குரங்கு, அணில், காகம் பூஜித்த திருத்தலம்!



குரங்கணில்முட்டம்

ஆறறிவு கொண்ட மனிதனோடுநில்லாது, ஐந்தறிவு, நான்கறிவு, மூன்றறிவு கொண்ட விலங்குகளும் ஆதிபிரானை வணங்கி வழிபட்டு பேரருளினைப் பெற்றுள்ளன.அவ்வகையில் குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட ஓர் அற்புத திருத்தலம்தான் குரங்கணில்முட்டம்.

ஆதியில் இத்தல மூர்த்தியை பிரம்மதேவர் வழிபட்டுள்ளார். பின்னர், வினைப்பயன் காரணமாக ராமாயணக் காவிய வாலி-குரங்காகவும், தேவேந்திரன்-அணிலாகவும், எமதர்மன் - காகமாகவும் (முட்டம் - காகம்) உருவங் கொண்டனர்.விமோசனம் வேண்டி, மூவரும் சென்று கயிலையில் சிவபரம்பொருளிடம் முறையிட்டனர். ஈசன், காஞ்சிக்கு தென்பால் பாலாற்றங்கரைக்கு தெற்கே பிரம்மன் பூஜித்த தலத்தினில் எம்மை வழிபடுவீர்களாக என்று அருள்மொழிந்தார்.

அதன்படி காஞ்சிக்கு தென்பாலுள்ள தலத்தில் பிரம்மன் வழிபட்ட லிங்கத்தைக் கண்டனர். முதலில் வாலி வழிபட, குரங்கு வடிவம் நீங்கி, குரங்கு முகத்தோடு கூடிய மனித வடிவம் உண்டாயிற்று. பின், அணிலான இந்திரன் பூஜித்து தனது பழைய உருவினைப் பெற்றான். காகமான எமன், லிங்கத்தைச் சுற்றிலும் தனது அலகினால் கீறி, தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து நீர் எடுத்து, ஸ்வாமியைப் பூஜிக்க, விமோசனம் கிட்டியது.

இவ்வாறு குரங்கு, அணில், காகம் ஆகியவை வழிபட்ட காரணத்தினால் இந்தத் தலம் குரங்கணில்முட்டம் ஆனது. வாலி பூஜித்தமையால் இத்தல ஈசன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.தொண்டைநாட்டின் தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் 32ல் 6வதாகப் போற்றப்பெறும் இவ்வாலயம் கி.பி.637ம் ஆண்டு  மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பட்டதாகும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். சுந்தரர் தனது திருஇடையாற்றுப் பதிகத்தில் இந்தத் தலத்தை வைப்புத்தலமாகப் போற்றியுள்ளார். வள்ளல் ராமலிங்கர் தனது அருட்பாவில் இத்தலத்தினை குறிப்பிட்டுள்ளார். பட்டினத்தார் பாடிய க்ஷேத்திரக் கோவையிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.
மேற்கு முகம் கொண்ட சிறியதொரு ஆலயம். ஆலயத்தைச் சுற்றிலும் தல தீர்த்தமான காக்கைமடு தீர்த்தம் எனப்படும் எம தீர்த்தம் அகழிபோன்று அழகு சேர்க்கின்றது. மூன்றுபுறமும் நீர்சூழ, கோட்டை வளாகத்துள் அமைந்துள்ளதுபோல் உள்ளது ஆலயம்.

முதலில் நந்தி மண்டபம். வெளிச்சுற்றில் தல விருட்சமான இலந்தை மரம் உள்ளது. அடுத்தடுத்து முழுவதும் மூடுதளமாக அமையப்பெற்ற சந்நதிகள். நுழைவாயிலின் வெளியே இரு பக்கங்களிலும் தல வரலாற்றுப் படைப்புச் சிற்பங்கள் கவினுற வடிக்கப்பட்டுள்ளன.உள்ளே இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி, சிறிய அர்த்த மண்டபம். பின் கருவறை. அங்கே பூரணகங்கணதாரிணி எளிய உருவில் அரிய பல வரங்களைத் தந்து அருட்தரிசனம் தருகின்றாள். தீந்தமிழில் ‘‘இறையார் வளையம்மை’’ என்றழைக்கப்படுகின்றாள். கரங்களில் வளையலணிந்து என்றும் இளமையோடு இருப்பவள் என்பது பொருளாகும்.

அம்மையை வணங்கி, வலம் வந்து சிவபெருமான் சந்நதி அடைகின்றோம். இடை மண்டபம் சற்று பெரியது. அதையடுத்து அர்த்த மண்டபம், கருவறை. கருவறையுள் பேரருள் பிரவாகமாய்ப் பிரகாசிக்கின்றார் வாலீஸ்வரர். சிறிய லிங்கம். எனினும் பெரிய வரங்களை அளிப்பவர்.கல்வெட்டில் இப்பெருமான் குரங்கணில்முட்டமுடைய நாயனார், கொய்யாமலை ஈஸ்வரதேவர், கொய்யாமலைநாதர் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பெற்றதைக் காணமுடிகிறது.உள்வலம் வருகையில் தேவகோட்டத் தெய்வங்களோடு, காசி விஸ்வநாதர்-

விசாலாட்சி, பைரவர், சூரியன், சப்தமாதர்கள், திருஞானசம்பந்தர், சேக்கிழார், நால்வர் மற்றும் நவகிரகங்களை வணங்குகின்றோம்.ஸ்வாமி சந்நதியைச் சுற்றிலும் அகழி அமைப்பு காணப்படுகின்றது. தல விநாயகராக மூஞ்சுறு விநாயகர் திகழ்கின்றார். வள்ளி-தெய்வானை உடனுறை சுப்ரமணியரின் தனிச் சந்நதி வாயு மூலையில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் சம்புவராயரின் ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் பரவிக்கிடக்கின்றன.

அழகிய ஆலயம் அமைதியும் ஆனந்தமும் அளிக்கின்றது. 1984 மற்றும் 1997 ஆண்டுகளில் குடமுழுக்கு கண்டுள்ளது.சனிக்கு அதிபதி எமன் என்பதாலும், தேவகுருவுக்கு அதிபதி இந்திரன் என்பதாலும் சனி மற்றும் குருவுக்கான பரிகாரத்தலமாகவும் இக்கோயில் விளங்குகின்றது.இத்தல அம்பிகைக்கு ஏழு வெள்ளிக்கிழமைகள் விரதம் அனுஷ்டித்து வழிபட, சுகப்பிரசவம் காணலாம்.காஞ்சிபுரம்-வந்தவாசி பேருந்து வழித்தடத்திலுள்ள தூசியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைதுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 12 கி.மீ.

- பழங்காமூர் மோ.கணேஷ்