நன்மை செய்து நிம்மதி அடைவோம்!திருமூலர் மந்திர ரகசியம்

அருந்தமிழில் ஆயிரக் கணக்கான நூல்கள் உள்ளன. தமிழ் நாட்டில் உணவுக்குப் பஞ்சம் வந்த காலம் என்று  உண்டேதவிர, நல்லுணாவை ஊட்டும் நற்றமிழ்ப் பாடல்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்தது இல்லை. மாதத்திற்கு - வாரத்திற்கு என்று மட்டுமல்ல, நாள் தோறும் ஒரு நூலைப் படித்தாலும், நமக்கு ஆயுள் போதாது. வேதங்கள் விதித்தபடி, நூறு ஆண்டுகள் வாழ்ந்து, பிறந்த அன்றிலிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு நூலாகப் படித்தாலும், 36500 நூல்கள்தான் படிக்க முடியும். அந்நூல்களிலும் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். எந்த நாள் படித்து, எந்த நாள் புரிந்து கொள்வது?

சிவபெருமான் தட்சிணாமூா்த்தி வடிவில், கல்லால மரத்தின் அடியிலிருந்து உபதேசம் செய்ய, அவா் எதிரில் வயது முதிர்ந்த நால்வா் உபதேசம் கேட்டுக் கொண்டிருப்பதைப் போன்றதொரு படத்தைப் பார்த்திருப்போம். அதைப் பற்றித் திருமூலா் என்ன சொல்கிறார் ?

‘எழுந்து நீா் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என்று
அண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்
சடையோடே அழுந்திய நால்வாக்கு அருள் புரிந்தானே’ 

(திருமந்திரம் - 553)
கருத்து: “எல்லா இடங்களிலும் மழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடினாலும், உள்ளத்திற்கு மகிழ்வும், உலகிற்கு இன்பமும் தருவதாகிய நல்லனவற்றையே செய்யுங்கள் என்று, மிகுந்த அருளைப் பொழியும் பவளம் போன்ற சிவந்த திருமேனியும் கங்கையைத் தாங்கிய குளிர்ந்த விரிசடை மேனியும் உடையவராக சனகா், சனந்தனா், சநாதனா், சனத்குமாரா் என்னும் இறையருளில் அழுந்திய நால்வருக்கும அருள் புரிந்தார்.

சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசித்தது, இப்பாடலில்  இடம் பெற்றுள்ளது. மழை பெய்வது, திசைகள் எட்டிலும் மனதிற்கு மகிழ்வும், உலகிற்கு இன்பமும் தரக்கூடிய நல்லவற்றைச் செய்வது எனும் இரண்டு செயல்கள் முதலில் இடம் பெற்றுள்ளன. மழை பெய்து, நீா் பொங்கிப் பெருகி எல்லா இடங்களிலும் பாய்ந்து, அனைத்தையும் அனைவரையும் வாழவைக்கிறது. இதைச் சொல்லக் காரணம் என்ன?

நீா் இல்லாவிட்டால் உலகமே இல்லை. உலகம் வாழப் பெய்யும் மழை, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பது இல்லை, யாரிடமும் பேதமும் பார்ப்பது இல்லை. எட்டுத்திசைகளிலும் மழை பெய்கிறது, எல்லோரையும் வாழவைக்கிறது. ஒருநாளும் தன் பெருமை குறித்து, மழை தண்டோரா போட்டுக் கொண்டதில்லை. மழை குறித்து இவ்வாறு சொன்ன திருமூலா், இதை வைத்து நமக்கு நடத்தும் பாடம் இதுதான்:

அடுத்தவருக்கு நன்மை தரக்கூடிய செயல்களைச் செய்யுங்கள். அடுத்தவா் மனம் நோகாதவாறு, மகிழ்ச்சியை விதையுங்கள். உங்கள் மனதில் தானே மகிழ்ச்சி உண்டாகும். இவ்வாறு அறிவுறுத்திய திருமூலா், ‘‘இதை சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூா்த்தியாக வந்த சிவபெருமான் உபதேசம் செய்தார் என்கிறார். அதாவது ஞான நூல்களில் கரைகண்டவா்களே மனதில் அமைதியின்றித் தவித்தபோது, அவா்கள் அமைதிபெற சிவபெருமான் செய்த உபதேசம் இதுஎன்கிறார்.

ஞானவான்களான சனகாதி முனிவர்களின் நிலையே அதுவானால், நாம் எந்த மூலை? ஆகவே திருமூலா் சொன்னபடி நல்லதைச் செய்வோம்; மனதில் மகிழ்ச்சி தானே உண்டாகும். உலகிற்கு நல்லதைச் செய்யுங்கள், மனதில் மகிழ்ச்சி உண்டாகும் என்று சொன்ன திருமூலா், அந்த நல்லதில் பல விதமான வகைகளைச் சொல்லி, மேலும் வழி காட்டுகிறார்.

கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்திடை நின்றானே 

(திருமந்திரம் - 554)
இப்பாடலை மேம்போக்காகப் பார்த்தாலே, ஓரளவிற்கு அா்த்தம் புரியும். கூடவே, இந்த பாடலில் திருமூலா் சொல்லியிருப்பது இக்காலத்தில் சாத்தியமா என்றும் தோன்றும். ஆனால், இதுதான் உண்மை. நம்மால் முடியாது என்று, நல்லவற்றை அலட்சியப்படுத்தி விலகும் நாம், முடியாது என்றால்கூட, தயங்காமல் தீயவற்றைச் செய்கிறோமே, இங்குதான் ஆபத்து உருவாகிறது. ஏதோ ஒரு சுகம் இருப்பதாக எண்ணித்தான் கெட்டதைச் செய்கிறோம். ஆனால் அதைச் செய்துமுடித்தபின், நாம் எதிர்பார்த்த அளவு சுகம் கிடைக்கவில்லை. உடனே முன்பைவிடப் பெரிய தீமையைத் தீவிரமாகச் செய்யத் தொடங்குகிறோம். அதற்குப் பிறகு அடுத்தது என்று போய்க் கொண்டேயிருப்போம். எங்குதான் முடிவு?


ஆடையில் சிறிதளவு அழுக்கு பட்டவுடன் தோய்த்தால், அதிக முயற்சியில்லாமலேயே ஆடையைத் தூய்மை செய்து விடலாம். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால், எவ்வளவுதான் உயா்ந்த ‘சோப்’ போட்டு, விலை உயா்ந்த இயந்திரத்தில் போட்டுத் தோய்த்தாலும், ஆடை தூய்மை பெறாது; சமயத்தில் கிழிந்து போவதும் உண்டு! அது போலவே, தீயனவற்றில் ஈடுபட்டுத் துன்பம் அனுபவிக்கும்போதே, மெல்ல அதிலிருந்து மீள முயன்றால், மீட்சி பெற்றுவிடலாம்.

அதை விடுத்து, தொடா்ந்து தீமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அதுவே பழக்கமாகி, மீளமுடியாதபடி அமிழ்ந்து போய்விடுவோம். ஆகையால் திருமூலா் இப்பாடலில் சொல்லியவற்றை நம்மால் செய்ய முடிகிறதோ, இல்லையோ, இவற்றை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தாலே போதும், நாளாக ஆக மனம் நல்லவற்றில் ஈடுபடத் தொடங்கிவிடும். இப்பாடலில் திருமூலா் சொன்ன தகவல்களின் பொருள் உணா்ந்து கொள்ளலாம்.

முதலில் - கொல்லான் - கொலை செய்யாதவன். இது நேரிடையாகக் கொலை செய்யாதவன் என்று மட்டுமல்ல, மனதால், பேச்சால் அடுத்தவரைக் கொலை செய்யாதவன் என்ற பொருளையும் தரும். பொய் கூறான் - கைபேசி மலிந்து கிடக்கும் இக்காலத்தில், இதற்கு விளக்கமே சொல்ல வேண்டாம். களவிலான் - இச்சொல் ‘திருடாமை’ என்ற பொது விளக்கத்தைத் தந்தாலும், ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்’ எனும் திருக்குறளின் பொருளையும் தரும்.

அடுத்தவரிடமுள்ள மதிப்பு வாய்ந்த பொருளைப் பார்த்தவுடன், ‘எப்படியாவது இவரிடமிருந்து இதைத் திருடிவிடவேண்டும்’ என்ற எண்ணம் எழுகிறதே, இதையும் சோ்த்தே ‘களவிலான்’ என்றார் திருமூலா். அடுத்தவர் பொருளைத் திருட மனதால் நினைத்தால்கூட, பெரும் தீங்கு விளையும். எண்குணன் - எதையும் எண்ணிப் பார்த்து, ஆராய்ந்து அறியும் குணம் உள்ளவன். நல்லான் - நற்பண்புகளை உடையவன். அடக்கம் உடையான் - செல்வத்தாலோ, பதவியாலோ, படிப்பாலோ, கா்வம் கொள்ளாமல், அடக்கமாக இருப்பவன்.
நடுச் செய்ய வல்லான் - நடுநிலை தவறாதிருப்பவன்.

பகுத்துண்பான் - ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனும் வள்ளுவரின் வாக்குப்படி, அடுத்தவருக்குக் கொடுத்து உண்ண வேண்டும்; மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற ஜீவராசிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்து அவற்றையும்காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறார் திருமூலா். மாசிலான் - குற்றம், குறைகள் இல்லாதவன். கள், காமம் இல்லான் - மதியை அழிக்கும் மதுவை அருந்தாதவன், பெண்பித்துஇல்லாதவன்.

இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டு வந்த திருமூலா், இப்படி, தீயவற்றை விலக்கி நல்லதே செய்யும் மனிதர்களே தவநெறியில் நிற்பவர்கள் எனச் சொல்லிப் பாடலை முடிக்கிறார். இப்பாடலில் உள்ள நல்லதே செய்பவார்கள் பட்டியலில் கண்டிப்பாக நாமும் இடம் பெற்றிருப்போம். அத்துடன், செல்வந்தா்கள் மேன்மேலும் செல்வம் சோ்க்க விழைவதைப்போல, ஏற்கெனவே உள்ள நற்குணங்களுடன் மேலும் மேலும் நற்குணங்களைச் சோ்க்க முயல்வோம்.

- பி.என்.பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)