அக்ஷய திருதியை நாளில் கண்டிப்பாக தங்கம் வாங்க வேண்டுமா?



தெளிவு பெறு ஓம்

- உமாமஹேஸ்வரி, விழுப்புரம்.


கடந்த சில வருடங்களாக சித்திரை மாதம் வந்தவுடன் பெண்களுக்கு அக்ஷய திருதியை ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்ற அளவு குந்துமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற கருத்து தற்போது வெகுவாகப் பரவியுள்ளது. அக்ஷய திருதியை நாளின் சிறப்பாக இதிகாசம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அதுவும் பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்றால் சும்மாவா?

மனம் வருந்திய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறைவு என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாதது என்று பொருள். ஆக அக்ஷய பாத்திரம் என்றால் அள்ள அள்ளக் குறையாத பாத்திரம் என்று பொருள்.
எந்தவிதத்திலும் குறைவில்லாத நாள் என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்ற பெயர் வந்தது.

ஜோதிடரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தையைக் குறிக்கும் கிரகமான சூரியனும், தாயைக் குறிக்கும் கோளான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள். அதாவது சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும்.

தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும், அல்லவா? ஆகையால் இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்தித்து அவரவர் சக்திக்கு ஏற்றார்போல் தங்கத்தை வாங்கி வைத்தால் வீட்டில் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு செல்வம் சேரும் என்ற நம்பிக்கை நம்மிடையே வளர்ந்துள்ளது.

இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல... திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் மட்டும் சாப்பிடுவதற்காக அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காக. அவர்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்பதற்காக.

அக்ஷய திருதியை நாளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், ஆதரவற்றக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நாமும் நம்மால் இயன்ற அன்னதானம் முதலான பொருளுதவியைச் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த வருடம், 29.4.2017 அன்று அட்சய த்ருதியை.?பூர்வ ஜென்ம பாவங்களே இப்பிறவியில் கர்மவினைகளாய் அனுபவிக்க நேரும்போது பரிகாரங்கள் செய்து அதிலிருந்து தப்பிப்பது சரியா?சங்கீத சரவணன், மயிலாடுதுறை.பரிகாரங்கள் என்பது கர்மவினைகளை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்வதற்காக அல்ல. கர்மவினைகளால் உண்டாகும் கஷ்டத்தினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மனதைப் பக்குவப்படுவதற்காகவும், அத்துன்பத்தின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவும் செய்யப்படுவதே.

பரிகாரம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் முற்றிலுமாக விலகிவிடாது. உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியாக இல்லை, தொழிலில் நஷ்டம் உண்டாகி மிகவும் கஷ்டப்படுகின்ற சூழல் வருகிறது, அதனால் இன்ன பரிகாரம் செய்யுங்கள் என்று ஜோதிடர் கணித்துச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் சொன்ன பரிகாரம் செய்வதால் தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்காது, நஷ்டத்தின் அளவு குறையலாம்.

அதேசமயம், அந்த நஷ்டத்தினால் உண்டாகும் பொருளிழப்பையும், மனக்கஷ்டத்தினையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் அவர் மனதிற்கு உண்டாகிறது, மேலும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து பரிகாரம் செய்யும்போது, இறைவன் நம்முடன் இருக்கிறான், இது தற்காலிகமான கஷ்டமே அன்றி நிரந்தரமானது அல்ல, இந்த நஷ்டத்திலிருந்து என்னால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்காகச் செய்யப்படுவதே பரிகாரங்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் பரிகாரங்களின் சிறப்பை உணர இயலும்.

?சிவன் கோயிலில் பெருமாள் சிலை இருக்கிறது. ஆனால் பெருமாள் கோயிலில் சிவன் சிலை இல்லையே, ஏன்?

கே.விஸ்வநாத், பெங்களூரு-38.இந்த வினாவிற்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம் இதோ: ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி வாரியாரிடம், “ஐயா நான் பெரும்பாலும் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நதியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏன் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நதி இருப்பதில்லை?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார் திருப்பிக் கேட்டார்: “அண்டாக்குள்ள குண்டா போகுமா, குண்டாக்குள்ள அண்டா போகுமா?” அந்த அம்மையார் சிறிது நேரம் யோசித்த பிறகு, “சுவாமி, எனக்குத் தெரிந்தவரை அண்டாதான் பெரியது, அதனால் அண்டாக்குள்ளதான் குண்டா போகும்” என்றார். உடனே வாரியார் சிரித்துக்கொண்டே “அதுபோலத்தான் அம்மா சிவன், அவர் அண்டா, நாராயணன் குண்டா, அதனால் தான் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நதி இருப்பதில்லை, ஆனால் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நதி உள்ளது” என்று சொன்னார்.

வாரியார் சுவாமிகளின் இந்த விளக்கத்தைக் கொண்டு சிவன்தான் பெரியவர், நாராயணன் சிறியவர் என்று தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது. அந்த அம்மையார் எளிதில் புரிந்துகொள்வதற்காக அவர் அளித்த விளக்கம் அது. அதன் உட்கருத்தினை ஆராய்ந்து புரிந்துகொண்டால் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற உண்மை நமக்கு நன்றாக விளங்கும். அண்டாவிற்கும், குண்டாவிற்கும் மூலப்பொருள் ஒன்றுதான். அதேபோல பரம்பொருள் என்ற மூலப்பொருளும் ஒன்றுதான் என்ற கருத்தினை வாரியார் சுவாமிகளின் விளக்கத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெருமாளுக்குள் அத்தனை தேவதைகளும் அடக்கம் என்பது வைணவம் சொல்லும் தத்துவம்.

மஹாபாரதப் போரின்போது கண்ணனின் விஸ்வரூப தரிசனத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் அர்ச்சுனன் காண்கிறான், கோகுலத்தில் கண்ணன் மண்ணைத் தின்றபோது, அவன் வாயைத் திறக்கச் சொன்ன யசோதைக்கு தேவர்கள், மனிதர்கள் உட்பட அண்ட சராசரங்களையும் தனது வாயிற்குள் காட்டியவன் கண்ணன். ஆக பெருமாளை தரிசித்தாலே அத்தனை தேவதைகளையும் ஒன்றாக தரிசித்ததற்கான பலனை அடையலாம்.

அதனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சந்நதி தேவையில்லை, அங்கே நின்று வழிபாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது வைணவ சம்பிரதாயம் சொல்லும் கருத்து. பரமேஸ்வரனுக்குள் அகில உலகமும் அடக்கம் என்றாலும், விநாயகர், முருகன், துர்க்கை, நவகிரகங்கள், நாயன்மார்கள் என தனது அம்சங்களை தனித்தனியே பிரித்துக் காண்பித்து இந்த தெய்வீக அம்சங்களை பாமரனுக்கும் புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டது சைவ சித்தாந்தம். வேதத்தைப் பொறுத்தவரை பரமேஸ்வரனும், பரந்தாமனும் ஒன்றுதான். வேதம் இவரையும், அவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இரண்டு ஆலயங்களிலும் அபிஷேக ஆராதனைகளின்போது சொல்லப்படுகின்ற மந்திரங்களே அதற்கு சான்று.

?சமீப காலமாக பல இளைஞர்கள் தங்கள் கைகளில் வண்ணமயமான கயிறுகளைக் கட்டிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். இந்த புதிய பழக்கம் யாரால் எப்போது தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
- புலியூர் கிருஷ்.வரதராசன்,ஹைதராபாத்-47.

இதனைப் புதிய பழக்கம் என்று சொல்ல முடியாது. ஊர் திருவிழாக்களின்போது காப்பு கட்டுதல் என்ற சம்பிரதாயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிராமங்களில் தீமிதி போன்ற திருவிழாக்கள் நடக்கும் காலத்தில் மூலவருக்கு காப்பு கட்டுவதோடு அந்த விழாக்களில் பங்குபெறுவோரும் காப்பு என்ற பெயரில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக் கொள்வார்கள்.

‘காப்பு’ என்ற அதன் பெயரே அதன் பொருளை விளக்கும். எந்தத் துன்பமும் நேராமல் நம்மைக் காக்கும் சக்தி அந்த கயிறுக்கு உண்டு என்பதால் அதனைக் காப்பு என்று அழைத்தார்கள். பெண்கள் விரதம் இருக்கும் காலங்களில் நோன்புச்சரடு என்று ஒரு கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.

அவ்வளவு ஏன், திருமலை திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு விற்கப்படும் கருப்பு நிறக் கயிறுகள் பல வாங்கி வந்து தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிரசாதமாக அளித்து வருகிறார்கள். தமிழில் இதனைக் காப்பு என்றும் வடமொழியில் இதனை ரக்ஷை என்றும் அழைக்கிறோம். ரக்ஷாபந்தனம் என்றால் நம்மைக் காப்பதற்காகக் கட்டிக்கொள்ளும் கயிறு என்று பொருள். திருமணத்தின்போது கூட மணமக்களை தீயசக்திகளிடம் இருந்து காப்பதற்காக கங்கணம் அல்லது காப்பு கட்டுதல் என்கிற சம்பிரதாயம் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தப் பழக்கம் காலப்போக்கில் அதிகரித்து தற்போது அனைத்து ஆலய வாயில்களிலும் உள்ள கடைகளில் இதுபோன்ற ரட்சை கயிறுகள் விற்கப்படுகின்றன. அவற்றைக் கையில் கட்டிக்கொள்வதால் நோய் நொடி எதுவும் அண்டாது என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டிவிடுகின்றனர். தெய்வத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இதுபோன்று வண்ணக் கயிறுகளைக் கையில் கட்டிக் கொள்வதே அன்றி இதனை புதிய பழக்கம் என்றோ இது தவறு என்றோ கருத இயலாது.

?மந்திரங்கள் மூலம் நோய்கள் குணமாகுமா?
- சு.பாலசுப்ரமணியன்,இராமேஸ்வரம்.

பார்த்தால் பசி தீருமா? சாப்பிட்டால்தான் பசி தீரும். ஆனால் பசியோடு உள்ளவனுக்கு தட்டு நிறைய சாப்பாட்டைப் பார்த்தவுடன் பசி தீர்ந்துவிட்டது போன்ற உணர்வு வருகிறது அல்லவா? அதாவது இந்த சாப்பாடு நமக்குத்தான், நம்முடைய பசி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் வந்ததும் அவன் பசி தீர்ந்தது போல் உணர்கிறான்!

அதற்காக சாப்பிடாமல் இருந்தால் பசி தீர்ந்துவிடுமா? பார்க்காமலேயே சாப்பிடவும் முடியுமா? நாம் நல்ல உணவைத்தான் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை வந்தால்தானே அவனால் நன்றாக சாப்பிடமுடியும்? அதேபோல நோய் கொண்ட மனிதனுக்குள் நம்பிக்கையை விதைப்பது மந்திரங்கள்.

 நம்பிக்கை வந்தாலே பாதி நோய் குணமாகிவிடும். மிச்சம் மீதி உள்ள நோயினை தீர்ப்பது அவன் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள். ஆன்மாவின் நோயினைத் தீர்ப்பது மந்திரங்கள், உடல் நோயினை குணமாக்குவது மருந்து மாத்திரைகள். மந்திரங்களால் மனநோயையும் சேர்த்து குணப்படுத்த இயலும், மருந்து மாத்திரைகளால் உடல்நோயை மட்டுமே குணப்படுத்த இயலும்.

?அந்த காலத்தில் நிலவைக் காட்டி குழந்தைக்கு சாதம் ஊட்டினார்கள். அப்படி ஊட்டும்போது பாட்டும் பாடினார்கள். நிலவு சிறிது நேரத்திற்கு ஒரே இடத்தில் நிற்கக்கூடியது. இதைப் பார்ப்பதில் குழந்தைக்கு என்ன உற்சாகம் ஏற்பட்டுவிட முடியும்?
- முத்துக்குமரன், புவனகிரி.

காரணமின்றி நம் முன்னோர்கள் எதையும் செய்ததில்லை. காலையில் உதிக்கும் சூரியனைக் கண்டால் மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கிறது. அதே மாலையில் நிலவைக் கண்டால் மனம் சாந்தமும் அமைதியும் கொள்கிறது.

இதனால்தான் ஜோதிடவியலில் சூரியனை பித்ருகாரகன் அதாவது தந்தையைக் குறிக்கும் கோளாகவும், சந்திரனை மாத்ருகாரகன் அதாவது தாயைக் குறிக்கும் கோளாகவும் உருவகப்படுத்தி உள்ளார்கள். தைரியத்தோடு உற்சாகத்தையும் ஊட்டி வளர்ப்பது தந்தை என்றால் அன்போடு சேர்த்து அமைதியான குணத்தினையும் ஊட்டி வளர்ப்பது அன்னை.

சிறுகுழந்தை மட்டுமல்ல, பெரியவர்கள்கூட உணவு உண்ணும்போது வேறு சிந்தனை ஏதுமின்றி அமைதியாக உணவை அருந்தினால் நோய் எதுவும் அண்டாது என்பது மருத்துவ ரீதியான உண்மை.

சந்திரனைக் காணும்போது மனதில் அமைதியும், சாந்தமும் உண்டாவது இயற்கை என்பதால் அழுகின்ற பிள்ளைக்கு உணவினை ஊட்டும்போது அந்தப்பிள்ளையை அமைதி கொள்ளச் செய்வதற்காகவும், உள்ளே செல்கின்ற உணவு அந்தப் பிள்ளையின் உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு நிலவைக் காட்டி சோறு ஊட்டினார்கள். சந்திரனை மனோகாரகன் என்றும் ஜோதிடர்கள் சொல்வார்கள். நம் மனதைக் குறிக்கும் கோள் சந்திரன் என்பது ஜோதிடவியல் கூற்று.

அது மட்டுமல்ல, நீர், அரிசி, சாப்பாடு என்று நாம் உண்ணும் உணவின் மீது தனது முழு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் கோளும் சந்திரனே. இதோடு ‘சோமாய ஓஷதீனாம் அதிபதி:’ என்று வேதம் சொல்கிறது. அதாவது ஔஷதம் என்று அழைக்கப்படும் மருந்துகளுக்கு அதிபதி சோமன் என்பது வேதவாக்கு.

உணவே மருந்து இன்று நாம் விவாதிக்கின்ற கருத்தினை அன்றே வேதமும், நமது சம்பிரதாயமும் அறிவுறுத்தியிருக்கின்றன. ஆக, குழந்தையின் ஆரோக்கியத்தைக் கருதியே நிலவைக் காட்டி சோறு ஊட்டினார்கள். குழந்தை மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நிலவைக் காணும்போது உற்சாகம் உண்டாகும் என்பது உளவியல் ரீதியான உண்மை.

?கோயிலில் பிரசாதமாக சுவாமிக்கு சாத்திய மாலையைக் கொடுத்தார்கள். அதை எடுத்து வந்து என் வீட்டுப் பூஜையறையிலுள்ள சுவாமி படத்துக்கு சாத்தினேன். என் மனைவி அவ்வாறு செய்யக்கூடாது என்கிறாள். கூடாதா?
- வெங்கடேசன், புதுவை-7.

ஒருமுறை இறைவனுக்கு நைவேத்யம் செய்து உங்களுக்கு பிரசாதமாக அளித்த பொங்கலை எடுத்துச் சென்று அதையே வீட்டுப் பூஜையறையில் உள்ள ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வீர்களா? ஒருவர் சாப்பிட்ட அதே தட்டில் உள்ள உணவை மற்றொருவருக்குத் தரலாமா? அது எச்சில் பண்டமாக ஆகிவிடாதா? ஒருமுறை ஸ்வாமிக்கு சாத்தி உங்களுக்கு இறைவனின் பிரசாதமாய் அளித்த பின்னர் மீண்டும் அதே மாலையை அதே கோயிலில் உள்ள இறைவனுக்கே திரும்ப சாத்த இயலாது.

அதற்கு நிர்மால்யம் என்று பெயர். அந்த நிர்மால்யத்தைக் கொண்டு வந்து வீட்டு பூஜையறையில் உள்ள ஸ்வாமிக்கும் அணிவிக்கக் கூடாது. உங்கள் மனைவியின் கூற்று முற்றிலும் சரியே. கோயிலில் பிரசாதமாகக் கொடுத்த மாலையை வீட்டு வாயிற்படியில் வேண்டுமானால் அலங்காரமாக மாட்டி வைக்கலாம். தலைவாயிற்படியில் மாட்டிவைப்பதால் வீடு முழுவதும் இறைவனின் அருள் நிறைந்திருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வந்து சேரும்.