சோம்பல் சுகமல்ல, சோகமே!



குறளின் குரல் 25

புறப்படத் தயாராக இருக்கிறது ஒரு மரக்கலம். வாழ்க்கைக் கடலில் கரையோரமாக நின்று பயணிகளை எப்போதும் ஆசை காட்டி அழைக்கும் அழகான மரக்கலம் அது. `கெட்டழிவோர் கலம்’ என்று அதற்குப் பெயர்! அதில் ஏறினால் நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்குவது நிச்சயம்! இப்படித் தெரிந்த பின் யார் இதில் ஏறுவார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றும்?

அதுதான் இல்லை. இன்றளவும் இந்த மரக்கலம் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்தும் இதில் ஏறிப் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் அதனால் நடுவழியில் மூழ்குவோர் எண்ணிக்கையும் குறையவே இல்லை! இந்த மரக்கலத்திற்கு இப்படியொரு பெருமை! என்ன விந்தை இது!நான்கு விதமான குணங்களைக் கொண்டவர்கள் மிகுந்த ஆசையோடு இதில் ஏறுகிறார்கள்.

1. எதையும் காலம் கடந்து செய்பவர்களை இந்த மரக்கலம் மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்கிறது.
2. தாம் செய்ய வேண்டிய செயலை அடிக்கடி மறந்து போகிற ஞாபக மறதிக்காரர்களுக்கும் இந்த மரக்கலத்தில் கண்டிப்பாய் இருக்கை வசதி உண்டு!

3. அப்புறம் இருக்கவே இருக்கிறார் நம்மில் பலரின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய திருவாளர் சோம்பல் அவர்கள். அவரை நட்பாகக் கொண்டவர்களை இந்த மரக்கலம் அளவற்ற பிரியத்தோடு வரவேற்று மனப்பூர்வமான ஆதரவு தருகிறது.

4. தேவைக்கு மேல் நெடுநேரம் உறங்குபவர்கள் யாராவது உண்டா? வாருங்கள். இந்தக் கெட்டழிவோர் கலத்தில் ஏறி ஆனந்தமாகக் கெட்டழிந்து போகலாம்!
 இப்படியெல்லாம் சொல்வது யார் தெரியுமா? உலகம் போற்றும் ஒப்பற்ற புலவரான வள்ளுவப் பெருந்தகைதான்!
`நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்!’

(`எதையும் காலம் கடந்து செய்யும் குணம், ஞாபக மறதி, சோம்பல், மிதமிஞ்சிய உறக்கம் ஆகிய நான்கும் கெட்டொழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும்’ என்பது இக்குறளின் பொருள்.)

மடியின்மை என்ற 61ம் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் மட்டுமல்ல, மொத்தப் பத்துக் குறள்களுமே மனிதர்கள் சோம்பலின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உரத்து வற்புறுத்துகின்றன.

`மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.’ தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த எண்ணுபவர், தம்மை வந்து தாக்கும் சோம்பலை விலக்கி முயற்சியோடு முன்னேற வேண்டும். `படியடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ நாட்டை ஆளும் மன்னனின் தொடர்பு தானே கிடைத்தாலும் கூட, சோம்பல் உடையவர்கள் அத்தொடர்பால் எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள்.

`குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்!’

  ஒருவன் சோம்பலை ஒழித்து முயற்சியோடு வாழ முற்பட்டால் அவன்
 குடியில் புகுந்த குற்றம் அவன் திறமையால் மறைந்து அழியும்.
ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது.
கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது.

போதாக்குறைக்குச் சோம்பேறிகளுக்குத் தூக்கமும் அதிகம். தூங்கினால் உழைத்து முன்னேறுவது எப்படி?  `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!’ என முழங்கினார் வீரத் துறவி விவேகானந்தர். சோம்பல் என்ற சொல்லின் உச்சரிப்பைக் கூட அறியாதவர் அவர். இல்லாவிட்டால் தாம் வாழ்ந்த 39 ஆண்டுக்குள் உலகம் மெச்சும் உன்னதமான சாதனைகளை அவர் எப்படிச் செய்திருக்க முடியும்? பம்பரமாய் உலகம் முழுவதும் சுழன்று ஆன்மிகப் பெருமைகளை அகிலமெங்கும் பறைசாற்றிய பெருமகன். தம் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு உள்பட்ட வாழ்க்கைக்குள் நூறாண்டுக்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து அத்தனை ஆண்டு
செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்துமுடித்த தீரர்.

 யோசித்துப் பார்த்தோமானால் ஒன்று புரியும். பிறந்த குழந்தையாக இருந்த போதிருந்தா விவேகானந்தர் ஆன்மிகப் பணி செய்திருக்க இயலும்? கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், குருதேவர் பரமஹம்சரால் கவரப்பட்ட அவர், வாலிப வயதில்தான் ஆன்மிகப் பிரசாரக் களத்தில் குதித்திருப்பார்.

அப்படியானால் இன்று உலகம் அண்ணாந்து பார்த்து வியக்கும் அவரது சமூக மற்றும் ஆன்மிகப் பணிகள் அத்தனையையும் ஏறக்குறைய பதினைந்தே ஆண்டுகளில் முடித்துவிட்டார் அவர். பல இடங்களில் ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்தல், நாடெங்கும் சுற்றுப் பயணங்கள், ஓயாத சொற்பொழிவுகள், இரவெல்லாம் கண்விழித்து எழுதிய எழுத்துப் பணிகள், எந்நேரமும் படிப்பு, என்சைக்ளோபிடியாவை அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றலைத் தரக் கூடிய கல்வி என நாம் இப்போது நினைத்துப் பார்த்தால் அவர் மனிதரா இல்லை தேவ புருஷரா, எப்படி இத்தனை சாதனைகளைப் பதினைந்தாண்டுகளில் செய்து முடித்தார் என மலைப்புத் தட்டுகிறது.

ஓயாது உழைத்த அவர் உடல் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது. ஒரு கட்டத்தில் உடலின் உருக்கமான வேண்டுகோளை அவர் புரிந்துகொண்டார். ஒரு கிரகண புண்ணிய காலம். ஜபதபங்களை முடித்த அவர் `நான் இப்போது சிறிதுநேரம் உறங்கப் போகிறேன்!’ என்று தம் சீடர்களிடம் சொன்னார்.  சீடர்கள் வியப்போடு `
கிரகண நேரத்தில் உறக்கமா?’ எனக் கேட்டார்கள்.

`ஆம், என் உடல் ஓய்வை யாசிக்கிறது. கிரகண காலத்தில் எது செய்தாலும் அது பலமடங்கு பலன் தரும் என்றும் பல மடங்கு பின்னாளில் அந்தச் செயல் வளரும் என்றும் சொல்வார்கள். நான் இப்போது உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டால் அந்தக் குறுகிய கால ஓய்வு நீண்ட நேரம் ஓய்வெடுத்த பலனை என் உடலுக்குத் தரும். இனி வரும் நாட்களில் எனக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்கவும் சந்தர்ப்பம் நேரும். ஓய்வெடுக்கவே நேரமில்லாததால்தானே நான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்?’ என்று பதில் சொன்னார் விவேகானந்தர்.

  உடனிருந்த சீடர்களுக்கு அப்போதுதான் விவேகானந்தரும் மனிதப் பிறவிதான், அவருக்கும் ஓய்வு வேண்டும் என்ற உண்மையே உறைத்தது. நமக்கு ஒன்று புரிகிறது. மனிதர்கள் தெய்வ நிலையை அடைய வேண்டுமானால் அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும் என்பதுதான் அது.  அரவிந்தர், அன்னை போன்றோ ரெல்லாம் ஒரு நாளைக்கு இருபது மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள் என்பதைப் படிக்கும்போது பிரமிப்பேற்படுகிறது. உலகியல் முன்னேற்றங்களுக்கே சோம்பல் இல்லாத கடின உழைப்பு தேவைப்படுகிற போது, அதை விட உயர்ந்த ஆன்மிக முன்னேற்றம் பெறுவதற்கு அதனினும் அதிகமான உழைப்பு தேவைப்படும் என்பதுதானே உண்மை?

`மடியின்மை’ என்ற வள்ளுவரின் அதிகாரத்திற்கு விளக்கம்போல அமைந்து எளிய தமிழில் எல்லோரையும் கவர்ந்துள்ளது ஒரு திரைப்பாடல். நாடோடி மன்னன் திரைப்படத்தில் திருத்தமான உச்சரிப்புக்குப் புகழ்பெற்ற டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் அந்த கருத்துள்ள பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

 `தூங்காதே தம்பி தூங்காதே - நீ
 சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!’

 - என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல், `நாட்கள் முழுவதையும் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார், சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார், விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!’ என்ற வரிகளின் மூலம் சோம்பேறிகளின் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்கிறது.
எதையும் உடனுக்குடன் செய்யாமல் காலங்கடந்து செய்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை. எனவே காலந்தாழ்த்தும் இயல்பை வள்ளுவர் வன்மையாகக் கண்டிக்கிறார்.

 ஒரு சிறுகதைப் போட்டி நடக்கிறது. அதற்கென்று ஒரு கடைசித் தேதி நிர்ணயித்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான கதை ஒன்றை எழுதி, ஆனால் அந்தத் தேதி முடிந்த பிறகு அதை அனுப்பி வைத்தால் பரிசுபெற்றுப் புகழ்பெறக் கூடிய வாய்ப்பிருக்குமா? செய்ய வேண்டிய செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்தால்தான் வாழ்வில் வெற்றி பெற இயலும். விபத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய சிகிச்சையை அப்போதே செய்யாமல் அரைமணி
தாமதப்படுத்திச் செய்தால் என்ன ஆகும்? அவர் உயிரே போய்விடும்.

 ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
 கருதி இடத்தாற் செயின்.’
‘காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.’

  - என்றெல்லாம் மற்ற அதிகாரங்களிலும் காலத்தின் பெருமையைப் போற்றுகிறார் வள்ளுவர். எனவே வாழ்வில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்கள், சோம்பல் இல்லாமல் இருப்பதோடு செய்ய வேண்டிய செயல்களை அந்தந்தக் காலங்களில் செய்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தேர்வு முடிந்தபிறகு பாடப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை.

  மறக்காதீர்கள் என வள்ளுவர் குறிப்பிடுவதில் ஓர் உட்பொருள் இருக்கிறது. செயல்களை மறக்காமல் செய்வதோடு முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டும் என்பதும் அதில் அடங்கியிருக்கிறது. நாளை செய்து முடிக்க வேண்டிய செயல், நாளை மறுநாள் செய்து முடிக்க வேண்டிய செயல் என இரு செயல்களுக்கான கட்டாயம் உள்ளபோது, முதலில் உள்ள செயலை மறந்து அடுத்த செயலைச் செய்யக் கூடாது. எதை முதலில் செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்து முடிக்க வேண்டும். 

  பெரும்பாலான மனிதர்கள் ஒன்று கடந்த காலத்தில் வாழ்கிறார்கள் அல்லது எதிர்காலத்தில் வாழ்கிறார்கள். கடந்த காலத்தை அசைபோடுவதாலும் எதிர்
காலம் குறித்த கற்பனைகளாலும் நாம் நிகழ்காலத்தைக் கோட்டை விடுகிறோம். காரணம் நிகழ்காலத்தைப் பற்றிய ஞாபகம் நம்மிடம் இருப்பதில்லை.
  `கடந்த காலம் என்பது உடைந்த பானை.

எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை. நிகழ்காலம் என்பதே மீட்டிய வீணை!’ என்பது கவிஞர் தாராபாரதியின் சிந்தனை வரிகள். உடைந்த பானையால் எந்தப் பயனும் இல்லை. மதில் மேல் பூனை எந்தப் பக்கம் குதிக்கும் என்பது நமக்குத் தெரியாது. நிகழ்கால யாழின் இசையை அனுபவிப்போமே? நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய செயல்களை மறந்து விடாமலும் காலந் தாழ்த்தாமலும் அவ்வப்போது உடனுக்குடன் செய்வது வாழ்க்கையை வெல்ல விரும்பும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு.

 அளவுகடந்த உறக்கத்தையும் வள்ளுவர் கண்டனம் செய்கிறார். அதிக நேர உறக்கம் ஆயுளைக் கெடுக்கும் என நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. தெய்வத்தைக் கூடக் குறித்த நேரத்திற்கு மேல் உறங்கவிடாமல் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகிறோம் நாம். தெய்வங்கள் உறங்குவதுமில்லை. அது பாவனை உறக்கம் தான். அதை அறிதுயில் என்கிறார்கள். தூங்காமல் தூங்கும் தூக்கம் அது. அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே உறங்கும் உறக்கம்.

 தெய்வங்களே விழித்திருக்க வேண்டியது அவசியம் என்றால் மனிதர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? அதனால்தான் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடி பாரத மாதாவை விழித்துக் கொள்ளச் செய்தார் மகாகவி பாரதியார். பாரதமாதா விழித்துக் கொள்கிறாள் என்றால் பாரத மக்கள் அனைவரும் விழித்துக் கொள்கிறார்கள் என்றுதானே பொருள்?

  எனவே காலந்தாழ்த்தாமை, மறதி இல்லாமை, சோம்பலின்மை, அதிக நேரம் உறங்காதிருத்தல் என வள்ளுவர் சொல்லும் இந்த நான்கு பண்புகளைப் பழகிக் கொண்டால் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. இந்த நான்கு குணங்களில் சோம்பல் இல்லாமல் இருப்பதுதான் மிகக் கடினம். சோம்பல் தோன்றும்போதே அதை வெறுத்து ஒதுக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும்.

  யார் அதிகச் சோம்பேறி என்று கண்டறிய ஒரு போட்டி வைத்தார்கள். அதில் முதல் பரிசு பெற்றான் ஒருவன். பரிசை வந்து பெற்றுக் கொள்ளுமாறு,
பத்தடி தள்ளி அமர்ந்திருந்த அவனிடம் சொன்னார்கள்.  ‘அவ்வளவு தூரம் யார் நடப்பதாம்? இங்கே வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்,’ என்று சொல்லி எனக் கொட்டாவி விட்டானாம் அவன்!

 (குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்