புரட்டாசி மாதத்தை மட்டும் பெருமாளுக்கு உகந்த மாதமாக சொல்வதன் காரணம் என்ன?புரட்டாசி என்றவுடனேயே நம் கண்முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமண் இட்டு பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் சென்று ‘நாராயணா, கோபாலா...’ என்று அவன் நாமத்தை உச்சரித்து பிக்ஷை எடுத்து கிடைத்த அரிசியை அரைத்து அதில் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிப்பதை இன்றும் கிராமப்புறங்களில் காணமுடியும்.

இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு கன்னியா மாதம் என்றும் பெயர் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புதபகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கரநாராயணரின் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே. இதன் மூலம் அரியும், சிவனும் ஒன்று என்ற கருத்து நன்றாகப் புலப்படுகிறது. எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ, வைணவ பேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவ உணவினையே உட்கொள்கின்றனர்.

மகாவிஷ்ணுவின் அம்சம் புதன் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு இருக்க புரட்டாசியில் புதன்கிழமைதானே முக்கியத்துவம் பெறவேண்டும், மாறாக சனிக்கிழமை சிறப்பு பெறக் காரணம் என்ன? பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனி பகவான் தனது முழு தாக்கத்தையும் காண்பிப்பதில்லை, மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று சனியின் வீரியம் குறைந்திருக்கும் என புராணங்கள் உரைக்கின்றன. சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் தாக்கம் இல்லாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.

பெண்களுக்கு மந்திரம் சொல்லும் உரிமை மறுக்கப்படுவது ஏன்?
- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி-17.
   
மந்திரம் சொல்வதற்கான உரிமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆனால், இதைச் சொல்லலாம், இதைச் சொல்லக்கூடாது என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். வரலக்ஷ்மி விரதம், கௌரீ விரதம் உட்பட பல நோன்புகளில் பெண்கள்தான் மந்திரம் சொல்லி பூஜை செய்கிறார்கள். ஆக, பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது என்று யாரும் அறிவுறுத்தவில்லை. ஸ்லோகங்கள், ஸ்தோத்ரங்கள், அஷ்டகங்கள், புராணோக்த வாக்கியங்கள், வேதமந்திரங்கள் என்று மந்திரங்களை பலவகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் வேதமந்திரங்களைத் தவிர மற்றவற்றை பெண்கள் உச்சரிக்கலாம்.

வேதமந்திரங்களை பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் கூட தங்கள் விருப்பம்போல உச்சரிக்க முடியாது. முறையாக வேதபாடசாலையில் அல்லது குருகுலத்தில் பயின்றவர்கள் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேதமந்திரங்களைச் சொல்வதற்கென தனியாக உச்சரிப்பும், ஸ்வரங்களும் உண்டு. இந்த ஸ்வரங்களை சரியான உச்சரிப்புடன் பாராயணம் செய்யும்போது, அடிவயிற்றில் ஒருவித உஷ்ணம் தோன்றும். இந்த உஷ்ணத்தைத் தணிப்பதற்காகத்தான் வேதம் ஓதும் பண்டிதர்கள் உணவில் பசுநெய்யினை அதிகமாகச் சேர்த்துக்கொள்வர்.

இவ்வாறு வேதமந்திரங்களை பாராயணம் செய்யும்போது உண்டாகும் உஷ்ணத்தைப் பெண்களின் உடல் தாங்காது என்பதாலும், கர்ப்பப்பை முதலான பாகங்களில் பிரச்னைகள் உண்டாகும் என்பதாலும் பெண்கள் வேதமந்திரங்களைச் சொல்லக்கூடாது என்று பெரியோர்கள் அறிவுறுத்தினார்கள். அதேசமயம் விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் முதலான ஸதோத்ரங்களை பெண்கள் தாராளமாக சொல்லலாம். இந்த விஷயத்தில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பது தவறு.

ஆண் வாரிசு இல்லாத பெற்றோருக்கு இடுகாட்டில் இறுதிசடங்கு செய்ய அவருடைய மகள்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?
- எஸ்.கிருஷ்ணன், திருவண்ணாமலை.

பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதாலும், அவர்களுடைய உடல்நிலையும், மனநிலையும் இடுகாட்டுச் சூழ்நிலைக்கு ஒத்துழைக்காது என்பதாலும் பெண்கள் இடுகாட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் மயானம் மின்சாரமயமாகிவிட்ட சூழலில் பெண்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறார்கள். இறுதிச்சடங்கினை பூணூல் அணிந்து, ஆசாரமாக செய்ய வேண்டும் என்ற காரணத்தாலும், மாதவிடாய் முதலான தீட்டுக்களினால் பெண்களால் அந்தக் கடமையைச் சரிவர செய்ய இயலாது என்பதாலும் பெண்களை இறுதிச்சடங்கு உட்பட பிதுர்கர்மாக்களை நேரடியாக செய்ய அனுமதிப்பதில்லை.

அதே நேரத்தில், ஆண்வாரிசு இல்லாத பட்சத்தில் பெற்றோருக்கு இறுதிச்சடங்கினைச் செய்ய வேண்டிய முழு அதிகாரமும் மகள்களுக்கு உண்டு. அவர்கள் நேரடியாகச் செய்யாமல் தர்ப்பைப்புல்லை தங்கள் கையால் எடுத்துக் கொடுத்து, ஓர் ஆணின் மூலமாக தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தர்ப்பைப்புல்லை கையில் வாங்கிய நபர் அந்த கடமையைச் செய்ததாகக் கணக்கில் வராது, எந்தப் பெண் தர்ப்பையைக் கொடுத்தாரோ, அவரே நேரடியாக அந்தக் கர்மாவினைச் செய்ததாகத்தான் கருதுவர்.

தங்களால் செய்யமுடியாத விஷயத்தை மற்றொருவர் துணைகொண்டு அந்தப் பெண் செய்யும்போது அவரே நேரடியாக தனது பெற்றோருக்குரிய கடமையைச் செய்து முடித்திருப்பதாகத்தான் கருத வேண்டும். பெண்களுடைய உடல்வாகு இதுபோன்ற பிதுர்கர்மாக்களுக்கு ஒத்துழைக்காது என்பதால்தான் அவர்களை இடுகாட்டிற்கு வரவேண்டாம் என்று தடுக்கிறார்கள். இதில் தவறொன்றும் இல்லை.
?சர்வ அமாவாசை, போதாயன அமாவாசை என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
- ரா.விஸ்வநாதன், பண்ருட்டி.

பொதுவாக, அபரான்ன காலம் என்று நிர்ணயிக்கப்படுகின்ற மதியம் 2 மணி சுமாருக்கு என்ன திதி இருக்கின்றதோ, அதுவே அன்றைய சிராத்த திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருநாளில் பகல் 2 மணிக்கு மேல் அதாவது, 20 நாழிகைக்கு மேல் அமாவாசை திதிவரும் பட்சத்தில் அந்த நாளை போதாயன அமாவாசை நாள் என்று குறிப்பிடுவர். மாறாக மதியம் 2 மணி வரை அமாவாசை திதி இருந்தால் அந்த நாளை சாதாரணமான அமாவாசை என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

பொதுவாக அமாவாசை தர்ப்பணம் செய்பவர்களும், அமாவாசை நாளில் வீட்டில் முன்னோர்களுக்காக இலைபோட்டு படைப்பவர்களும், அமாவாசை விரதம் இருப்பவர்களும் சாதாரணமாக வருகின்ற அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும். போதாயன சூத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் போதாயன அமாவாசை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் செய்ய வேண்டும்.

கல்வியில் ஏற்றம் பெற யாரை வணங்க வேண்டும்? என்ன மந்திரம் ஜபிக்க வேண்டும்?
- ந. கனிமொழி கயல்விழி, கண்ணமங்கலம்.
 
ஸ்ரீமஹா சரஸ்வதி, ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீஹயக்ரீவர் ஆகிய தேவதைகள் கல்வியில் ஏற்றம் பெற துணைபுரிவார்கள். இவர்களில் சரஸ்வதிதேவி அடிப்படைக் கல்வி அறிவு அதாவது, பள்ளியில் நடத்தப்படும் பாடங்களின் மூலமாக கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்குத் துணைபுரிவார்; அதோடு ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் கற்றுத் தருபவர். தக்ஷிணாமூர்த்தி ஞானத்தை வழங்குபவர். அதாவது, நாம் கற்றுக்கொண்ட விஷயத்தை எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவினைத் தருவார்.

ஹயக்ரீவர், செயல்முறை அறிவினைத் தருபவர் - பிராக்டிகல் நாலேஜ். பள்ளியில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் தவிர்த்து உலக அனுபவத்தைத் தந்து பக்குவப்பட்ட விவேகத்துடன் கூடிய அறிவினை வேகமாகப் பயன்படுத்தி வெற்றி காண துணை நிற்பவர்; இன்றைய நவீன உலகிற்குத் தேவையான வேகத்துடன் கூடிய நுண்ணறிவினைத் தரவல்லவர் ஹயக்ரீவர். இவருக்குரிய கீழ்க்கண்ட விசேஷமான மந்திரத்தை நாள்தோறும் தவறாது ஜபித்து வருபவர்கள் கல்வியில் மட்டுமல்ல, தங்கள் தொழில்முறையிலும் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வெற்றி கண்டு வருவர் என்பது திண்ணம்.

“ஓம் ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
 நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷித:
 ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோவதேத்
 தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜன்ஹூ கன்யா ப்ரவாஹவத்
 ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி :
 விசோபதே ஸ வைகுண்டக வாடோத்காடன க்ஷம:
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜ யதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.”

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோயில்களில் உள்ள வன்னிமரத்தை சுற்றக்கூடாது என்கிறார்களே, உண்மையா? விளக்கம் தேவை.
- டி.ரவி, சென்னை-41.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோயில்களில் உள்ள வன்னிமரம் மட்டுமல்ல, வேறெந்த இடத்தில் உள்ள எந்த மரத்தையும் சுற்றக்கூடாது. பகல்பொழுதில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின்போது மரங்கள் கார்பன்டைஆக்ஸைடை உட்கொண்டு சுத்தமான ஆக்சிஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. சுத்தமான ஆக்சிஜன் வாயுவை நாம் சுவாசிக்கும்போது உடல் ஆரோக்யம் பெறுகிறது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஒளிச்சேர்க்கை நடைபெற வாய்ப்பு இல்லாததால், தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டைஆக்ஸைடு வாயுவினை வெளியேற்றுகின்றன. இதனை சுவாசிப்பதால் மனிதனின் உடல் ஆரோக்யம் கெடும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மரங்களின் அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது அறிவியல். இந்த அடிப்படையில்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஸ்தல விருட்சங்களை வலம்வந்து வணங்க வேண்டாம் என்கிறது ஆன்மிகம்.

கோயிலுக்குச் சென்று வழிபடாதவர்கள் எப்படி நிம்மதியாக வாழ்கிறார்கள்?
- மீனாவாசன், சென்னாவரம்.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தங்கள் கடமையைச் சரிவர செய்கிறவர்கள், நிம்மதியாக வாழ்கிறார்கள். கடமையைச் சரிவர செய்பவருக்கு என்றுமே கவலை கிடையாது. கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் மட்டும் நிம்மதி வந்துவிடாது. “எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? இன்று எது உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது ஆகிவிடுகிறது!”

என்ற பகவத்கீதையின் அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொண்டாலே நிம்மதி தானாக வந்துவிடும். கோயிலுக்குச் சென்று தங்கள் சுயநலத்திற்காக மட்டும் வழிபடுபவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மாறாக, கோயிலுக்குச் செல்லாவிடினும், இருந்த இடத்தில் இருந்தே எல்லாம் இறைவன் செயல் என்று வாழ்பவர்களுக்கு நிம்மதிக்குக் குறைவிருக்காது.

லவ்பேர்ட்ஸ் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பது வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே, இது சரியா?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
   
லவ்பேர்ட்ஸ் மட்டுமல்ல, கிளி உள்பட எந்த பறவையினத்தையும் கூண்டில் அடைத்து வைத்திருப்பது வீட்டிற்கு ஆகாது. ‘சுதந்திரப் பறவை’ என்று சொல்வார்கள். அந்தப் பறவையையே அடைத்து வைப்பது என்ன நியாயம்? இவ்வாறு அடைத்து வைக்கப்படும் பறவைகள் சுதந்திரத்திற்காக கத்திக்கொண்டே இருப்பது வீட்டில் தெய்வீக அலைகளை நிச்சயமாகத் தடைசெய்யும். இவ்வாறு பறவைகள் கத்திக்கொண்டே இருக்கும் இல்லங்களில் சண்டையும், சச்சரவும்தான் பெருகும்.

மாறாக, புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக பறக்கவிட்டு வளர்ப்பவர்களும் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள்.
இவ்வாறு பறந்து திரிந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு தினசரி ஆகாரம் தரும் இல்லங்களில் பிரச்னை ஏதும் உருவாகாது. லவ்பேர்ட்ஸ், கிளி போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து, அவை எப்போதும் கத்திக்கொண்டே இருந்தால் நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டில் கருடபுராணம் படிக்கக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன?
- டி.என்.ரங்கநாதன், திருவானைக்காவல்.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
   

நிறைய வாசகர்கள் இந்த கேள்வியினை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். நம்மில் பலருக்கு கருடபுராணம் என்ற ஒன்று இருப்பதே திரைப்படத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. இன்னமும் சில வீடுகளில் மகாபாரதம் படித்தால் குடும்பத்தில் சண்டை வரும், ராமாயணம் படித்தால் கணவன்-மனைவி பிரிவு உண்டாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையே நம் வீட்டுப் பிள்ளைகள் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம்தானே அறிந்து கொள்கிறார்கள்!

இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றித் தெரியவில்லை. இந்தியாவின் பிரதானமான இதிகாசங்களுக்கே இந்த நிலைமை எனும்போது மற்ற புராணங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும் கருடபுராணம் என்பது நரகத்தினைப் பற்றியும், அதில் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் சொல்லப்படுவது என்ற கருத்து அடிமனதில் பதிந்திருக்கும்போது, அதை வீட்டில் வைத்துப் படித்தால் துர்மரணங்கள் வீட்டில் நிகழும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பி வைத்துள்ளார்கள்.

கருடபுராணம் மட்டுமல்ல, 18 புராணங்களையும் வீட்டில் வைத்துப் படிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவேண்டும், அவ்வாறு புரியாத பட்சத்தில் நாமாக கற்பனை செய்து புரிந்துகொள்ளாமல், தகுதி வாய்ந்த குருவின் உதவியோடு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கருடபுராணத்தை வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா