தங்கத்தைத் தேடி எங்கெங்கோ ஏன் அலையவேண்டும்?



பக்தித் தமிழ் 94

‘உங்களுக்கு ரசவாதம் தெரியுமா?’ என்றார் ஒருவர்.
அருகிலிருந்தவர் சிரித்தார். ‘தெரியுமே!’

‘அட, நிஜமாகவா சொல்கிறீர்கள்?’ முதல்நபரின் கண்களில் ஆர்வம் தெரிந்தது.
‘அவசரப்படாதீர்கள், ரசவாதம் என்றொரு விஷயம் இருப்பது தெரியும் என்று சொல்லவந்தேன்’ என்று சிரித்தார் இரண்டாம் நபர். ‘மற்றபடி, எதையும் தங்கமாக மாற்றுகிற அந்த வித்தையை நானறியேன்!’

முதல்நபர் பெருமூச்சுடன் சாய்ந்து அமர்ந்தார். ‘எல்லாரும் இப்படிதான் சொல்கிறார்கள். நான்
ரசவாதத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். யார் கற்றுத்தருவார்கள்?’
‘ரசவாதம் கற்றுக்கொண்டு என்ன செய்வீர்கள்?’
‘வேறென்ன? தங்கம் செய்வேன்!’

‘தங்கத்துக்கு அப்படியொரு தேவை உள்ளதா உங்களுக்கு?’
‘ஏனையா, தங்கம் தேவைப் படாத ஆள் உண்டா? நானும் கொஞ்சம் சம்பாதிக்கிறேனே, உமக்கென்ன வந்தது?’

இரண்டாம் நபர் சற்றே யோசித்துவிட்டு, ‘உமக்குத் தங்கம்தானே வேண்டும். நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். ‘அதுவும் சிறிதளவு தங்கமல்ல, நிறைய, நிறைய தங்கம், உங்களுக்காகவே நாள்தோறும் பொழியும் தங்கம்!’

‘அட, நிஜமாகவா சொல்கிறீர்கள்?’
‘ஆமாம், நீங்களாகச் சென்று ஒன்றைத் தொடவேண்டியதில்லை, அதுவே தங்கமாக வந்து உங்களைச் சேரும், அதற்கு நீங்கள் ஒரு மந்திரத்தைத் தினமும் சொல்லவேண்டும்!’
‘அப்படியா? எந்த மந்திரம் அது?’

‘பாம்பன்சுவாமிகள் அருளிய தங்க ஆனந்தக்களிப்பு என்கிற பாடல்தான் அது. பக்தியோடு இதைச்சொன்னால் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை! விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.’
‘இந்தப்பாடலின் சிறப்பு,இந்தப் பாடல்முழுக்க முருகப்பெருமானைத் தங்கம், தங்கம் என்று வர்ணிக்கிறார் பாம்பன்சுவாமிகள். வாசிக்கும்போதே நமக்குள்அந்தக் களிப்பு வந்துவிடும்.

பாருங்கள்:‘சுயமான தங்கம் இத்தங்கம், சிவசுப்பிரமணியம் எனும் தெய்வத்தங்கம்.’
மற்ற தங்கங்களெல்லாம் எங்கிருந்தோ வெட்டியெடுக்கப்படுபவை. ஆனால் இந்தத்தங்கமோ சுயமானது, சிவசுப்பிரமணியம் என்கிற தெய்வத்தங்கம்தான் அது!‘அந்தரர் வேண்டு ஒரு தங்கம், ஈறுஇல்
அறு சிகரக்கிரி நின்று எழு தங்கம்,
சுந்தர மாச்சுடர் தங்கம், உமை
துங்க மலர்க்கரம் தங்கு ஒரு தங்கம்.’

நம்மைப்போன்ற மனிதர்கள்தான் தங்கத்தை நாடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? வானோர் களுக்கும் தங்கம் தேவைப்படும், உலோகத் தங்கமல்ல, இந்த முருகத் தங்கம்!பெட்டிக்குள் போட்டுவைத்த தங்கத்துக்கு அளவுண்டு, ஆனால், இந்தத் தங்கமோ அளவற்றது, அள்ளஅள்ள வந்துகொண்டே இருக்கும். ஆறு திருமுகங்களின்மீது நின்று எழுகின்ற அற்புதமான தங்கம் இது. அழகானது. பெரிய சுடர்வடிவானது. உமையம்மையின் உயர்வான மலர்க்கரத்திலே தங்குகின்ற தங்கம் இது!

‘வேதத்திலே உள்ள தங்கம், சுத்த
வித்தைசொல் ஆகம நித்தியத் தங்கம்,
நாதத்தின்மேல் உள்ள தங்கம், அந்த
நாதம் கடந்தபின் நாம் அடை தங்கம்.’

இப்போது நாம் பார்க்கிற தங்கங்களெல்லாம் சமீபத்தில் கண்டறியப்பட்டவை. ஆனால், முருகனாகிய இந்தத் தங்கம் மிகப் பழைமையானது. வேதத்திலேயே அதன் பெருமை உணர்த்தப்பட்டிருக்கிறது. தூய வித்தைகளைச் சொல்லும் ஆகமங்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் தங்கமும் இதுதான். நாதத்தின்மேல் உள்ள தங்கமும் இதுவே. அந்த நாதத்தைக் கடந்தபிறகு நாம் அடைகின்ற தங்கமும் இதுதான்!
‘பார்ப்பவர்க்கு இன்புசெய் தங்கம், சிவ
பாக்கியம் எல்லாம் பகுக்கின்ற தங்கம்,
சீர்ப் பர தத்துவத் தங்கம், நிறை
சிற்பர தேஜோமய ஆனந்தத் தங்கம்.’

மற்ற தங்கங்களை அணிந்தவர்களுக்குதான் இன்பம். ஆனால், முருகனாகிய தங்கத்தைப் பார்த்தாலே இன்பம். சிவபாக்கியத்தை நாமெல்லாம் பெறும்படி பகுத்துத்தருகின்ற தங்கம் இது. சிறந்த பரதத்துவமாகத் திகழும் தங்கம் இது. நிறைவான சிற்பரமாகிய, ஒளிமயமான,ஆனந்தவடிவான தங்கம் இது!

‘நினைப்பவர்க்கு இன்புசெய் தங்கம், தொண்டர்
நெஞ்சு எனும் பேழையிலே நிறை தங்கம்,
வினைப்பவம் வெல் பசும் தங்கம், ஞான
விளைவு அற்ற பூமியில் புதைபட்ட தங்கம்.’

முருகத் தங்கத்தைப் பார்க்காவிட்டால்கூடப் பரவாயில்லை, மனத்தில் நினைத்தாலே போதும், இன்பம்தான்.
அது எப்படி சாத்தியம்?

தொண்டர்களின் நெஞ்சம் என்கிற பேழையிலே முருகத் தங்கம் நிறைந்திருக்கிறது. ஆகவே, வேறெங்கும் அவனைத் தேடிச்செல்லவேண்டியதில்லை. நமக்குள் பார்த்தால் போதும், நம் நெஞ்சே கோயில், அங்கே அவன் எழுந்தருளி இன்பம் தருகிறான்.
நாம் செய்த வினைகளால் நமக்குப் பாவங்கள் ஏற்படக்கூடும். அவற்றை வெல்லுவதற்கு இந்தப் பசுந்தங்கம் துணை நிற்கும்.
அப்படியானால், இந்தத் தங்கம் எல்லாருக்கும் கிடைத்துவிடுமா?

வயலிலே விதைக்கிறோம், அதன் பலன் உடனே கிடைக்கிறதா? விளைச்சலான பிறகுதானே அறுவடை செய்து தானியங்களை உண்ணமுடியும்? அதுபோல, ஞானமாகிய விளைச்சல் இல்லாவிட்டால், முருகத் தங்கத்தை அனுபவிக்க முடியாது.ஆகவே, நம் மனமாகிய வயலைப்பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் முருகத் தங்கத்தை முழுமையாகப் பெற்று அனுபவிக்கலாம்.
அது சரி, முருகனை வணங்கினால்உண்மையிலேயே எல்லாம் கிடைக்குமா?

நம்பிக்கையோடு வழிபடுகிறவர்களுக்குக் கிடைக்கும். சும்மா வாதிடுகிறவர்களுக்குக் கிடைக்காது.வெறும் நம்பிக்கை மட்டும் போதாது, மனத்துக்குள் அன்பு வேண்டும். முருகன் மீதுமட்டுமல்ல, முருகபக்தர்கள்மீது, எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தவேண்டும்.அப்படி அன்புசெலுத்தாமல் வறண்டநெஞ்சோடு அலைபவர்களுக்கு இந்தத்தங்கம் கிடைக்காது. அப்படியொரு தங்கம் இருப்பதே தெரியாதபடி அவர்கள் வாழ்வார்கள்.
ஆம், இது பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் தங்கம். அன்பில்லாதவர்களுக்கு அரிதாகிவிடும் தங்கம்.

அன்பர்களுக்குத் தீமைகள் வந்தால், இந்தத்தங்கம் தடுத்துவிடும். பகைவர்கள் வந்தால், அவர்களை வெல்ல உதவும். யாரேனும் அவர்களுக்குச் சாபம்விட்டால்கூட, இந்தத் தங்கத்தின்முன் அவை உதிர்ந்துபோகும். அவர்கள் என்றென்றும் நலமாக வாழ்வார்கள்.இவ்வுலகில் செல்வம் என்றால் பணம், நிலம், நகைகள் என்று ஏதேதோ சொல்கிறோம். அவற்றையெல்லாம் துறந்து வாழும் தவமுனிவர்களுக்கு எது செல்வம்?

முருகத் தங்கம்தான் அவர்களுடைய செல்வம், இதைவிடப் பெரிய செல்வமுண்டா?
‘வாதிகட்கு எட்டாத தங்கம், அன்பு
வறண்டு அலைவோர் அறியா அரும்தங்கம்,
தீது, இகல், சூள் களை தங்கம், தவச்
செல்வர்க்குச் செல்வம் அதாம் திருத்தங்கம்.’

தங்கத்தைப் பெறுவதற்கு ஏதேதோ மந்திரவித்தைகள் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவற்றையெல்லாம் நாம் கற்கவேண்டியதில்லையா?
அந்த மந்திரங்களாலெல்லாம் இந்தத் தங்கத்தை எட்ட முடியாது. பக்தி என்கிற மையைக் கண்ணில் இட்டுக்கொண்டு முருகனைப் பார்க்கவேண்டும், வழிபட வேண்டும். அப்போது இந்த அற்புதத் தங்கம் கிடைக்கும்.

இந்தத் தங்கத்தைப் பெற்றுவிட்டால், வேறெந்தச் செல்வமும் நமக்கு வேண்டியதில்லை. செய்கிற எல்லாவற்றிலும் சிறப்பான வெற்றி நமக்குக் கிடைக்கும். அதனால்தான், சிவசித்தர்கள், யோகிகள் என எல்லாரும் இந்தத் தங்கத்தை மெச்சுகிறார்கள்.

‘அஞ்சனத்து எட்டாத தங்கம், பத்தி
அஞ்சனத்தே எட்டும் அற்புதத் தங்கம்,
செஞ்சயத்தைத் தரு தங்கம், சிவ
சித்தர்கள், யோகிகள் மெச்சிடு தங்கம்.’
இந்தத் தங்கத்தை விலைக்கு வாங்க
முடியுமா? அவசரத்துக்கு விற்க முடியுமா?

ஒரு பொருளை விற்கவேண்டுமென்றால், அதற்கு மாற்றாக இன்னொரு பொருள் இருக்கவேண்டுமல்லவா? அப்படி முருகத் தங்கத்துக்கு இணையாக எதைச் சொல்வது? தனக்கு இணையாக யாருமில்லாதபடி உயர்ந்து ஒளிர்கிற தங்கம் முருகன். தனித்துவமான இந்தத் தங்கத்தின்முன்னே, மற்ற எல்லாம் மங்கிப்போகும். இந்தத் தங்கத்தை அடைந்தவர்கள் வேறு எந்த இன்பத்தையும் பெரிதாக நினைக்கமாட்டார்கள். இது ஒன்றே போதும் என்று மனநிறைவடைந்துவிடுவார்கள். அப்படி எல்லா ஆசைகளையும் மங்கிப்போகவைக்கும் தங்கம் இது.

சிறந்த ஆற்றலையுடைய இந்தத் தங்கம், நாளுக்குநாள் மேம்பட்டுக்கொண்டே இருக்கும். அண்ட பகிரண்டத்திலிருக்கும் எல்லாப் பொருட்களையும் ஈடாகச் சொன்னால்கூட, இதன் சிறப்பு உயர்ந்து நிற்கும், இணையற்ற தங்கம் இது!
‘மாற்றுஇல் உயர்ந்துஒளிர் தங்கம், எல்லாம்
மங்கும்படிக்கு அருள்செய் தனித் தங்கம்,
ஆற்றலின் மேம்படு தங்கம், பகி
ரண்டமெல்லாம் விலைகொண்டு உயர் தங்கம்.’

இந்தத் தங்கத்தின் அளவு என்ன? ஏழெட்டு சவரன் இருக்குமா? முருகத் தங்கத்தை அளவிடும் எண்ணோ அளவுகோலோ இவ்வுலகில் இல்லை. யாராலும் அளவிடமுடியாத பேரருள் தங்கம் அது. மற்ற தங்கங்களையெல்லாம் நெருப்பில் போட்டால் உருகிவிடும். ஆனால், முருகத் தங்கம் என்றைக்கும் உருகாது, அழியாது, அன்பர் மனத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்.

ஒருவேளை, இந்தத் தங்கத்தை யாராவது திருடிக்கொண்டுசென்றுவிட்டால்? கவலைவேண்டாம். முருகத் தங்கத்தை ஒருவராலும் திருட
முடியாது. அன்பால் மட்டுமே இந்தத் தங்கத்தைப் பெறமுடியும்.அளவற்ற தங்கம் எனும்போது, அதை ஒருவர் பெறுவது ஏது? இன்னொருவர் இழப்பது ஏது? அன்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அளவிடமுடியாத தங்கமாக அமர்கிறான் ஆறுமுகன்.

மற்ற தங்கங்களின்மீது ஆசைவைத்தால், நமக்குத் துன்பங்கள்தான் வரும். ஆனால், இந்தத் தங்கமோ, ஆசைப்பட்டவர்களின் துன்பங்களைத் தீர்க்கும். அவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கச்செய்யும்.

‘அளவைக்கு அடங்காத தங்கம், தினம்
அனல் இட்டு உருக்கினும் உருகாத தங்கம்,
களவுக்கு இணங்காத தங்கம், தன்னைக்
காமுறுவார் மிடி தீர்க்கின்ற தங்கம்.’
பக்தர்களுக்கு வரக்கூடிய வேதனைகளை அழிக்கும் தங்கம் இது. தெய்வானையின்
பார்வைக்கு இதமாகப் பிரகாசிக்கிற தங்கம்.

சில தங்கங்களில் குற்றம் இருக்கும் என்பார்கள். ஆனால் இதுவோ, நறுந்தங்கம். இதில் எந்தக் குற்றமும் கிடையாது.
தினைவயலைக் காவல்காத்த கொடி வள்ளி, அந்தக் கொடி படர்கின்ற தங்கம் இது!

‘யாதனையைத் தெறு தங்கம், தெய்வ
யானை விழிக்கு இதமாய் அவிர் தங்கம்,
ஏதுஅணையா நறும் தங்கம், எழில்
ஏனலின் ஓர்கொடிதான் படர் தங்கம்.’

ஞானத்தின் உயர்ந்தநிலை, இந்தத் தங்கம்தான். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் கண்ட தங்கம் இது. நமக்கு எல்லா நலன்களையும் அருளவல்லது.
அரசர்களெல்லாம் தங்கத்திலே முடிசூடிக்கொள்வார்கள். அதுபோல, வானவர்களுடைய சிறந்த கிரீடத்திலே இருக்கும் தங்கம் இதுதான். அதாவது, அவர்கள் முருகப்பெருமானின் திருவடிகளை வணங்கி, அதைத் தங்கள் தலையில் சூடிக்கொள்கிறார்கள்.

அதற்காக, முருகத்தங்கம் வானோர்களுக்குமட்டும் என்று எண்ணிவிடவேண்டியதில்லை. நம்மைப்போன்ற பக்தர்களை வாழ்விக்கும் தங்கமும் அதுதான். உண்மையான பக்தியோடு வணங்குகிற ஒவ்வொருவருக்கும் இந்தத் தங்கம் கிடைக்கும், அவர்களைக் காக்கும், ஈடு இணையற்ற அந்தப் பராபரத்தங்கத்தைப் போற்றுவோம்.

‘ஞானவிண்ஆகின்ற தங்கம், நலம்
நல்கும் திருப்புகழோன் கண்ட தங்கம்,
வானவர் மாமுடித் தங்கம், நம்மை
வாழ்விக்க வந்த பராபரத் தங்கம்.’

பாடல்களையும் விளக்கங்களையும் கேட்ட முதல் நபர் பிரமிப்புடன் அமர்ந்திருந்தார். அவரைத் தட்டியெழுப்பிய இரண்டாம் நபர், ‘என்ன? தினமும் இந்தப் பாடலைச் சொல்கிறீர்களா? தங்கம் கொட்டும்!’ என்று கேட்டு சிரித்தார்.‘சொல்கிறேன் ஐயா,’ என்றார் அவர், ‘அற்பத் தங்கத்தின்மீது கொண்ட ஆசையினால் இத்தனைநாள் மனம் மயங்கியிருந்தேன், பாம்பன் சுவாமிகளின் பாடலைப் படித்தவுடன், நாம் சேர்க்கவேண்டிய உயர்ந்த, இணையற்ற தங்கம் எது என்று புரிந்துவிட்டது. பக்தியால் அந்தத் தங்கத்தைப் பெறுவேன், அதுவே மிகச்சிறந்த ரசவாதம்.’

என்.சொக்கன்