கிருஷ்ணன் உருவாக்கிய அர்ஜுனன்-சுபத்ரை பந்தம்



மகாபாரதம் 28

‘‘கிருஷ்ணா, இந்த காட்டில் இந்த சந்நியாசி உட்கார்ந்துகொண்டு கஷ்டப்படுவானேன்? இந்த தபஸ்விக்கு தகுந்த இடம் சொல்லு’’ என்று பலராமர், சந்நியாசி வேடத்திலிருந்த அர்ஜுனனைப் பற்றி கிருஷ்ணரிடம் சொன்னார்.

 ‘‘நீங்கள்தான் பெரியவர். நீங்கள்தான் தலைவர். இவரை எங்கே தங்க வைப்பது என்று உங்களுக்குத்தான் தெரியும்’’ கிருஷ்ணர் சொன்னார். ‘‘ஏன் நம்முடைய இடத்திற்கே கூட்டிக்கொண்டு போகக்கூடாது? ஏன், நம் அரண்மனையிலேயே வைத்து சுபத்ரையையே சிஸ்ருஷை செய்யச் சொல்லக் கூடாது? இவர் நல்லதுறவியாக இருக்கிறாரே. மிகச் சாதுவாக இருக்கிறாரே. கண்கள் அமைதியை கக்குகின்றனவே,’’ என்று சொன்னார்.

‘‘இருக்கலாம். ஆனாலும், இவர் இளைஞர். படித்தவர். சுபத்ரை இருக்கின்ற இடத்தில் இவரை வைப்பது நல்லதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டியது முக்கியம். உங்கள் தீர்மானத்திற்கு எதிராக நான் பேசப் போவதில்லை.’’‘‘இல்லை கிருஷ்ணா. சுபத்ரை உபசாரம் செய்யட்டும். அந்தப் புண்ணியம் அவளுக்குச் சேரட்டும். இவருக்கு தெரிந்த பரதகண்டம் முழுவதும் அவளும் தெரிந்து கொள்ளட்டும். எனக்கே இவர் சொன்ன பல விஷயங்கள் புதிதாக இருக்கிறது’’ என்று சொல்ல, கிருஷ்ணர் மறைமுகமாய் அர்ஜுனனை பார்த்துச் சிரித்துவிட்டு பாறையைவிட்டு கீழே இறங்கினார்.

பலராமர் ஒரு சிவிகையில் வைத்து அர்ஜுனனை துவாரகைக்கு அழைத்துப் போனார். சுபத்ரையின் மாளிகையில் ஒரு இடத்தை கொடுத்தார். தினந்தோறும் சுபத்ரை அவரை வணங்கி, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதன்படி உதவிகள் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பலராமரிடமிருந்து வந்தது.‘காட்டு நரியிடம் வீட்டு முயலை கொடுத்து பலகாரம் பரிமாறச் சொல்லுங்கள். நரி நன்கு உண்ணட்டும்,’ என்று கிருஷ்ணர் முணுமுணுப்பாய் பேசினார். அது யார் காதிலும் விழவில்லை.
அர்ஜுனன் என்கிற சந்நியாசி, தன்னுடைய தர்மத்தை எப்போது கீழே போட்டு உடைப்பது என்று காத்திருந்தான்.

பெற்றவர்கள் பார்த்து செய்து வைக்கின்ற திருமணம்தான் பத்திரமானது. உத்தமமானது. பெரியவர்கள் சம்மதம் இல்லாது தானாகவே தேடி பரஸ்பரம் மனம் பரிமாறி அந்த திருமணத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால் கடவுள் துணை வேண்டும். பெற்றோர் துணைக்கு ஈடாக கடவுள் துணைதான் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். வாழ்வது என்பது வெறும் காதலிப்பது மட்டும் அல்ல. அதற்குப் பிறகு பொறுப்போடு நடந்துகொள்வது. அந்தப் பொறுப்புதான் பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். அதுதான் சம்பந்தப்பட்ட தம்பதியருக்கு மரியாதை தரும்.

அர்ஜுனன் வல்லவன். நல்லவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவன். ஒரு ஏழை பிராமணருக்கு, பசுக்களை யாரோ மறித்து எடுத்துப் போகிறார்கள் என்பதற்காக அவர்களுக்குள் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து தன் தமையன் தருமபுத்திரர் திரௌபதியோடு இருக்கும் சமயம், உள்ளேபோய்
வில்லெடுத்து வந்து திருடர்களை கொன்று போட்டு பசுக்களை அந்தணருக்கு கொடுத்தான்.

ஆனால், தவறு தவறுதானே? தமையன் திரௌபதியோடு இருக்கும் பொழுது உள்ளே நுழைந்தது தவறுதானே? அதற்காக அவன் பன்னிரெண்டு மாதங்கள் தன் சகோதரர்களை பிரிந்து தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். தருமபுத்திரர் எவ்வளவு தடுத்தும் ‘நான் ஒருவன் இதை எளிதாக எடுத்துக்கொண்டால் ஊரிலுள்ள மற்றவர்களுக்கும் சத்தியத்தை உடைப்பது எளிதாகப் போகும். அப்படி இருக்கலாகாது. அர்ஜுனன் சத்தியம் உடைத்து சமாதானம் ஆனான் என்ற பேச்சு வரக்கூடாது. எனவே, செய்த உடன்படிக்கையின்படி நான் பன்னிரெண்டு மாதங்கள் தீர்த்தயாத்திரை மேற்கொள்கிறேன். இது பலவிதத்தில் எனக்கு உதவும்,’ என்று சொல்லி அவன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான்.

மறுபடியும் திரும்பி வந்து தன் நண்பனை பார்த்து சந்தோஷமடைந்து, அவன் சகோதரியைப் பார்த்து திகைப்படைந்து இவள் எனக்கு மனைவியாக மாட்டாளா என்று எண்ணத் துவங்கி விட்டான். சிறிதுகூட வெட்கம் இல்லாமல் தன்னுடைய தடுமாற்றத்தை, தன் மனம் சுபத்ரையை பின் தொடர்வதை வெட்கமின்றி சொல்லிவிட்டான். இதுதான் அர்ஜுனன்.

மிகப்பெரிய யது குலத்தினுடைய செல்வ மகளான சுபத்ரையை ஒருவன் விரும்புவதற்கு யோக்கியதை வேண்டும். அந்த விருப்பத்தை அந்த குடும்பத்
தாரிடம் சொல்ல கூடுதல் யோக்கியதை வேண்டும். கிருஷ்ணர் நண்பர். ஆனாலும், இவ்வளவு பெரிய அனுமதியை அவர் கொடுப்பாரா, இதை ஏற்பாரா? அந்தக் கவலை அவனுக்கு இல்லை. தன்னுடைய நட்பின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நட்பு கிருஷ்ணரை சார்ந்திருக்கும்போது கிருஷ்ணர் மீதும் நம்பிக்கை இருந்தது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவன். எனக்கு சுபத்ரை கிடைத்தால் நன்றாக இருக்குமே. நான் சௌக்கியமாக வாழ்வேனே என்று கிருஷ்ணரிடம் சொல்ல, ‘சந்நியாசியாக வேடமிட்டிருக்கிறாய். இது நல்லதல்லவே?’ என்று அவர் கேட்க.

பலராமர் வந்து அழைக்க, சுபத்ரையை பார்த்து, ‘‘நீயே கவனித்துக் கொள் இந்த சந்நியாசியை’’ என்று கட்டளையிட, சகலமும் கிருஷ்ணரின் மனம்போல் நடந்தது.
ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் அர்ஜுனனுடைய, காதல் எண்ணத்திற்குக்கூட கிருஷ்ணர் காரணம் என்று தோன்றுகிறது. வெறும் நண்பனாக இருக்கின்ற பந்தம் அவருக்கு போதவில்லை. அவருக்கு உறவாக வேண்டும் என்று தோன்றியது. அப்பொழுதுதான் அவன்மீது தன் பிடி அதிகமாக இருக்கும். அப்பொழுதுதான் தன் மீது பிரேமை அவனுக்கு அதிகரிக்கும். அவனை ஒரு கடனாளியாகச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தில் சுபத்ரை வளைய வரும் அரண்மனையில் அவனை உட்கார வைத்தார். அப்படி உட்காரும் படிபலராமரைச் சொல்ல வைத்தார்.

கிருஷ்ணரின் மனம்போல் அல்லாது வேறு எந்த விஷயமும் நடப்பதில்லை. உலகின் ஒவ்வொரு விஷயமும் நாராயணரால் தீர்மானிக்கப்படுகிறது. கிருஷ்ணராக அவதரித்து பூமாதேவியின் பாரம் குறைக்க வந்திருக்கின்ற அந்த அவதாரம் அந்த நோக்கத்திற்கான செயல்களையே இடையறாது செய்து வந்தது! அர்ஜுனனுக்கு தன் சொந்த சகோதரியான சுபத்ரையை மணம் முடிப்பதும் பூபாரம் குறைவதற்கே.

சந்நியாசிக்கு எல்லா உபசாரங்களும் அரண்மனை பெண்டிரால் நடத்தப்பட்டன. மத்திம வயது பெண்கள் அவருக்கு அருகே போனதும் கொஞ்சம் துணுக்குற்று பின்னடைந்தார்கள். இந்தப் பார்வை ஊடுருவுகிறதே, சந்நியாசியின் பார்வைபோல் இல்லையே என்று பயந்தார்கள்.மலர் குவியலுக்கு நடுவே அமர்ந்திருக்கும் பதுமைபோல ஏதும் செய்யவொண்ணாது கன்னிப் பெண்களின் கூட்டத்திற்கு நடுவே அர்ஜுனன் அமர்ந்திருந்தான்.

ரோஜா மலருக்கு நடுவே அன்று மலர்ந்த தாமரையை வைப்பதுபோல சுபத்ரை உள்ளே நுழைந்ததும் பரவசமானான். அவன் உடம்பின் ஆட்டங்கள் அதிகமாக வெளிப்பட்டன. எழுந்திருக்க முயற்சித்தான். உட்கார்ந்தான். இடதும், வலதும் அலைந்தான். முகம் வெளிறினான். சிரித்தான். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான். மந்திரம் சொல்ல முயற்சித்தான். ‘‘வருக... வருக... நலமா’’ என்று விசாரித்தான்.

அர்ஜுனன் ஏகாக்கிரகம் கொண்டவன். குறி பிசகாது அடிக்கின்ற கண்களும், மனமும் கொண்டவன். ஆழ்நிலை தியானத்திற்கு போனவன். ஆனால், மனித மனம் மிகத் தந்திரமானது. அவனை மீறி அவன் மனம் அலைந்தது. சுபத்ரையை பார்த்ததும் திக்குமுக்காடிற்று. இது கிரகச்சாரமா அல்லது கிருஷ்ணனின் லீலையா என்று சந்தேகம் அவனுக்கு வந்தது. காம வசப்பட்டு விட்டோம்.

காதல் வயப்பட்டு விட்டோம், கிருஷ்ணரிடம் சொல்லி விட்டோம். இனி மீறினால் சரியாக வராது. என் தங்கையை பிடிக்கவில்லையா என்று கிருஷ்ணன் கேட்டால் என்ன பதில் சொல்வது. சொல்லி எப்படி உயிர் வாழ்வது. முன்னேறவும் முடியவில்லை. பின்னடைவும் முடியாது. நாமாக வந்து வம்பில் மாட்டிக் கொண்டோம். பெரிய இடத்து சம்பந்தத்தில் பிழை செய்யப் போகிறோமா என்று அர்ஜுனன் கவலைப்பட்டான்.

கவலை முகத்தில் தெரிந்தது. சற்று முன் குதியலாக இருந்த அர்ஜுனன் சோர்ந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் வியந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்
கொண்டார்கள்.இந்த ஆள் சந்நியாசியே இல்லை. ஊர் சுற்றி. சோற்றுக்கு பதில் ஒரு பானை பாயசம் வைத்தேன். இவருக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன். பிரசாதமாக வழங்க திட்டமிட்டேன்.

ஒரு பானை பாயசத்தையும் மடக்மடக்கென்று குடித்து விட்டது. பானைக்கு அடியிலிருந்த பருப்புகளையும் வழித்துத் தின்றது. இப்படி சாப்பிடுகிறவன் எப்படி சந்நியாசி ஆவான்? பலராமர் ஏமாற மாட்டாரே, எப்படி ஏமாந்தார் என்று பேசிக் கொண்டார்கள்.மலைக்கு பூஜை செய்ய யாதவர்கள் புறப்பட்டார்கள். அந்த சந்நியாசியோடு கிருஷ்ணர் கம்பீரமாக நடந்து வந்தார்.யாதவப் பெண்கள் ஆட ஆட மனம் பேதலித்தது.

வெகுநாள் உலர்ந்த உடம்பிற்கு பெண் சுகம் தேவைப்பட்டது. சட்டென்று அங்கு சுபத்ரை இறங்க, மற்ற எல்லாப் பெண்களும் மறைந்து போய் சுபத்ரை மட்டுமே மனதில் நின்றாள். காமம் மட்டுமே சந்தோஷமாகாது. காதல் இல்லா காமம் வீண். இப்படிப்பட்ட பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும். இப்படிப்பட்ட பெண்ணால்தான் காதலிக்கப்பட வேண்டும். சுபத்ரை விரும்புவாளா மனம் யோசித்தது. அவன் யோசிப்பை கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.

‘‘சுபத்ரை விரும்புவாளா என்று யோசிக்கிறாய். விரும்பவில்லை என்று சொன்னால் என்ன செய்வாய்? சுபத்ரைக்கு சுயம்வரம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. தேதி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை சுபத்ரைக்கு நிச்சயமானால் சுயம்வரத்திற்கு மன்னர்கள் வருவார்கள். பெண் மனதை சொல்ல முடியாது. வேறு யாரையேனும் அவள் வரிக்கக்கூடும். வேறு எந்த ஆணாவது அவளை வசீகரிக்கக்கூடும். காரணம் ஒன்றும் இருக்காது.

‘‘க்ஷத்திரியர்களுக்கு பெண்ணை தூக்கிக்கொண்டு போவது ஒரு தர்மமான விஷயம். முடிந்தால் சண்டையிட்டுக்கொண்டு உன் பெண்ணை மீட்டுக்கொள் என்று சொல்வது ஒரு வீரமான விஷயம். அப்படி கடத்திக்கொண்டு போன பெண்ணை வேறு எவரும் வரிக்கவும் மாட்டார். நீ சுபத்ரையை கடத்திக்கொண்டு போவதுதான் நல்லது. சுபத்ரை விரும்புவாளா என்று கேள்வி கேட்டுக்கொண்டு இருக்காதே. நீ யார் என்று தெரிந்தால் சுபத்ரை நிச்சயம் விரும்புவாள். அர்ஜுனனை விரும்பாத பெண்ணும் உண்டோ. சந்நியாசி என்று பின்னடைந்திருக்கிறாள்.’’

‘‘நான் யார் என்று சொல்லி விடுகிறேன்.’’கிருஷ்ணர் சிரித்தார். அவனை தனியே விட்டு சுபத்ரையின் அருகில் போனார். அவளோடு பாடுவது போலவும், அவள் ஆடுவதற்கேற்ப தாளமிடுவது போலவும் இருந்தார். அவள் அருகே வரும்போது, ‘‘அர்ஜுனன் உனக்காக காத்திருக்கிறான். இங்கு சந்நியாசியாக வந்தது அர்ஜுனன்தான். உன்னை காதலிக்கிறான்’’ என்று சொல்ல, சட்டென்று அவள் அடங்கிப் போனாள். மெல்ல ஒரு மேடையில் வந்து அமர்ந்து கொண்டாள். தோழிகள்
ஆச்சரியப்பட்டார்கள். விட்டுவிட்டு நடனமாடினார்கள்.

‘‘என்ன சுபத்ரை, என்ன ஆயிற்று?’’
 கிருஷ்ணர் வாஞ்சையோடு கேட்டார்.
‘‘அவ்வளவு பாக்யசாலியா நான்!

அர்ஜுனன் காதலிக்கின்ற அளவுக்கு அழகியா நான் அல்லது உங்கள் சகோதரி என்பதால் காதலிக்கிறாரா? இது அர்ஜுனன் விருப்பமா அல்லது உங்கள் லீலையா?’’ அவள் விழி உயர்த்திக் கேட்டாள்.‘‘அர்ஜுனன் எப்படித் தவிக்கிறான் என்பதை நான் அறிவேன். நீ வந்தவுடன் அவன் பித்து பிடித்ததுபோல ஆகிறான். உளறித் தொலைக்கிறான். நீ கவனிக்க
வில்லையா?’’

‘‘ஆமாம் கவனித்தேன். ஏன் என்று தோழிகளும் கேட்டார்கள். இவன் சந்நியாசி இல்லையே என்றும் பேசிக் கொண்டார்கள். நான்தான் காது கொடுக்கவில்லை. நீங்கள் சந்நியாசி என்றால் அவர் சந்நியாசிதானே என்று அமர்ந்து விட்டேன்.’’கிருஷ்ணர் வாய்விட்டுச் சிரித்தார். தன் தங்கையை பாசத்துடன் தடவிக் கொடுத்தார். தன்னை இப்படி முழுவதுமாக நம்புகிறவர்களை கிருஷ்ணர் அதிகமாக நேசிப்பார்.

அவர் வேண்டியது அதுவே. ‘‘சுபத்ரை, உனக்கு சிறந்த கணவன் வாய்க்க வேண்டும் என்று நீ பிறந்தபோதே நினைத்தேன். அவ்விதமே நடக்கப் போகிறது. உலகத்தில் மிகச் சிறந்த வீரன், அழகன், அறிஞன் உனக்கு கணவனாக வரப் போகிறான். இவனைவிடச் சிறந்த வரனை உனக்கு யாரும் தந்துவிட முடியாது. இவனால் உலகம் சுபிட்சமடையப் போகிறது.’’

கிருஷ்ணருக்கு தன்னுடைய வேலை ஒன்றே குறி. செயலுக்குண்டான மனிதர்களை வைத்து அவன் செயலுக்குண்டான விளைவை ஏற்படுத்துவான். மனிதன்
ஆற்றல் உள்ளவன். அவனால் படிப்படியாக பல விஷயங்களில் முன்னேற முடியும். ஆனால், பிரபஞ்ச சக்திக்கு நிகராக தானும் வந்து விட்டதாக அவன் நினைக்கிறான். அப்பொழுதுதான் அந்த வினை முற்றுகிறது. அவனை கீழே பிரபஞ்ச சக்தி அழுத்தி அடங்க வைக்கிறது. எத்தனை அடக்கினாலும் உலகமே தன் சக்திக்குக் கீழ் என்று மனிதன் நினைத்து விடுகிறான். அவ்வப்பொழுது பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கி தான் யார் என்பதை மனித ரூபத்தில் காட்டத் துவங்கி விடுகிறது.

ஆமாம், பிரபஞ்ச சக்தியின் மனித ரூபம் கிருஷ்ணர். அது அவர் பிறந்த நாளிலிருந்து பல்வேறு விதமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.கடவுளை எத்தனை விதமாக நிரூபித்தாலும் அதற்கு எதிராகப் பேசுகிற மனிதர்கள் உண்டு. எதிராகப் பேசுவது என்பது அந்த எதிர்ப்பது சந்தோஷத்திற்கே அன்றி அது கடவுளை மறுத்ததாகாது. அறிவுள்ளோர் பிரபஞ்ச சக்தியை மறிக்கத்தானே செய்வர், எப்படி மறுக்க முடியும்? சாதாரண பாமரர்களுக்குண்டான ஆசார அனுஷ்டானங்களை மறுக்க முடியுமே தவிர அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கின்ற அந்த பிரபஞ்ச சக்தி பற்றி யோசிக்கக்கூட முடியாது.

முற்றிலும் உணராத ஒன்றை எதிர்த்து என்ன பயன். என்னை ஆதரிக்கவும் வேண்டாம் என்று பிரபஞ்ச சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆனால், அந்த வியப்புக்குரியவன், அதைக்கண்டு திகைத்து நின்றவன் கைகூப்பத்தான் செய்வான். கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகம் ஒரு அபத்தம்.

கிருஷ்ணர் இந்த நாடகத்தை துவங்கும் முன்பே சில வீரர்களை தர்மபுத்திரரிடம் அனுப்பி, உங்கள் தம்பிக்கு என் தங்கையை மணமுடிக்க விரும்புகின்றேன். பெரியவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஓலை அனுப்பினார். கிருஷ்ணரை சம்பந்தியாகக்கொள்ள குரு வம்சத்தாருக்கு கசக்கிறதா என்ன! தர்மபுத்திரர் மிகுந்த சந்தோஷத்தோடு அதை ஆதரித்தார். பீமனுக்கும் தனியே ஒரு கடிதம் எழுதப்பட்டது. கிருஷ்ணர் இனி எங்கள் பக்கம் என்று அவன் சந்தோஷமடைந்தான். நகுல சகாதேவர்கள், நாங்கள் செய்த புண்ணியம்.

இந்த திருமணம் அற்புதமாக நடக்கப் போகிறது என்று கட்டியம் கூறினார்கள்.மலையில் கேளிக்கைகள் நடக்கும்போதே தர்மபுத்திரர் சம்மதம் வந்தபோதே கிருஷ்ணர் அர்ஜுனனை தனியே அழைத்து, ‘‘என்னுடைய தேர் தயாராக இருக்கிறது. என்னுடைய அற்புதமாக குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருக்கின்றன. என்னுடைய வில்லை எடுத்துக்கொள். நான் உனக்கு பாணங்கள் தருகிறேன்.

நீ சுபத்ரையை கடத்திக்கொண்டு போய்விடு, உன் காதலைச் சொன்னதும் சுபத்ரை தவித்துப் போயிருக்கிறாள். திகைத்துப் போயிருக்கிறாள். உனக்குச் சரியான மனைவி ஆவேனா என்று கலவரப்பட்டிருக்கிறாள். அவளுக்கு திரௌபதி பற்றிய பயம் இருக்கிறது. அதைத் தேற்ற வேண்டியது, மாற்ற வேண்டியது உன் பொறுப்பு. எங்கள் குலக் கொழுந்து கலவரப்பட்டு விடக்கூடாது’’ என்று பிரியமுடன் உபதேசித்தார்.

கிருஷ்ணர் பிரபஞ்ச சக்தியாக இருந்தாலும் அண்ணனாகவும் இருந்தார். அதுதான் கிருஷ்ணரின் அற்புத தத்துவம். பிரபஞ்சத்தில் தர்மத்துடன் செயல்பட்டது போலவே, ஒரு ஒழுங்கில் இருந்தது போலவே, அவர் பூமியிலும் ஒரு ஒழுங்கில் இருந்தார். கிருஷ்ணரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பலதும் உண்டு. யோசிக்க யோசிக்க திகைக்க வைக்கின்ற ஒரு பாத்திரம் கிருஷ்ணர்.

அர்ஜுனன் என்ற மாவீரனுக்கு தன் தங்கையை கொடுத்து அவனை தன்னோடு இறுக்கிக் கொள்கின்ற பேராவலுடன் அவர் செயல்பட்டார். அதற்கு மிகப் பெரிய
காரணம் இருந்தது.அர்ஜுனனை துரிதப்படுத்தினார். அவன் சந்நியாசி வேஷத்தை கலைத்துவிட்டு கவசம் அணிந்து குண்டலங்களும், நெற்றித் திலகமும் இட்டு, கையுறைகளை அணிந்து, கங்கணங்கள் பூட்டி, கேயூரங்கள் மாட்டி, இடுப்பில் பருத்தி ஆடை மீது தோலாடை இறுக்கி, கனத்த பாதரட்சைகள் போட்டு வில்லில் நாணேற்றி ரீங்காரம் செய்தான். எங்கிருந்து வருகிறது இந்த சத்தம் என்று வீரர்கள் திகைக்கும்போது, தேரில் ஓடி ஏறி அவனே செலுத்திக்கொண்டு சுபத்ரை இருக்கும் இடத்தை அடைந்தான். அவளை நோக்கி கை நீட்டினான். பெரிதாய் புன்னகை செய்தான்.

சுபத்ரை திகைப்போடு கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள். ‘‘என்னையா அழைக்கிறீர்கள்?’’ என்று சந்தேகத்தோடு கேட்டாள். ‘‘உன்னைத்தான் சுபத்ரை வா. என்னோடு வா’’ என்று பிரியம் பொங்க அழைக்க அவள் ஓடி வந்து அவன் கைப்பற்றினாள். உடம்பு புல்லரித்தது. மிக உத்தமமானவன் கை பற்றுகிறோம் என்று அந்த வினாடி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. வலது காலை தூக்கி தேர் படியில் வைத்து உள்ளே ஏறி அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டாள்.

தன்னை கடத்திப்போக வந்திருப்பது தெரிந்து அதற்குத் தயார் என்பது போல் விழிகள் தாழ்த்தி காத்திருந்தாள். அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு அவன் தேரை திருப்பினான். ரைவத மலையிலிருந்து வெகு வேகமாக வெளியே போனான். வீரர்கள் திகைத்தார்கள். கிருஷ்ணருடைய தேர் என்று நினைத்தார்கள். யாரோ ஒருவன் ஓட்டுகிறானே என்று பயந்தார்கள். அதன் வேகம் கண்டு விலகினார்கள்.

சுபத்ரை அதில் போவதைக் கண்டு பதறினார்கள். பலராமரிடம் ஓடினார்கள். யாரது யாரது என்று அவர் கத்த, அது சந்நியாசி வேடத்தில் வந்த அர்ஜுனன் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.‘‘என்னை அவமானப்படுத்தி விட்டான், என்னை மிதித்துக் கொண்டு போய்விட்டான். நான் குரு வம்சத்தை இல்லாது ஒழித்து விடுவேன். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்’’ என்று பெரும் கூச்சலிட்டார். ‘‘உன்னால் வந்தது... உன்னால் வந்தது...’’ என்று கிருஷ்ணரை நோக்கி கத்தினார்.

‘‘ஆமாம் அண்ணா, என் திட்டம்தான் அது. ஆனால், ஒவ்வொரு நேரமும் உங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் நான் இதைச் செய்தேன். உங்களால் இப்பொழுது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள். அது என்னுடைய தேர், அவை என்னுடைய குதிரைகள். அவனுக்கு நான் ஆயுதங்களும் தந்திருக்கிறேன். முடிந்தால் அவனை மடக்கிக் கொண்டு வாருங்கள்.

அதற்குத் தயாராகவே அவன் போயிருக்கிறான். அவன் ஒரு சுத்த வீரன். யது குல மங்கையை செல்வம் கொடுத்து கன்னிகா தானமாக வாங்க முடியாது என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. செல்வச் செழிப்பில் நாம் அவர்களை விடச் சிறந்தவர்கள். பணம் நமக்கு முக்கியமில்லை. அதனால் அவன் அந்த விதத்தில் முயற்சி செய்யாது அவளை விரைவில் எடுத்துக்கொண்டு போய் விட்டான்.

சுயம்வரத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் அதுவரை காத்திருக்க அவன் மனம் ஒப்பவில்லை. சுயம்வரத்தில் வேறு ஏதேனும் சங்கடம் வந்தால், ஒரு வேளை சுபத்ரை வேறு ஆளைத் தேர்ந்தெடுத்து விட்டால் என்ற பயம் அவனுக்கு இருந்தது. அதனால் சுயம்வரத்திற்கு முன்பே அவன் முந்திக் கொண்டு விட்டான். க்ஷத்திரிய தர்மப்படி பெண்ணைக் கடத்திக் கொண்டு போவது என்பது சாதாரணமானதே.

தர்மத்திற்கு உகந்ததே. உங்கள் வீரர்களை பின்னே அனுப்பிப் பாருங்கள். சுபத்ரையின் சம்மதம் இல்லாமல் இது நடந்திருக்காது. சுபத்ரைக்கு அந்த சந்நியாசி அர்ஜுனன் என்று தெரிந்திருக்கும். கேட்டுப் பாருங்கள். அவன் வா என்று கூப்பிட்டவுடன் கையைப் பற்றி தேரில் ஏறிக் கொண்டாள். அவனுக்கு அருகே அழகாக உட்கார்ந்துக் கொண்டாள். எனவே, சுபத்ரை இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாள்.

அல்லது இதற்கு ஏங்கியிருக்கிறாள் என்று தெள்ளத் தெளிவாக புரிகிறது. உங்கள் வீரர்களை அனுப்பி அவர்களை மடக்கி வரச் சொல்லுங்கள். முடியாது போனால் ஆறுதல் வார்த்தை கூறி அழைத்து வரச் சொல்லுங்கள்.’’ என்று அமைதியாகப் பேசினார்.கிருஷ்ணர் இந்த நாடகத்தை துவங்கும் முன்பே சில வீரர்களை தர்மபுத்திரரிடம் அனுப்பி, உங்கள் தம்பிக்கு என் தங்கையை மணமுடிக்க விரும்புகின்றேன். பெரியவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஓலை அனுப்பினார்.

(தொடரும்)

பாலகுமாரன்