வையகம் போற்றும் வைஷ்ணவி தேவி!



காஷ்மீர்

தவயோகிகளும், சித்தபுருஷர்களும் குடிபுகும் சித்தபீடம் காஷ்மீரம். இமய மலைச்சாரலில் தென்னாடுடைய சிவனே குடிபுகுந்தான் தவம் புரிய - தவம் செய்பவர்களுக்கு அருள்பாலிக்க. சங்கரர், ராமானுஜர் முதலான பரமாச்சாரியர்கள்கூட தம் தர்மசித்தாந்தங்களை நிலைநாட்ட காஷ்மீரத்தை உயரிய ஞான பீடமாகக் கருதி வந்தார்கள்.

அப்பிரதேசத்தில் பல தெய்வத் திருக்கோயில்கள் இன்றும் மகிமையோடு விளங்கி வருகின்றன. அவற்றில் தலையாய திருத்தலம் வைஷ்ணவி பகவதி என்று போற்றப்பெறும் வைஷ்ணோதேவி ஆலயம். தேவியின் 51 தலையாய சக்திபீடங்களுள் இப்பீடம் வைஷ்ணவி பீடமாக திருவருட்பாலிக்கிறது.

காஷ்மீரம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை ஜம்மு, கச்மீர், லடாக். ஜம்மு பகுதியில்தான் புராதனமான இந்து ஆலயங்கள் அதிகம். சுத்த மகாதேவர், கெளரிகுண்டம், சுயம்பூ பரம சிவன், சுதாதரர், அமரநாதர் - இப்படிப் பல தெய்வங்களுக்கும் திருக்கோயில்கள் பிரபலமானவை.

மலைப்பாங்கான பகுதியில் குகைக்குள் அமைந்திருக்கிறது வைஷ்ணவி தேவியின் சித்தபீடம் எனும் திருக்கோயில். இந்த பகுதியே இயற்கை எழில் கொஞ்சம் அற்புதமான இடம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தகோடிகளும் இங்கு ஆண்டுதோறும் வந்துபோகிறார்கள்.

தெய்வபக்தி இல்லாதவர்கள்கூட இப்பகுதிக்கு வந்ததும், இயற்கையின் தெய்வீகப் பொலிவைக் கண்டு பக்தி பரவசத்துடன் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். பக்தர்கள் பெறும் பரமானந்தம் சொல்லில் அடங்காது. அன்னையின் ‘தர்பார்’ அப்பகுதி முழுவதும் தெய்வீகப் பொலிவு மிளிரவியாபித்திருப்பதைக் காண்கிறோம்.

1947ம் ஆண்டுவரையில் பக்கத்து மாநிலங்களிலிருந்துதான் இத்தலத்திற்கு பக்தர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பிறகு இத்திருத்தலத்தின் பெருமை பாரதமெங்கும் பரவியதால், எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் பக்தகோடிகள் வந்து குவிகிறார்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும், பனிமழை காரணமாக அதிகக் கூட்டம் இருக்காது. மற்ற மாதங்களில் ‘ஜெய் மாதாஜி!’ என்ற பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணதிர, விநாடி இடைவெளியின்றி அந்த பிராந்தியத்தில் நிலைத்திருக்கும்.

மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி. இமயமலைச் சாரலில் குகைக்குள் திருக்கோயில் கொண்டிருக்கிறான் அவள். இயற்கையின் புனிதமான பனிபடர்ந்த சூழலில் அமைந்திருக்கும்திருச்சந்நதியில் வைஷ்ணவி தேவிக்கு இருமருங்கிலும் மகாகாளியும் - மகாசரஸ்வதியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கொலுவீற்றிருக்கிறார்கள். ஜீவராசிகளின் இயக்கத்திற்கே ஆதாரசக்திகளான இம்மூன்று மகாதேவிகளின் ஒருமித்த சாந்நித்தியம் அருள்பொங்கும் திவ்யதிருக்கோலமதை இந்த சக்திபீடத்தில் அனுபவிக்கலாம்.

வைஷ்ணவி தேவியின் சந்நதிக்கு குகை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சந்நதிக்குச் செல்லும் பாதையில் வைஷ்ணவி தேவியின் திருப்பாதங்களைத் திருமஞ்சனம் செய்தபடி கங்கை பிரவாகிக்கிறாள். பக்தர்கள் புனித கங்கையில் நீராடியவாறே அன்னையின் அருள் பெற மெல்ல முன்னேறிச் செல்கிறார்கள். முன்பெல்லாம் திரும்பி வருவதற்கும் இதுதான் வழி. இப்பொழுது திரும்பிவர வேறு பாதையை இந்த ஆலய நிர்வாகத்தார் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

வைஷ்ணவி தேவி தலத்தின் தல புராணம் என்ன?

பக்கத்து சிறு நகரமான கட்டா பகுதியில் ஹம்ஸாவி என்றொரு கிராமம். இங்கு தரபண்டிதர் எனும் பரமபக்தர் இருந்தார். அவர் தீவிர தேவிஉபாசகர். ஒருநாள் அவர் கனவில் வைஷ்ணவி தேவி தோன்றி, ‘‘என்னை மலைக்குகைக்குள் வந்து தரிசித்து, அருள்பெறுவாயாக!’’ என்று சொன்னாள். மலைக்குகையைத் தேடி அலைந்தார் ஸ்ரீதரபண்டிதர்.

ஒருநாள் ஆடு மேய்த்துக் ெகாண்டிருந்த இடைப்பிள்ளைகள் ஒரு குகைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: ‘‘பல மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மிக அழகான சிறுமி சர்வாலங்கார பூஷிதையாய் துள்ளி விளையாடிக் ெகாண்டிருந்தாள். நாங்கள் அவளைக் காண அருகில் வந்தோம். உடனே மாயமாய் மறைந்துவிட்டாள்.

நாங்கள் ஏக்கத்துடன் அவளைப் போற்றிப் பாடிக் ெகாண்டிருந்தோம். ஒருநாள் இந்தக் குகைக்குள் நுழைந்து சென்றாள். நாங்களும் பின்தொடர்ந்தோம். அந்தத் தெய்வீகப் பெண் அமர்ந்திருந்த இடத்தில் பிறகு இந்த அம்மன் சிலை இருந்தது. நாங்கள் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்’’.தரபண்டிதர் அகம் மகிழ்ந்தார்.

கனவில் தோன்றிய தேவியின் திருவுருவம் எதிரே காட்சி அளித்தது. ஆதிமகாசக்தியின் வடிவமான வைஷ்ணவி சக்தியின் திருமூர்த்தம் என்பதை உணர்ந்தார். தினமும் வந்து பூஜை, புனஸ்காரம், நிவேதனம் என்று முறையாக வழிபாடுகளைச் செய்து வந்தார்.

அவருடன் சில பக்தர்களும் வரத் தொடங்கினார்கள். பிறகு இத் தேவியின் மகிமை பிரகாசிக்கத் தொடங்கவே, அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் தேவியை தரிசிக்க வந்தார்கள். ஸ்ரீதரபண்டிதரின் காலம் கி.பி. 1725. அப்போது காஷ்மீரத்தை ரணஜித்தேவர் எனும் அரசர் ஆட்சிபுரிந்து வந்தார். இம் மன்னவரும் வைஷ்ணவி தேவியின் பக்தரானார். திருக்கோயிலை உருவாக்கியவர் இவர்தான்.

தரபண்டிதர் முதல் முறையாக வைஷ்ணவி தேவியை தரிசித்த இடத்தை நுழைவாயிலாக அமைத்திருக்கிறார்கள். இதை ‘தர்சனீ தர்வாஜா’ என்று அழைக்கிறார்கள். இங்கிருந்து மும்முடிச் சிகரமாகத் திகழும் இமயமலையைத் தரிசிப்பது பரவசமூட்டும் திவ்ய அனுபவம். இப்பகுதிக்கு ‘த்ரிகூடம்’ என்று பெயர்.சீக்கிய மதகுரு கோவிந்தசிங் இங்கு தரிசனத்திற்காக வருவது வழக்கமாம். வைஷ்ணவி தேவியின் அருளுக்காக இங்கு தவமிருக்கும் மகான்கள் எத்தனையோ பேர்கள்!

வைஷ்ணவி தேவியின் அவதாரம் குறித்து இப்படி ஒரு கதை வழங்கப்படுகிறது - ரத்னாசாகரர் எனும் மகாபுருஷருக்கு ஒரு பெண் பிறந்தாள். இளம் பிராயத்திலிருந்தே ராமச்சந்திர மூர்த்தியிடம் தீவிரபக்தி கொண்டிருந்தாள். திருமணப்பிராயம் வந்தபோது ‘  ராமபிரானைத் தவிர, வேறு எவரையும் கணவராக வரிக்கமாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தவம் புரியத் தொடங்கினாள். ஸ்ரீராமர் வனவாசம் புரிந்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்தார். ஒரு பெண் தம்மையே வரிக்கத் தவமிருப்பதை அறிந்து அவள் இல்லத்திற்கு எழுந்தருளினார்.

அப்பெண்ணை அறிவுறுத்தி, அவளது சங்கல்பத்தை மாற்ற முயன்றார். ‘‘எனக்குத் திருமணமாகி விட்டது. நான் ஏகபத்தினி விரதன். என்னை மறந்துவிடு’’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவள் பக்திக்குப் பணிந்த ஸ்ரீராமபிரான் வரமளித்தார். ‘‘அடுத்த அவதாரத்தில் உன்னை என் தேவியாக ஏற்றுக் கொள்கிறேன். அதுவரையில் ‘வைஷ்ணவி பகவதி’ என்ற நிலையில் நீ தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருப்பாயாக.’’

தெய்வீகப் பெண் மகிழ்ச்சியுடன் இந்தவாக்குறுதியை ஏற்றுக் கொண்டாள். தவவலிமையால் மூன்று மகா தேவிகளின் சொரூபமாக மாறினாள். இன்றும் அதே திருக்கோலத்தில் அருள்பாலித்துவருகிறாள். ஜம்மு நகரிலிருந்து நிறைய பஸ், கார் வசதிகள் உள்ளன. வழியில் முக்கிய இடங்களில் தங்குவதற்கு தர்ம சாலைகள் இருக்கின்றன.

ஜம்முவிலிருந்து 75 கி.மீ. கட்டா, அங்கிருந்து18 கி.மீ. நடந்து சென்று  வைஷ்ணவி தேவியின் குகைக் கோயிலை அடையலாம். மட்ட குதிரைகள் மீது அமர்ந்து செல்பவரும் உண்டு. நடந்து சென்றால், இயற்கையின் தெய்வீகப் பொலிவை, கண்கொள்ளா எழில் காட்சிகளைத் தரிசித்துக் கொண்டு செல்லலாம்.

குகைக்கு அருகிலும் தர்மசாலைகள்,  உண்டி கொடுத்து, உறங்க இடம் கொடுத்து அன்புடன் உபசரிக்கக் காத்திருக்கின்றன. அன்பும், பண்பும், எளிமையும் கொண்ட கிராம மக்கள் யாத்திரிகர்களுக்கு உதவக் காத்திருக்கிறார்கள். ‘ஜெய் மாதாஜி,  வைஷ்ணோதேவி!’ எனும் பக்தி கோஷம் அம்மலைப்பகுதிகளில் எதிரொலித்துவைஷ்ணவி தேவியின் மகத்தான சாந்நிந்தியத்திற்குக் கட்டியம் கூறுகிறது.

- ந.பரணிகுமார்