பள்ளிக்கூடம் போகாமலேயே பண்டிதரான இறையன்பர்கள்!கல்வி என்ற அதிகாரத்தில், படிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எழுதிய வள்ளுவர், கல்லாமை என்ற அதிகாரத்தில் படிக்காமையால் ஏற்படும் இழிவு பற்றியும் எழுதுகிறார். உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு கண்ணோட்டங்களில் வள்ளுவர் தம் கருத்தை வலியுறுத்துவது உண்டல்லவா?கல்லாமையின் இழிவைச் சொல்லி இடித்துரைத்து மக்களிடம் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதே வள்ளுவப் பெருந்தகையின் விருப்பம்.

'அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.’

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்கள் எதையும் கற்காமல் கற்றவர் சபையில் ஒருவன் பேசுவது, கட்டம் வரைந்து கொள்ளாமல் தாயம் உருட்டுவதைப் போல் பயனற்றது. 

'கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.’

கற்றவர் கூடியுள்ள அவையில் கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புவது, மார்பகங்கள் இரண்டுமில்லாது ஆனால் பெண்போன்ற தோற்றமுடைய பேடி, மையல் கொள்ள ஆசைப்படுவதைப் போன்றது.

'கல்லா தவரும் நனிநல்லர் கற்றார் முன்
சொல்லா திருக்கப் பெறின்.’

கற்றவர் முன் வாய்திறவாமல் இருப்பாரேயாகில் கல்லாதவர்களும் மிகச் சிறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். 

'கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.’

கல்லாதவர் எப்போதேனும் ஒரு சிறந்த கருத்தைச் சொன்னாலும் அறிவுடையோர் அக்கருத்தை ஏற்க மாட்டார்கள்.

'கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.’

கல்லாதவன் தான் எல்லாம் தெரிந்தவன்போல் பேசுவானாகில் கற்றவர் முன்னே பேசும்போது அவன் அறிவுக் குறைவு இன்னதெனப் புலப்பட்டுவிடும்.

'உளரென்னும் மாத்திரைய ரல்லால் பலவாக்
களரனையர் கல்லா தவர்.’

கல்லாதவர்கள் விளைச்சல் இல்லாத தரிசு நிலத்தைப் போன்றவர்கள். யாருக்கும் பயன்படாதவர்கள். எனவே அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.

'நுண்மாண் நுழைபுல மில்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை யற்று.’

அறிவில்லாதவனின் தோற்றப் பொலிவு பற்றி என்ன சொல்ல! மண்ணால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதுதான் அது. அந்த அழகால் என்ன பயன்?

'நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.’

கல்வி அறிவு இல்லாதவர்களிடம் இருக்கும் செல்வம், நல்லவர்களுடைய வறுமையை விட அதிகத் துன்பம் தரக் கூடியது .

'மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு.’

கீழ்ச்சாதியில் பிறந்த படித்தவர்களை விட, மேல்சாதியில் பிறந்த படிக்காதவர்கள் தாழ்ந்தவர்களே ஆவர். கல்வியே ஒருவனை உயர்ந்தவனாக்கும்; சாதி அல்ல.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனை யவர்’

கற்றவர், கல்லாதவர் இடையே உள்ள வேற்றுமை மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேற்றுமை போன்றதாகும். டி.கே.சி. என்றதும் நினைவுக்கு வருவது அவரது கம்பராமாயண ஆராய்ச்சிதான். ஆனால், கம்பராமாயணம் தவிரவும் திருக்குறள், முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி போன்ற பல இலக்கியங்களிலும் அவர் ஈடுபட்டுப் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். டி.கே.சிதம்பரநாத முதலியார் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படை, பழைய நூல்களில் உள்ள போலிச் செய்யுள்களை நீக்குவதே. போலிச்செய்யுளுக்குக் காரணங்கள் மூன்று என்கிறார் அவர்:

1.ஓலைச்சுவடி பழுதுபட்டிருந்தால் விட்டுப்போனதை நினைவிலிருந்து எழுதுவது அல்லது இடத்திற்குப் பொருத்தமாகத் தாமே எழுதிவிடுவது.
2. அந்தத் தமிழ் நூலைப் போன்ற பிறமொழி நூல்களைப் படித்துவிட்டு ஆர்வத்தில் அவற்றின் கருத்தைத் தமிழ்நூலில் சேர்ப்பது.
3. தமிழ் நூலின் நடையில் மயங்கி அதே நடையில் தான்புதிதாக எழுதிச் சேர்ப்பது.

இவ்விதம் ஆராய்ந்து போலிச் செய்யுள்களாக உள்ள செருகு கவிகளை நீக்க முற்பட்டார் அவர். ‘கம்பனின் ஓசை இல்லை’ என்று தட்டிப்பார்த்து பல கம்பராமாயணக் கவிதைகளை நிராகரித்தார். தான் தேர்வுசெய்த பாடல்களை மட்டும் தொகுத்து கம்பர் தரும் ராமாயணம்’ என்று வெளியிட்டார். அந்தப் பாடல்களை தம் இலக்கிய ஆய்வரங்கமான ‘வட்டத் தொட்டி’யில் சொல்லித் திளைத்தார். மகாத்மா காந்தி, வினோபா போன்ற உயர்நிலைப் பிரமுகர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் பாடிக்காட்டி மகிழ்வித்தவர் டி.கே.சி. நான் கம்பன் கவியை மூலத்தில் அனுபவிக்க என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டார் காந்திஜி. அடுத்த பிறவியிலாவது நீங்கள் தமிழனாகப் பிறக்கவேண்டும்’ என்றார் டி.கே.சி!

திருக்குறளில் பெரிதும் ஈடுபட்ட டி.கே.சி., பெரியார் ஈ.வெ.ரா.விடம் குறளைப் பாடிக் காட்டினார். திருக்குறள் சொல்லும் நல்ல கருத்துகள் மக்களுக்கு விளங்கவில்லையே?’ என்று வருத்தப்பட்டார் ஈ.வெ.ரா. கதைப் போக்குடைய கம்பராமாயணமே விளங்காவிட்டால் நம்மவர்க்குக் குறள் எப்படி விளங்கும்?’ எனக் கேட்டார் டி.கே.சி.! ஈ.வெ.ரா.விடமே ராமாயணத்தைப் பெருமைப்படுத்திப் பேசும் துணிச்சல் அவருக்கு இருந்தது. டி.கே.சி.யின் அபாரமான இலக்கிய ரசனை திருக்குறளிலும் ஊடுருவியது. `கல்லாமை’ அதிகாரத்தில் உள்ள விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்!’ என்ற குறள் பற்றி சிந்திக்கத்தக்க ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் அவர்.

இந்தக் குறளில் உவமை வைக்கப்பட்டிருக்கும் முறைபற்றி அவர் ஆராய்கிறார். ‘விலங்கு கற்றாருக்கும், மக்கள் ஏனையவருக்கும் அல்லவா உவமையாக்கப் பட்டுள்ளன! கல்லாதவர் அல்லவா விலங்கு போன்றவர்! எனவே ஏடெழுத்து எழுதியவர் செய்த பிழையாகத் தான் இது இருக்க வேண்டும். உண்மையில் சரியான குறள் என்பது விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கல்லாரோடு ஏனையவர் என்பதாகத் தான் இருந்திருக்கும்!’ என்கிறார் அவர்! இந்தத் திருக்குறள் குறித்த அவரது ஆய்வு அன்று பலரை வியக்கவைத்திருக்கிறது. இன்றும் நம்மை வியக்க வைக்கிறது.

கல்வி என்பது கடின உழைப்பின் பேரில் ஒருவன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டு அடைய வேண்டிய உயர்ந்த செல்வம். ஆனால், நம் ஆன்மிக மரபில் இறையருளால் ஒரு கணத்தில் புலமையடைந்தவர்களும் உண்டு. மகாகவி காளிதாசன் அப்படிக் கல்வி பெற்றவன்.  அறிவில்லாத முட்டாளாக இருந்த வாலிபன் அவன். மரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கிளை வெட்டப்பட்டால் தானும் சேர்ந்து கீழே விழுவோம் என்ற அறிவு கூட அவனுக்கு இருக்கவில்லை.

அவனை புத்திசாலிபோல நடிக்கவைத்து ராஜகுமாரிக்குக் கணவனாக்கி விட்டார்கள், அரசனின் விரோதிகள் சிலர். ஆனால், கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள்தானே? இவன் கெட்டிக்காரன்கூட அல்லவே? படிக்காத பாமரன் அவன் என்பதை ராஜகுமாரி மிக எளிதில் உணர்ந்துவிட்டாள். காளியிடம் கல்வி வரம் பெற்று வா என அவனைக் காளிகோயிலுக்கு விரட்டினாள். இரவு நேரத்தில் வழக்கம்போல் வீதியுலாச் சென்றாள் காளி. இவன் ஆலயத்தின் உட்புகுந்து கோயிலை உள்ளே தாளிட்டுக் கொண்டான். உலா முடிந்து அன்னை காளி, கோயிலுக்கு வந்தபோது கதவு உள்புறம் தாளிடப் பட்டிருந்தது.

திறக்கச் சொல்லிக் குரல் கொடுத்தாள். தனக்குக் கல்வியறிவு அருளினால்தான் திறப்பேன் எனப் பிடிவாதம் பிடித்தான் அவன். அந்தக் குழந்தைத்தனமான பிடிவாதத்தை அன்னை காளி ரசித்தாள். அவனுக்கு அருள்புரிய முடிவெடுத்தாள். அவள் ஆணையிட்டபடி மெல்லத் திறந்தது கதவு. காளி தன் சூலத்தால் அவன் நாவில் ஓம் என எழுதினாள். அன்று தொட்டு அவன் காளிதாசன் ஆனான். கவிமழை பொழியலானான். பல்லாண்டுகள் உழைத்துக் கற்றுப் பண்டிதன் ஆனவன் அல்ல காளிதாசன். அன்னை அருளால் ஒரே கணத்தில் புலமை பெற்ற பாக்கியசாலி.

கல்லாமலே பண்டிதனான வடமொழிப் புலவனின் வரலாறு இதுவென்றால், தமிழ்ப் புலவர்களிலும் அத்தகைய ஒருவர் உண்டு. மூன்றே வயதில் இறையருளால் பாடல் இயற்றுமளவு புலமை பெற்றார் அவர். சீர்காழியில் பிறந்த அவரது தாய் பெயர் பகவதியார். தந்தை பெயர் சிவபாத இருதயர். பெற்றோர் இருவருமே சிவநேயச் செல்வர்கள். மூன்று வயதுக் குழந்தையைத் தன்னோடு அழைத்துக் கொண்டு குளத்தில் குளிக்கச் சென்றார் தந்தை சிவபாத இருதயர். மகனைக் குளப் படிக்கட்டில் அமரவைத்து விட்டுக் குளத்து நீரில் மூழ்கினார். தந்தையைக் காணாத குழந்தை குளப்படியில் அமர்ந்து பசியோடு அழுதது. உலகிற்கெல்லாம் தாயான பார்வதியின் உள்ளம் அந்தக் குழந்தையின் அழுகை கண்டு இரங்கியது.

உண்ணாமுலையாள் கிண்ணத்தில் பாலேந்தி வந்தாள். குழந்தைக்குப் பாலூட்டி அதன் அழுகையை அடக்கி விண்ணில் மறைந்தாள். நீராடிவிட்டு வந்த சிவபாத இருதயர் தன் மகன் இதழ்களில் பாலேடு படிந்திருந்தது கண்டு திகைத்தார். யார் பால் தந்தது என வினவினார். தன்பால் அளவற்ற பாசம் கொண்டு தாய்ப்பால் தந்த அன்னைபால் தளர்வறியா பக்தி பூண்டு தன் மூன்று வயதிலேயே பாடல் புனைந்து பாடத் தொடங்கியது அந்தக் குழந்தை:

'தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ள கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனைநான் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பெருமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!’

அந்தப் புகழ்பெற்ற குழந்தைதான் திருஞான சம்பந்தர். பின்னாளில் திராவிட சிசு என அக்குழந்தையைத் தம் சம்ஸ்க்ருதக் கவிதையில் குறிப்பிட்டுப் போற்றினார் அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரர். திருஞான சம்பந்தர் 'இரக்கம் ஒன்றிலிர்’ எனப் பாடிய போது மூடிய ஆலயக் கதவு தானே திறந்தது. 'மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் பாடலைப் பாடியபோது மன்னனின் தீராத நோய் தீர்ந்தது. இறைவனின் அருளால் ஒருகணத்தில் கல்விச் செல்வம் பெற்று அருட்பாக்களைப் பொழிந்த தமிழ்க் கடல் அவர். ஆக வடமொழியில் காளிதாசன், தமிழில் திருஞான சம்பந்தர் போன்றோர் பள்ளி சென்று கல்வி கற்காமலே இறையருளால் கல்வி வரம் அருளப் பெற்றார்கள் என்பதை அறிகிறோம்.

பள்ளி சென்று கல்வி கற்கும் நம் காலத்துக் குழந்தைகள் இறைவனைப் பிரார்த்தித்தால், அவர்களுக்கு இறையருளும் துணை நிற்பதால் கல்வி கற்பது மிக எளிதாகும். கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதி, மகாகவி காளிதாசர் எழுதிய சியாமளா தண்டகம் போன்ற தோத்திரங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் இறையருள் பெற்று கல்வியில் சிறந்தவர்களாக விளங்கமுடியும். நவராத்திரி காலத்தில் மட்டும் கலைவாணியை வழிபட்டால் போதாது. நாள்தோறும் வெள்ளைத் தாமரைப் பூவிலிருக்கும் தேவியைப் போற்றி அவளருள் பெறுவோம். பாராயணம் செய்ய வேண்டிய நூல் மட்டுமல்ல, படித்துப் பின்பற்ற வேண்டிய நூல் திருக்குறள் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.

திருப்பூர்கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)