வீணே வருந்தி என்ன பயன்?நாம் மனவலிமையை இழப்பதற்கு, பெரும்பாலும் நம் குற்ற உணர்வு காரணமாக இருக்கிறது. நாம் செய்திருக்கக்கூடிய தவறுகள், குற்றங்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து நம் மனதை பேதலிக்கச் செய்கின்றன. அப்படி பேதலிக்காமல் இருக்க ‘நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்’ என்ற ஆன்றோர் வாக்குப்படி அவ்வாறு நிகழ்ந்த சம்பவங்களை முற்றிலுமாக மறந்து விடுவதே நல்லது. நம்முடைய பொறுப்பில் ஒரு குறிப்பிட்ட தவறு நிகழ்ந்துவிட்டது; அதனால் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த பாதிப்பு அவருக்குப் பொருள் நஷ்டமாகவோ, மான நஷ்டமாகவோ, உடல் உறுப்பு நஷ்டமாகவோ இருக்கலாம்.

அத்தகைய நஷ்டத்தைப் பிறர் அனுபவிக்கக் கண்ட பிறகும், அதற்கு மூலகாரணம் நாமே என்று உணர்ந்திருந்தும், அந்த சமயத்தில் அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்பட முடியாதவகையில் நம்மை வீம்பு (ஈகோ) அடிமைப்படுத்தியிருக்கும். நாளாக நாளாக, வீம்பிடமிருந்து விடுபட்டாலும் குற்ற உணர்வுக்கு ஆளாகிறோம். இப்போதாவது சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோமா, சமாதானமாகப் போகிறோமா?

இல்லை. குற்ற உணர்வு இருந்தாலும், மன்னிப்பு கேட்பதை அவமானமானதாகக் கருதுகிறோம். மேலும் நாளாக நாளாக அவ்வாறு மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாதவாறு சம்பந்தப்பட்டவர் நம்மைவிட்டு விலகி வெகுதூரம் சென்றுவிடுகிறார். இப்போது குற்ற உணர்வு நம்மை மேலும் தகிக்கிறது. ‘அப்படி நான் செய்திருக்கக்கூடாது’ என்று நம்மை நாமே நொந்துகொள்கிறோம். வேண்டாம். அது அப்படித்தான் நடக்க வேண்டியிருந்தது, நடந்தது. அதற்காக அப்போது இல்லாவிட்டாலும் இப்போது வருந்துகிறோமே, இதுவே பாவமன்னிப்பு.

ஆகவே மனம் தெளிய, அந்தக் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு இப்போதைய கடமைகளை ஆற்றுவதில் நாம் கவனம் செலுத்துவோம். இழந்த நேரம் இழந்ததுதான் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அந்த சம்பவம் சார்ந்த உணர்வுகளையும் முற்றிலுமாக இழந்துவிடுவோம். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நினைவு கொள்ளவேண்டாம். அப்படியும் மனசாட்சி உறுத்துகிறதா, இறைவனைச் சரணடைவோம். ‘நீ ஆட்டுவித்தாய், நான் ஆடினேன். இந்த மன உளைச்சலிலிருந்து என்னை விடுவிப்பாய், இறைவா’ என்று உளமாற வேண்டிக்கொள்வோம். மனம் நிமிரும். வலுப்பெறும். கடந்துபோன மணித்துளிகளைப் போல அந்த சம்பவங்களும் ம(றை)றந்து போகும்.

பிரபு சங்கர்
(பொருப்பாசிரியர்)