முதல் அன்னை வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்!



பக்தித் தமிழ் 61

மதங்க முனிவரின் ஆசிரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்து வாழ்ந்துவந்த எளிய பெண், சபரி என்கிற சவரி.என்றைக்காவது ராமரைத் தரிசித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் சவரி தவமிருந்தாள். அவருக்காக இனிய பழங்களைப் பறித்துவைத்துக்கொண்டு காத்திருந்தாள்.அப்போது, ராமரும் லட்சுமணரும் இன்னொரு வனத்தில் சீதையைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

வழியில் கவந்தன் என்பவன் எதிர்ப்பட்டான்.‘கவந்தம்’ என்றால், தலையற்ற, ஆனால் இயங்குகின்ற உடல். அந்தக் கவந்தனுக்கு வயிற்றில் வாய் இருந்தது. இரண்டு கைகளையும் நீட்டிக் கிடைக்கிற எல்லாவற்றையும் நேரடியாக வயிற்றில் திணித்துக்கொள்வான் அவன்.

இதனால், அந்தக் காட்டில் வாழ்ந்த எல்லா விலங்குகளும் நடுக்கத்துடன் திரிந்தன. எந்த நேரத்தில் கவந்தன் தங்களை உணவாக்கிக்கொள்வானோ என்று பயந்தன.
அப்போது, ராம, லட்சுமணர் அங்கே செல்ல, கவந்தன் அவர்களை அள்ளிச் சாப்பிட நினைத்தான்.

அவர்களோ தங்களைப் பிடித்திருப்பது எது என்றுகூடத் தெரியாமல் குழம்பினார்கள்.‘இது அரக்கர்களின் படையாக இருக்குமோ?’ என்றார் ராமர்.‘இல்லை, இது பெரிய நாகம்போல் தோன்றுகிறது’ என்றார் லட்சுமணர்.
அப்போது, அவர்கள் கவந்தனைப் பார்த்தார்கள். இப்படி ஒரு பயங்கரமான தோற்றத்துடன் இருக்கும் இவன் யார் என்று வியந்தார்கள்.

கவந்தனுக்கும் அதே குழப்பம்தான், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டான் அவன். பிறகு, ‘யாராக இருந்தால் என்ன? என்னிடம் சிக்கிவிட்டீர்கள், இனி உங்களை நான் உணவாக்கிக்கொள்ளப்போகிறேன்!’ என்றான்.இதனால் கோபம் கொண்ட ராமரும் லட்சுமணரும் கவந்தனின் இரு கைகளையும் வெட்டினார்கள். மறுகணம், அவன் அரக்க உருவம் மாறி, ராமரைத் துதித்தான். இதனைக் குறிப்பிடும் கம்பன் பாடல்:

‘ஈன்றவனோ, எப்பொருளும்
எல்லைதீர் நல்அறத்தின்
சான்றுஅவனோ, தேவர் தவத்தின்
தனிப்பயனோ,
மூன்றுகவடாய் முளைத்துஎழுந்த மூலமோ,
தோன்றி இருவினையேன்
சாபத்துஇடர் துடைத்தாய்.’

எம்பெருமானே, நீ இந்த உலகில் எல்லாப் பொருள்களையும் படைத்த பெருமானோ? அழிவில்லாத நல்ல அறத்திற்குச் சாட்சியோ? தேவர்கள் செய்த தவத்தின் தனிப்பயனாக அவதாரம் எடுத்தவனோ? பிரம்மன், விஷ்ணு, சிவன் என மூன்றாகத் தோன்றிய பரம்பொருளோ? இந்தக் காட்டில் தோன்றி என்னுடைய தீவினையால் ஏற்பட்ட சாபத்தைத் துடைத்தாயே, உன்னை வணங்குகிறேன்!

இப்படி வணங்கிய கவந்தன் தன்னுடைய கதையைச் சொன்னான்: ‘நான் ஒரு கந்தர்வன், என் பெயர் தனு, ஸ்தூலசிரஸ் என்ற முனிவர் தந்த சாபத்தால் இந்தக் கவந்த வடிவம் எடுத்தேன், இன்றைக்கு உங்கள் கரங்கள் பட்டதும் பழைய வடிவம் பெற்றேன்.’கவந்தனுக்கு ராம-லட்சுமணர் இப்போது சீதையைத் தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது. அதற்கு அவன் ஓர் உபாயம் சொன்னான், ‘வீரர்களே, நீங்களே சொந்த முயற்சியில் அன்னையைத் தேடிக் கண்டறிந்துவிடுவீர்கள். அந்த வலிமை உங்களிடம் உண்டு. எனினும், துணையோடு இப்பணியைச் செய்வது சிறந்தது. இது உங்களுக்கும் தெரிந்ததுதான்!’

துணை என்றால், யார்?
‘சூரியனின் மகன் சுக்ரீவன் என்ற வானர மன்னன் இருக்கிறான், அவனைத் துணைவனாக்கிக்கொண்டு வெற்றி பெறுங்கள்!’ என்றான் கவந்தன்.
அந்த சுக்ரீவன் எங்கே இருக்கிறான்?

அதையும் கவந்தனே சொன்னான். ‘மதங்க முனிவரின் ஆசிரமத்துக்குச் செல்லுங்கள், அங்கிருந்து சுக்ரீவன் இருக்கும் இடத்துக்குச் செல்லும் வழியைச் சவரியிடம் அறிந்துகொள்ளுங்கள்.’இப்படிச் சொல்லிவிட்டுக் கவந்தன் விண்ணில் செல்ல, ராம, லட்சுமணர் மதங்க முனிவரின் ஆசிரமத்தைத் தேடி வந்தார்கள். சவரியைச் சந்தித்தார்கள்.

ராமரைப் பார்த்ததும் சவரி மகிழ்ச்சியில் திளைத்தாள். அவர்களுக்கு உரிய உபசாரங்களைச் செய்து, சுக்ரீவனை சந்திக்கும் வழியைச் சொன்னாள்.
அதன்பிறகு, சவரி முக்தியடைய, ராமரும் லட்சுமணரும் சுக்ரீவனைத் தேடிக் கிளம்பினார்கள். அனுமனின் துணையோடு அவனை நண்பனாக்கிக்கொண்டு அன்னையைத் தேடிக் கண்டுபிடித்து ராவணனை வென்று உலகைக் காத்தார்கள்.

சவரி மகிழும்படி அவளுக்கு விருந்தினனாக வந்தவன் என்று திருவேங்கடத்தந்தாதியில் பிள்ளைப்பெருமாளையங்கார் திருமாலை வணங்குகிறார். இறைவனை எண்ணி நெகிழும் ஒரு பெண்ணின் குரலாக அந்தப் பாடல் அமைகிறது:

‘கருமாதவா! இருந்து, ஆவன செய்து,
என் கருத்து இருளைப்
பொரும்ஆதவா! விருந்தாவனத்தாய்!
பொற்சவரி என்னும்
ஒருமாது அவா விருந்தா! வனக்கா
உயர்வேங்கடத்து எம்
பெருமா! தவா இரும் தாவு அனல்ஏயும்
பிறைக்கொழுந்தே.’

கருமைநிறம் கொண்ட மாதவனே, எனக்குள் இருந்து, எனக்கு நல்லவற்றைச் செய்து, என்னுடைய சிந்தனையிலுள்ள இருளை விலக்கும் சூரியனே, விருந்தாவனத்தில் விளையாடியவனே, சிறந்த சவரி என்கிற ஒரு மாது விரும்பியபடி அவளுக்கு விருந்தினனாக வந்தவனே, அழகிய சோலைகள் நிறைந்த திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் எங்கள் தலைவனே, பிறைநிலவானது என்னை அனல்போல் சுடுகிறது. இங்கே வந்து எனக்கு அருள் செய்வாய்!

திருநாவுக்கரசரின் பாடலொன்றிலும், பிறைநிலவு வருகிறது, அதைக் கண்டு நாகம் அஞ்சுகிறது. ஏன்?சிவபெருமானின் சடாமுடியில் நாகம் இருக்கிறது. அதே சடாமுடியில் கங்கையும் இருக்கிறாள்.இந்த நாகத்தைப் பார்த்துக் கங்கை அஞ்சுகிறாள், அதேநேரம் கங்கையைப் பார்த்து நாகமும் அஞ்சுகிறது.
காரணம், கங்கை மயில் போன்ற அழகுடன் இருக்கிறாள். மயில் நாகத்துக்கு விரோதியாயிற்றே. அதனால், நாகம் அஞ்சுகிறது.சிவபெருமானின் மார்பிலும் ஒரு நாகம் இருக்கிறது. அது மேலே நிமிர்ந்து பார்க்கிறது. மேலே மேகமும், அதில் மின்னலும் தெரிகிறது, இதைப் பார்த்து அந்த நாகம் அஞ்சுகிறது.

உண்மையில் அந்த நாகம் பார்த்தது மேகம், மின்னலை அல்ல. சிவபெருமான் அணிந்திருந்த யானைத்தோல், நாகத்துக்கு மேகம்போல் தெரிகிறது, அவரது சடாமுடியில் இருக்கும் பிறைநிலவு மின்னல்போல் தெரிகிறது.இந்தக் காட்சிகளின் மூலம் திருஆரூரனார் அழகைப் பாடி வணங்குகிறார் திருநாவுக்கரசர்:

‘நாகத்தை நங்கை அஞ்ச, நங்கையை
மஞ்ஞைஎன்று
வேகத்தைத் தவிர நாகம், வேழத்தின்
உரிவைபோர்த்து
பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை
 மின்என்றுஅஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும்
ஆரூரனார்க்கே.’

திருவாரூர் சிவபெருமானை மாணிக்கவாசகர் பாடும்போது, ‘ஆரூர் எம் பிச்சைத்தேவா’ என்கிறார். காரணம், சிவபெருமான் எடுத்த திருக்கோலங்களில் ஒன்று, தாருகாவனத்தில் பிச்சை பெறும் தோற்றம்.இதனைச் சிதம்பரச் செய்யுட்கோவையில் குமரகுருபரர் குறிப்பிட்டு, ‘சிவபெருமான் பிச்சை பெறுவது பொருந்துமா?’ என்கிறார், ‘அவருடைய மனைவி முப்பத்திரண்டு அறங்களைச் செய்கிறாளே, அப்படியிருக்க, சிவபெருமான் பிறரிடம் பிச்சை பெறுவதுபோல் தோற்றமளிப்பது ஏனோ!’ என்று வியக்கிறார்:

‘வணங்கு சிறுமருங்குல் பேர்அமர்க்கண் மாதர்
அணங்கு புரிவது அறமால், பிணங்கி
நிணம்காலும் முத்தலைவேல் நீள்சடை
 எம் கோமாற்கு
இணங்காதுபோலும் இரவு.’

வளைந்த சிறிய இடை, பெரிய கண்களை உடைய உமையம்மை முப்பத்திரண்டு அறங்களைச் செய்கிறார். அப்படியானால், பகைவர்களின் மாமிசம் சிந்துகிற மூன்று உச்சிகளைக் கொண்ட சூலப்படையை உடையவன், நீள்சடை கொண்ட எங்கள் தலைவன் சிவபெருமான் மற்றவர்களிடம் சென்று இரப்பது பொருந்துமா!
உண்மையில், உமையம்மை இந்த முப்பத்திரண்டு அறங்களையும் செய்யக் காரணமாக அமைந்தவரே சிவபெருமான்தான். காஞ்சிபுரத்தில் அன்னை ஐயனை நினைத்துத் தவம் செய்தபோது, அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான் இரண்டு நாழி நெல் கொடுத்து, அதைக் கொண்டு இந்த அறங்களைச் செய்யுமாறு அவருக்கு அருளினார்.
அந்த முப்பத்திரண்டு அறங்கள் எவை?அறப்பளீசுரசதகத்தில் அம்பலவாணக்கவிராயர் அவற்றைக் குறிப்பிடுகிறார்:

‘பெறும்இல், பெறுவித்தலொடு, காதோலை,
நாள்தொறும்பிள்ளைகள் அருந்திடும் பால், பேசுஅரிய சத்திரம், மடம்,
 ஆவுரிஞ்சு கல், பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழி கணாடி,
தண்ணீர், தலைக்கு எண்ணெய், பசுவாயின்உறை, பிணம் அடக்கல்,
வாவி, இறும்உயிர் மீட்டல், தின்பொருள்,
அடைக்காய்வழங்கல், சுண்ணாம்பு உதவுதல்,சிறைஉறுபவர்க்கு அமுது, வேறுஇலம்
காத்தல், பொழில் செய்தல், முன்நூலின் மணம், திகழ்விலங்கு ஊண், பிச்சை,
அறுசமயருக்கு உண்டி, தேவர் ஆலயம், அவுடதம்,

அறைதல் கற்போர்க்கு அன்னம், நால் எட்டு அறங்களும் முன் அன்னை செயல்; அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுரதேவனே.’
எங்கள் அரிய தலைவனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் மனத்தில் நினைக்கின்ற, சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுரதேவனே, உமையம்மையார் செய்த முப்பத்திரண்டு அறங்கள் இவை:

குழந்தை பிறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு வீடு கொடுத்து உதவுதல், அவர்களுக்குத் தேவைப்படும் பிற உதவிகளைச் செய்தல், காதணி அளித்தல், தினமும் குழந்தைகள் அருந்துவதற்கான பாலை வழங்குதல், சிறப்புடன் சத்திரங்களைக் கட்டுதல், மடங்களை அமைத்தல், பசுக்களின் தினவைத் தீர்க்கும் கற்களை நடுதல், பெண்கள்நலம் பேணுதல், நாவிதர்களுக்கு உதவுதல், துணிதுவைக்கும் வண்ணானுக்கு உதவுதல், வேதங்கள் சொன்ன முறைப்படி கண்ணாடியைத் தானமாக வழங்குதல், தண்ணீர் தாகத்தைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் கொடுத்தல்,

பசுக்களுக்குத் தீனி போடுதல், ஆதரவற்றோர் பிணங்களை அடக்கம் செய்தல், குளங்களை வெட்டுதல், உயிர்ஆபத்தில் உள்ளவர்களைக் காத்தல், தின்பண்டங்களை வழங்குதல், வெற்றிலை-பாக்கு வழங்குதல், சுண்ணாம்பு வழங்குதல், சிறையில் அகப்பட்டவர்களுக்கு உணவளித்தல், பிறருடைய துயரத்தைப் போக்குதல், சோலைகள் அமைத்தல், நூல்கள் சொன்ன முறைப்படி திருமணம் செய்து வைத்தல், விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை பெறுபவர்களுக்கு உணவளித்தல், அறுவகைச் சமயத்தவருக்கும் உணவளித்தல், திருக்கோயில் கட்டுதல், மருந்து கொடுத்தல், மாணவர்களுக்கு உணவளித்தல்!

இத்தனை அறங்களையும் செய்ய அன்னையால் இயலும், இவற்றில் சிலவற்றையாவது நாம் செய்ய அந்த ஐயன் அருள்செய்தால், நம்மாலும் இயலும்!
இறைவன் அருளால் நாம் தருவது ஒருபக்கமிருக்க, அந்த இறைவனைக் கண்டவுடன் பரவசத்தில் தானாகச் செல்வது நிறைய: மனத்திலிருந்து அகங்காரமும் அறியாமையும் ஓடும், தீவினைகள் விலகும்.

‘அதெல்லாம் பரவாயில்லை, அந்த தேவனைக் கண்டால் கைவளையல்கள் விலகிவிடுகின்றனவே’ என்கிறாள் ஒரு பெண். ‘காரணம், அவனைப் பார்த்தவுடன் ஏக்கத்தில் என் உடல் மெலிந்துவிடுகிறது, அதனால் வளையல்கள் கழன்றுவிடுகின்றன.’பெரியாழ்வாரின் பாசுரம் இது. பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிவரும் கண்ணனைக் கண்டு ஆய்ப்பாடிப் பெண்கள் பேசுகிறார்கள்:

‘வல்லி நுண்இதழ்அன்ன ஆடைகொண்டு
 வசைஅறத் திருஅரை விரித்துஎடுத்து
பல்லிநுண்பற்றாக உடைவாள் சாத்திப்
 பணைக்கச்சுஉந்திப் பலதழைநடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கைமலர்
 அணிந்து பல்ஆயர் குழாம்நடுவே
எல்லியம்போதாகப் பிள்ளைவரும், எதிர்
நின்று அங்கு இனவளை இழவன்மினே.’

கற்பகக் கொடியின் நுட்பமான இதழ்போன்ற ஆடையைத் திருஇடுப்பில் கச்சிதமாக அணிந்துகொண்டு, ஒரு பல்லி சுவரை நுட்பமாகப் பற்றிக்கொண்டு நிற்பதுபோல் உடைவாள் சாத்தி, பெரிய கச்சுப்பட்டையை அணிந்து, நல்ல, நறுமணமுள்ள முல்லை, வேங்கை மலர்களைச் சூடி, ஆயர்குலத்தவர் மத்தியில், மயில் தோகைகளின் நடுவே, மாலை நேரத்தில் கண்ணன் வருவான், அவன் எதிரில் நின்றால், ஏக்கத்தில் உடல் மெலிந்து, வளையல்கள் காணாமல் போகும், இதுவே எங்களுடைய தினசரி வழிபாடு!

ஓவியங்கள்: வேத கணபதி

(தொடரும்)