஒளிமயமாக்கி  மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது. பல தேவதைகளை வணங்கி அக்னி சாட்சியாக சத்தியவானின் கரத்தை சாவித்திரி பற்றினாள். அந்த குடிலில் என்னவிதமான உபகரணங்களையெல்லாம் உதவியாக வைக்க வேண்டுமோ,

எதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார்களோ, அவற்றை சீதனமாக கனத்த மனத்தோடு அஸ்வபதி கொடுத்து விட்டு ஊர் திரும்பினார். தன்னுடைய ஆடை, ஆபரணங்களை பெட்டியில் வைத்து விட்டு சாதாரண மரவுரியை சாவித்திரி தரித்துக் கொண்டாள். மாமனாருக்கும், மாமியாருக்கும் மிகுந்த உதவி செய்தாள். கணவனுக்கு துணையாக இருந்தாள். சந்தோஷப்படுத்தினாள். அந்த வீட்டை ஒளிமயமாக மாற்றினாள். சிரிப்பான முகத்தோடு வளைய வந்தாள். ஆனால் மனதுக்குள் தனது தாம்பத்யம் ஒரு வருடம்தான் என்பது அவளுக்கு இடையறாது நினைவில் மோதிக்கொண்டிருந்தது.

பாலகுமாரன்

(தொடரும்)