கோயிலும், கோயிலைச் சார்ந்த சமுதாயப் பணிகளும்…



கல்வெட்டு சொல்லும்  கோயில் கதைகள்: கோயிலடி

திருவரங்கம், திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி ஆகிய பேரூர்களுக்குக் கிழக்காக பத்து மைல் தொலைவில் கல்லணையும், அதனையொட்டி காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே திருப்பேர் நகர் எனப்பெறும் கோயிலடியும் திகழ்கின்றன. மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருக்கோயிலானஅப்பாலரங்கன் திருக்கோயிலும், முற்கால சோழர் கோயிலான திருப்புறத்துறை மகாதேவர் கோயிலும் இவ்வூரின் புனிதத்திற்கும், பழம் பெருமைக்கும் காரணமாக விளங்குகின்றன.

முதலாம் பராந்தக சோழன் காலத்து காவிரிக்கரை சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கவை இரண்டாகும் - திருஎரும்பியூர் மகாதேவர் திருக்கோயில் (திருவரம்பூர் சிவாலயம்), திருப்பேர் நகர் திருப்புறத்துறை யுறைவார் திருக்கோயில் ஆகிய  இவை பராந்தக சோழன் மற்றும் கண்டராதித்த சோழர் ஆகியோரின் உயர்நிலை அலுவலர்களுள் ஒருவராகத் திகழ்ந்த கிள்ளியூர் நாட்டு சிறுதாவூர் எனும் ஊரினைச்சார்ந்த வீரநாராயணனான செம்பியன் வேதிவேளார் எனும்  கொடையாளரால் எடுக்கப்பெற்றவையாகும்.

கோயில் எடுப்பது மட்டும் இறைத்தொண்டு எனக் கருதாமல் ஆலய ஊழியர்களின் வாழ்வாதாரமும் முக்கியமெனக் கருதி அறத்தொண்டுகளைப் புரிந்தவர் அவர். கல்வெட்டுகள் சொல்லும் கோயிலடி கோயில்களின் பெருஞ்சிறப்புகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இனிக் காண்போம்.

‘‘கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கைக் கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’’ என்பதுதொண்டரடிப் பொடியாழ்வார் திருவாக்காகும்.

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு பேராறுகளுக்கு இடையே கிடந்த திருமாலை, ஜலசயனப் பெருமாளாகவே நம் முன்னோர்கள் கருதினர். அதனால்தான் காவிரிக்கரையில் அமைந்த பல கோயில்களில் திருமால் கிடந்த கோலப் பெருமாளாகவே காட்சி நல்குகின்றார். கர்நாடக மாநிலத்து ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சோழ நாட்டு திருவரங்கம், உத்தமர் கோயில்,அன்பில், புள்ளபூதங்குடி, திருப்பேர்நகர் (கோயிலடி) திருஆதனூர், சிறுபுலியூர், கபிஸ்தலம், வெள்ளியங்குடி, குடந்தை, இந்தளூர், திருத்தெற்றியம்பலம் ஆகிய மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் அனைத்திலும் திருமால் கிடந்த கோலத்தில்,  ஜலசயனப் பெருமாளாகவே காட்சி நல்குகின்றார். இவற்றில் கோயிலடி பெருமானை அப்பக்குடத்தான் என்றழைப்பர். அப்புள் (நீரினுள்) கிடந்தான் என்பதே அவர்தம் பழம்பெயர். அப்பெயர் காலப்போக்கில் அப்பக்குடத்தான் என மருகிவிட்டது.

காவிரியின் ஜலசயனப்பெருமாள் கோயில்கள் வரிசையில் பஞ்சரங்க தலங்கள் என ஐந்து கோயில்களை மிகு புனிதமுடைய தலங்களாக வைணவர்கள் போற்றுவர். ஆதிரங்கம் எனும் ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கம் எனும் திருவரங்கம், அப்பாலரங்கம் எனும் கோயிலடி, வடரங்கம் எனும் கும்பகோணம், (சிலர் இதனை சீர்காழி வடரங்கம் என்றும் குறிப்பர்) பரிமளரங்கம் எனப்பெறும் திருஇந்தளூர் ஆகிய இடங்களில் திகழும் திருமால் கோயில்கள்தான் பஞ்சரங்க க்ஷேத்திரங்களாகும். அப்பாலரங்கத்தில் கிடந்த கோலத்தில் அப்பக்குடத்துடன் பெருமாள் திகழ்வதால் அவரை அப்பக்குடத்தான் என்ற திருநாமத்தால் போற்றுவதோடு, நாளும் அப்பமுது அவருக்கு நிவேதனம் செய்யப் பெறுவது இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும்.

இது மாடக்கோயிலாக காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. தாயார் இத் தலத்தில் கமலவல்லி என்ற திருநாமத்தோடு விளங்குகின்றார். பெரியாழ்வார்-2, திருமழிசையாழ்வார்-1, திருமங்கையாழ்வார்-19, நம்மாழ்வார் - 11 என முப்பத்து மூன்று பாசுரங்கள் இத்தலத்துப் பெருமானைப் போற்றி நிற்கின்றன.

அப்பக்குடத்தான் கோயிலில் சோழர், பாண்டியர், விஜயநகரர் போன்ற அரச மரபினர் ஆட்சிக்காலங்களில் பலரும் அளித்த கொடைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் பல இடம் பெற்றுள்ளன. அவை அப்பாலரங்கனை ‘திருப்பேர் நகரான்’ என்றும், தாயாரை ‘திருப்பேர் நகரான் நாச்சியார் பரிமளவில்லியார்’ என்றும் குறிப்பிடுகின்றன.

விஜயநகர அரசு கால கல்வெட்டொன்றில் பரிமளவில்லியார்க்கும் செல்வருக்கும் (பெருமாளுக்கும்) சந்தி பூஜைகளுக்காக இரண்டு  தூப பாத்திரம், செப்புக்குடம், மணி, திபஸஹஸ்ரதாரை, திருவந்திக்காப்புக் குடம், திருகுத்துவிளக்கு, படிக்கம், பஞ்சபாத்திரம், பாத்திர வேதிகை, தளிகை சமர்ப்பனை போன்ற பூஜா பாத்திரங்கள் அளித்தமையை பட்டியலிட்டு கூறுகின்றது.

சோழர் கல்வெட்டுகளில் திருச்சடை முடி எனும் அருகிலுள்ள ஊரும், பிற்கால கல்வெட்டு ஒன்றில் வளம் பக்குடி குமார தேவராயன் என்பான் கடம்பங்குடி என்ற ஊரையும் திருப்பேர் நகரனான பள்ளிகொண்ட பெருமாளுக்கு திருவிடையாட்டமாக அளிக்கப் பெற்றமையை விவரிக்கின்றன. விக்கிரம சோழ தேவர் கல்வெட்டொன்றில் காலம் பொல்லாததாய் ஊர் அழிந்து குடிமக்கள் எல்லாம் ஊரைவிட்டு ஓடிப்போன ஒரு சோதனையான காலத்திற்குப் பின்பு வாசுதேவன் தரபட்டன் என்பவர் முயற்சியால் மீண்டும் ஊர் மீட்சி பெற்றதும், சிவாலயத்திற்கும், வைணவ ஆலயத்திற்கும் அவர் செய்த அருந்தொண்டுகள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

கோயிலடி சிவாலயம் தற்காலத்தில் திவ்ய ஞானேஸ்வரர் திருக்கோயில் என்ற பெயரில் அழைக்கப்பெறுகின்றது. ஆனால் இவ்வாலயத்திலுள்ள சோழர் கால கல்வெட்டுகள் அனைத்தும் பாண்டி குலாசனி வளநாட்டு எயிநாட்டு பிரமதேயம் திருப்பேர்த் திருப்புறத்துறை மகாதேவர் திருக்கோயில் என்றே குறிப்பிடுகின்றன.

முற்காலச் சோழர் கலைப் பாணியில் அழகுடன் அமைந்திருக்கும் இக்கற்றளியின் கருவறை சுவரில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், ‘‘எயிநாட்டு பிரமதேயம் திருப்பேர் திருப்புறத்துறைவார்க்குத் திருக்கற்றளி எடுப்பித்தசெம்பியன் வேதிவேளான்...’’ என்று குறிப்பிடுவதால் இக்கோயிலை கற்கோயிலாகப் புதுப்பித்தவர் அவர் என்பது புலனாகின்றது.

 அருகில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கிளியூர் நாட்டு சிறுதவூருடையான் வேளான் வீரநாராயணனான செம்பியன் வேதி வேளான் கற்றளி எடுப்பதற்காகவும், அக்கற்றளியில் எட்டு பேர் மத்தளம், பறை போன்ற இசைக்கருவிகளை இசைக்கவும் அவர்களுக்கு ஜீவிதமாக நிலம் அளிப்பதற்காக பலரிடமிருந்து விலை கொடுத்து நிலங்கள் வாங்கியதையும் விவரிக்கின்றது.

செம்பியன் வேதிவேளான் எடுத்த கற்றளியான கோயிலடி சிவாலயம் தற்போதும் கட்டுக்குலையாமல் அப்படியே கல்வெட்டுச் சாசனங்களையும், அழகுடைய கோஷ்ட சிற்பங்களையும்,  தாங்கியவாறு கம்பீரமாக நிற்கின்றது. கோஷ்ட சிற்பங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, இடபத்துடன் அர்த்தநாரி, பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வத்திருமேனிகள் இடம் பெற்றுள்ளன.

தென்புற கோஷ்டத்தில் இடம் பெற்றிருந்த பேரழகு வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு கயவர்கள் களவாடியமையால் தற்போது புதிய திருமேனி ஒன்றினை அங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். மேலே குறிப்பிட்ட கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் செம்பியன் வேதி வேளாரால் அமைக்கப்பெற்றவையாகும். கருவறையில் திருப்புறத்துறை மகாதேவர் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார். சிவாலயங்களுக்குரிய எல்லா பரிவாரங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன.  ஒரு பரிவாரக்கோயிலில் பல்லவர் கால சப்தமாதர்கள் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

விமான மண்டபத்தில் இடம் பெற்றுள்ள தூண்களில் மூன்றாம் நந்திவர்மனின் 18ம் ஆண்டு கல்வெட்டும், நிருபதுங்க பல்லவனின் 10ம் ஆண்டு முதல் 22ம் ஆண்டு முடிய பல ஆண்டுகளில் வெட்டப்பெற்ற கல்வெட்டுகளும் காணப் பெறுவதாலும், பல்லவர் கால சப்தமாதர்களான பிராம்ஹி,  வைஷ்ணவி, மாகேஸ்வரி, வாராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி என்ற தாய்மார் சிற்பங்கள் காணப் பெறுவதாலும் இச்சிவாலயம் மிகவும் தொன்மையான பல்லவர்கால சிவாலயம் என்பதை அறிய முடிகிறது.

கல்லணை ஓரத்தில், காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் காவிரி வெள்ளத்திற்கு பலமுறை இலக்காகி அழிவுகளை சந்தித்துள்ளது. அப்படித்தான் பல்லவர் கால பழைய சிவாலயம் செங்கற்தளியாக இருந்து அழிவுகட்கு உட்பட்டமையால் பின்னர் சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் வீரநாராயணனான செம்பியன் வேதி வேளார் கற்கோயிலாகப்புதுப்பித்துள்ளார்.

செம்பியன் வேதிவேளார் பராந்த சோழன் காலத்தும், பின்பு கண்டராதித்த சோழர் காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகத்் திகழ்ந்துள்ளார். அவர் சிவஞானச் செம்மல் கண்டராதித்த சோழர் காலத்தில்தான் திருப்பேர் நகரான கோயிலடி சிவாலயத்தையும், திருஎரும்பியூர் (திருவரம்பூர்) சிவாலயத்தையும் கருங்கற்கோயிலாகப் புதுப்பித்தமையை இவ்விரு கோயில்களிலும் உள்ள கல்வெட்டுச் சாசனங்கள் உலகுக்கு அறிவித்து நிற்கின்றன. கோயில் எடுப்பதோடு மட்டும் அவர் பணி நிற்காமல் ஆலய ஊழியர்களையும் அவர் காத்து அரும்பணி புரிந்துள்ளார் என்பதை இவ்விரு கோயில் கல்வெட்டுகளும் எடுத்துக்கூறுகின்றன.

திருஎரும்பியூரில் உள்ள கல்வெட்டுகளில் அக்கோயிலில் உடுக்கையோடும் தாளத்தோடும் திருப்பதிகம் (தேவாரம்) விண்ணப்பிக்க நால்வரை நியமித்ததோடு அவர்களுக்கு ஜீவிதமாக நிலமும் அளித்துள்ளார். அக்கோயிலில் நாள்தோறும் 15 ஆலய ஊழியர்கள் உணவு அருந்த நிலம் அளித்துள்ளார்.  ஊர் சபையோரிடமிருந்து  விலை கொடுத்து நிலம் வாங்கி கோயில் ஊழியர்கள் வாழ்வதற்குரிய வீடுகளை மடவளாகத்தில் அமைத்துத் தந்துள்ளார். கோயில் நிலங்களைச் சாகுபடி செய்வதற்கு மதகோடு கூடிய வாய்க்கால்களை புதிதாக அமைத்துத் தந்துள்ளார்.

அதற்காக நிலக்கொடையும் அளித்துள்ளார். இவர் அரசுக்கு ஈடாகப் பணம் கொடுத்துச் சில நிலங்களுக்கு வரிபெறும் உரிமையைப் பெற்று அத்தொகையால் உள்ளூர் குளத்தை ஆண்டு தோறும் பராமரிப்பதற்காக வழங்கியுள்ளார். திருஎரும்பியூரில் செய்தது போன்றே கோயிலடி சிவாலயத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும், ஊருக்கும் அவர் செய்த அறச்செயல்கள் கோயிலடி கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்று காட்சி நல்குகின்றன.

பழங்கோயில்களை கற்கோயில்களாக புதுப்பித்த பணியோடு நிற்காமல் ஆலய ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் எனப் பல திறத்தாரையும் வாழ வைத்து, பயனற்ற நிலங்களை விலை கொடுத்து வாங்கி அவற்றை திருத்தி, பாசன வசதி செய்து கொடுத்து அவற்றை ஆலய ஊழியர்களுக்கே ஜீவிதமாக அளித்து அறச்செயல்கள் செய்ததோடு, நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்தி ஊருக்குப் பயன்படும் குளங்களுக்கு பாசன வசதியும் வடிகால் வசதியும் செய்து கொடுத்தமையை அவர் தம் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. வெறுமே கோயிலை மட்டும் நிர்மாணித்துவிட்டு அமைந்துவிடாமல், அது சார்ந்த பல சமுதாயப் பணிகளையும் உயரிய நோக்கோடு மேற்கொண்டு, அவற்றை சிறப்புற நிறைவேற்றியும் வந்திருக்கிறான் இந்த மன்னன்.அதனாலேயே செம்பியன் வேதி வேளாரின் புகழ் அக்கோயில்கள் உள்ளளவும் நிலைக்கும் என்பது உண்மை.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்