கழுதைக்குத் தெரிந்த கற்பூர வாசனை!



கரையபுரம்

நினைத்தாலே இனிக்கும் சோழ நன்நாட்டில் ஓடம் போக்கியாற்றின் கரையில் அமைந்த அதியற்புதமான திருத்தலம்தான் திருக்கரவீரம். காவிரித் தென்கரையின் தொண்ணூற்றாவது பதி இது. கரையபுரம் என்று தற்போது வழங்கப்படும் இப்பழமை வாய்ந்த பதி பிரம்மனாலும், கௌதம மகரிஷியாலும் வழிபடப் பெற்றதாகும். பொன் அலரி மலர் வனமாகத் திகழ்ந்த [கரவீரம்= பொன் அலரி] இப்பதியின் ஈசனை அதர்வண வேதம் வழிபட்டுள்ளது.

மகாலட்சுமியின் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த தலமிது. திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப் பெற்றது. அப்பர் பெருமான் தனது திருத்தாண்டகத்தில் வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இத்தலத்தைத் தொழுபவர்களுக்கு வினைகள் யாவும் ஒழியும். முன்வினை கெடும். துக்கம் தொலையும். இடர் நீங்கும், பாவம் அழியும் என்று பலவாறு புகழ்ந்துள்ளார் சம்பந்தர். இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருக்கோயில் எதிரேயுள்ள மண்டபத்தில் தங்கி,
உரையாடியதாகக் கூறுகின்றனர். 

நம் பாரத தேசத்தில் விளங்கும் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று உஜ்ஜயினி. இங்கு மகாகாளராக இறைவன் அருள்புரிகிறார்.நர்மதை நதிக்கரையில் மாகிஷ்மதி என்று ஒரு நாடு ஒன்று இருந்தது. சிம்மத்துவஜன் என்ற அரசன் இச்சிறிய நாட்டை ஆண்டு வந்தான். ஒருசமயம் வேட்டையாட வெகு தொலைவு சென்றுவிட்டான். மிருகம் ஏதும் கிட்டாத நிலையில் அயர்ந்து போனான். இளைப்பாறிட எண்ணினான்.

அப்போது அங்கே ஓர் ஆசிரமத்தைப் பார்த்தான். அது பரத்வாஜரின் குடிலாகும். உடனே அக்குடிலுக்குள் நுழைந்தான். தவத்தில் ஆழ்ந்திருந்த பரத்வாஜர் மகரிஷி. மன்னன் நுழைந்ததை அறியவில்லை. தன்னை அவர் மதிக்கவில்லை என்று நினைத்த சிம்மத்துவஜன் அவருடைய தவத்தை கலைத்தான். தவம் கலைந்த மகரிஷி சினங்கொண்டு,  “தவத்தை கலைக்கும் அளவிற்கு கர்வம் கொண்ட நீ, கழுதையாக மாறி, நாடெல்லாம் சுற்றித் திரிவாயாக!’’ என்று சாபம் தந்தார்.

செங்கோல் ஏந்தி யானை மீது ஒய்யாரமாய் வலம் வந்த நான், கழுதை உருவில் குப்பை மேடுகளில் திரிவதா?’ என்று கலங்கிய சிம்மத்துவஜன் முனிவரிடம் மன்னிப்போடு பரிகாரமும் வேண்டினான்.‘‘ஓங்கார ஒலி கேட்கும் இடமெல்லாம் வலம் வந்து, இறுதியில் ருத்திராட்ச மூட்டையைச் சுமந்து, காவிரி பாயும் நாட்டில் செல்லும்போது ‘பொன் அலரி’ பூத்திருக்கும் தலம் ஒன்றில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்’’ என அருளினார், பரத்வாஜ மாமுனிவர்.

நர்மதை நதி எங்கே, காவிரி தேசம் எங்கே, என மனம் நொந்த சிம்மத்துவஜன் திக்கு திசை தெரியாமல், கழுதை வடிவில்  சுற்றிவந்தான். வெண்கல
பாத்திர வியாபாரி ஒருவன் தனது பாத்திரங்களைச் சுமக்க கழுதை உதவிடுமே என்றெண்ணி, இக்கழுதையைக் கட்டி இழுத்துக் கொண்டான்! வெண்கல பாத்திர மூட்டையைச் சுமந்தபடி பல ஊர்கள் சுற்றி வியாபாரம் செய்தான்.

ஆங்காங்கே பல தெய்வீகத் தலங்களில் ஓங்கார ஒலியினைக் கேட்டது கழுதை. நாடுகள் பல சென்று தன் வியாபாரத்தை முடித்த வியாபாரி, இனி இக்கழுதையால் பயனில்லை என்று கருதி, அதை விரட்டியடித்தான். பின்னர், கௌரீமாயூரம் என்ற மாயவரத்தை (மயிலாடுதுறை) அடைந்து, காவிரியில் நீராடி, புத்துணர்வு பெற்றது கழுதை. மீண்டும் வேறொரு வியாபாரி ருத்திராட்ச மூட்டையினை அக்கழுதை மீது ஏற்றினான். அதனால் புதுத் தெம்பு ஏற்பட்டு, அவ்வியாபாரியை விட்டு அது ஓடியது. அவ்வாறு 12 நாட்கள் ஓடி, கடைசியாக ஓடம் போக்கியாற்றின், கரையில் செவ்வரளி மனங்கமழும் கரவீரம் என்னும் இத்திருத்தலத்தில் மூட்டையை தள்ளிவிட்டு, அங்கிருந்த அனவரத தீர்த்தத்தில் மூழ்கியது.

இப்போது சாபம் நீங்கப்பெற்று சுய உருவில் எழுந்தான் சிம்மத்துவஜன். சாபம் நீங்கிய நிலையில் இப்பதி ஈசனான கரவீரநாதரையும், பிரத்யக்ஷ மின்னம்மையையும் வணங்கி, வழிபட்டு நாடு திரும்பினான். இவ்வாறு கழுதைக்குக்கூட கற்பூர வாசனையை அறிய வைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய உன்னதத்தலம் இது.

குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் நாற்புறமும் ஓங்கிய மதில்கள் கொண்டு கிழக்கு முகமாகத் திகழ்கிறது. ராஜகோபுரம் இல்லை. விசாலமான உட்புற அமைப்பு. மையத்தில் முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றோடு இறைவன் சந்நதி பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானம் 65 அடி உயரம். அகண்ட மூலஸ்தானத்தில் ஆஜானுபாகுவாய் ஆறரையடி உயர லிங்கத் திருமேனி கொண்டு அடியவர்களை ஆட்கொள்கின்றார் திருக்கரவீரநாதர். பிரம்மபுரீஸ்வரர் என்றும் இவரை அழைப்பர்.

சுவாமிக்கு வலப்புறம் கல்யாண கோலத்தில் அம்பிகை, தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறாள். தான் சிவனுக்கு சரி நிகரானவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அம்பிகையின் உயரமும் ஆறடி! அழகிய நங்கை நிஜத்தில் நிற்பது போன்ற வசீகரம். பிரத்யக்ஷ மின்னம்மை என்கிற பெயர் தாங்கி பிரகாசிக்கின்றாள். அம்பாள் சந்நதியின் விமானமும் 55 அடி உயரத்தில் அற்புதமாக நிற்கிறது. கோஷ்ட தெய்வங்கள் முறையே அணிவகுக்க தலவிருட்சமான அலரிச் செடிகள் மேற்குப்புறத்தில் மணம் வீசுகின்றன. விநாயகர், ராஜகணபதியாக வீற்றருள்கின்றார்.

தீராத வெப்பு நோயால் அவதியுற்ற குறுநில மன்னன் ஒருவன் இத்தலத்தினில் நீராடி கரவீரநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் நடராஜர் சிலை ஒன்றை வடித்து, இத்தலத்திற்கு வழங்கினான். தற்போது பாதுகாப்பு கருதி இச்சிலை சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாதப் பெண்கள் அமாவாசை தினத்தன்று அலரிச்செடிக்கு நீர் வார்த்து, மூன்று முறை இச்செடியை வலம் வந்து வணங்குகின்றனர். பின்னர், அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி, தமது ஜாதகத்தை அம்மனின் திருப்பாதங்களில் வைத்து, அர்ச்சனை செய்கின்றனர். இதன்மூலம் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு, தூங்காமல் அழுதுகொண்டே இருந்தால், இங்கு வந்து செவ்வரளிச் செடிக்கு மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாள் பாதத்தில் மூன்று மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும்.

பிறகு அந்த மஞ்சளைத் தண்ணீரில் கரைத்து, அந்த நீரினில் குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் 10 கி.மீ. தொலைவில் ‘வடகண்டம்’ நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் கரவீரநாதர் ஆலயத்தை அடையலாம்.

- மோ.கணேஷ்