மகோன்னதம் அருள்வார் மகாதேவர்



திற்பரப்பு

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. பலர் சுற்றுலா புறப்பட்டிருப்பீர்கள். அப்படிப் போகும்போது நேரத்தை உல்லாசமாக, கேளிக்கையாக அனுபவிப்பதோடு, தெய்வீகமாகவும் செலவிடலாம் - போகும் இடங்களில் உள்ள கோயில்களை தரிசித்துவிட்டு வரலாம். எடுத்துக்காட்டுகளாக, இங்கே சில கோயில்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். கோடை விடுமுறையில், சுற்றுலா செல்ல இயலாதபடி வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள், இந்தக் கோயில்களைச் ‘சுற்றிப் பார்த்து’ இறையருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரத்தின் அருகில் திற்பரப்பு அருவி உள்ளது. இங்குதான் கஷ்டங்களைப் பொசுக்கும் திற்பரப்பு மகாதேவர் ஆலயம் உள்ளது.  மாத்தூர் தொட்டி பாலம் உள்பட பல அபூர்வ  இடங்களைக் காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு அருவி ஒரு வரப்பிரசாதமாகும்.திற்பரப்பு அருவியில் நீராடி விட்டு அருகில் இயற்கையும் தெய்வீகமும் ஆட்கொள்ளும் மகாதேவர் ஆலயம் சென்று வழிபடுவது இங்கு வரும்பக்தர்கள் கடைபிடிக்கும் மரபாகும்.

சிவாலய ஓட்டத்தில் இடம்பெறும் கோயில்களில் மூன்றாவது, திற்பரப்பு சிவன் கோயில். இக்கோயிலை இயற்கைச் செழிப்பு வனப்புடன் சூழ்ந்திருக்கிறது. கோயிலின் முன்னால் வற்றாது ஓடுகின்ற கோதையாறு நமது புற அழுக்கை கழுவி, நீக்கிப் புத்துணர்ச்சி தருகிறது.
அழகுமிகு சோலையின் நடுவே மலைகளால் சூழப்பட்ட  நிலப்பரப்பில் சிவபெருமான் கோபத்தின் காரணமாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். மேற்கு தரிசனம் உக்கிரம் வாய்ந்தது என்பார்கள். ஆனால் இந்த ஆலயம் மகாதேவரின் ஆசியும், அவரைச் சுற்றி அமைந்துள்ள இயற்கைக் காட்சிகளுடன், பொங்கு புனலருவியின் குளிர்ச்சியையும் ஒன்று கூட்டி நாடி வருவோர் உள்ளத்தில் அமைதி அளிக்கின்றன.

தென்னகத்தில் தச வீரட்டத் தலங்கள் என அழைக்கப்படும் மேற்கு பார்த்த சிவாலயங்களில்  இதுவும் ஒன்று. பஞ்சாக்ர தலம் என திற்பரப்பு மகாதேவர்  ஆலயத்தினை சிவபக்தர்கள்கொண்டாடுகிறார்கள். திற்பரப்பு, குமரி மாவட்டத்தின் குற்றாலம் என அழைக்கப்படுகிறது.

கோயில் தோன்றிய வரலாறு மிகச்சிறப்பானதாகும். தன் நாதன் சிவபெருமான், தன் தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்பதற்காக அவன் நடத்திய யாகசாலைக்குள் நுழைந்தாள் உமாதேவி.

அப்போது தன் மகளையும் அவமதித்தான் தட்சன். இதைப் பொறுக்கமாட்டாமல், உடனே கைலாயம் வந்த தேவி சிவனிடம் முறையிட்டார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து  வீரபத்திரனை தோற்றுவித்தார். உமாதேவியும் காளி எனும் உக்கிர அவதாரம் எடுத்தாள். இருவரும் நேராக சென்று தட்சன் நடத்திய யாகத்தினை அழித்தனர். ஆனாலும் அவர்கள் கோபம் தீரவில்லை. எனவே தங்கள் கோபம் தணிய விசாலபுரம் என்ற திற்பரப்பு தலத்துக்கு வந்து தியானத்தில் அமர்ந்தனர்.

அவர்களுக்கு ஈசன் தரிசனம் தந்து ஆசுவாசப்படுத்தினார். அவ்வாறு ஈசன் எழுந்தருளிய ஆலயம்தான் திற்பரப்பு மகாதேவர் ஆலயம். சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த வீரபத்திரன் அதே உத்வேகத்துடன் சிவனோடு ஐக்கியமாகி விட்டதால் இங்கே சிவபெருமான் கோபாக்கினியாகவே இருந்தார் என்றும்,   விசாலபுரம் என அழைக்கப்படும் கோதையாறு பாயும் இவ்விடத்தில் அமர்ந்ததால் அவருடைய உஷ்ணம் தணிந்து கனிவு மிக்கவராக ஆனார் என்றும் புராணம் சொல்கிறது. இப்போது பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் தயாபரனாகத் திகழ்கிறார்.

வீரபத்திரன் சிவனுடன் ஐக்கியமாகி விட, காளி அவதாரம் எடுத்த உமாதேவி, தற்போது அருவி உள்ள இடத்தில் ஒரு குகையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பதாக ஐதீகம். ஒருகாலத்தில் மகாதேவர் கோயிலிலிருந்து பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்ல சுரங்க பாதை இருந்திருக்கிறது என்றும் ஆனால் தற்போது இந்த பாதை அடைக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

  இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையானது என்று சொல்லப்படுகிறது. 587ம் ஆண்டு  இப்பகுதியில் கோலோச்சிய ஆய் மன்னர் இந்த ஆலயத்தைப் பராமரித்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது. மார்த்தாண்ட மன்னர் இக்கோயிலில் தினமும் வந்து பூஜை செய்துள்ளார். இந்த பூஜைக்குப் பிறகுதான் அவர் தனது அன்றாட அலுவல்களில் ஈடுபடுவார். அவரால் வர இயலாத நாட்களில், நேரம் தவறாமல் பூஜை நடப்பதும், அப்படி பூஜை முடிந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதும் வழக்கமாக இருந்தது. இந்த பட்டாசு ஒலியைக் கேட்ட பின்னரே அந்த நாட்களில் மன்னர் தம்   அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்.

இக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது. முகமதியர்கள் படையெடுப்பின்போது, அவர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இங்கிருந்த தங்க விக்கிரகம் ஏழு மைல் தொலைவிலுள்ள திருவட்டாற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கே ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் உள்ள கருவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டதாகவும் அரசு ஆவணக் குறிப்பு ஒன்று சொல்கிறது.

திருவாங்கூர் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு செப்புப் பட்டயத்தையும், நான்கு கல்வெட்டுகளையும் இக்கோயிலில் கண்டெடுத்துள்ளனர். அப்பட்டயம் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதில், அப்பகுதியை ஆண்ட ஆய் மன்னர்களுக்கும், மலையின் வடபால் இருந்த பகுதிகளை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் இடையே இருந்த அரசியல் தொடர்புகள்குறிப்பிடப்பட்டுள்ளன.இக்கோயில் கி.பி. 13ம் நூற்றாண்டில்
பிரசித்தி பெற்ற  சிவாலயமாக திகழ்ந்திருக்கிறது. பல்வேறு பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து வணங்கி
சென்றிருக்கிறார்கள்.

கொல்லம் அண்டு 407, அதாவது கி.பி. 1232 வருடத்திய கல்வெட்டு ஒன்று மதுரையில் வாழ்ந்த ஒருவர் திற்பரப்பிற்கு வந்து மகாதேவரை வணங்கி, கோயிலுக்கு ஒரு நந்தா விளக்கைக் காணிக்கையாக அளித்ததாகவும்   தகவல்தெரிவிக்கிறது.வேறு கல்வெட்டுகளில் ஒன்று மலையாள லிபியிலும் மற்ற இரண்டும் நாகர் லிபியிலும் உள்ளன. ஆற்றின் கரையிலுள்ள கல் மண்டபத்தைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

கி.பி. 1884ம் ஆண்டின் மலையாளக் கல்வெட்டு, அப்போது திருவிதாங்கூரை ராமசர்ம மகாராஜா ஆண்டு வந்தார் எனத் தெரிவிக்கிறது.
கி.பி.1880 - 1885 வரை திருவிதாங்கூரை ஆண்டு வந்த விசாகம திருநாள் ராமவர்ம மகாராஜாவின் கற்சிலை ஒன்று ஆற்றிலுள்ள மண்டபத்தில் அமைந்திருப்பதால் கல்வெட்டு குறிப்பிடுவது இவரைத்தான் எனத் தெரிந்து கொள்ள முடிகிறது.


தாராசுரம்

சிறப்பான  வாழ்வளிக்கும் சிற்பக்கோயில்

அது புராண காலமான திரேதாயுகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அமராவதி எனும் தேவலோக நகரத்தின் வாயிலில் இந்திரனின் வருகைக்காக காத்திருந்தனர். தொலைதூரத்தே காண்போரின் கண்கள் கூசுமளவிற்கு ஒளி மிகுந்த, பாலினும் தெள்ளிய வெண்மையான ஐராவதம் எனும் யானை அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தது. இந்திரனே தம் மீதுதான் அமர வேண்டியிருக்கிறது எனும் ஆணவம் அதன் அங்க அசைவுகளில் தெரிந்தது. இந்திரனும் அதன் மத்தகத்தை தட்ட, அதன் கர்வம் உச்சியைத் தொட்டது. இந்திரனும் அத்தகையதோர் அபூர்வ யானைக்குத் தான் சொந்தக்காரனாக இருப்பதற்கு கர்வப்பட்டான்.

தவவலிமை மிக்க துர்வாசர், ஈசனின் பூசையிலிருந்து எழுந்தார். பக்தி எனும் நாரில் நெருக்கமாய் தொடுக்கப்பட்டிருந்த எருக்கம்பூ மாலையை  ஈசன் உவந்து அருள, அதை மனமுவந்து பெற்றுக் கொண்டார் துர்வாச மகரிஷி. தொலைதூரம் பயணித்து அமராவதியின் எல்லையை அடைந்தார். இந்திரன் அவரை வரவேற்றான். தேவர்கள் துர்வாசரை இரு கரம்கூப்பி தொழுதார்கள். ஆனால் ஐராவதம் தன் தகுதிக்கும் மீறி ஆரவாரிப்பதை கவனித்தார் மகரிஷி. கோபம் கொண்டார்.

யானையின் மதச்செருக்கு விஷமாய் மேலேறியது. பித்துப்பிடித்துப் பிளிறியது. எதிரிலுள்ளோரை ஏளனமாய் பார்த்தது. ஆனால், தேவர்கள் வெண்யானை ஏதோ விளையாடுகிறது என்று விட்டார்கள். துர்வாசர் யானையின் ஆணவத்தை துண்டாட, அதனருகே வந்தார். யானையையும், இந்திரனையும் உற்றுப் பார்த்தார். அழகிய பின்னலாக நெய்யப்பட்டிருந்த அந்த எருக்கம்பூ மாலையை இந்திரனிடம் நீட்டினார்.

அவன் வெண்யானையான ஐராவதத்தின்மீது அமர்ந்தபடியே அலட்சியமாக வாங்கினான். இன்னும் அலட்சியமாக அதை யானையின் தலைமீது போட்டான். சட்டென்று தன்னை யாரோ அழுத்துவது போன்று யானை உணர்ந்தது. ஆத்திரமாக துதிக்கையை வளைத்து பூமாலையைப் பற்றியது. அது ஈஸ்வரப் பிரசாதம் என்று தேவர்களில் பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால், ஐராவதமோ அதை வானத்தில் சுழற்றி காலடியில் வைத்து கசக்கி எறிந்தது. துர்வாசர் கோபத்தில் தணலானார்.

உடனே வெண்யானை தன் ஒளியிழந்து, களையற்று கருமையாக மாறியது. தும்பிக்கை வற்றிய விறகாய் மெலிந்தது. கரும்பெரும் உடல் சிறுத்து செதில் செதிலாய் தோல் உரிந்து கோரமாகிச் சரிந்து,  துர்வாசரின் திருவடிகளில் வீழ்ந்தது. இந்திரன் இடிந்து போயிருந்தான். எழக்கூட வலிமையற்று கால் தடுமாறி விழுந்தான்.

‘‘ஐராவதமே, இந்திரன் உன் மீதமர்ந்ததாலேயே செருக்குகொண்டு மகேசனின் மாலையை மதியாது மிதித்தாய். எனவேதான் எவரும் காணச் சகியாத இவ்வுருவை பெற்றிருக்கிறாய். நீ பூலோகத்தில் தனியே திரிந்து கர்வத்தை உதறி, ஆணவம் அழித்து வா,’’ என்றார். ஐராவதம் துர்வாசரை நோக்கி ‘‘மகரிஷியே, பூலோகத்தில் என் பாவம் தீர்க்கும் பரமன் எங்குள்ளார்?’’ என்று துர்வாசரின் திருவடிகளில் தம் துதிக்கையைப் பிணைத்துக் கதறியது. கண்ணீரால் அவர் திருப்பாதங்களை நனைத்தது.   

துர்வாசர் கருத்த அந்த ஐராவதத்தை கருணையுடன் பார்த்தார். அருகே இருந்த இந்திரனையும் பார்த்தார்.‘‘இந்திரா, இந்த யானை நீ அலங்காரமாய் வலம் வருவதற்கு மட்டுமே. ஆனால், நீ அதன் அகங்காரத்தை வளர்த்து அதை மதங்கொள்ளச் செய்கிறாய். அதன் கர்வத்தை அடக்காமல், அதை தீயிலிட்ட நெய்யாய் பெருக்குவதுதான் மிகப் பெரிய ஆணவம். விவேகமுள்ள நீதான் சிவநிந்தனைக்கு மூல காரணம். வெகு விரைவில் உனக்கும் அது புரியவரும்’’ மகரிஷி அவன் மனதை கண்ணாடிபோல் பிரதிபலித்துக் காட்டினார்.

ஆணவத்தை வாகனமாகக் கொண்ட எந்தத் தலைவனும் தலையெடுத்ததில்லை என்பதை ஐராவத யானையை முன்நிறுத்தி ஈசன் தன் விளையாடலை தொடங்கினார். அமிர்த கும்பத் தலமான கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பல்வேறு தலங்களுக்கு இந்திரனும், ஐராவதமும் பயணம் செய்து சிவனை வழிபட்டு தமது சாபம் நீங்கப் பெற்றார்கள்.

அப்படிப்பட்ட ஐராவதம், தாராசுரம் தலத்திற்கு வந்து தொழுததால் இறைவன் பெயர் ஐராவதீஸ்வரர் என்றானது. காவிரி பாயும் சோழவள நாட்டில் கோயில்கள் அனைத்திற்கும் ஊற்றுக் கண்ணாய் விளங்குவது கும்பகோணம் நகரமாகும். இவ்வூரின் தென்புறம் அரசலாற்றின் தென்கரையில் தாராசுரம் ஐராதீஸ்வரர் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. மாமன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பெருமையுடையது இக்கோயில்.

நூறு கோயில்களுக்கு சென்று அதன் சிற்பங்களின் பேரழகை பார்த்து ரசிக்கும் அனுபவத்தை, இந்த ஒரே கோயிலுக்குள் கொண்டு வந்து பிரமிப்பூட்டியிருக்கிறார்கள், சோழர்கள். பல்லாயிரக்கணக்கான சிற்பங்களை பலப் பரிமாணங்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். பிராகாரத்தில் எந்த ஒரு சிறு கல்லையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையுமே சிற்பமயமாக்கியிருக்கிறார்கள். ஆயிரம் முறை அவற்றைக்கண்டாலும் சிறிதளவும் ஈர்ப்பு குறையாது.

முப்புறம் எரித்த திரிபுராந்தகனின் கதையை கண்முன் நிறுத்தும் பாங்கு அற்புதம். யானைத் தோலை உறிக்கும் ஈசனின் கஜசம்ஹார மூர்த்தி சிற்பம் மிரளவைக்கிறது. அடி முடி தேட வைக்கும் லிங்கோத்பவர் ஆச்சரியப்படுத்துகிறார். திருவிளையாடல்கள் புரிந்த சிவனாக, நாயன்மார்களுக்கு காட்சி தரும் சிவனாக, எங்கும் சிவனாக எதிலும் சிவனாக, சிற்பக் கொத்துகளாய் காணப்பெறும் பெருமை வாய்ந்தது இக்கோயில்.

கோயிலின் முன் உள்ள ரத மண்டபத் தூண்களோ ஒவ்வொன்றும் தனித்தனிக் கதைச் சொல்லும் கருவூலமாகத் தோன்றுகின்றன. ராமாயண, மகாபாரத கதைகள், ரதி-மன்மதன் கதை, பரத நாட்டிய கர்ணங்கள், சிவபுராணக் கதைகள் என்று எண்ணிலடங்கா கதைகளை சொல்கின்றன சிற்பங்கள். ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் சிற்றோவியங்கள் போல் நூற்றுக்கணக்கில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள். பார்த்துப் பார்த்துப் பிரமிக்கவும் பரவசப்படவும் வைக்கும் சிறு சிறு பிரமாண்டங்கள்!

ஒவ்வொரு கோயிலிலும் எதாவது ஒரு அம்சம் அரிதான அற்புதமாகத் திகழும். ஆனால், அரிதும் அழகும் நிரம்பிய சிற்பங்களை இந்த ஒரே ஆலயத்திற்குள் கண்கள் கொள்ளா அளவுக்குக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமான இக்கோயிலை தொல்பொருள் துறையினர் அழகு வாய்ந்த இதன் பழமையை பாதுகாத்து வருகின்றனர். தமிழின மரபுகளை அடையாளப்படுத்திக் காட்டும் இக்கோயிலின் கட்டிட வடிவமைப்பு, சிற்பச் செழுமை, விண்ணைச் சுட்டும் விமான அமைப்பு போன்ற பாரம்பரியங்களை, மரபு அடையாளச் சின்னங்களாக ‘யுனெஸ்கோ’ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் தாஜ்மஹால், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரத்து பிரகதீஸ்வரர் கோயில் போன்று இக்கோயிலும் பாரம் பரிய மரபு அடையாளச் சிறப்பு பெற்றுள்ளது.

கோயிலின் நுழைவாயினுள் செல்வதற்கு முன்பே பலிபீடத்திற்கு ஏறும் ஏழு கருங்கற்படிகளை, ‘சரிகமபதநி’ எனும் ஏழுநாத படிகளாக வடிவமைத்துள்ளது, அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த ஏழு ஸ்வர படிகள் இசை அதிர்வுகளை ஏற்படுத்துவதை உணர்ந்து, அனுபவித்து, சிலிர்க்கலாம். கீழ்வாயிலுள் நுழைந்தால் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கொடிமரம் நம்மை அன்போடு அழைக்கிறது. கோயிலின் விமான தோற்றம், இருபுறமும் யானைகளும், குதிரை களும் பூட்டிய ரதமாய் தோன்றுகிறது.

அக்காலத்தில் மூர்த்தி சிலை, ராஜகம்பீரத்துடன், நாதஸ்வர இசையின் மல்லாரி முழக்கத்துடன் வெளிவரும் அழகு, யானைபோல், கஜ நடையிட்டும், சிங்கம்போல் சிம்ம நடையிட்டும், சுவாமியை தூக்கி உலாவரும் காட்சி தம் கண்முன் நிற்பதாக இன்றும் பலர் நினைவு கூறுகின்றனர்.
தட்சிணாமூர்த்தி ஆலமர விருட்சத்தின் கீழ் அமர்ந்த கோலத்துடன் சின் முத்திரை காட்டி காட்சி தருகிறார். சுருள் சுருளான தலைமுடி, அகன்று விரிந்த முகபாவப் பேரழகுடன் அருள் பாலிக்கிறார் இவர். எமபயமென்னும் மரண பயத்தை நீக்கி மங்களம் பொங்க மகிழ்ச்சியை தருகிறார். இந்த குருபகவானுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாலாபிஷேகம், தேனாபிஷேகம் என்று செய்து அகமகிழ்கிறார்கள் பக்தர்கள்.

இதுபோல் தென்புறம் எழுந்தருளியுள்ள சரபேஸ்வரர் பக்தர்களின் மனச் சங்கடங்களை நீக்குவதாக ஐதீகம். ராகுகால நேரங்களில் அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சங்கடங்களை தீர்க்கும் சரபேஸ்வரர் என்று அழைத்தே பக்தர்கள் வழிபட்டுக் கொண்டாடுகிறார்கள்.

சிவத்தொண்டர்களான நாயன்மார்களின் வாழ்க்கை சரித்திரத்தையும், ஈஸ்வரன் விடை மீது அமர்ந்து காட்சி கொடுத்ததையும் சிற்பத் தொகுதிகளாய் இங்கே காணலாம். ‘தத்தா நமரே காண்...’ போன்ற கதைச் சுருக்க கல்வெட்டுகளோடு,  புடைப்புச் சிற்பங்களும் திகழ, கோயிலை வலம் வருதல், பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம். அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார், கண்ணப்பர், கழற்சிங்கர் போன்ற நாயன்மார்களின் சரித்திரங்கள், சிற்பங்களாக, சிவனடியார்களுக்கு பெரு விருந்தாக காட்சி தருகின்றன.

மூலவர், முதன்மையானவர், ஐராவதீஸ்வரர் ஆவார். தேவேந்திரன் வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் ஈஸ்வரன் ஐராவதீஸ்வரர் என்னும் பெயர் பெற்றதாக புராணம் கூறுகிறது. அம்பாளின் திருநாமம் தெய்வநாயகி என்பதாம். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற தலம்.

ஐராவதீஸ்வரருக்கு பிரதோஷம், சோமவாரம் போன்ற காலங்களில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. உஷா கால பூஜை, மதியம் உச்சி கால பூஜை, அந்திப்பொழுதில் சாயரட்சை, அர்த்த ஜாம பூஜைகள் என்று தொடர்ந்து நடைபெறுகின்றன. ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் பூஜை.

அருள்மிகு தெய்வ நாயகி உடனுறை ஐராவதீஸ்வரர் திருமேனிக்கு, 1008 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், 1008  தாமரை அர்ச்சனை, 1008 எலுமிச்சை, தேங்காய் மற்றும் அகல் விளக்கு ஏற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் லட்சம் பேருக்குமேல் இங்கு வந்து குவிகின்றனர். கல்வெட்டுகள், நாட்டிய கர்ணமுத்திரைகள், ராமாயண மகாபாரத காவியங்கள் மற்றும் சிவபுராணக் கதைகளும் சிற்பங்கள் கொண்ட பெருமைமிகு இவ்வாலயத்தை கலைகளின் சரணாலயம் என்றே கூறலாம்.கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில்உள்ளது தாராசுரம்.

- சீனுவாசன்

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

வழியிலே நிலைத்து கோயிலும் கொண்ட விநாயகன்!

பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள்.சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்... நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் அற்புதம். இந்த வசதி, செல்வச் சிறப்பு பெற்ற கோவை மாநகரின் எல்லையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில்தான் கிடைக்கிறது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது. கோவை மாநகருக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பதற்காகவே உருவானவர் இந்த விநாயகர். ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட ஆஜானுபாகுவான அழகிய விநாயகர் சிலையை, மாட்டு வண்டியில் ஏற்றி, மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில் ஈச்சனாரி என்ற இந்த இடத்தை அடைந்தபோது வண்டியின் அச்சு முறிந்து, சிலை தரையில் இறக்கப்பட்டது.

அச்சை சரி செய்து மீண்டும் சிலையை வண்டியில் ஏற்றிட மேற்கண்ட முயற்சிகள் அத்தனையும் தோல்வியுற்றன. எனவே வித்தகன் திரும்பிய அந்த இடத்திலேயே, கோவை மக்களின் தென்திசைக் காவலனாக, விநாயகப் பெருமானுக்கு அழகியதோர் கோயில் உருவானது. 1977ல் முதல் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது.

சாலையில் அதிவேகமாகச் செல்லும் அத்தனை வண்டிகளும் ஈச்சனாரியை அடைந்ததும் ஒரு கணம் வண்டியை நிறுத்தி விநாயகரின் கம்பீரமான தோற்றத்தைத் தரிசித்து மனநிறைவோடு பயணத்தைத்  தொடர்வதைக் காணலாம்.அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே தங்கத்தேரில் திருஉலாவரும் ஒரே விநாயகர்திருக்கோயில் என்ற சிறப்பையும் பெற்றது, இந்த ஈச்சனாரி விநாயகர் கோயில்தான். ஆண்டு முழுவதும் 365 நாட்களிலும் உபயதாரர்களாக, பக்தர்கள் கட்டளையாக, காலையில் கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

மாலையில் நாள்தோறும், பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலாக தங்கரதம் இழுப்பதும் மதியம், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயத்தின் அருட்பிரசாதமாக அன்னதானம் நடைபெறுவதும், ஏழை மாணவர்களுக்கான கருணை இல்லமும், நலிவுற்ற பிரிவினருக்கான இலவசத் திருமணத் திட்டமும் செயல்படுத்தப்படும் அரிய சிறப்புக்களையும் பெற்றுள்ளது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்.

மூன்று நிலை ராஜகோபுரம் அழகுக்கு அழகு சேர்க்கிறது. உள்ளே பெரியதொரு பிராகாரம். அதன் நடுவிலே அமைந்துள்ள கருவறையில் உயர்ந்த பீடத்தில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறார் விநாயகர். பிராகாரத்துச் சுவர்களில், விநாயகர் புராணம் ஓவியங்களாக மிளிர்கின்றன.

ஈச்சனாரி விநாயகரின் பேரழகினைச் சற்று ரசித்திடுவோம். ஆறடி உயரம், மூன்றடி அகலம், அமர்ந்த கோலம். பெருவயிற்றைச் சுற்றிய நாகாபரணமும் கழுத்தில் உருத்திராட்ச மாலையுமாக ஐந்தடி உயரத்தினராக அருள்பாலிக்கிறார். வலதுகாலை பீடத்தில் வைத்தபடியும் இடதுகால் நம்மை நோக்கியவாறும் அமைந்துள்ளன. வலதுகரத்தில் உடைந்த தந்தமும் இடதுகரத்தில் மோதகமும் மேற்கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியபடி காட்சி தருகிறார் விநாயகர். காலையிலும் மாலையிலும் திருமஞ்சனம் செய்விக்கப்படும்போது பேரழகனின் எழில் திருமேனியை கண்குளிரத் தரிசிக்கலாம்.

காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்திடும் விநாயகப் பெருமானின் திருஉருவம் பல அரிய தத்துவங்களை உள்ளடக்கியதாகும். யானை முகம், மூன்று கண்கள், இரண்டு செவிகள், ஐந்து கரங்கள், பெரிய வயிறு, சிறிய வாகனம், குறுகிய திருவடிகள் அத்தனையும் அர்த்தம் பொருந்தியவையே. யானை முகம் ஒம்கார வடிவம் என்பதை விளக்குவதாகும்.

ஐந்து கரங்களும் பஞ்ச கிருத்தியத்தை (பிரபஞ்ச இயக்கமான ஐந்து தொழில்கள்) செய்யும் ஆற்றலைக் குறிப்பன. முகத்திலுள்ள கண்கள், சூரியன், சந்திரன் மற்றும் அக்னியை உணர்த்துவதாகும். விசாலமான இருசெவிகள் ஆன்மாக்களை காப்பவை. பெரிய வயிறு, அண்டங்கள் அனைத்தையுமே தன்னகத்தே கொண்டதைக் காட்டுவதாக உள்ளது.

அசுவினி முதல் ரேவதி வரையில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சிறப்பு அலங்காரங்களோடு, ஈச்சனாரி விநாயகப் பெருமான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அந்தந்த நட்சத்திரக்காரர்கள், அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மனநிறைவுபெறுகின்றனர். விநாயகர்  சதுர்த்தியையொட்டி பத்து நாட்கள் பெருவிழா நடைபெறும்போது, ஆன்மிக, கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுவது கண்களுக்கும் கருத்துக்கும் ஆன்மிக பிரசாதமாகும். தூய்மை மற்றும்பக்திச் சூழலுடனான பராமரிப்புக்கும்முதலிடம் தரப்படுகிறது இங்கே.

கோயமுத்தூருக்கு தெற்கே பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 9வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி. நெடுஞ் சாலையையொட்டியே, கிழக்கு நோக்கியபடி கோயில் அமைந்துள்ளது.

 - சந்திரசேகரன்