ஆனந்தம் அளித்திடும் ஆக்கூர் அப்பனே!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - ஆக்கூர்

எட்டு தோள்களுடைய ஈசனார்க்கு கோட்செங்கச்சோழன் எழுபது மாடக் கோயில்களைக் கட்டினான் என்ற வரலாற்றுத் தகவலை திருமங்கையாழ்வார் திருநரையூர் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசு பெருமானார் ‘‘பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டு’’ என்று கூறி கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் உறையும் எழுபத்து எட்டு பெருங்கோயில்களாகிய மாடக்கோயில்களைக் குறிப்பிட்டு அவற்றுள் உறையும் பெருமானைத் தாழ்ந்து போற்றி வழிபட்டால் தீவினைகள் தீருமன்றோ என்றும் உரைத்துள்ளார். இவ்விரு அருளாளர்களும் பட்டியலிட்டுக் காட்டும் மாடக்கோயில்களுள் ஒன்று, ஆக்கூர் தான் தோன்றி மாடக்கோயில். 

மயிலாடுதுறையிலிருந்து பொறையார் செல்லும் சாலையில் ஆக்கூர் என்ற அழகிய திருவூர் திகழ்கின்றது. ஆக்கூர் சிவாலயத்திலுள்ள மூன்றாம் ராஜராஜசோழனின் கல்வெட்டுச் சாசனம் (கி.பி.1216க்கு உரியது) இவ்வூரினை ஆக்கூர் எனப்பெறும் ‘இராஜேந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம்’ என்றும், திருக்கோயில் இறைவனைத் ‘திருத்தான்தோன்றி மாடமுடையார்’ என்றும் குறிப்பிடுகின்றது.

 திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தலத்துப் பெருமானைப் போற்றி இரு பதிகங்கள் பாடியுள்ளதால் காவிரியின் தென்கரைத் தேவாரத் தலங்கள் வரிசையில் ஆக்கூரும் இடம் பெற்றுத் திகழ்கின்றது. திருஞானசம்பந்தர் ‘வெண் நீற்றான் புக்கு இருந்த தொல்கோயில் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே’ என முதற் பாடலில் குறிப்பிடுபவர்.

மேலும், அப்பதிகத்து எட்டுப் பாடல்களிலும் தொல்கோயில் என்றே அக்கோயிலைக் குறிப்பதோடு நான்காம் பாடலில் ‘பூங்கோயில்’ என்ற வகைப் பாட்டுக்குரிய கோயிலாகவும் ஆக்கூர் தான் தோன்றி மாடத்தைக் குறிப்பிட்டுள்ளார். அப்பரடிகளோ தம் பதிகப் பாடல்களின் ஈற்றடியில் ‘ஆக்கூரில் தான் தோன்றி அப்பனாரே’ என விளித்து அப்பெருமானின் புகழினைப் போற்றிப் பரவியுள்ளார்.

பதினோராம் திருமுறையில் கபிலதேவ நாயனார், ‘ஆக்கூர் மறை ஓம்பு மாடத்து மாமறையோ’ என இத்திருக்கோயில் ஈசனைப் போற்றுவது இத்தலத்தின் தொன்மையைக் காட்டும் மேலுமோர் சான்றாகும். இராசராசபுரம் என்னும் தாராசுரத்து ஐராவதீஸ்வரர் கோயிலில் திகழும் திருத்தொண்டத் தொகையடியார்களின் வரலாறு காட்டும் சிற்பத் தொகுதிகள் வரிசையில் உள்ள 35ம் சிற்பக் காட்சிக்கு மேலாக ‘சிறப்புலியாண்டார்’ என்ற சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பு காணப்பெறுகின்றது.

இடுப்பில் அரையாடை, மார்பில் முப்புரிநூல், தலையில் உருத்திராட்ச மாலை, ஆகியவற்றோடு திகழும் அந்தணர் ஒருவர் தம் இடக்கரத்தைத் தொடை மீது இறுத்தியவாறு நின்று கொண்டு தம் வலக்கரத்தால் பொற்காசுகளை எதிரே நிற்கும் இருவரிடம் வழங்க, அவர்கள் கரம் நீட்டிப் பெற்றுக் கொள்ளும் அரிய சிற்பக்காட்சி அக்கல்வெட்டுப் பொழிப்புக்குக் கீழாகக் காணப்பெறுகின்றது. இக்காட்சியைக் கண்ட பிறகு சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் 35வதான சிறப்புலி நாயனார் புராணம் பாடல்களைச் சற்று நோக்குவோம்.

ஆறே பாடல்கள் அமைந்த அப்புராணத்தில் முதற்பாடல்:
‘பொன்னி நீர் நாட்டின் நீடும் பொற்பதி
 புவனத்துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு
இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நம்மைச் சார்ந்த
 வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த அறைத்திரு
 ஆக்கூர் அவ்வூர்’

இப்பாடலில் சண்பை (சீர்காழி) மன்னராகிய திருஞானசம்பந்தப் பெருமானார் ஆக்கூரின் பெருமையையும் அங்கு சிவத்தொண்டு புரிந்தருளிய சிறப்புலி நாயனாரின் பெருஞ்சிறப்பினையும் எடுத்துரைத்துள்ளார். இப்பாடலைச் சுவைத்தவாறே ஆளுடைய பிள்ளையாரின் அத்திருத்தலத்து பதிகத்தை நாம் நோக்குவோமாயின் ஒன்பதாம் பாடலில்,‘இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில்தான் தோன்றி மாடமே’

என்று ஞானக் குழந்தையார் பேசும் சிறப்புலி நாயனாரின் சீர்மையை நாம் அறிவோம். இல்லை என்னாது ஈந்து உவக்கும் சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஆக்கூர் என்ற அந்த பழம்பதியில் வாழ்ந்த வேளாளர்கள் அனைவரும் வள்ளன்மை மிக்கத் தாளாளர்களே என்பதையும் அந்த ஞானக் குழந்தையாரே அப்பதிகத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புடையதாம்.

சீர் கொண்ட புகழ்வள்ளல் எனத் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் சிறப்புலியார் குறிக்கப் பெற்றுள்ளார்.

சிவனடியார்பால் பேரன்புடையவராய் அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இனிய உரை பகர்ந்து திருவமுது படைத்து அவர்கள் விரும்புவனவற்றை குறைவறக் கொடுத்து மகிழ்ந்து வந்த சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தோதி சிவபெருமானைக் குறித்துச் செய்வதற்குரிய வேள்விகள் புரிந்து இடையறா பேரன்பால் நல்லறங்கள் பல செய்து சிவபெருமானின் திருவடி நீழலையடைந்தார் எனச் சேக்கிழார் பெருமான் அவர் புராணச் சிறப்புரைத்துள்ளார்.

மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி நாள்தோறும் ஆயிரம் அடியார்களுக்கு உணவளிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்ததாகவும், ஒருநாள் ஆயிரவரில் ஒருவர் குறைய மன்னன் வருந்தியபோது ஆக்கூர் ஈசனே ஒரு அடியாராக வந்து உணவு அருந்தி மன்னனுக்கு அருள்பாலித்தான் என்றும் தலபுராணம் கூறி நிற்கின்றது. ‘ஆயிரத்துள் ஒருவர்’ என்ற பெயரில் ஒரு லிங்க இறைத் திருமேனி இக்கோயிலில் உள்ளது.

ஈசனின் திருநாமம் தான்தோன்றீஸ்வரர் என்றும் சுயம்பு நாதன் என்றும் வழக்கில் உள்ளன. உமையவள் வாள் நெடுங்கண்ணி என்று தமிழிலும், கட்கநேத்ரி என்று வடமொழியிலும் குறிக்கப்பெறுகின்றாள். தலதீர்த்தம் குமுத தீர்த்தம் என அழைக்கப் பெறுகின்றது. சற்று உயர்ந்த மேடையமைப்போடு இம்மாடக் கோயில் விளங்குகின்றது. அம்பிகையின் சந்நதியும், ஈசனின் சந்நதியும் கிழக்கு நோக்கியே உள்ளன. பரிவாராலயங்கள் இரண்டு திருச்சுற்றுகள், கிழக்கு ராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு ஆக்கூர் மாடக் கோயில் காட்சி நல்குகின்றது.

பேரருளாளர்களால் போற்றப் பெற்ற ஆக்கூர் தான் தோன்றி மாடக் கோயில், சிறப்புலி நாயனாரால் வழிபடப் பெற்ற திருக்கோயில் என்பதோடு அம்மாடக் கோயிலின் தம்பிரானார் ஆயிரத்துள் ஓர் அடியாராகவே இங்கு வந்து அமுது உண்ட பெருஞ்சிறப்பும் பெற்ற ஒன்று என்பது கண்டோம்.

பல்லவர் காலத்திற்கும் முற்பட்ட இப்பழங்கோயில் பலமுறை திருப்பணிகளுக்கு உட்பட்டமையால் காலந்தோறும்ஏற்பட்ட கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலை மாற்றங்களை இங்கு காண முடிகின்றது. சற்று சிதைவுற்ற நிலையில் காணப் பெறும் பல்லவர் கால சண்டீசர் திருமேனி ஓர் அற்புத சிற்பப் படைப்பாகும். பின்னாளில் அமைக்கப் பெற்ற துவாரபாலகர் சிற்பங்களில் யானை ஒன்றும் சிங்கம் ஒன்றும் காணப்பெறுவது பேரழகாகும்.

சோழ மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சியும் சிற்பமாக இங்கு இடம் பெற்றுள்ளது. இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜேந்திரசோழன், பல்லவன் கோப்பெருஞ்சிங்கன், பாண்டியன் குலசேகரன் ஆகிய மூன்று மரபினைச் சார்ந்த அரசர்களின் கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்தில் உள்ளன.

இறைவனின் திருமேனியை காவிரி நதிக்குப் புனித நீராட்ட எடுத்துச் செல்ல சாலை அமைத்தது, குளம் தோண்டியது, புலம் பெயர்ந்த விவசாயிகளை மீண்டும் அவர்கள் ஊருக்கே அழைத்து வந்து அவர்களின் உடைமைகளாகிய நிலங்களை மீட்டுத் தந்த கோப்பெருஞ்சிங்கனின் சாதனை, போன்ற பல தகவல்களை இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் சுமந்து நிற்கின்றன.

ஆக்கூரின் அருகமைந்த மாத்தூர் என்ற சிற்றூரும் மிகப் பழமையான ஒரு பதியாகும். திருநாவுக்கரசர் அருளிய பாவநாசத் திருப்பதிகத்தின் பத்தாம் பாடலில் மாத்தூர் மேய மருந்தான ஈசனை சொல்மாலையால் போற்றினால் பாவம் நாசமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள மிகப் பழமையான சிவாலயம் சிதிலமடைந்தமையால் அவ்வூர் அன்பர்கள் அத்திருக்கோயிலை மீண்டும் புதுப்பித்துள்ளார்கள்.

 முற்காலச் சோழர் கால (ஆதித்தன் அல்லது பராந்தக சோழன் காலம்) கற்றளியாகத் திகழ்ந்தது அந்த பழங்கோயில் என்பதனைச் சில சிற்பங்கள் மட்டுமே எஞ்சியிருந்து காட்டி நிற்கின்றன. இவ்வாலயத்தில் உள்ள ஒரு பழமையான சோழமன்னனின் சிற்பம் தனிச்சிறப்புடையதாகும். ஈசனைக் கைகூப்பி தொழுது நிற்கும் அம்மன்னவனின் சிற்பம் ஆதித்த சோழனின் உருவச் சிற்பமாக இருக்கலாம் என்பதை சிற்ப அமைப்பு மற்றும் செம்பொன்பள்ளி (செம்பனார் கோயில்)யில் உள்ள அம்மன்னவனின் சிற்பம் ஆகியவற்றின் ஒப்பீட்டால் அறியலாம். ஆக்கூரும் மாத்தூரும் சென்று கயிலைநாதனை தரிசித்து மகிழ்வோம்.