போருக்கு உடன்படாத பலராமர்



28.4.2017 - பலராமர் ஜெயந்தி

திருமாலின் பத்து அவதாரங்களில் பலராமர் குறித்து அதிகம் பேசப்படவில்லை. ஏனெனில் தனது உடன்பிறப்பாகிய கிருஷ்ணருடன் எப்போதும் இணைந்தே இருந்ததால் அவரின் சரித்திரமே இவருடையதாகவும் இருந்தது.கஸ்யப முனிவருக்கும் அவர் மனைவி கத்துருவுக்கும் நாக வடிவில் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்தவன் ஆதிசேஷன். இவன் பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து வரங்கள் பல பெற்றவன். அதனால் ஆதிசேஷன் பூமியைத் தாங்கும் பெரும் பேற்றினைப் பெற்றான்.

தன் தவத்தின் காரணமாக மகாவிஷ்ணு தன்மீது சயனித்திருக்கும் பாக்கியத்தையும் பெற்றான். ஆதிசேஷனுக்கு ஆயிரம்தலைகளும், இரண்டாயிரம் நாக்குகளும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ராமாயண காலத்தில் ராமபிரானுக்குத் தம்பியான லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ண பரமார்த்மாவுக்கு அண்ணனான பலராமராகவும் அவதரித்து ஸ்ரீமந் நாராயணனின் அவதாரப் பணியில் பங்கு பெற்றவர் ஆதிசேஷன். கலியுகத்தில் ஸ்ரீமத் ராமானுஜராக அவதாரம் செய்து வைணவ நெறியைப் பரப்பினார் ஆதிசேஷன்.

பகவான் பலராமர், மகாவிஷ்ணுவின் அம்சமாய் வசுதேவருக்கு ரோகிணியிடம் அவதரித்தவர். இவரை ஆதிசேஷன் அம்சம் என்றும், பரமபதநாதரது வெண்ணிற அம்சம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.இவர் யோக மாயையால் கிரகிக்கப்பட்டவராதலால் சங்கர்ஷணர் எனவும் பெயர் பெறுவார்.

இவர் முதலில் தேவகி கர்ப்பத்தில் இருந்து, பின் ரோகிணி கர்ப்பத்தில் சேர்ந்தார் என்றும் கூறுவர். இவருக்கு வாருணியாகிய யமுனைச் செல்வி, இரண்டு நீல வஸ்திரங்களும், ஒரு பொன் மாலையையும் அளித்தாள். ஆகையால் இவருக்கு நீலாம்பரன் என்ற பெயரும் உண்டு. இவர் கலப்பையை ஆயுதமாகவும், பனையைக் கொடியாகவும் கொண்டவர். இவருக்கு ரேவதி, வாருணி என்று இரண்டு மனைவிகள் உண்டு.

அவதார புருஷரான பலராமர், மற்றொருஅவதார புருஷரும் தனது உடன்பிறப்புமாகிய கிருஷ்ணபரமாத்மாவுடன் எப்போதும் இணைந்தே இருந்தவர்.ஒரு சமயம் பலராமர் நைமிசாரண்யம் என்ற தலத்திற்கு வருகை தந்தார். இத்தலம் இன்றும் உள்ளது. புராதன காலத்தில் மகரிஷிகளும், ஞானிகளும் இங்கு கூடி ஆத்ம ஞானம் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

பலராமர் அங்கு வந்ததும் அங்கு குழுமியிருந்த மாமுனிவர்களும் துறவிகளும் பிராமணர்களும் பண்டிதர்களும் தத்தம் இருக்கையை விட்டு எழுந்து மிகவும் மரியாதையுடன் அவரை வரவேற்றார்கள். பணிவுடன் வணங்கினார்கள். வயதில் மூத்த முனிவர்களும், மற்றவர்களும் நின்றபடியே அவரை ஆசிர்வதித்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த வியாசதேவரின் சீடரான ரோமஹர்ஷணன் என்பவன் பலராமர் வந்ததைக் கண்டும் எழுந்து நிற்காமல் தன் வியாச ஆசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தான். அந்த அவமரியாதையைக் கண்ட பலராமர் மிகவும் கோபமடைந்தார். வேதங்களையெல்லாம் கற்றறிந்த ரோமஹர்ஷணன் தர்மத்தின் உயர் பக்குவ நிலையை மதிக்காமல் நடந்து கொண்டதை பலராமர் சிறிதும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவனை தண்டிக்கத் துணிந்தார்.

எனவே பலராமர் ஒரு தர்ப்பைப் புல்லைப்பிரயோகித்து ரோமஹர்ஷணனைக் கொன்றார். அதனால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆட்பட்டார். அங்கிருந்த மகரிஷிகளும், மற்றையோரும், ‘பிரபு, மற்றவர்களின் நன்மைக்காக ரோமஹர்ஷணனைக் கொன்ற நீங்கள் ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்’ என்று கேட்டுக் கொண்டார்கள். பலராமரும் அப்படியே செய்வதாக உறுதியளித்தார்.

பலராமரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், ‘‘தங்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒரு பிராயசித்தத்தை மேற்கொள்ளலாம். பிரபு, இங்கு பல்வலன் என்ற ஒரு கொடிய அரக்கன் இருக்கிறான். இங்குள்ள பவித்திரமான யாக சாலைகளுள் பிரவேசித்து எங்கள் வேள்விகளுக்கு பெரும் இன்னல்களை விளைவிக்கிறான். அந்த அரக்கனை நீங்கள் அழிக்க வேண்டும்.

அந்த அரக்கனைக் கொன்ற பின், நீங்கள் பன்னிரண்டு மாதங்கள் புண்ணியத்தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபட்டு பரிசுத்தமடையலாம். இதுவே நாங்கள் உமக்கு வகுக்கும் பிராயசித்தம்!’’ என்றார்கள்.நைமிசாரண்யப் பெரியோர்கள் வேண்டிய படியே பலராமர், பல்வலன் என்ற அரக்கனை வதம் செய்தார். அவதார புருஷரான பலராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு ‘தீர்த்த யாத்திரை’ மேற்கொண்டார். அவர் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள இதுவே முதற் காரணமாயிற்று.

குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்கேற்பதை பலராமர் தவிர்த்தாரென்றாலும் தர்மத்தை நிலைநாட்டுவதை தம் முதன்மையான கடமையாகக் கருதினார். குரு வம்சத்தின் இரு தரப்பினரான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே ஒரு மாபெரும் யுத்தம் நடக்கவிருப்பதை தம் ஞானநோக்கால் அறிந்தார்.

அதில் பலராமர் மத்தியஸ்தராக இருப்பார் என்று முடிவாகியிருந்தது. ஆனால், இது பலராமருக்குப் பிடிக்கவில்லை. யுத்த பூமிக்கு பலராமர் வந்து சேர்ந்தார். இரு சாரரின் நலன் கருதி பலராமர் அவர்களுக்குப் பல நல்லுரைகள் வழங்கினார். ஆனால்,  அவர்களிருவரும் பழைய பகைமையின் காரணமாக ஒருவர் மீதொருவர் குரோதம் கொண்டிருந்ததால் ஒருவரையொருவர் கொல்வதிலேயே கருத்தாயிருந்தார்கள்.

பலராமரின் அறிவுரைகள் எவர் காதிலும் விழவேயில்லை. ஒருவருக்கொருவர் முன்பு பேசிக் கொண்ட கொடிய வார்த்தைகளையும் குற்றச்சாட்டுகளையும் மனதிற் கொண்டு பழிக்குப் பழி வாங்குவதையே லட்சியமாகக் கொண்டு வெறி பிடித்தவர்கள் போல் போரிட்டார்கள். அமைதியையும் சமாதானத்தையும் எப்போதும் விரும்புபவரான பலராமர், அவர்கள் எதிர்நோக்கியிருந்த முடிவையறிந்து மேலே எதுவும் கூறாமல் விட்டு விட்டார். எனவே மேலும் அங்கிருக்க விரும்பாமல் அவர் வருத்தத்துடன் துவாரகை திரும்பினார்.

அப்படித் திரும்பும் முன் பாண்டவர்களையும் கௌரவர்களையும் பார்த்து, ‘‘சகோதரர்களான நீங்கள் போர் செய்வதைக் கண்டு என்னால் பொறுக்க முடியவில்லை. நீங்கள் உங்கள்விருப்பம் போல் யுத்தம் செய்யுங்கள். இந்த விபரீதம் பொங்கி வழியட்டும். எனக்கு இந்த உலகமே பிடிக்கவில்லை. நான் தீர்த்த யாத்திரை போகிறேன்!’’ என்று உறுதியுடன் கூறிவிட்டுத் துவாரகை திரும்பினார்.

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பிய பலராமர், அது நிறைவேறாததால் தீர்த்த யாத்திரை செல்ல இதுவே இரண்டாவதுகாரணமாயிற்று.இலட்சோபலட்சம் பேர் கலந்து கொண்ட குருக்ஷேத்திரப் போரில் கலந்து கொள்ளாதவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் பலராமர், மற்றொருவர் கிருஷ்ணனின் மனைவி ருக்மணியின் சகோதரனான ருக்மன்.

பலராமர் தாம் முடிவு செய்தபடியே தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும் நோக்கத்துடன் துவாரகையிலிருந்து புறப்பட்டார். இவரது தீர்த்த யாத்திரையை மத் பாகவதம் விரிவாகச் சொல்கிறது.முதலில் அவர் பிரபாஸ தீர்த்தம் எனும் இடத்தை அடைந்தார். அங்கு அவர் நீராடி பிராமணர்களைத் திருப்திப்படுத்தி தேவர்கள், பித்ருக்கள், முனிவர்கள் ஆகியோருக்கு வேத முறைப்படி வந்தனம் செலுத்தினார்.

பிறகு சிலருடன் சரஸ்வதி நதியின் கரையிலிருந்த புண்ணியத் தலங்களுக்கும், பிருதூகரம், பிந்து சரம், திருதகூபம், சுதர்சன தீர்த்தம், விசால தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தலங்களுக்கும் வந்தார். இங்கெல்லாம் புனித நீராடி வழிபட்ட பின் கங்கை, யமுனை கரைகளிலிருந்த திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அதன் பிறகு நைமிசாரண்யம் வந்தடைந்தார்.

பிறகு கெளசிக நதியை அடைந்து அவ்விடத்தில் புனித நீராடிய பின் ஸரயு நதி எங்கிருந்து பெருகுகிறதோ அந்த நீர்நிலையை அடைந்தார். பிறகு அங்கிருந்து கரையோரமாக பயணம் செய்து கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்றுசேருமிடமான பிரயாகை எனப்படும்
திரிவேணி சங்கமம் அடைந்தார். அங்கு ஸ்நானம் செய்து வழிபட்ட பின்னர் புலஹ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அதன் பிறகு கோமதி நதியின் கரையில் உள்ள சாளக்கிராமங்கள் தோன்றும் கண்டகி நதியை அடைந்தார்.

பின்னர் விபாச நதியிலும், சோணா நதியிலும் ஸ்நானம் செய்துவிட்டு வேதமுறைப்படியான சடங்குகளை நிறைவேற்றினார். தொடர்ந்து பயணம் செய்து கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தை அடைந்தார். அங்கு விஷ்ணுபாதம், விஷ்ணு ஆலயம் தரிசனம் கண்டார். அங்குள்ள பல்குண நதியில் நீராடி, தம் தந்தை வசுதேவரின் ஆலோசனைப்படி பித்ருக்களுக்குச் செய்ய வேண்டியகடமைகளைச் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கங்கை நதி வங்கக்கடலில் கலக்கும் புனிதத் தலமான கங்கா சாகரம் சென்றடைந்தார்.

அங்கு புனித நீராடி வைதீக சடங்குகளை முடித்த பின்னர் மகேந்திர மலையில் அவதார புருஷரான பரசுராமரைத் தரிசித்து நமஸ்கரித்த பின்னர், பலராமர் தட்சிணபாரதம் நோக்கிப் பயணம் செய்தார். கோதாவரி நதி ஏழாகப் பிரிந்து கடலில் சேருமிடத்திலும் கிருஷ்ணா நதியிலும், பம்பாஸரஸையும் பீமரதி நதியையும் அடைந்து நீராடினார்.

அங்கு ஸ்கந்தப் பெருமானைத் தரிசித்து விட்டு ஸ்ரீசைலம் என்ற சிவக்ஷேத்திரத்தையடைந்தார். பின்னர் திராவிட தேசத்தில் மகாபுண்ணிய க்ஷேத்திரமான திருவேங்கட மலையைத் தரிசித்துக் கொண்டு காமகோடி பீடம் என்று பிரசித்தமான காஞ்சிபுரியை அடைந்தார். பின்னர் காவேரி நதியை அடைந்து புனித நீராடி, எந்த இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு ஸாந்நித்தியமடைந்திருக்கிறாரோ அந்த மகா புண்ணியமான ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தையும்  தரிசித்தார்.

பின்னர் விஷ்ணு க்ஷேத்திரமாகிய ரிஷபாசலத்தையும், பிறகு தென் மதுரையையும் தரிசனம் செய்தார். அங்கிருந்து புறப்பட்டு சமுத்திரத்தில் கட்டப்பட்டுள்ள சேதுவை அடைந்தார். இங்கு பல ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்தார்.சேது பந்தனத்தில் பசுக்களைத் தானம் செய்த பின் கிருதமாலா நதியையும், தாமிரபரணி நதியையும் அடைந்து புனித நீராடிய பின்னர் அங்கு வீற்றிருந்த அகஸ்தியருக்கு அபிவாதனத்துடன் நமஸ்காரம் செய்து அவருடைய அனுமதியுடன் தெற்கு மகாசமுத்திரத்தை அடைந்து, அங்கே கன்யாகுமரி எனப் பெயர் பெற்ற துர்க்கா தேவியைத் தரிசித்தார். அங்கு இருந்து புறப்பட்டு, மகாவிஷ்ணு எங்கு பள்ளிக்கொண்ட பால்குணம் என்ற அனந்த சயனத்தை அடைந்து உத்தமமான ‘பஞ்சாப்ஸரஸ்’ என்னும் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தார். பின் அங்கு பதினாயிரம் பசுக்களை தானமாக வழங்கினார்.

பின்பு குமரி முனையிலிருந்து கேரள தேசத்தை நோக்கிப் பயணம் செய்தார். பிறகு திரிகர்த்த தேசத்தையும், பரமசிவனுடைய ஸாந்நித்தியம் நிறைந்திருக்கும் கோகர்ணம் என்று பெயர் பெற்ற சிவக்ஷேத்திரத்தையும் அடைந்து பிறகு தீவின் நடுவில் உறைகின்ற அம்பிகை ஆர்யா தேவியை தரிசனம் செய்தார். அதன்பின் சூர்ப்பாரகம் என்னும் இடத்தை அடைந்தார். பின்னர் அவர் தாபி நதியிலும், பயோஷ்னி நதியிலும், நிர்விந்தியா நதியிலும் ஸ்நானம் செய்து, பிறகு தண்டகாரண்யம் என்றழைக்கப்பட்ட வனத்தை அடைந்தார். இது ராமபிரான் வனவாச காலத்தின் போது சிறிது காலம் தங்கியிருந்த இடம்.

பின்னர் பலராமர் புனிதத் தலமான நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். இங்குள்ள மாஹிஸ்மதி என்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி முறைப்படி நியமங்களை அனுசரித்த பின்னர் ரேவா நதியை அடைந்து மனுதீர்த்தத்தில் ஸ்நானம் செய்தார். பின்னர் மீண்டும் தீர்த்த யாத்திரை புறப்பட்ட இடமான பிரபாஸ தீர்த்தம் வந்தடைந்தார்.

இப்படியாக பகவான் பலராமர் பன்னிரண்டு மாதம் பாரத வர்ஷத்தைப் பூப்பிரதட்சணம் செய்து, புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்த ஸ்நானம் செய்து முடித்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் விரிவாகக் கூறுகிறது.பலராமர் நாடு திரும்பியபோது குருக்ஷேத்திரப் போரில் பல லட்சக்கணக்கான க்ஷத்திரியர்களும் மற்றவர்களும் கொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டார்.

ஆனால், அதேசமயம், இவ்வாறு பூமியின் பாரம் குறைக்கப்பட்டதை அறிந்த போது பலராமருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஏனென்றால் பலராமரும் கிருஷ்ணரும் மண்ணாசை கொண்ட க்ஷத்திரிய அரசர்களின் பெரும் படைபலத்தால் ஏற்பட்ட பூமியின் பாரத்தைக் குறைக்கவும், தர்மநெறியை நிலைப்படுத்தவும் தோன்றியவர்கள் என்பதே அவர்களது அவதார ரகசியமாகும். பின்னாளில் ரிஷிகளின் சாபத்தால் இவர்கள் தோன்றிய யது வம்சமும் முற்றிலுமாக அழிந்தது.

அவதார நோக்கம் நிறைவு பெறவே, பலராமர் தனித்து ஆதிசேஷனாக ஒரு விருட்சத்தினடியில் நின்றிருக்கையில் கிருஷ்ண பரமாத்மா தம்மிடம் வரக் கண்டார். உடனே சேஷவுருவிலேயே அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின்னர் இருவரும் வைகுண்டம் ஏகினர்.

டி.எம்.இரத்தினவேல்