ராகு-கேது சில சந்தேகங்களும், விளக்கங்களும்!



தெளிவு பெறு ஓம்

?நிழல் கிரகங்கள் என்றால் என்ன?
- திருவேங்கடம், வேலூர்.

ராகு, கேது ஆகிய இந்த இருவரையும் ‘ச்சாயா கிரஹம்’ என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழில் நிழல் கிரகங்கள். உண்மையில் பழங்கால சமஸ்
கிருத ஜோதிட நூல்களில் ராகு-கேது பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. உண்மைக்கோள்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழினைப் பற்றி மட்டுமே ஜோதிட நூல்கள் பேசுகின்றன. கிரகணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும், பின்னாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரகங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் நம்பத் தொடங்கினர். இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர்.

இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, புகை மண்டலமான, நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். ஒரு ஒளி மண்டலத்தில் ஒரு பொருள் குறிக்கிடுமானால் அந்தப் பகுதியில் ஒளி மறைக்கப்பட்டு அதனால் உருவாகும் கருமையான பிம்பமே நிழல். ஆனால்,  ராகுவும், கேதுவும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதே போன்று நிழல் என்பது, அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால்,  இவை இரண்டும் யாரையும் பின்தொடர்வது இல்லை. உண்மையில் இவை இரண்டும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலமான பகுதிகள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சரி, ஒரே இடத்தில் நிற்கக் கூடிய புள்ளிகள் என்றால் பிறகு ராகு-கேது பெயர்ச்சி என்பது என்ன? இன்ன ராசியிலிருந்து இன்ன ராசிக்கு இடம் பெயர்வதாகச் சொல்கிறார்களே, அது தவறா? இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன் என்பது ஒரு மிகப்பெரிய கோள் என்றும், அது ஒரே இடத்தில் நின்று, சுழன்று கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம் என்றும் படிக்கிறோம்.

ஆனால், மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அப்படியென்றால் இதில் எது உண்மை? உண்மையில் இந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்திருக்கிறோம். இந்த அண்டம் சுழன்றுகொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது.

ராகு, கேது  இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே நமது பூமியும் சுற்றி வருவதாலும் பூமியின் வசிக்கின்ற நம் கண்களுக்கு அவை பின்நோக்கி செல்வதாக தென்படுகிறது. ஓடுகின்ற ரயிலில் பயணிக்கின்ற நமக்கு அருகில் நிற்கின்ற ரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுவதுபோல, ராகு-கேது வக்ர கதியில், பின்நோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலக்கட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம்.

?நிஜ வாழ்க்கையில் நிழல் கிரகங்கள் என்ன செய்யும்?
- பூர்ணிமா பலராமன், கொண்டித்தோப்பு.

ஜோதிடவியல் ரீதியாக ராகு-கேது என்ற நிழல் கிரகங்களுக்கு என்று தனியாக எந்த ஒரு சக்தியும் கிடையாது. ஆனால், மற்ற கோள்களின் இணைவினைப் பெறும்போது அவற்றின் தன்மையை மாறுபடச் செய்யும் திறன் இவர்களுக்கு உண்டு. அதாவது , இவை இரண்டும் வேதிப் பொருட்கள் போல. உப்பு அல்லது சர்க்கரை என்று கூட வைத்துக்கொள்ளலாம். உப்பு பாலில் கலந்தால் பால் திரிந்து விடுகிறது.

சர்க்கரை சட்னியில் சேர்ந்தால் அதன் ருசியை மாற்றிவிடுகிறது. அதுபோல இந்த இரண்டு கோள்களும் ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள், எந்த கோளின் இணைவினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்கள் தரும் பலனின் அளவு மாறுபடும். பொதுவாக இவை இரண்டும் நேரடியாக வந்து சேர வேண்டிய பலனை மாற்றிவிடுவதால் இந்த இரு நிழல் கிரகங்களையும் தீய கோள்கள் என்றே சித்தரிக்கின்றோம். நிஜ வாழ்க்கையில் இந்த நிழல் கிரகங்கள் நமக்கு வந்து சேர வேண்டிய பலனின் தன்மையை மாற்றிவிடுகின்றன.

அது ஒரு சிலருக்கு நன்மையாகவும், ஒரு சிலருக்கு தீமையாகவும் அமைந்துவிடுகிறது. பொதுவில் இவை இரண்டும் அசுப கிரகங்களே ஆகும்.
அதனால் ஏழு கிரகங்களை விட இந்த நிழல் கிரகங்கள் அதிக பாதிப்பு அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதற்கு முன் கிரகங்கள் எவ்வாறு ஒருவர் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன என்று பார்க்கலாம்.

சூரியன், சந்திரன் முதலான ஏழு கிரகங்களுக்கும் தனித்தனியே சிறப்பு குணங்கள் உண்டு. இந்த கிரகங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது ஒவ்வொரு மனிதரின் ஜாதகத்திற்கு ஏற்ப அவர்மீது தனது தாக்கத்தினை உண்டாக்குகிறது. உதாரணமாக சந்திரனை எடுத்துக் கொள்வோம். ஜென்ம லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாத்வீகமான அழகினை உடையவர்களாகவும், அமைதியான குணத்தினை உடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால் மனிதரின் மனதை ஆளும் திறன் சந்திரனுக்கு உண்டு.

இந்த சந்திரனோடு ராகுவோ அல்லது கேதுவோ இணையும்போது, அதாவது, சந்திரனின் கதிர்வீச்சானது ராகு அல்லது கேது ஆகிய புகை மண்டலத்தினூடே புகுந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை கலந்ததாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக் கதிர்வீச்சு மனிதர் மீது விழும்போது அதன் உண்மையான பலன் மாறிவிடுகிறது. சந்திரனோடு ராகு இணையப்பெற்றால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள் ஆகவும், கேது இணையப்பெற்றால் மிகுதியான குழப்பத்தினை உடையவர்கள் ஆகவும் இருப்பார்கள். (குரு முதலான சுபகிரகங்கள் இணையப்பெற்றால் இந்தத் தாக்கம் குறைந்துவிடும்.)

 ஆக ஒரு கிரகம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவை இந்த இரண்டு நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரகங்களை விட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக்கூடியவையே என்று அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், இந்த பாதிப்பு, சிலருக்கு நன்மையாகக் கூட முடியும். பாதிப்புகளும் சிலர் வாழ்வினில் நன்மையை ஏற்படுத்துவதை நாம் காண்கிறோம்.

ஒரு வேலையும் செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்த ஒருவன் வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக லட்சக்கணக்கில் பெரும்தொகையை அவனுக்கு அளிக்கிறது, கால் நன்றாக இருந்த நிலையில் வெறுமனே ஊர் சுற்றிக்கொண்டிருந்த ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாத தொகையை அந்த விபத்து வழங்கிவிடுகிறது! ஆக இதுபோன்ற பலனை உண்டாக்குவதே இந்த நிழற்கோள்களின் பணி. கிரகங்களுக்கு இடையில் புகுந்து அவற்றின் பலனை மாற்றிவிடுவதால் ராகுவையும் கேதுவையும் பயம் கலந்த பக்தியுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது!

?காள சர்ப்ப தோஷமா, காள சர்ப்ப யோகமா? எது சரி?
 - நிரஞ்சன் குமார், முதுமலை.

தோஷம் என்றால் ஏதோ ஒரு பெரிய குறை என்றும், யோகம் என்றால் பெரிய அதிர்ஷ்டம் என்றும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். யோகம் என்ற வார்த்தைக்கு இணைவு என்பதே பொருள். இரண்டு கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒரு கிரகம் இணையும் பாவகம் என்பதைக் குறிப்பிடுவதற்காக யோகம் என்ற வார்த்தையை
உபயோகிக்கிறார்கள். ‘குரு சண்டாள யோகம்’ என்று ஒரு யோகம் உண்டு.

ஜாதகத்தில் குருவோடு சனி இணைந்திருந்தால் இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். குரு சண்டாள யோகம் என்றால் இது அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது அல்ல; குருவினால் உண்டாகும் நற்பலனை சனி குறைத்துவிடும் என்றுதான் பொருள். ஆயினும் இதனை யோகம் என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று மேம்போக்காகப் பொருள் காணக்கூடாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களின் இணைவு என்பதே யோகம் என்ற வார்த்தையின் பொருள். அதேபோன்று தோஷம் என்ற வார்த்தைக்கு ஏதோ மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று அர்த்தமில்லை. 

தற்கால ஜோதிடர்கள் காள சர்ப்ப தோஷம், காள சர்ப்ப யோகம் என்றும் இரண்டு விதமாக பலன் சொல்கிறார்கள். ஒரு மனிதருடைய ஜாதகக் கட்டத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையே எல்லா கிரகங்களும் அடங்கிவிடும் தன்மையை தோஷமென்றும், யோகமென்றும் இரண்டுவிதமாக பிரிக்கிறார்கள். ஜாதகக் கட்டத்தில் இடமிருந்து வலமாகக் காணும்போது ராகுவிலிருந்து தொடங்கி மற்ற ஏழு கிரகங்களும் உள்ளடங்கி கேதுவில் முடிந்தால் அதனை தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடிந்தால் அதனை யோகம் என்றும் பலன் உரைக்கிறார்கள்.

ராகு, மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர், கேது மனித உடலும் பாம்பு தலையும் கொண்டவர். உண்மைக் கோள்கள் ஆன ஏழும் பாம்பின் வாயை நோக்கி சென்றால், அதாவது, கேதுவை நோக்கி சென்றால் அது தோஷம் என்று விளக்கமும் சொல்வார்கள். தோஷ அமைப்பு உடையவர்கள் தனது வாழ்வில் முதல் 30 வருடங்கள் சுகத்தினையும் 30வயது முதல் 60 வயது வரை கடுமையான கஷ்டத்தினையும் அனுபவிப்பார்கள், மாறாக யோக அமைப்பு உடையவர்கள் முதல் 30வயது வரை அதாவது, இளமையில் துன்பத்தை அனுபவித்தாலும், 30 முதல் 60 வயது வரை உள்ள காலக்கட்டத்தில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள் என்றும் பலன் சொல்கிறார்கள்.

ஆனால்,  இந்த கருத்தினை அறிவியல் ஜோதிடர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. யோகம் என்று வைத்துக் கொண்டாலும், தோஷம் என்று வைத்துக் கொண்டாலும் அதனால் ஒன்றும் பெரிதாக பலன் ஏதும் மாறிவிடாது, இரண்டிற்கும் ஒரே மாதிரியான பலனே இருக்கும் என்பது கற்றறிந்த ஜோதிடர்களின் கருத்து. இதில் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் பரவலாக அமர்ந்திருக்க வேண்டும்; மாறாக ஒரு குறிப்பிட்ட பாவகங்களுக்குள் சென்று முடங்கிவிட்டால் அந்த ஜாதகத்திற்குப் பலன் குறைவாகவே இருக்கும் என்பதே.

பொதுவாக இந்த காள சர்ப்ப அமைப்பினைப் பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு எளிதாக திருப்தி அடைந்துவிடமாட்டார்கள். அதாவது, ஆத்ம திருப்தி குறைவாக இருக்கும். ஒரு சட்டை வாங்கச் சென்றால் கூட எளிதில் வாங்கிவிடாமல் அது சரியில்லை, இது சரியில்லை என்று பல்வேறு குறைகளைச் சொல்லி கடைசியாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அப்பொழுதும் திருப்தியடையாமல் இதைவிட நன்றாக வாங்கியிருக்கலாமோ என்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பார்கள். இதுதான் அவர்களது குணமாக இருக்குமே தவிர இந்த காள சர்ப்ப அமைப்பினை உடைய ஜாதகர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

?கொடுத்துக் கெடுப்பான் ராகு, அலைய வைப்பான் கேது என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
- ராதிகா பூர்ணலிங்கம், சேலம்.

ராகுவினை ஆங்கிலத்தில் Ascending Node, என்றும் கேதுவை Descending Node  என்றும் அழைப்பார்கள். அதாவது ராகு, தான் அமர்ந்திருக்கும் பாவகத்தின் தன்மையைக் கூட்டும் திறன் படைத்தவர். வேதியியலில் வினை ஊக்கி catalyst என்று சொல்வார்கள். ராகு, தான் இணைந்திருக்கிற கோளின் தன்மையையும், அமர்ந்திருக்கிற பாவகத்தின் தன்மையையும் வெகுவாக உயர்த்தி பலன் தரும் ஆற்றல் கொண்டவர்.

செவ்வாய் இயற்கையில் மிக வேகமாக, சுறுசுறுப்பாக செயல்படும் கிரகம். இந்த செவ்வாயோடு ராகு இணைந்தால் செவ்வாயின் வேகம் இன்னமும் கூடும். கும்ப லக்னத்தில் பிறந்த ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் பத்தாம் வீட்டில், அதாவது, விருச்சிகத்தில் செவ்வாயும், ராகுவும் இணைந்திருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் பாதுகாப்புத்துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கக்கூடியவராக இருப்பார். காவல்துறையில் பணிபுரிந்தால் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், தீவிரவாதிகளை வேட்டையாடும் வீரன் என்று புகழ் பெறுவார்.

இதனால் ராகு நற்பலனைத் தருகிறான் என்றே வைத்துக் கொண்டாலும், ஈவு, இரக்கம் ஏதுமின்றி இப்படி எத்தனை பேரை சுட்டுக் கொன்றிருப்பார் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளாவதோடு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய மனசாட்சியும் உறுத்தத் தொடங்கிவிடும். இந்தத் தன்மையைத்தான் கொடுத்துக் கெடுப்பான் ராகு என்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள், குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக உயர்ந்தவர்களின் ஜாதகங்களில் ராகுவின் தாக்கத்தைக்  காணமுடியும்.

நேர்மையான வழியில் சம்பாதிக்கும் யாராலும் மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக ஆக முடியாது. ஆக, மனசாட்சிக்குப் புறம்பாகவோ, சடத்திற்குப் புறம்பாகவோ எங்கோ ஏதோ ஒரு தவறினைச் செய்து அதன் மூலமாக சம்பாதிக்கும் தன்மையை ராகு தருகிறார். ஆனால், அதேசமயம் நீண்ட நாட்களுக்கு அந்த தவறினை மறைக்க ராகுவால் இயலாது.

அது தவறு என்று வெளியுலகிற்குத் தெரிந்து தண்டிக்கப்படும்போது மிகுந்த அவமானத்திற்கு அந்த மனிதர் உள்ளாகிறார். இதுவும் ராகுவினால் வருவதே. எனவேதான் கொடுத்துக் கெடுப்பான் ராகு என்கிறார்கள். அதேபோல கேது, தான் இருக்கும் இடத்தின் பலத்தை வெகுவாக குறைப்பார். லக்னத்தில் கேது அமையப் பெற்றவர்கள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

எங்கே தான் செய்வது தவறாகிவிடுமோ, தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம் அதிகமாக இருக்கும். எந்த பாவகத்தில் கேது சென்று அமர்கிறாரோ அந்த பாவகத்தின் வீரியத்தை கேது குறைப்பதால் ‘அலைய வைப்பான் கேது’ என்கிறார்கள். அதுவும் ஜீவன ஸ்தானத்தில் கேது தனியாக அமர்ந்திருந்தால் தொழில்முறையில் அதிக அலைச்சலைக் காண வேண்டியிருக்கும். சுக்கிரன்-கேது இணைந்திருந்தால் இரண்டும் கெட்டானாக அலைய வேண்டியிருக்கும்.

சுக்கிரன் அதிக ஆசையையும், சுகத்தினையும் தரக்கூடிய கிரகம். கேது அதற்கு நேர்மாறாக, ஒருவித விரக்தியான மனோபாவத்தைத் தரக்கூடிய கிரகம். இந்த இரண்டும் இணைந்து எந்த பாவகத்தில் அமர்கிறார்களோ, அந்த பாவகத்தின் பலன் சராசரிக்கும் சற்று குறைவாகவே இருக்கும். ஆக, ஒருவரின் ஜாதகத்தில் ராகு, கேது எந்த கிரகத்தின் இணைவினையும் பெறாமல் தனித்து அமர்ந்திருப்பதே நல்லது.

?யோக காரகன் ராகு, ஞான காரகன் கேது - ஏனிந்த முரண்பாடு?
- எஸ்.கே. கோபாலன், சிறுகளத்தூர்.

ராகுவிற்கு நேர் ஏழாம் பாவத்தில் கேது சஞ்சரிப்பார். அறிவியல் ரீதியாகச் சொல்வதானால், ராகு சஞ்சரிக்கும் பாகைக்கு நேர் எதிரே, அதாவது, சரியாக 180வது பாகையில் கேது சஞ்சரிப்பார். பொதுவாக ஒரு பாகைக்கு நேர் எதிர் பாகை என்பது எதிரான குணத்தையே பெற்றிருக்கும். அதனால்தான் ராகு அதிக ஆசை பிடித்தவர் என்றால், கேது ஆசையைத் துறந்தவராக இருக்கிறார். ராகு அதிக வேகம் கொண்டவராக செயல்படுவதால், கேது அதற்கு நேர் எதிரான குணம் கொண்டிருக்கிறார். உதாரணமாக, லக்னத்தில் ராகுவையும், ஏழாம் பாவத்தில் கேதுவையும் கொண்டவர்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள்.

லக்னத்தில் ராகுவைக் கொண்டவர் எதற்கெடுத்தாலும் அவசரப்படுபவராகவும், அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவராகவும் இருப்பார். அதே நேரத்தில் அவரது வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அவருக்கு நேரெதிராக ‘எது நடக்குமோ, அதுதான் நடக்கும்; நம்மால் என்ன ஆகப்போகிறது!’ என்ற குணத்தைக்  கொண்டவராக இருப்பார். பேராசைப்படுகின்ற குணத்தினை ராகு கொண்டிருப்பதால், அதனை சரிசமன் செய்யும் விதத்தில் முற்றும் துறந்த ஞானியாக கேதுவினை படைத்திருக்கிறான் இறைவன் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.

மாறாக இருவருக்கும் ஒரே குணத்தைத் தந்திருந்தால் என்னாகும்! அறிவியல் ரீதியாக யோசித்துப் பார்த்தால், நியூட்டனின் மூன்றாம் விதியும் நம் கவனத்திற்கு வரும். “For every action, there is an equal and opposite reaction” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இதன் அடிப்படையில்தான் இறைவனின் படைப்புகளும் அமைந்திருக்கின்றன. யோகம் என்று நாம் கருதும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருபவனாக ராகு இருப்பதால், அதற்கு நேர் மாறாக, எதன் மீதும் ஆசைப்படாத தன்மையைத் தருபவராக கேது செயல்படுகிறார். இதனை முரண்பாடு என்று எண்ணக்கூடாது.  இயற்கையின் நியதி என்றே கொள்ள வேண்டும்.

பொதுவாக ராகு-கேது இருவரையும் பாம்பு என்று மட்டும் எண்ணி அநாவசியமாக பயம் கொள்ளக் கூடாது. அவர்களுக்குள்ளேயே பலனை சமன் செய்யும் குணம் அமைந்திருப்பதால் அவர்களால் உண்டாகும் தீமையும், நன்மையும் சரிசமமாகவே இருக்கும். அதிக ஆசையும் தராமல், அதிக விரக்தியும் தராமல் இந்த உலக வாழ்க்கைக்கு எது தேவையோ அதனை சரியான அளவில் நாம் பெறுவதற்கு இறைவனைப் பிரார்த்திப்போம். வாழ்வினில் வளம் பெறுவோம்.