பிரசாதங்கள்தினை இனிப்பு பொங்கல்

என்னென்ன தேவை?
தினை அரிசி - 2 கப், (சுத்தப்படுத்தியது),
பாசிப்பருப்பு - 1 கப்,
கெட்டி தேங்காய் பால் - 1 கப்,
முந்திரி,
திராட்சை தலா - 15,
வெல்லம் பாகு காய்ச்சி வடித்தது - 1 கப் கெட்டியாக, 
நெய் - 2 மேசைக்கரண்டி.

எப்படிச் செய்வது?
தினை அரிசியை லேசாக வறுத்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பையும் வறுத்து லேசாக தனியாக ½ மணி நேரம் ஊற வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் சேர்த்து தினையை வேக வைக்கவும். பாதி வெந்து வரும்போது பருப்பை சேர்க்கவும். நன்கு வேக வைக்கவும். நன்றாக வெந்த நிலையில் வெல்லப்பாகை சேர்க்கவும்.

குதிரை வாலி ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்

என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 1 கப்,
தண்ணீர் - 2 கப்,
பால் - 2 கப்,
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கு,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
பொடித்த கொத்தமல்லி - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - தேவைக்கு,

தாளிப்பதற்கு: கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ½ டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 பொடித்தது, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன், அலங்கரிக்க பழங்கள்: உலர்ந்த திராட்சை, மாதுளை முத்துக்கள், சிறிது பச்சை திராட்சை.

எப்படிச் செய்வது?
குதிரை வாலி அரிசியை சிறிது ஊற வைத்து, களைந்து, நீர், பால் சேர்த்து குழைய வேக விடவும். வெந்த சாதத்தில், உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். ஆறியதும் தயிர் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து அதை சாதத்தில் கொட்டி கிளறி அதன்மேல் துருவிய கேரட் துருவல் சேர்க்கவும்.

பிறகு, பழங்கள் கொண்டு, அலங்கரித்து படைத்து பரிமாறவும். எல்லாவற்றையும் கலந்து பொங்கல் பதம் கெட்டியாக வந்ததும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கெட்டி தேங்காய் பால் சேர்த்து உடனே இறக்கி கிளறி படைத்து பரிமாறவும்.

கருப்பு உளுத்தம் பருப்பு வடை

என்னென்ன தேவை?
தோலுடன் இருக்கும் கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
சீரகம் - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவைக்கு பொடித்தது,
மிளகு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
கருப்பு உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து சிறிது தண்ணீர் தெளித்து பின் நன்கு அரைக்கவும். வடித்து இத்துடன் உடைத்த மிளகு, சீரகம், உப்பு, பெருங்காயம், பொடித்த கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

நெய்யை சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: வடை கரகரப்பாக வேண்டும் என்றால் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மென்மையாக வேண்டும் என்றால் மையாக அரைத்து எடுத்து வடை செய்யவும்.

சாமை புளி பொங்கல்

என்னென்ன தேவை?
சாமை அரிசி - 200 கிராம்,
புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு,
மிளகாய் வற்றல் - 8-10 அல்லது தேவைக்கு ஏற்ப,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவைக்கு,
கடுகு, உளுந்து தலா - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - ½ கப்,
வேர்க்கடலை உடைத்தது - 2 மேசைக்கரண்டி - விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

எப்படிச் செய்வது?
சாமை அரிசியை கழுவி வையுங்கள். புளியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து 1 கப் புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிளகாய் வற்றலைப் போட்டு சிவந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து 2 கப் தண்ணீர் சேர்த்து, இத்துடன் 1 கப் புளித் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி நன்கு வந்ததும் மிதமான தீயில் வைத்து ஊறிய சாமையை போட்டு வேகும் வரை விட்டு இறக்கவும். மிதமான தீயில் மூடி போட்டு வேக விடுவது நல்லது.

குறிப்பு: குக்கரிலும் செய்யலாம். 3 விசில் விட்டு இறக்கி, ஆறியதும் வறுத்த வேர்க்கடலை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

ராகி சேமியா பாயசம்

என்னென்ன தேவை?
ராகி சேமியா - 200 கிராம்,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 கப்,
ஏலக்காய் தூள் - 1  சிட்டிகை,
உலர்ந்த முந்திரி, திராட்சை - ¼ கப்,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
ராகி சேமியா ரெடியாக கடைகளில் கிடைக்கிறது. 4 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விடவும். அது கொதிக்கும்போது ராகி சேமியாவை அதில் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும் - இரண்டு நிமிடம் மட்டும்தான். பின் உடனே வடிகட்டி விடவும். இப்படிச் செய்தால் அதிகம் குழையாது.

பாலுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அது பாதியளவாகும்வரை காய்ச்சவும். இந்த சமயத்தில் வடித்து வைத்த ராகி சேமியாவை சேர்க்கவும். கைவிடாமல் கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக  பாயசம் பதமாக இறக்கி, பின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து படைத்து பரிமாறவும்.

(குறிப்பு - மேலும் திக்காக வேண்டும் என்றால்  பாதி பாலுடன் ½ டின் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும் - குறைவாக சர்க்கரை போட்டு)

சம்பா ரவை காய்கறி பொங்கல்

என்னென்ன தேவை?
கோதுமை சம்பா ரவை - ¾ கப்,
சிறு பருப்பு - ¼ கப், 
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - தேவைக்கு,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
நறுக்கிய காய்கறிகள் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி யாவும் சேர்த்து - 1 கப்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தலா - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு, முந்திரிப் பருப்பு - 10.

எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் சம்பா ரவை, சிறு பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுக்கவும். காய்கறிகள், பச்சை மிளகாய், இஞ்சி முதலானவற்றை நீளவாக்கில் அல்லது விருப்பமான வடிவில் கீரி அரிந்து வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, முந்திரி தாளித்து வதக்கவும். பின் வெட்டிய காய்கறிகள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி இதில் 3 கப் தண்ணீரும் தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.

மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இப்போது வறுத்த ரவை, பாசிப்பருப்பு ஆகியவற்றைக் களைந்து சேர்த்து, நன்கு கிளறி வேக விட்டு இறக்கவும். அதன்மேல் நெய் விட்டு கலந்து படைத்து பரிமாறவும். விருப்பப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி