ராகு-கேது பரிகாரக் கோயில்கள்



நாகர்கோவில்

நாகவழிபாட்டிற்காக கோயில்கள் பல இருந்தாலும் நாகத்தின் பெயரையே கொண்ட நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் தனிச்சிறப்பு கொண்டது என்றே சொல்லலாம். நாகர்கோவில் ஊர்ப் பெயரும் நாகராஜா கோயிலை வைத்து ஏற்பட்டதே. மூலவர் நாகராஜா. இங்கு சிவன், திருமால். பாலமுருகனுக்கு தனித்தனி சந்நதிகள் உண்டு.

நாகராஜா, அனந்தகிருஷ்ணர் சந்நதிகளுக்கு இடையே அங்கியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. நாகராஜா கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  அக்கூரையில் எப்போதுமே பாம்பு காவல் புரிகிறது என்றும் வருடந்தோறும் ஆடி மாதம் கூரை புதிதாக வேயப்படும்போது ஒரு பாம்பு வெளிவருவது வழக்கம் என்றும் சொல்கிறார்கள்.

மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது. நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் நாகராஜா கோயில் அமைந்துள்ளது.

திருவாஞ்சியம்

முக்தி தரும் தலங்களில் திருவாஞ்சியமும் ஒன்று. திருவாஞ்சியம் இறைவனை எமன் வழிபட்டு பேறுகள் பெற்றார். கோயிலின்
வடபுறத்தில் குப்தகங்கை எனும் தீர்த்தக்குளம் உள்ளது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்குளத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும் என்பார்கள். மோகினி அவதாரத்தின்போது மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட அசுரன் ராகுவாகவும், கேதுவாகவும் உருமாறினான். பொதுவாக பிற கோயில்களில் தனித்தனி மூர்த்தியாக இவர்கள் காட்சியளிக்கிறார்கள்.

திருவாஞ்சியத்தில் மட்டும், அபூர்வமான ஒரே மூர்த்தியாக இணைந்து அருள்புரிகிறார்கள். இந்த அமைப்பு ‘சண்டராகு’ என்று சொல்லப்படுகிறது. தம் இருவரால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இருவரும் ஒருவராகத் தீர்த்து அல்லது குறைத்து அல்லது ஆறுதல்படுத்தி வைக்கிறார்கள்! திருவாரூர்-மயிலாடுதுறை வழியில் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாஞ்சியம்.

குன்றத்தூர்

நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர் யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாக கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார்.

இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டுவிட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள்.

நாகேஸ்வரர் சேக்கிழார்
பிரதிஷ்டை செய்ததல்லவா? அதனால் குளம்
திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார்
கனவில் பழையபடி மூலவர் இடத்திலேயே
நாகேஸ்வரரை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு வர,
பக்தர்கள் மீண்டும் நாகேஸ்வரரை மூலவராகவும்,
அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும்,  பிரதிஷ்டை செய்தனர்.

தாம்பரம், கோயம்பேடு, பூவிருந்தவல்லி
யிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

திருப்பாம்புரம்

இத்தலத்தில் ஓருருவாகி ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களுக்கு பாபங்கள் நீங்கப் பெறுகின்றன; நினைத்த காரியம் கை கூடுகிறது. ராகுவும், கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ளார்கள்.

ராகு கால வேளையில் இச்சந்நதியில் அபிஷேக அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுகின்றனர். உலகைத் தாங்கும் ஆதிசேஷன் சுமையால் உடல் நலிவுற்று வருந்தியபோது ஈசனின் ஆணைப்படி மகா சிவராத்திரியின் முதல் காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேச்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நாலாம் காலத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு விமோசனம் பெற்றதாக புராணம் சொல்கிறது. அதனால் திருப்பாம்புரத்தில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை என்பது ஐதீகம்.

இன்றும் இவ்வூர் சுவாமி சந்நதி கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாக சொல்லப்படுகின்றது. அவ்வப்போது சுவாமியின் திருமேனியில் மாலைபோல் சட்டையை உறித்து பாம்பு சென்று விடுவதே இதற்குச் சான்று. சிவாச்சாரியார்கள் கருவறையில் நுழையும்போதே ‘நாகராஜா, நாகேச்வரா’ என்று குரல் கொடுத்துக்
கொண்டுதான் வருவார்களாம். திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது திருப்பாம்புரம்.

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது அது நாகதோஷ பரிகாரத்தலம் என்பதுதான். ஏனெனில், ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதல பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு. இவ்விரு கிரகங்களில் தன் இரு தேவியரான நாகவல்லி-நாகக்கன்னியோடு, நாகநாதரின் அருள் சூழ, திருநாகேஸ்வரத்தில் மங்களமாக அமர்ந்திருக்கிறார், மங்கள யோக ராகு பகவான். கோயிலின் நிருதி மூலையில் நாகவல்லி-நாகக் கன்னியோடு கம்பீரமாய் வீற்றிருக்கிறார், ராகு பகவான்.

நாகதோஷமா, களத்திர தோஷத்தால் திருமணத் தடையா, சரியான வேலை கிடைக்காமல் அல்லாடும் இளைஞரா, பிரச்னைகளே வாழ்க்கையாகிப்போனதே என்று விரக்தியில் இருப்பவரா... இன்னும் எப்படிப்பட்ட, எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், தன் தரிசன மாத்திரத்தாலேயே தீர்க்கும் வல்லமை மிக்க சந்நதி அது. ராகு பகவான் முகம் முழுதும் பேரின்பம் தளும்ப, கருணை பொங்கும் கண்களோடு அருள் பாலிக்கிறார்.

அவருடைய இரு தேவியர்களும் ‘உங்களுக்கு என்ன குறை?’ என்று கருணை மிகுத்துக் கேட்கிறார்கள். ராகு பகவானுக்கு தினமும் ராகு கால நேரத்தில் பாலபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவதை காண உடல் சிலிர்க்கும். மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, முருகன், பிறையணிவாள் நுதல் அம்மை சந்நதிகள் சிறப்புற அமைந்துள்ளன. கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

பாமணி

மன்னார்குடியை அடுத்த பாமணியில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு தென்பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் பாமணி. ஒரு  காலத்தில் திருபாதாளேச்சுரம் என்றும், பாம்பணி என்றும் அழைக்கப்பட்டது மருவி, தற்போது ‘பாமணி’ என்றாகிவிட்டது. முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதன் முறையாக போருக்கு செல்லுமுன் இக்கோயிலுக்கு வந்து நாகநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றார்.  நாகநாத சுவாமி ‘சர்ப்பபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்பட்டார்.

இதனாலேயே இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. மாமரம். பிரம்ம தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம் ஆகியவை கோயிலின் புனித நீர்நிலைகளாக உள்ளன. நாகநாத சுவாமி கோயிலில் உள்ள தனஞ்செயர்,  ராகு-கேது தோஷப் பரிகார மூர்த்தியாக அருள்பாலித்து வருவது
கோயிலுக்குக் கூடுதல் சிறப்பு.

பேரையூர்

இந்த அருந்தலத்தை பேரேஸ்வரம் என்றும் செண்பகவனம் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்கமாக விரித்த நாகமோடு நாகநாதர் எனும் திருப்பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். அனைத்து நாக சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். யோகம் வளர்க்கும் இந்த நாயகர் இகலோகமான நம் வாழ்க்கையில் வேண்டுவன யாவையும் கேட்காமலேயே அருள்கிறார்.

சிவனின் சத்திய அம்சம் எத்தனை ரகசியங்களை தமக்குள் கொண்டிருக்கிறது எனும் பிரமிப்பு நாகநாதரை தரிசிக்கும்போது உணரமுடியும். முக்கியமாக நாகர் சிலைக்கு  பால் அபிஷேகம் செய்யும்போது உடலில் நீலநிறம் காட்டுவது அதிசயத்திலும் அதிசயம். நாகநாதஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனி கொடி மரம் இங்குள்ளது. இந்த தலத்தின் பிரதான விஷயமே நாத ஒலி எழும் சுனைதான்.

சுற்றிலும் நாகர்கள் படமெடுத்து காக்க என்றும் வற்றாத சுனைக்குள் நாகநாதரே அருவமாக வீற்றிருக்கிறார். என்றும் வற்றாதது இந்த நாகச் சுனையின் சிறப்பம்சமாகும். ரிஷிகளும், முனிவர்களும் வந்து சுனையில் கரையில் அமர்ந்து தவமியற்றி சென்றுள்ளனர். அதுபோன்று பாம்புப் புற்று இல்லாத தலம் இது. எவரையும் இந்த ஊரில் பாம்பு தீண்டியதில்லை.

அப்படியே தீண்டினாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை என்கிறார்கள். கௌதமர், ராமர், பெருழிழலை குரும்ப நாயனார், அகஸ்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர். இரட்டை விநாயகர், பொய்யாத விநாயகர், தேவ விநாயகர், தொடுவாய் விநாயகர் எனும் நாமங்களோடு ஆதிநாயகர் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். புதுக்கோட்டை-திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.