கைப்பிடித்து கிரிவலம் அழைத்துச் சென்றீர்கள்



பலன்களை அள்ளித்தரும் கார்த்திகை பெளர்ணமி கிரிவலம் கட்டுரையும், வண்ணப்படங்களும் நாங்களும் கிரிவலம் சென்று வந்தது போன்ற பரவசத்தை அளித்தன. வேலன் ஏந்தும் வித விதமான வேல்கள், அவற்றின் மகத்துவங்களைத் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரை கந்த சஷ்டி சமயத்தில் பரவசப்படுத்தியது.
- அயன்புரம் த.சத்யநாராயணன்.

திருவரங்கத்திற்கும் ஏழிற்கும் உள்ள சிறப்புகள் அனைத்தையும் பட்டியலிட்டிருந்தது அற்புதம். ‘‘எத்தனை தீபங்கள்’’ கட்டுரை, தீபங்களின் பல்வேறு வகைகளை விளக்கிக் கூறியிருந்ததோடு பஞ்சதீப எண்ணெய் பற்றியும் கூறியிருந்தது பயனுள்ள தகவலாகும்.
- சி.அருண், சீர்காழி.

அட்டைப்படத்தை அப்படியே நாங்கள் ப்ஃரேம் செய்து கொண்டோம். அப்படி ஒரு ஆனந்தம் தந்தது அட்டைப் படம்! கார்த்திகை ஸ்பெஷல் டபுள் ஸ்பெஷல் என்றால் மிகையாகாது.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

அண்ணாமலையாரே கிரிவலம் வரும் படம் மற்றும் அஷ்ட லிங்கங்களின் படங்களையும் வெளியிட்டு அற்புத தரிசனம் செய்வதற்கு அருளியதோடு, கிரிவலம் செல்லத்தக்க மற்ற பல கோயில்களின் விவரங்களையும் பட்டியலிட்டது பயனுள்ளதாக இருந்தது.
- கே.சிவகுமார், நாகப்பட்டினம்.

திருவண்ணாமலை தம்பதியினர் எங்களை கா(ர்)த்(தி)த கைகளுடன் அட்டையில் காட்சி தந்தது ‘பெளர்ணமி’ நிலவு போல் மனக் குளிர்ச்சி தந்தது. எங்கள் கரங்களைப் பிடித்தபடி பதினான்கு பக்கங்களில் ‘கிரிவலம்’ செய்ய வைத்த பிரமிப்பு நீங்கினபாடு இல்லை. அருணை அருள் பெற்ற அடியார்கள், திருமூலர் உபதேசம் என ஒவ்வொன்றும் கார்த்திகை பக்தி ஸ்பெஷலுக்கு கச்சிதமாக அமைந்திருந்தன.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.
 
‘எடுத்து வைப்போம் முதல் அடியை’ - தலையங்கம் சூப்ப்ப்ப்ப்ப்பர். சிறு அடிதான் எதற்கும் ஆரம்பம். சிறிய சாவிதான் மிகப்பெரிய வீட்டைத் திறக்க உதவுகிறது. அதேபோல ஆன்மிகத்திலும் சிறு பூஜை, ஸ்லோகம் என ஆரம்பித்து, வீடுபேறு அடையும் அளவிற்கு உயரலாம் எனும் தத்துவத்தை மிகச் சாதாரணமாக ஆசிரியர் விளக்கி இருந்தார்.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை.

‘எத்தனை எத்தனை தீபங்கள்’ கட்டுரை ‘இத்தனை தீபங்களா!’ என்று வியக்க வைத்தது.  வாசகர்களை ஆன்மிக பாதைக்கு அழைத்துச் சென்ற பாங்கு மிகவும் பெருமைக்குரியது. நன்றிகளும், வாழ்த்துகளும்.    
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

கார்த்திகை, முருகன் தகவல்கள் எல்லாம் அபாரம். இத்தனை விவரங்களையும் ‘ஆன்மிகம்’ ஒரே இதழ் மூலமாக அறிய நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.  வாழ்க, வளர்க உங்கள் ஆன்மிகப் பணி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மதங்கடந்த ஆன்மிகம் என்ற உயரிய ஆன்மிகக் கோட்பாடு தழைக்குமானால் ஜாதி, மதச்சண்டைகள் நிகழ வாய்ப்பே இல்லை என்பதை ‘குறளின் குரல்’ வாயிலாக விவரித்தது நயமாக இருந்தது.
- எஸ்.எஸ்.வாசன், எலப்பாக்கம்.

கார்த்திகை பக்தி ஸ்பெஷல் அட்டைப்படமே மெய்மறக்கச் செய்தது. பலன்களை அள்ளித்தரும் கார்த்திகை பெளர்ணமி, கிரிவலம் பற்றிய கட்டுரைப் படங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்த விதமே தனி பாணிதான். கிரிவலம் சென்று வந்த திருப்தியை ஏற்படுத்திவிட்ட தங்கள் இதழுக்கு கோடானு கோடி நன்றிகள்.

பரிக்ரமம் அல்லது கிரிவலம் என்பது தொன்றுதொட்டே நிலவி வரும் ஒரு புனிதமான ஆன்மிக நிகழ்வு. உலகம் இயங்குவதே சுழற்சியின் அடிப்படையில்தானே! அதுபோன்றே கிரிவலம் செல்வதும் சுழற்சி அடிப்படையில் அமைவதால், மனம் விரிவுபெறும் . பொருள் வேண்டுவோர் பெளர்ணமியிலும், அருள் வேண்டுவோர் அமாவாசையிலும் கிரிவலம் செய்ய வேண்டியது மரபு. கிரிவலம் கட்டுரை அருமையோ அருமை.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.