மலைபோன்ற துன்பங்களும் பனிபோல விலகிவிடும்!



ஏலகிரி

வேலூர் மாவட்டத்தில் அமைந்த சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையின் மிக உயரமான பகுதியில் வேலவன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிலிருந்து ஏலகிரி மலையின் இயற்கை அழகை ரசிக்க முடியும்.  இந்த கோயிலுக்குச் செல்ல அழகான மலைப்படிக்கட்டுகள் அமைந்துள்ளன. சுமார் எண்பது படிக்கட்டுகளைக் கடந்தால் இத்திருக்கோயிலை அடைய முடியும். படிக்கட்டுகளும், கோயிலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறிப்பிடவேண்டிய சிறப்புகள்.

படிக்கட்டுகளைக் கடந்து கோயிலை அடைந்ததும் முதலில் விநாயகர் சந்நதியைக் காணலாம்.  முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை வழிபட்டு அருகில் அமைந்துள்ள வேலவன் சந்நதிக்குச் சென்று வேலவனை வழிபடுவது இந்த ஆலய மரபு. ஒரு சிறிய சந்நதியில் முருகப் பெருமான் வேலவன் என்ற பெயரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

மலைபோல் வரும் துன்பங்கள் யாவும் பனிபோல் விலகிவிடும், இந்த வேலவனின் அருட்பார்வையால்.  வேலவன் சந்நதிக்கு எதிரே ஒரு பீடத்தில் மயிலும் மயிலின் கால்களுக்கு இடையில் ஒரு பாம்பும் அமைந்துள்ளன. இதன் பின்னால் பலிபீடம் இருக்கிறது. பலிபீடத்தின் பின்னால் மூன்று வேல்கள் காணப்படுகின்றன.இக்கோயிலில் நவகிரக சந்நதியும் உண்டு.

மலை அடிவாரத்தில் பீமனின் மகனான கடோத்கஜனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கோயிலிலும் கடோத்கஜனுக்கு சிலை அமைக்கப்படவில்லை என்பதும் இக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.இந்த கோயில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து திறந்துள்ளது. ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வேலவனை தரிசித்து அருள் பெற வேண்டும் என்பதற்காக இத்திருக்கோயில் இவ்வாறு காலை முதல் இரவு வரை தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கார் முதலான வாகனங்கள் கோயிலுக்கு அருகில் செல்லும் வகைலில் இந்த சிறிய மலைமீது தனிப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏலகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   

வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் பாதையில் வேலூரிலிருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் ஏலகிரி அமைந்துள்ளது.  திருப்பத்தூரிலிருந்து ஜோலார்பேட்டை வழியாக 254 என்ற எண்ணுள்ள பேருந்து ஏலகிரிக்குச் செல்லுகிறது. ரயிலில் சென்றால் ஜோலார்பேட்டையில் இறங்கி அங்கிருந்து ஏலகிரியை சுலபத்தில் அடையலாம்.  ஏலகிரியில் அத்தனாவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஏலகிரித் தாயார் சமேத ஸ்ரீகல்யாண வேங்கடரமண ஸ்வாமி திருக்கோயிலையும் தரிசிக்கலாம்.

-ஆர்.வி.பதி