இயற்கையைக் காப்போம்... இனிதே வாழ்வோம்!



*இயற்கை சக்தி எழிலோவிய
கண்கள் திறந்து மலர்கள் மலர்ந்தது!
மங்கை நேர்மறை எண்ணங்கள் விரிந்து
பசுமை பூமியில் படர்ந்தது!
கொங்கை குன்றாகி நிலக்குழந்தைக்கு
பாலூட்டி நின்று தவம் செய்தது!
செவ்விதழ் தீண்டி செங்கதிர் தோன்றி
உயிர்கள் மண்ணில் உருவானது!

*இருள்முடி மேகமாகி இன்முகம் நிலவாகி
மாயகம்பள வானமதில் உறவாடுது!
அருட்புன்னகை முத்து உதிர்ந்து உடைந்து
புள்ளி கோலமாய் ஒளிர்கிறது!
ஆசைதுறந்து உயர்ந்த மலைதேடி அழகு
பொற்பாதம் பட்டு மூலிகை உயிரானது!
இசையூற்று, நடையாறு, நல்மணச் சுனைகள்
அனைத்தும் தோன்றி வரமானது!

*உள்ளொளி அருளாகி உயிரினம் பலவாகி
தெய்வமொழி பேசி கலந்து வாழும்!
உணவுக்கு சிறகடிக்கும் பறவைக்கு குரலாகும்
காற்றில் கலந்திடும் கீதம்!
மனிதனுக்கு தோழியாகி, செடியாகி, மரமாகி
பசும்சோலை தாலாட்டும் தென்றல்!
மலைமுகடு காற்றாகி உடல்கூட்டில் மூச்சாகி
வாசியோக பயிற்சியால் வசமாகும் பெண்ணே!

*எழில் மலரில் மணமாய் நின்றாடும்
சுவைகனியை வென்றாடும் பனி நிலவில்
கயல் விழிகள் சுழன்றாடி
காலங்கள் பல கடந்தாடும்!
கோலமகள் இயற்கை வடிவானாள்
கோடை, குளிர், பனி பருவமானாள்!
கொள்ளை இன்பமதை
கொண்டாடுவோம்
கொள்ளையர் கைபடாமல் காப்போம்!

*இயற்கைக்கு மறுபெயர் அமைதியானது!
இனிமையாய் சுற்றி உலாவுதல்
சுற்றுலாவானது!
இயற்கையை பற்றி ஒழுகுதல்
மனிதரின் கடமை!
இயற்கைக்கு முரணான வாழ்வு
நிரந்தரமல்ல!
இயற்கையை இயற்கை அழிக்கும்,
படைக்கும், உயிர்க்கும்
இறை தத்துவமும் சரியே!
இயற்கையும் சரியே!
நிலமெனும் பெரிய புதையல் பெட்டியில்
வற்றாத கனிமவளம் பெற்று வாழ்வோம்!

- விஷ்ணுதாசன்