கேள்விகள் மூன்று பதில்களோ முத்து!



குறளின் குரல் 58

சென்னை அருகே குன்றத்தூரில் எண்ணூறு ஆண்டு பழமை வாய்ந்த ஒரு சிவன் கோயில் இருக்கிறது. நாகேஸ்வரரும் காமாட்சியும் அங்கே தேவனும் தேவியுமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கற்கோயில், பெரியபுராணம் என்றசொற்கோயிலை இயற்றிய சேக்கிழாரால் கட்டப்பட்ட பெருமையுடையது. பொதுவாக மன்னர்கள்தான் ஆலயம் நிர்மாணிப்பார்கள். ஆனால், இது ஒரு புலவர் கட்டிய கோயில்.

குன்றத்தூரைச் சேர்ந்தவர்தான் சேக்கிழார் பெருமான். திருத்தொண்டத் தொகை,திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு, பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் புனித வரலாற்றைத் தமிழ்க் காப்பியமாக எழுதிய அவர், இளம் வயதிலேயே மிகுந்த நுண்ணறிவு படைத்திருந்தார். மக்கள், பிறவியிலேயே அவருக்கு அமைந்திருந்த அறிவுத் திறத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்வது வழக்கம்.

ஒருமுறை மன்னன் குலோத்துங்க சோழன் புலவர்களிடையே மூன்று கேள்விகளை முன்வைத்தான். அந்தக் கேள்விகளுக்கு மறுநாளைக்குள் யாரேனும் பதில் சொல்ல வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்தான். மீற முடியாத அரச கட்டளை அது. மறுநாள் எந்தப் புலவராலும் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால், இளம்வயது சேக்கிழார் மூன்று கேள்விகளுக்கும் பொருத்தமான பதிலைச் சொல்லி குலோத்துங்க சோழனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருக்கிருந்த அபாரமான அறிவுத் திறனை மெச்சி சோழன் தன் அவையில் அவரை அமைச்சராக நியமித்தான் என்பது சேக்கிழார் வரலாற்றில் காணப்படும் செய்தி.

 மன்னன் கேட்ட வித்தியாசமான அந்த மூன்று கேள்விகளுக்கும் திருக்குறளிலிருந்தே சேக்கிழார் விடையளித்தார் என்பதுதான் சுவையானது. மன்னன் கேட்ட கேள்விகளையும் சேக்கிழார் அளித்த விடைகளையும் பார்க்கலாம்:
முதல் கேள்வி: `மலையை விடப் பெரியது எது?’

உறுதியான உள்ளமும் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கவுணர்வும் கொண்டவன் எவனோ அவனுடைய கம்பீரமான தோற்றமானது வானளவு ஓங்கி நிற்கும் மலையை விடவும் பெரியது. `நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.’ (124) புராண காலத்தில் நிலையில் திரியாது அடங்கி வாழ்ந்த பெருமை அனுமனுக்குரியது. அனுமனுக்கு நிகரான பிரம்மச்சாரி உலகில் யார் உண்டு? தொண்டே வாழ்வாகக் கொண்ட தூயவன் அவன். ராம பக்தியைத் தவிர வேறெந்த வரமும் அவன் ராமனிடம் கேட்கவில்லை. பலன் கருதாத பக்தி அனுமனுடையது. சீதாப்பிராட்டி அவனுக்குத் தந்த சிரஞ்சீவி வரமும் கூட அவன் கேட்டுப் பெற்றதல்ல. அன்னை மனம் விரும்பித் தானாய் அருளியதுதான்.

 சிரஞ்சீவி வரத்தைப் பெற்ற அனுமன் கடல்தாண்டி இக்கரை வந்தான். முதுபெரும் கரடியான ஜாம்பவானைத் தனியே சந்தித்தான். ஜாம்பவான் ஏற்கெனவே சிரஞ்சீவி வரம் பெற்றவன் என்பதை அனுமன் அறிவான். எனவே சீதை தனக்களித்த வரம் குறித்து ஒரு முக்கியமான கேள்வியை ஜாம்பவானின் முன்வைத்தான்ஆஞ்சநேயன்: `சிரஞ்சீவி வரத்தால் என்ன லாபம்? என்ன நஷ்டம்?’

 ஜாம்பவான் பதில் சொன்னார்: `ஆஞ்சநேயா! பல்லாண்டுகள் நாம் தொடர்ந்து வாழ்வதனால் நம் எண்ணற்ற வாழ்வனுபவங்களின் காரணமாக நம் அறிவு மிகுந்த முதிர்ச்சியோடிருக்கும். எனவே மற்றவர்கள் சிரமப்பட்டுப் புரிந்துகொள்ளும் கடினமான விஷயத்தையெல்லாம் நாம் ஒரு பார்வையிலேயே புரிந்துகொண்டு விடுவோம்.’
`லாபம் இது. சரி. நஷ்டம் என்ன?’

`ஆஞ்சநேயா! நாம் மட்டும் தானே சிரஞ்சீவி? நம் நண்பர்களும் உறவினர்களும் சிரஞ்சீவிகள் அல்லவே? ஆகையால் நம் மனத்திற்கினியவர்
களின் நிரந்தர இழப்பை நாம் தாங்கிக்கொண்டே தொடர்ந்து வாழ வேண்டியிருக்கும்!’ அப்படியானால் நிலையில் திரியாது அடங்கி மலையினும் மாணப் பெரிய தோற்றத்தை உடைய அனுமன் துணையிழந்த தவிப்போடுதான் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறானா?

அல்ல. அவன் என்றும் அழியாத ஒரு துணையைப் பெற்ற பெருமிதத்தோடு இன்றும் சிரஞ்சீவியாக வாழ்கிறான். அந்தத் துணை அவனது நெஞ்சில் உறையும் ராம நாமம். உறவுகள் வரும், போகும். ஆனால், வாழ்நாள் முடியும்வரை நிச்சயமாக நிலைத்து நிற்கும் ஒரே உறவு ஆண்டவனுடன் கொள்ளும் பக்தி உறவுதான்.

 மலையையே தூக்கிய அனுமன் தோற்றம் மலையை விட மாணப் பெரியது என்பது, புகழ்ந்து சொல்லும் வாசகம் மட்டுமல்ல, உண்மையிலேயே அசோக வனத்தில் சீதாப் பிராட்டி முன் அவன் பேருரு கொண்டபோது அவன் உருவம் மிகப் பெரிதாக வளர்ந்தது என்கிறார் கம்பர். அவன் பேருரு கொண்டபோது சூரிய சந்திரன்கள் அவன் செவிகளில் இரு குண்டலங்கள் போல் தோன்றினவாம். நட்சத்திரங்கள் அவன் தலைமுடியில் சிக்கிக் கொண்டனவாம். அப்போது இலங்கை அவன் கனம் தாங்காமல் சற்றுத் தாழ்ந்ததால் கடலில் இருந்த மீன்கள் தரையில் புரண்டனவாம்!
மன்னன் கேட்ட இரண்டாவது கேள்வி: `உலகை விடப் பெரியது எது?’

சரியான தருணத்தில் செய்யப்படும் உதவியானது சிறியதேயானாலும் அதன் பயனைக் கருதும்போது அது உலகை விடப் பெரியது.
`காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (102)’  கல்லூரியில் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தினம். ஒரு மாணவனால் கட்ட இயலவில்லை. அப்படிச் கட்டணம் கட்டவில்லையென்றால் அவன் தேர்வு எழுத இயலாது.

வருடம் வீணாகிவிடும். ஒரு பேராசிரியர் இதை அறிகிறார். அவரே அந்த மாணவனுக்கு கட்டணம் கட்டி விடுகிறார். டாக்டர் மு. வரதராசன் இப்படிப் பல ஏழை மாணவர்களுக்கு கட்டணம் கட்டி உதவிய பெருமகன். சரியான காலத்தில் செய்த இத்தகைய உதவியின் பெருமை உலகை விடப் பெரியது என்கிறது வள்ளுவம்.

நம் இதிகாசப் பாத்திரங்களில் சரியான தருணத்தில் உலகைவிடப் பெரிய உதவியைச் செய்தவன் என்ற பெருமையைப் பெறுபவன் அனுமன்தான். யாருக்கேனும் உயிர்போகிற தருணம் நேர்ந்தால் அனுமன் தாவி வந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுவான். சீதாதேவி அசோகவனத்தில் இருந்தபோது, ராமன் இன்னும் வராத கவலையால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறாள். மாதவி கொடியைத் தன் கழுத்தில் இறுக்கிக் கொண்டு உயிரை விடும் எண்ணத்தில் ‘போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள்.’

ஆனால், அப்போது மரத்தின் மேலிருந்து ராம ராம என உயிரைத் தரும் ராமநாமத்தை உரத்துச் சொல்லி, ராமன் வரவிருக்கிறான் என்ற தகவலையும் சொல்லி அன்னை சீதையின் ஆருயிரைக் காத்தவன் அனுமன்தான். சரியான தருணத்தில் சீதை முன் தோன்றி கணையாழியைக் கொடுத்து பிரிவாற்றாமை காரணமாகப் பிரிந்துகொண்டிருந்த அவள் உயிரை மீண்டும் உடலில் தக்கவைத்தவன் அனுமன்.

 ராம-ராவண யுத்தத்தில் போர்க்களத்தில் ராமபிரானும் இளைய பெருமாளும் அஸ்திரத்தால் உயிர் போகுமளவு மயங்கிக் கிடந்தபோது சரியான நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டு வந்து அவர்களின் உயிரைக் காத்தவனும் அனுமனே. இக்காலத்திலும் கூடச் சரியான நேரத்தில் உதவுகிறவர்களைப் பார்த்து சமய சஞ்சீவியாக வந்தாய் என்று புகழ்கிறோமே, அது அனுமன் சமயம் தாழ்த்தாது கொண்டுவந்த சஞ்சீவி
மலையின் நினைவாகத்தான்.

பதினான்கு ஆண்கள் கழிந்து விட்டதே, இன்னும் ராமபிரான் வரவில்லையே என அக்கினியில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள பரதன் முனைந்தபோது வானில் தாவி வந்து, ராமபிரான் வந்துகொண்டிருக்கிறார் என்ற தகவலைச் சொல்லி பரதனின் உயிரைக் காத்தவனும் அனுமனே. அதனால்தான் கடும் நோய்வாய்ப் பட்டவர்கள் அனுமனைப் பிரார்த்தனை செய்தால், நோயிலிருந்து நீங்கி நலம் பெறுவார்கள் என்று சொல்கிறது நம் ஆன்மிக மரபு.

மன்னன் கேட்ட மூன்றாவது கேள்வி: `கடலை விடப் பெரியது எது?’
 இன்ன உதவி செய்தால் அதனால் இத்தகைய பயன் கிடைக்குமோ என எதிர்பார்க்காது, இயல்பாகச் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்து பார்ப்போமானால், அந்த நன்மை கடலை விடவும் பெரியது.

`பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலில் பெரிது.’ (103)

 சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கிற ஒருவரை சம்பந்தமேயில்லாத ஒருவர் பிரதிபலன் எதிர்பாராது உடனடியாக மருத்துவ மனையில் கொண்டு சேர்க்கிறார். `நல்லவேளை, உடனே அழைத்து வந்தீர்கள். இன்னும் சில கணங்கள் தாமதித்திருந்தாலும் கூட நிலைமை சிக்கலாகும்!’ என மருத்துவரே பாராட்டுகிறார். விபத்திற்கு ஆட்பட்டவருக்கு அளிக்கப்பட்ட உடனடி சிகிச்சை மூலம் அவர் உயிர் பிழைக்கிறார். உயிரைக் காத்த இந்த உதவியின் பெருமையை என்ன சொல்ல? அது கடலை விடப் பெரியதுதானே?

 மலையை விடவும், உலகை விடவும், கடலை விடவும் பெரியவை எவை என்பதை இப்படிஅழகாக விளக்குகிறது வள்ளுவம்.   அவ்வைப் பாட்டியிடம் பெரியது எது என்று முருகப் பெருமான் வினவினான். சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு அவ்வையின் அகந்தையைப் போக்கியவன்அல்லவா அந்தத் தமிழ்க் கடவுள்? கனியை உண்ட அவ்வை மனங்கனிந்து முருகன் கேட்ட வினாவுக்கும் கனிவோடு பதில் சொல்கிறாள். அவ்வை சொல்லும் பதில் இதோ:

`பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியின் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்

குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக்கொருதலைப் பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!’

தொண்டர்களின் பெருமையே எல்லாவற்றையும் விடப் பெரியது என்பது அவ்வைப் பாட்டியின் முடிவு. நிலையில் திரியாது அடங்கி வாழ்தல், சரியான தருணத்தில் உதவுதல், பயனை எதிர்பாராது செயலாற்றுதல் - இவை மூன்றும் தொண்டர்களின் குணங்கள் தானே? இந்த மூன்று குணங்களையும் உடையவர்களைத்தானே மலையை விட, புவியை விட, கடலை விடப் பெரியவர்கள் என வள்ளுவர் கொண்டாடுகிறார்?   அவ்வையின் வரிகளை வள்ளுவம் என்ற உரைகல்லில் உரசிப் பார்க்கும்போது அது சொக்கத் தங்கமாய் ஜொலிக்கிறது அல்லவா? மொத்தத்தில் திருக்குறளின் பெருமை, மலை, புவி, கடல் என்ற மூன்றை விடவும் பெரியதுதான்!

(குறள் உரைக்கும்)