ராகு-கேது கோயில்கள்



ராகு-கேது பெயர்ச்சியால், கேதுவால் ஏற்படக்கூடிய பாதகங்களுக்கு பரிகாரத் தலமாக கீழ்ப்பெரும்பள்ளம் விளங்குகிறது. சௌந்தரநாயகியுடன் நாகநாதசுவாமி அருள்பாலிக்கும் இந்த ஆலயத்தில் கேது பகவான் தனிச் சந்நதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார், மோகினியாக உருமாறியிருந்த மகாவிஷ்ணு.

அப்போது தானும் அமிர்தத்தைப் பெற விரும்பிய ஸ்வர்பானு என்ற அசுரன், தேவர் வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை கவனித்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் புகார் செய்தார்கள். உடனே, ஏமாற்றிய ஸ்வர்பானுவை இருகூறாக்கினாள் மோகினி.

அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் மாறியது. தலைப்பகுதி பாம்பு உடலைக் கொண்ட கருநிற ராகுவாகவும், உடல் ஐந்து நாகத்தலைகளுடன் கூடிய செந்நிறமுடைய கேதுவாகவும் மாறியது. இந்த ராகுவும், கேதுவும் தவமியற்றி கிரக பதவி பெற்றனர். கேதுவின் நிறம் சிவப்பென்பதால் இவரைச் செந்நிற மலர்களாலும், செந்நிற ஆடையாலும் அலங்கரிப்பார்கள்.

இங்கே, நாகநாதசுவாமி, வாசுகியின் வேண்டுகோளின்படி கேது கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறார். கோயில் இருக்குமிடம் நாகநாதர் கோயில் எனவும், வாசுகி தவம் செய்த இடம் மூங்கில்தோப்பு எனவும் இன்றளவும் பெயர் வழங்கி வருகிறது. இத்தலத்தின் தலவிருட்சமும் மூங்கில்தான். கோயிலுக்கு முன்பாக நாகதீர்த்தக் கரையில் அரச மரமும் வேம்பும் இணைந்தே உள்ளதால் இங்குள்ள கேது சிலைகள் மீது மஞ்சளுடன் கூடிய தாலிக் கயிற்றைக்கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.  நாகை மாவட்டம், மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் தருமகுளம் என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

- குமார்