அடைக்கலம் கொடுத்தவனை அடுத்துக் கெடுக்கலாமா?



மகாபாரதம் 61

‘‘எட்டு வயது பெண்கள் பூப்படைவார்கள். ஒன்பது வயதில் கர்ப்பமடைவார்கள்.பன்னிரெண்டு வயது சிறுவர்கள் ஒரு குழந்தைக்கு தகப்பனாவார்கள். படிக்கின்ற வயதிலேயேசம்சார பந்தத்தில் ஈடுபட்டதால் அந்த ஆண்கள் சிறு வயதிலேயே கிழவர்களாக காட்சியளிப்பார்கள். முடி உதிர்ந்துவிடும். நரை அதிகரிக்கும். வியாதிகள் விதம் விதமாகத் தோன்றும்.

உலகம் அதனுடைய இயல்பான சோபையிலிருந்து பின்வாங்கி கடும் வேதனையில் தத்தளிக்கும். சத்திய யுகத்தில் வாழ்ந்தவர்களால் கலியுகத்தின் வேதனைகளை கண்கொண்டு பார்க்க இயலாது. இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா சத்திய யுகத்தில் என்று கலியுகத்தினர் வியப்பார்கள். பொய் பொய் என்று கூச்சலிடுவார்கள். நம்ப மறுப்பார்கள். அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நல்லவர்கள் ஏக்கமடைவார்கள். இவை எல்லாவற்றுக்கும் ஆதாரம் வித்தையில் சிரத்ைத குறைவது.

ஒருவன் தான் செய்த வேலையை திறம்படவும், முழு முனைப்பாகவும் செய்ய வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. தர்மபுத்திரர் ஆழ்ந்து யோசிக்கலானார். கலியினுடைய தீமைகளையும், பிராமணர்களுடைய அறிவையும் அறிந்துகொண்ட அவர் சத்திய யுகத்தினர்களைப்பற்றி விசாரிக்கலானார். ஆனால், மிகக் கவனமாக, ‘‘நான் என்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளசத்தியர்களுடைய மேன்மையைச் சொல்லுங்கள்’’ என்று யுதிஷ்டிரர் மார்க்கண்டேயரிடம் கேட்டார். கிருஷ்ணர் புன்னகை செய்தார்.

ஒருவன் தான் என்ன வழியில் நடக்க வேண்டும் என்பதை தன்னைவிட தெளிவானவர்களிடம் கேட்டு அறிவது என்பது ஒரு நல்ல குணம். அவர்களின் குறை என்ன, இவர்களின் குறை என்ன, இவர்கள் எப்படி அழுவார்கள் என்பதைவிட, தன்னுடைய இனத்து மக்கள் எவ்வளவு மேன்மையுடன் வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்கிறபோது அந்த மேன்மை அவருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

‘‘மார்க்கண்டேய மகரிஷியே, க்ஷத்திரியர்களுடைய மேன்மையைச் சொல்லும்’’ என்று அவர் மறுபடியும் கேட்க, சிபி என்ற சக்கரவர்த்தியின் கதையை மார்க்கண்ேடயர்  சொல்லத் துவங்கினார். ‘‘சிபியினுடைய குணத்தையும், நன்னடத்தையும், தர்மபரிபாலனத்தையும் தெளிவாகத் தெரிந்த இந்திரனும், அக்னியும் அவரை பரிட்சிக்க விரும்பினார்கள். உண்ைமயிலேயே எவ்வளவு உதார குணம் எவ்வளவு தயை என்பதை எடை போட்டு உலகத்திற்குத் ெதரிவிக்க விரும்பினார்கள்.

சிபி அரச சபையில் உட்கார்ந்திருக்கும் பொழுது பெரிய புறா ஒன்று பொத்தென்று அவர் மடியில் விழுந்தது. சபையோர் திடுக்கிட்டார்கள். புறா சிறகுகளை விரித்து அவரை அணைத்துக் கொண்டதுபோல் இருந்து. அதன் நெஞ்சுபடபடத்தது. சிபி அந்தப் புறாவை தடவிக் கொடுத்தார். எதனாேலா பயந்தது போலவும், எந்த விஷயத்தாேலா வேட்டையாடப்படுவது போலவும் இருந்தது. சிபி வாசலை கூர்மையுடன் நோக்கினார்.

‘‘ஒரு புறா இப்படி மடியில் வந்து விழுவது நல்ல சகுனம் அல்ல. இந்தப் புறா எதற்கோ பயந்து வந்து உங்களை அடைந்திருக்கிறது. உங்களிடம் ஏதோ பேச விரும்புகிறது. இதுவும் நல்லதில்லை,’’ என்றார்கள். சபையினரின் பேச்சை சிபி பெருட்படுத்தவில்லை. அந்தப் பறவையை தடவி, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

‘‘சிபிச் சக்கரவர்த்தியே, நான் உண்மையில் ஒரு புறா அல்ல. நான் ஒரு ரிஷி. என் விருப்பத்தின்படியே நான் வேறு ஒரு உரு எடுத்து இங்கே உலவி வரும்போது என்னை இறையாக்கிக்கொள்வதற்காக ஒரு பருந்து சுழன்று சுழன்று என்னைத் துரத்தி வருகிறது. நான் என்னச் செய்வதென்று தெரியாது உங்களிடம் சரணடைந்தேன். அதோ அந்தப் பருந்து உங்கள் அரண்மனை வாசலுக்கு வந்துவிட்டது. என்னை அதனிடம் கொடுத்துவிடாதீர்கள். உங்களிடம் அடைக்கலம் கேட்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று இன்னும் இறுக அணைத்துக் கொண்டது.

சிபிச் சக்கரவர்த்தி அதை ஆதரவாகத் தடவி கொடுத்தார். பருந்து அருகே வந்து உட்கார்ந்தது. ‘‘உலகத்தில் ஏதோ ஒன்றின் பொருட்டு ஒருவர் வெவ்வேறு விதமாக வடிவம் எடுக்கிறார், உடம்பு எடுக்கிறார். அது முக்கியமல்ல. இவர் மிகப்பெரிய ரிஷியாக இருந்தாலும் இப்போது புறா. நான் பருந்து. எனக்கு உணவுக்காக இந்தப் புறா தேவை. எனவே, என் உணவில் தலையிடாது தயவுெசய்து அந்தப் புறாவை கீழே போடுங்கள்’’ என்று எச்சரிக்கும் கீச்சுக் குரலில் பேசியது.

சிபிச் சக்கரவர்த்தி மறுத்துவிட்டார். ‘‘அடைக்கலம் என்று ஒருவர் வந்த பிறகு அவரை எதன் பொருட்டும் நான் காட்டிக் கொடுக்கமாட்டேன்... நான் உன்னிடம் ஒப்படைக்கமாட்டேன். நானும் புறாவிற்காகத்தான் இரக்கப்படுகிறேன்.’’‘‘இது நியாயமில்லையே!’’ பருந்து கூவியது. ‘‘எந்த ஜென்மத்திலேயோ நீங்களும் புறாவாக இருந்து அதன் காரணமாக இந்தப் புறாவிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்.

மற்றபடிக்கு உங்களுக்கும் புறாவிற்கும் சம்பந்தம் இல்லை. அது என் உணவு. உன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்ததை மட்டுமே நினைக்கிறாயே தவிர, அந்தப் புறா எனக்கு ஒரு உணவு என்பதை ஏன் மறுக்கிறாய்? இந்த உலகத்தில் ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவாவது என்பது சாதாரணம்தானே! மன்னனான நீ இதை அறிந்து கொள்ளமாட்டாயா? புறாவினுடைய அண்மை வேண்டி என்னை பட்டினியிருக்க வைப்பாயா?’’

‘‘இல்லை. ஒருபொழுதும் இல்லை. நல்ல எருதினுடைய ரிஷப கந்தத்தை அதாவது, மாமிசத்தை உனக்குத் தருகிறேன். சுவையான மூலிகைகள் நிறைந்த உணவைத் தருகிறேன்’’ என்றெல்லாம் சிபி சொல்ல, பருந்து மறுத்துவிட்டது.‘‘உங்களுக்கு ஏன் புரியவில்லை? நான் குறிவைத்து ஆசையோடு உமிழ்நீர் ஊற இந்த உணவைத் தேடி வந்தேன்.

இந்தப் புறா என் கையில் சிக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி ஆட்டம் காட்டி இங்கு வந்துவிட்டது. என் வலிமைக்கு எதிராக இன்னும் உயிர் வாழத் துடிக்கிறது. தன்னால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை என்பதால் உங்களைச் சரணடைந்திருக்கிறது. இது என் வீரத்திற்கு கிடைத்த அவமானம். அதுவும் தவிர கடும் பசி. என் ரிஷப கந்தம் வரும் வரையில் நான் நிற்கமாட்டேன். இப்பொழுதே புறாவைக் கொடுங்கள்’’ என்று சிறகைப் பெரிதாக விரித்தது.

சிபிச் சக்கரவர்த்தி கைநீட்டி தடுத்தார். ‘‘வேறு ஏதேனும் உணவைக் கேள். ஒருபொழுதும் புறாவைத் தர முடியாது’’ என்று திட்டவட்டமாக மறுத்தார்.
‘‘அப்படியானால் உன்னுடைய உடம்பின் ஒரு பகுதியினை எடுத்து என்னுடைய உணவாகக் கொடுங்கள்,’’ என்றது. ‘‘இந்தப் புறாவின் எடையாக அது இருக்க வேண்டும்.’’

சிபிச் சக்கரவர்த்தி தன் ெதாடையை அறுத்தார். புறாவை தராசில் ைவத்து எதிர் தட்டில் தன் தசையை வைத்தார். ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வலி இருப்பினும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், புறாவின் தட்டு தாழ்ந்தேயிருந்தது. மறுபடியும் வேறு ஒரு அங்கத்தின் பகுதியை எடுத்து வைக்க அப்பொழுதும் புறாவின் தட்டு தாழ்ந்திருந்தது. விரல்களை, வலது கையை எல்லாம் வெட்டி வைக்க புறாவின் தட்டு உயரவில்லை. சிபிச் சக்கரவர்த்தி, ‘‘பருந்தே என்னை நன்றாக உண்டு ெகாள்,’’ என்று சொல்லி, புறாவின் எதிர் தட்டில் ஏறி அமர, தட்டு சரியாயிற்று. பருந்து உயரே பறந்தது.

‘சிபிச் சக்கரவர்த்தி மன்னர்களில் சிறந்தவன். க்ஷத்திரியர்களில் உயர்ந்தவன்,’ என்று இந்திரலோகம் ஆசிர்வதித்தது. புறா அக்னியாக மாறியது. ‘‘பருந்தாக வந்துபோனது இந்திரன். நான் அக்னி. எந்தத் தசையை அறுத்தாயோ அந்தத் தசையிலிருந்து உனக்கு ஒரு மகன் தோன்றுவான். உனக்கு தீர்காயுசும், திடமான அரசும் ஏற்படும். எனவே, நீ சந்தோஷமாக இந்த தேசத்தை ஆண்டுவா. உனக்கு எல்லா நலன்களும் கிட்டும். உன் மகனுக்கு புறாவின் ரோமங்களும், ரிஷபத்தின் வலிவும், பருந்தின் வீரியமும் நிச்சயம் கிடைக்கும். நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவாய்’’ என்று சொன்னது.

‘‘தர்மா, தானத்தினுடைய மகிமையை தெரிந்து கொண்டாய், க்ஷத்திரியர்கள் வழங்கும் தானம், சத்தியம் தவறாத அவர்களின் போக்கு, அடைக்கலம் கொடுத்தவரை ஒரு பொழுதும் காட்டிக் கொடுக்காத தன்மை எல்லாம் மிகச்சிறந்த விஷயம். தர்மா, இதை எல்லா நேரத்திலும் கடைபிடிப்பாயாக’’ என்று விவரித்துச் சொன்னார். தருமர் கைகூப்பி, கண்மூடி மார்க்கண்டேயரை நமஸ்கரித்தார்.

‘‘கிருஷ்ணா, கலியுகத்தின் முடிவில் க்ஷத்திரியர்கள் அடைக்கலம் கொடுத்தவனை சிறிதளவு காசிற்கும், அதிகாரத்திற்கும் தங்கள் சந்தோஷத்திற்கும், அது சத்தியம் என்ற பொய் போர்வையிலும் காட்டிக் கொடுப்பார்கள். இதனால் அவர்கள் குலம் நாசமடையும். அவர்களுடைய புத்திரர்கள் சிறுவயதிலேயே இறந்து போவார்கள். மத்திம வயதில் நோயுறுவார்கள். நல்ல க்ஷத்திரியனுக்கு வார்த்தை பிசகு இருக்கக்கூடாது. இருக்கிறவனுக்கு துக்கம் சேரும் என்பது எந்த சந்தேகமும் இல்லை,’’ என்று சொன்னார்.

‘‘சிபிச் சக்கரவர்த்தியினுடைய புகழைக் கேட்டீர்கள். அவர்களைப்பற்றி மேலும் சொல்கிறேன். க்ஷத்திரிய குலத்தின் மேன்மையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். சிபிச் சக்கரவர்த்தி இந்த பூவுலகை ஆண்டு கொண்டிருக்கும்போது வினாதா என்கிற தேவன் அவனை பரிட்சிக்க விரும்பினான். அந்தண வேடத்தில் அவன் முன்பு வந்து வணங்க, ‘என்ன வேண்டும்?’ என்று முந்திக் கொண்டு சிபி கேட்டார். பிராமணன் தயங்கினான். மன்னர் உற்சாகப்படுத்தினார்.

‘சரி, உன் மகனைக் கொன்று கறி சமைத்து எனக்கு வை. நான் வந்து உண்கிறேன்,’ என்று சொல்லிச் சென்றான் பிராமணன். சிபி அவ்விதமே தன் மகனைக் கொன்று உணவாக்கி பாத்திரத்தில் போட்டு மூடி தயாராக வைத்திருந்தார். அவருடைய காவலன் ஓடிவந்து, உங்களைச் சந்தித்த பிராமணன் குதிரைக் கொட்டகையை, மாட்டு கொட்டகையை, அந்தப்புரத்தை, மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்ற இடத்தை எரித்துக் கொண்டிருக்கிறான்.

நாலாபக்கமும் மக்கள் சிதறி ஓடுகிறார்கள் என்று சொல்ல, சிபி அங்கு போய் தீக்கு நடுவில் இருந்த அந்தணனைப் பார்த்து ‘உணவு தயாராக இருக்கிறது’ என்று சொன்னார். அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ‘அப்படியா வருகிறேன்’ என்று சொல்லி, உணவு இருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். மூடி திறக்கப்பட்டது.

‘‘இந்த உணவை நீ சாப்பிடு,’’ என்று அந்தணன் கட்டளையிட்டதும், ஒரு இலையில் அதை எடுத்துப் போட்டு அந்தணனை நோக்கி வணங்கி, ‘நல்ல உணவாக வேண்டும் என்று ஆசிர்வதிக்க வேண்டும்,’ என்று அந்தண பூஜை செய்தான்! அந்தணனாக வந்த வினாதா ஆடிப் ேபானார். ‘‘கோபம் என்பதை ஜெயித்துவிட்டாய்.

க்ஷத்திரியனுடைய இயல்பு மீறி உயர்ந்து நிற்கிறாய். வலுவுள்ளவனும், தண்டிக்கக்கூடிய அதிகாரம் உடையவனும், எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவனும் ஒரு அந்தணன் முன்பு அமைதியாக இருப்பது என்பது ஆச்சரியம். எங்கு, எவரிடம், எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டவன் புகழ் ஒருநாளும் சரிவதில்லை,’’ என்று சொல்லி தன் சுயரூபம் காட்டி ஆசிர்வதித்துச் சென்றார்.

அவர் நகர்ந்த இடத்தில் பலவிதமான அணிகலன்களோடு இறந்துபோன பிள்ளை இருந்தான். அவன் மீது அற்புதமான வாசனை வீசியது.
 ‘‘தர்மபுத்திரா, சிபியினுடைய வாழ்க்கை பல மனிதர்கள் அறிந்து தெரிந்துகொள்ள வேண்டியது. தான் தானம் கொடுப்பதாகிய கர்வம் இல்லாது, புகழுக்காக தானம் கொடுக்காது இன்னின்னவருக்கு இன்னின்ன தானம் தரவேண்டும் என்ற நிலைமையை புரிந்து கொண்டு, வந்தவர்கள் மனம் கோணாது முழு மனதுடன் தானம் தருவது என்பது வெகு சிலரிடமே இருக்கிறது. சிபியை புரிந்துகொள், அது மிகமுக்கியம்,’’ என்றார்.

கதைகள் வெறும் ெபாழுதுபோக்கிற்காக சொல்லப்படுவதில்லை; புரிந்து கொள்வதற்காக சொல்லப்படுவது, அந்தக் கதைகள் மனித விதிகளுக்கு மீறியதாக இருக்கலாம். அது முக்கியமல்லை. கதையினுடைய நீதி, நியாயம் நெஞ்சில் பதிய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் மனம் அலையாது, ஆடாது இருக்க வேண்டும் என்பதை கதைகள் கொஞ்சம் உக்கிரமாகச் சொல்லும்.

அதில் குழம்பிவிடக் கூடாது’’ என்று ெசால்லிக் கொடுத்தார்.தத்துவப் பாடத்தில் தாகம் குறையாத யுதிஷ்டர் மார்க்கண்டேயரை நோக்கி, ‘‘தானம் செய்வதைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொடுங்கள். எந்த பெரியவரிடம் போனாலும் தானத்தின் மகிமைப் பற்றி பேசப்படுகிறது. எல்லா கதைகளிலும் அது உயர்வாகக் கூறப்படுகிறது. தானம் என்பதுஎப்படிச் சிறந்தது என்பதைச் சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.

‘‘யுதிஷ்டிரா, நான்குவகை வாழ்க்கை வீணானதாகக் கருதப்படுகிறது. புதல்வர்கள் அற்றவர்கள், தர்மத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்,
எப்பொழுதும் மற்றவரின் சமையலை உண்பவர்கள், தனக்காக மட்டுமே தனியாக சமைப்பவர்கள் இவர்கள் வாழ்க்கை வீணானது என்று சொல்லப்படுகிறது.

அதேபோல பதினாறு வகை தானங்கள் வீணானதாகும். சன்னியாசி வாழ்க்கையிலிருந்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி வந்தவர்.
அவருக்கு தானம் தரக் கூடாது. அநியாயமாக சம்பாதித்த செல்வத்தினால் தரப்படுகின்ற தானமும் வீணானது. பொய் சொல்பவன், பாபி, நன்றி இல்லாதவன், ஒருவர் வசிக்கின்ற கிராமத்தில் இருக்கின்ற புரோகிதன், வேதத்தை விற்பவன், தகுதியில்லாதவர் மூலம் யாகம் செய்பவன், பாம்பைப் பிடித்து தொழில் செய்பவன், பணியாட்கள், எதையோ உத்தேசித்துப் பெண்களுக்கு மட்டுமே செய்யப்படுகின்ற தானம் வீணானது.

பித்ருபூஜை செய்ததாலும், தேவபூஜை செய்ததாலும், பிராமணருக்கு நல்ல மரியாதை அளித்தால் நீ சொர்க்கத்திற்கு போகின்ற தகுதியை உடையவனாக இருக்கிறாய். சிராத்த காலத்தில் உத்தமமான பிராமணனுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். அருவெறுப்பான சரீரம் உடையவனையும், நோயுற்றவனையும், தந்தை உயிர் இருக்கும்போதே தாயின் தீயநடத்தையால் பிறந்தவனையும், முதுகில் அம்பறாத்தூணிகட்டிக் கொண்டு க்ஷத்திரியத் தொழில் செய்கின்ற பிராமணனையும் நீ சிராத்தத்தில் விலக்கிவிட வேண்டும்.

ஒருவனை கடையேற்றுகின்ற சக்தி யாருக்கு இருக்கின்றதோ அந்த பிராமணனுக்கே நீ தானம் தர வேண்டும். சாஸ்திரத்தில் வல்லமையுடையவருக்கு நீ தானம் செய்ய வேண்டும். யுதிஷ்டிரா, விருந்தினருக்கு போஜனம் செய்விக்கும்போது அக்னிதேவனுக்குண்டான திருப்தி அவர் மீது சந்தன புஷ்பங்களை செலுத்துவதிலும் வரவில்லை.நல்ல அதிதிக்கு கால் கழுவ நீரும், கால்களில் தேய்த்துக் கொள்ள எண்ணெயும், அவனுக்கு அருகே ஒளி வீசும் தீபமும், போஜனம் ெசய்வதற்கு நல்ல அன்னமும், பிறகு சிரமபரிகாரம் செய்வதற்கு நல்ல  இடமும் கொடுப்பவனே சிறந்த தானம் தருபவன்.

இவன் ஒருபொழுதும் எமனிடம் செல்வதில்லை. அதிதி உண்ட எச்சில் இடத்தை சுத்தம் செய்வதும், அவர்களை சந்தன மாலைகளால் அலங்கரிப்பதும், கால் முதலிய அங்கங்களை அமுத்தி ஆசுவாசப்படுத்துதலும் கோதானத்தைவிட மிகப் பெருமைமிக்கது.

இன்னும் பிராமணனுடைய அகங்காரத்தை சொல்கிறேன் கேள். நீ தானம் அளிக்கின்ற பிராமணன் வேதம் அறிந்தவராக இருக்க வேண்டும். ஏழையாக இருக்க வேண்டும். கிரகஸ்தனாக இருக்க வேண்டும். தினமும் அக்னி ஹோத்ரம் செய்பவனாக இருக்க வேண்டும். நீ அளித்த தானத்திற்கு எந்த பிரதி உபகாரமும் செய்யாத வனாக இருக்க வேண்டும். அவன் ஆசிர்வாதமே, அவன் சந்தோஷச் சிரிப்பே பெரிய உபகாரம். தவறானவர்க்கு தானம் செய்வதால் எந்தப் புண்ணியமும் வருவதில்லை. மாறாக பாபம் செய்கிறது.

சொர்ண தானம் மிகச் சிறந்தது. நீ ஒரே ஒரு சொர்ணத்தை உத்தமமான பிராமணனுக்கு கொடுத்தால் நூறு மடங்கு உனக்கு திரும்பி வருகிறது. உத்தமமான பிராமணனுக்கு தானம் செய்தால் தானம் செய்தவனுக்கு சகலவித யோகங்களும் தானாக வந்து சேரும். பசித்து, வெகுதூரம் நடந்து களைப்போடு உடம்பில் அழுக்கு சேற, இனி யாராவது போஜனம் ெசய்பவர்கள் இருக்கிறார்களா என்று எவர் கேட்டாலும் அவனை இந்த இடத்திற்குப் போ என்று வழி நடத்துகிறானே அவனுக்கே மிகப் பெரிய புண்ணியம் உண்டு.

அவன் உணவு போட்ட புண்ணியத்தை அடைகிறான்.யுதிஷ்டிரா, நீ எல்லா தானத்தையும் விட்டு விட்டு அன்னதானத்தை மட்டுமே செய்து கொண்டிரு. இந்த உலகத்தில் அன்னதானத்தைப் போன்ற விசித்திரமானதும், புண்ணியம் அளிப்பதுமான தானம் வேறு எதுவும் கிடையாது. உன் சக்திக்கேற்ப நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட போஜனத்தை உத்தம அந்தணனுக்கு அளிப்பவன் அந்த புண்ணிய கர்மத்தின் பிரபாவத்தால் லோகத்தை அடைகிறான்.

அதாவது, பிரம்ம லோகத்தை சேர்கிறான்.அன்னமே எல்லாவற்றையும்விட பெருமையானது. வேதம் அன்னத்தை பிரஜாபதி என்று சொல்கிறது. நீர் நிறைந்த குளங்களை, குட்டைகளை தோற்றுவிப்பவன், கிணறு தோண்டுபவன், தர்மசாலைகள், தோட்டங்கள், அமைப்பவன் அவனுக்கு அன்னதானம் செய்வதற்கு இணையான புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் நரகத்திற்குப் போவதில்லை. மிக மரியாதையுடன் அவர்கள் அழைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.’’

‘‘எமனுடைய உலகம் என்று நடுவே ஒரு வார்த்தை சொன்னீர்கள். அந்த எமப்பட்டிணம் பற்றிச் சொல்லுங்கள். அது இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது?’’ என்று வியப்புடன் தருமபுத்திரர் கேட்டார்.மற்ற சகோதரர்கள் அந்த பதிலுக்காக நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.‘‘உலகில் எல்லா மனிதர்களும். எமனைப் பற்றியும், எமனுடைய தேசம் பற்றியும் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொள்கின்றபோது பாவம் செய்யாது இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு வருகிறது. மனித லோகத்திற்கும், எமலோகத்திற்கும் உண்டான வழியில் எண்பத்தாராயிரம் யோஜனை வித்தியாசம் இருக்கிறது. நீர் இல்லாத, சூன்யமான இடமாக அந்தப் பாதை இருக்கிறது.

எந்த இருப்பிடமும் கிடையாது. ஆனால், வெப்பம் மிகுந்த வழியாகவும், ஓய்வெடுக்க முடியாத இடமாகவும் இருக்கிறது. எம தூதர்கள் ஆண், பெண் ஜீவன்களை பலமாக பிடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள். இங்கு எவர் நல்ல தானம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு குடை, குதிரை முதலிய சௌகரியங்கள் கிடைக்கின்றன.

அந்த வெய்யில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அன்னதானம் செய்பவருக்கு போஜனம் கிடைக்கிறது. எனவே அன்னதானம் செய்தவர்கள் பசி இல்லாது வழியில் உணவு உண்ட திருப்தியோடு நகர்ந்து போகிறார்கள். வஸ்திரம் கொடுத்த மக்களுக்கு நல்ல வஸ்திரம் கிடைக்கிறது. தங்கம் கொடுத்தவர்களுக்கு நல்ல ஆபரணம் கிடைக்கிறது. பூமிதானம் செய்தவர்களுக்கு விரும்பிய அவர்கள் எம பட்டிணம் நோக்கி தைரியமாக சந்தோஷமாக போகிறார்கள்.

தண்ணீர் தானமும், அன்னதானமும் செய்பவர்கள் மிகப் பெரிய மகிழ்ச்சியை அடைகிறார்கள். வெளிச்சத்தைக் காண்கிறார்கள். குதிரைகள் பூட்டிய தேரில் யாத்திரை போக உதவி செய்தவர்கள் மயில் பூட்டிய விமானங்களில் செல்கிறார்கள். நடைவழியில் தண்ணீர் தானம் செய்தவர்
களுடைய சந்தோஷம் அற்புதமானது. அம்மாதிரி ஜலதானம் செய்தவர்களுடைய ஆத்மா போகும் வழியில் புஷ்ப யோஜனா என்கிற நதி காணப் படுகிறது. அங்கு அவர்கள் இறங்கி நீர் குடித்து இளைப்பாறி கவலையின்றி நடக்கிறார்கள்.

ஆகாரம் கிடைக்கும் என்று யார் வந்திருக்கிறாரோ அவருக்கு மனம் குளிர ஆகாரம் செய்ய வேண்டும். அதிதிக்கு கிடைத்த மரியாதையை தேவர்கள் தங்களுக்கு கிடைத்த மரியாதையாக நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அதிதி அதாவது விருந்தினர் என்பவரை மனம் கோணாது உபசரிக்க கற்றுக் கொள். நீ நடத்துகின்ற பூஜைக்கு எந்த அழைப்பும் இல்லாது பூஜைக்கு பிறகு உணவு கிடைக்கும் என்று வந்து நிற்கிறான் அல்லவா, அவனை ஒருபொழுதும், அவன் தோற்றம் பிச்சைக்காரனைப்போல இருந்தால் அவன் பெரிய யோகியாக இருக்கக்கூடும்.

அல்லது கடவுள் பெயரை கேட்டுக் கொண்டு அதன்மூலம் சாப்பாடு கிடைக்கும் என்று நம்பிக்கை உடையவனாக இருக்கக்கூடும். உணவுக்காகவே கடவுள் பெயரை சொல்பவனாக இருக்கக்கூடும். அப்படிக் கடவுள் பெயரை சொல்லி ஆவலோடு தட்டின் முன் உட்காரும்போது அவனை நன்றாக கவனி. இன்னும் என்ன வேண்டும் என்று கேள். அதில் தவறே இல்லை.

யுதிஷ்டிரா, உங்களைப்போல க்ஷத்திரியர்கள் செய்யக்கூடிய தானத்தை சொல்கிறேன் கேள். தங்க மூக்கும், அழகான வெள்ளி உடம்பும் பொருட்களாலும் அலங்கரித்து எல்லா வகை ரத்தினங்களாலும் அலங்காரம் செய்து ஒரு கன்றையும் பசுவையும் தானம் செய்பவன் உத்தமான பலனை அடைகிறான். காடு, மலை, தோட்டங்களோடு, நீர் நிலைகளோடு கூடிய பூமியை தானம் செய்த புண்ணியம் இந்த ஒரு விஷயத்தில் கிடைக்கிறது.
மது அருந்தாதவனும், எந்தவித குற்றதோஷம் இல்லாதவனும், வேதங்களை முறைப்படி அறிந்தவனும் பிறர் சாபத்தை கரைத்து கறையேற்றுகிறான்.

சிறந்த வைதீகனுக்கு கொடுக்கப்பட்ட தானம் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப்போல பலனுடையதாகிறது. பிராமணனுடைய கோபமே அஸ்திர பிரயோகம். பிராமணர்கள் இரும்பு ஆயுதங்களோடு சண்டையிடுவதில்லை. பிராமணர்கள் குரோதத்தாலேயே குற்றவாளிகளை அழித்துவிடுகிறார்கள். யுதிஷ்டிரா, இதை நான் உனக்கு மட்டும் சொல்லவில்லை. உன்னைச் சுற்றியுள்ள உன்னுடைய சகோதரர்களுக்கும், அந்தணர்களுக்கும் சொல்கிறேன்.’’

(தொடரும்)