போரிடுதல் என்பது ஓர் அறமே!



பகவத் கீதை 9

இந்தப் போரை அராஜகமான முறையில் அர்ஜுனன் மேற்கொள்ளவில்லை என்பதை மீண்டும் மீண்டும் கிருஷ்ணன் வலியுறுத்தினான். அதோடு, இந்தப் போர் அவசியத்தை உருவாக்கியவனும் அவனில்லை. போரிடுவது என்று தீர்மானித்தவன் துரியோதனன்தான். அதாவது, துரியோதனனும் அவனைச் சார்ந்தவர்களும். நம்மோடு பழகியவர்கள் மீது போர்த் தொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் இந்தப் போருக்கு வித்திட்டவன் அவன்.

அப்படி அவன் துவக்கிய போரில் எதிர் சமர் புரியவேண்டிய நிலைக்கு அர்ஜுனனும், பிற பாண்டவர்களும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்என்பதுதான் உண்மை. ஆனால், அப்படித் தூண்டியவர்களை எதிர்க்கப் புறப்பட்ட அர்ஜுனன், இப்போது மயங்கித் தயங்குவதேன்? எதிரிகளை அவன் உடலாய் பார்ப்பதன் கோளாறு இது.

போர் என்று வரும்போது மரணித்து வீழும் உடல்களைப் பார்த்து அந்த ’உடலுக்கு’ சொந்தம் கொண்டாடுபவர்கள் வேண்டுமானால் அழுது வருந்தலாமே தவிர மற்றபடி ஒரு போரில் அந்த வீழ்ச்சியால் வெற்றி பெற வேண்டியவன் வருந்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்படிப்பட்ட மன விலகலை அர்ஜுனன் கைக்கொள்ள வேண்டாமோ? ஒரு புதிராய், கவலைக் குவியலாய் அவன் குமைந்து போயிருப்பது இந்த சமயத்தில் பொருந்தாதல்லவா!

அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரதஅவ்யக்தநிதனான்யேவ தத்ர கா பரிதேவனா‘‘எதிரே இருப்பவர்கள் உனக்கு எப்போது அறிமுகமானார்கள்? உனக்கு விவரம் தெரியவந்த காலத்தில் உன் உறவினராக, உன் ஆசானாக, உன் நண்பனாக அறிமுகப்படுத்திவைக்கப்பட்டவர்கள்தானே? அதற்கு முன்னால் அவர்கள் எங்கிருந்தார்கள், நீ எங்கிருந்தாய்? போர் என்றில்லாமல் இயற்கையாகவே மரணம் எய்துவதாக வைத்துக்கொண்டால், அந்த மரணத்துக்குப் பிறகு அவர்கள் எங்கே இருக்கப்போகிறார்கள், நீ எங்கே இருக்கப்போகிறாய்?

இதற்கு உன்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், உயிர்கள் ஆரம்பத்தில் தோன்றுவதில்லை; அவை வெறுமே, இடையிலே தோன்றுபவைதான்; அதேபோல இறுதியில் தோன்றாமலும் போய்விடக்கூடியவை. ஆகவே இதுகுறித்து வருத்தப்படுவானேன்?’’ஆரம்பத்தில் தோன்றாமலும், இறுதியிலும் தோன்றாமலும், இடையில் தோன்றுபவர்கள் கனவில் தோன்றுபவர்களுக்கு ஒப்பானவர்கள். தூக்கம் என்ற செயலில் கனவு என்பது ஒரு மாய அம்சம். தூங்கப் போகுமுன்னால் தான் சிந்திக்காதவர்களை, ஒருவனது தூக்கத்தில், கனவில் காணலாம்; அதேபோல தூக்கம் கலைந்த பிறகு, கனவும் கலைந்துவிடும் என்பதால் பிறகு அவர்கள் தோன்றமாட்டார்கள்.

ஒரு கனவைப்போல, இடையில் தோன்றி மறையும் உருவங்கள், காட்சிகள் போலத்தான் உயிர்களைத் தாங்கியிருக்கும் இந்த உடல்களும். கனவுகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ, கனவில் கண்ட காட்சிகள் எப்படி யதார்த்தத்துக்கு உட்படாமல் மறைந்துவிடுகிறதோ அதுபோல உன் எதிரே நிற்கும் உயிர் கொண்ட உடல்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் கொடுக்கவேண்டாம்; அதனால் அவர்களை மாய்ப்பதில் எந்தத் தயக்கமும் கொள்ள வேண்டாம் என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினான்.

அதேசமயம் ஒரு விஷயத்தை உறுதிபடுத்துகிறான் கிருஷ்ணன். அது - ஆத்மா நிரந்தரமானது, அதற்கு அழிவில்லை, அது தனித்தன்மை கொண்டது. அதனாலேயே அர்ஜுனன் ஆறுதல் அடையலாம் - தான் முழுமையாக எதிரிகளை அழித்துவிடவில்லை என்று! கொல்லப்பட முடியாத அவர்களுடைய ஆத்மாக்கள் அடுத்த உடல்-உயிரைத் தேடிப் பயணப்படுவதற்கு தான் ஒரு கருவியாக அமைந்ததற்கு அர்ஜுனன் பெருமைதான் படவேண்டுமே தவிர, இனி பார்க்கப்பட முடியாத உடலுக்காக வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆஸ்சர்யவ்த்பச்யதி கஸ்சிதேனம்
ஆஸ்சர்யவத்வததி ததைவ சான்ய
ஆஸ்சர்யவச்சைனமன்ய ச்ருணோதி
ச்ருத்வாப்யேனம் வேத ந சைவ கஸ்சித்

‘‘ஆத்மாவை ஒவ்வொருவரும் தத்தமது நோக்குப்படி காண்கிறார்கள். சிலருக்கு அந்த ஆத்மா ஆச்சரியமூட்டுகிறது. ‘நிரந்தரமானதா இது!’ என்று வியப்பு மேலிடக் கேட்கிறார்கள் சிலர். ‘இது என்ன விந்தை!’ என்று பிரமிக்கிறார்கள் சிலர். ஆனால், வேறு சிலரோ ஆத்மாவைப் பற்றிக்
கேள்விப்பட்டும், விளக்கச்சொல்லிக் கேட்டும் அதைப் புரிந்துகொள்ளாதவர்
களாக, ஆத்மாவை அறிந்துகொள்ளாதவர்
களாக, அதற்கு இயலாதவர்களாக இருக்கிறார்கள், சிலர்!’’

உலகியல் பொருட்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆத்மா. உலகில் ஜனித்தவர்கள் அடையும் இன்ப துன்பங்களை அது அடைவதில்லை. ஒரு உடலுக்குள் உயிரைப் போலவே ஆத்மாவும் இருந்தாலும், அது தனித்தே நிற்கிறது. ஒரு உடலின், ஒரு உயிரின் வாழ்நாள் காலம்வரை அவ்விரண்டுடன் சேர்ந்திருக்கவேண்டிய பொறுப்பில் ஆத்மா இயங்குகிறது. அப்போதும் உடலின் ஈர்ப்புகளுக்கோ, உயிரின் நிரந்தரமற்ற தன்மைக்கோ தன்னை நெகிழ்த்திக்கொள்ளாமல் நழுவிவிடும் தனித்தன்மை கொண்டது. சரி, இனி இந்த உடல், உயிரில்லை; அடுத்தது எந்த உடல், எந்த உயிர் என்று அது காத்திருக்கிறது.

அது ஒரு தனி அணுப்பொறியாக இயங்குகிறது. ஓர் உடலிலிருந்து ஓர் உயிரிலிருந்து அது தானாக விடுதலை  பெற முயன்றதில்லை. எந்த காரணத்துக்காகவாவது உயிர் உடலைவிட்டுப் பிரியுமானால் அதுவரை பொறுமையாகக் காத்திருந்து பிறகுதான் இன்னொரு உயிர், உடலைத் தேடி அது
செல்கிறது. ஆகவே ஆத்மா அரூபமானதானாலும், ஆதாரபூர்வமானது, நிலைத்திருப்பது!
தேஹீ நித்யமவத்யோயம் தேஹே
ஸர்வஸ்ய பாரத
தஸ்மத்ஸர்வாணி பூதானி நத்வம்
சோசிதுமர்ஹஸி

‘‘அர்ஜுனா, உடல்கள் அனைத்திலும் உறையும் தன்மை கொண்டது ஆத்மா. இந்த ஆத்மாவை யாராலும் வதைக்க முடியாது. அது தன்னிச்சையானது. ஆகவே உடல்களும் அவற்றின் உயிர்களும் மாய்க்கப்படுவது குறித்து நீ வருந்தவேண்டிய அவசியமில்லை.’’ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு உதாரணம் சொல்கிறார். ஒருவன் தன் அறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறான். உறக்கத்தின் நடுவே ஒரு கனவு. அதில் அவனுடைய உடலை யாரோ துண்டு துண்டாக வெட்ட முயற்சிக்கிறார்கள். உடனே பதறிப்போய், திடுக்கிட்டுத் துள்ளி எழுகிறான்.

தூக்கத்தோடு கனவும் கலைந்துவிடுகிறது. ஆனாலும் அவனுக்குக் கனவின் தாக்கம் அதிகமாகிறது. அது உண்மையென்றே அவன் நம்புகிறான். அதனால் தான் படுத்திருக்கும் கட்டிலை விட்டு இறங்கி சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவனைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. ஆனாலும் பயத்தால் அவன் சுற்றுச் சூழலை நம்ப மறுக்கிறான். கனவில் தோன்றியது மாயக்காட்சிதான், உண்மையல்ல என்று சிந்திக்க மறுக்கிறான். சந்தேகத்துடன் கதவைப் பார்க்கிறான். அது உட்பக்கமாகத் தாளிடப்பட்டிருக்கிறது. ஆகவே யாரும் கதவைத் திறந்துகொண்டு உள்ளேவர வாய்ப்பில்லை. தான் இங்கே தூங்க வருமுன்னாலேயே யாரும் வந்து
ஒளிந்துகொண்டிருக்கவும் முடியாது.

அதனால் தான் உணர்ந்ததெல்லாம் வெறும் கனவுதான், நினைவு அல்ல என்ற முடிவுக்கு வருகிறான். இப்படி வெற்றுக் கனவுக்கு அவன் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் என்ன? தன் உடல் மீது அவன் கொண்டிருக்கும் பற்றுதான். எறும்புகள் தன் கால்களைக் கடிப்பதற்கும், திருடர்கள் தன்னைத் தாக்குவதற்கும் ரமண மகரிஷி அனுமதித்தார் என்றால், அதற்கு அவர் தன் உடல்மீது சிறிதளவும் பற்றின்றி இருந்தார் என்பதுதான் காரணம்.

தந்தையின் மரணத்துக்குப் பிறகு, தான் அதுவரை ‘அப்பா’ என்று அழைத்தது யாரை? இதோ இறந்துபோய் உணர்வற்று வீழ்ந்திருக்கும் இந்த உடலையா? அதாவது,ப்போதிலிருந்து தனக்கு ‘அப்பா’ இல்லையா? அப்படியானால் இனி தனக்கு யார் அப்பா? என்றெல்லாம் கேள்விகள் புறப்பட, அவர் உண்மையான ‘அப்பா’வைத் தேடி திருவண்ணாமலை சென்றார்.

அவ்வாறு செல்லுமுன் தான் தன் வீட்டாருக்கு எழுதிவைத்த கடிதத்தில்கூட ‘இது போகிறது’ என்றுதான் தன்னைக் குறிப்பிட்டிருந்தார். தன் உடலுக்கும், உயிருக்கும் அவர் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவுதான்.இப்படி ஞானிகளும், மகான்களும் புரிந்துகொண்ட உடல்-உயிர்-ஆத்மா தத்துவத்தை அர்ஜுனனும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கிருஷ்ணன் எதிர்பார்க்கிறான்.

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோன்யத்
க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

‘‘அர்ஜுனா, போர் புரிவது என்பது ஒரு க்ஷத்ரியனைப் பொறுத்தவரை ஓர் அறம்தான். தன் உயிருக்கும் மேலாக அவன் இந்த அறத்தைப் போற்றி வளர்க்க வேண்டும். வீணாக மனம் கலங்கி இந்த அறத்திலிருந்து நீ வெளிவரலாகாது. இப்படி இந்தப் போர் அறத்தைப் போற்றுவதைத் தவிர வேறு சிறப்பு ஓர் அரசனுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொள்.’’

எப்போது ஓர் அரசன் போர் என்ற அறத்திலிருந்து வழுவுகிறானோ அப்போதே அவனை மறம் சூழ்ந்துகொள்கிறது. போர் புரிவது என்ற அறத்தை ஒவ்வொரு மன்னனும் பேணவேண்டியது அவசியம். உயிர்க் கொலை, உடல் வேதனை என்று மயங்கிப் போரைத் தவிர்ப்பவன் ஒரு க்ஷத்ரியனாக இருக்க மாட்டான். குறைந்தபட்சம் தானாக வலியச் சென்று போரிடாமல், தன்மேல் திணிக்கப்படும் போரை எதிர்கொள்பவனாகவும், வீரத்துடன் எதிரிகளை மாய்ப்பவனாகவும் இருக்க வேண்டியவன்தான் மன்னன்.

வேறொரு நாட்டின் மீது படையெடுத்து பலவீனர்களைத் தாக்கி, அழித்து அவர்களையும் அவர்களுடைய சொத்துகளையும் சூறையாடு
பவன் அறம் சார்ந்த போராளி இல்லை என்றாலும், அப்படித் தன் மீது போர்தொடுப்பவனை எதிர்க்காதவன் ஒரு கோழைதான்.

இந்த சமயத்தில் உயிர்ப்பலி, உடல் வேதனை என்றெல்லாம் உணர்வுபூர்வமாக சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தானானால் அவன் மறம் வளர்ப்பவனாகிறான்; அறவழியிலிருந்து விலகுகிறான். தர்மத்திலிருந்து பிறழ்கிறான். அதாவது, சுயதர்மத்தைக் கைவிடுகிறான். போரிடுவதும், போரை எதிர்கொள்வதும் ஒரு அரசனின் தலையாய கடமை. அது தர்மத்தைச் சார்ந்தது; தர்மக் கொள்கைகளை நிலைநாட்டுவது.

ஆகவே இதில் தயக்கம் கொள்வதில் அர்த்தமில்லை. அந்தத் தயக்கத்துக்கு என்ன காரணம் சொன்னாலும் அது தன் பலவீனத்தை மறைக்கக் கருதிதான் சொல்லப்
படுகிறது. அது தன் இயலாமையை இந்தப் போர்வையால் மூடிக்கொள்ளத்தான். ஆகவே அர்ஜுனன் கிஞ்சித்தும் தயங்கத் தேவையில்லை. சுயதர்மத்தை நிலைநாட்ட அவன் வீறுகொண்டெழத்தான் வேண்டும்.

யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வாரம
பாவ்ருதம்
ஸுகின க்ஷத்ரியா பார்த்த லபந்தே
யுத்தமீத்ருசம்

‘‘அர்ஜுனா, இது நீயாக விரும்பி மேற்கொண்ட போரல்ல; வலிய வந்தது. நீ கேட்காமலேயே உன்னை வந்தடைந்தது. ஆனாலும் இது பெறற்கரிய ஒரு பேறுதான். ஆமாம், நீ எதிரிகளை வென்றால், உனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ராஜ்ஜியத்தை ஆள்வாய்; மாறாக மரித்தால், உனக்காக சொர்க்கலோகக் கதவுகள் திறந்திருக்கும். அதனுள் புகுந்து இந்தப் போரில் ஈடுபட்டதற்கான பலனை நீ அனுபவிக்கலாம். இது ஒரு பாக்கியம். க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே கிட்டியிருக்கும் அரிய பாக்கியம்.’’

‘இந்தப் போரால் எனக்கு எந்த நன்மையுமில்லை; என் சொந்த பந்தங்களை, குருமார்களைக் கொன்றுவிட்டு ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய எனக்கு விருப்பமில்லை. அப்படிச் செய்தேனானால் நான் நரகத்துக்குதான் போவேன்,’ என்று விரக்தியாக ஏற்கெனவே சொன்ன அர்ஜுனனுடைய மனோபாவத்தை மீண்டும் கண்டிக்கிறான் கிருஷ்ணன். தன்னுடைய கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில், போர்க்களத்தில், அஹிம்ஸையைப் பற்றிப் பேசும் அவனுடைய விசித்திரமான மனப்போக்கை கேலி செய்கிறான். போரின் பேரின்பப் பின்விளைவான சொர்க்க வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் தான் பாழும் நரகத்துக்குதான் போவேன் என்று உளறும் அவனுடைய அறியாமையை எள்ளிநகையாடுகிறான் கிருஷ்ணன்.

தன்னைச் சார்ந்த குடிமக்களின் நலன் காக்க ஓர் அரசன் போர் மேற்கொள்வது உயர்ந்த தர்மம் என்று விவரிக்கிறது பராசர ஸ்ம்ருதி. அதுமட்டுமல்ல, தன் மக்களிடையே சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட சில கடுமையான தண்டனைகளை விதிக்கவேண்டியதும் அந்த அரசனின் கடமைதான். அந்த சமயத்தில் அவன் பச்சாதாபம் பார்க்க முடியாது; யாருக்காகவும் பரிதாபப்பட முடியாது.

தன் மகன் ஒரு பசுங்கன்றைத் தேர்ச் சக்கரத்தால் கொன்றான் என்பதற்காக சொந்த மகனென்றும் பாராமல் அரச தர்மத்துக்கு எடுத்துக்காட்டாக அவனை அதே தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கத் துணிந்த மன்னன் மனுநீதிச் சோழன் அறம் காத்தவன் என்று பாராட்டப்பட்டான். ஆகவே தர்மம் தழைக்க மன்னன் எடுக்கும் நடவடிக்கைகள் எதையும் வன்முறை வரையறைக்குள் கொண்டுவர முடியாது. அவன் விதிக்கும் தண்டனைகள் எல்லாமே அறம் சார்ந்தவையே.

எப்படியாயினும் இந்தப் போரிலிருந்து விலகிக்கொள்ள அர்ஜுனனுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை. போரை அவன் எதிர்கொள்ள வேண்டியதுதான்; அதன் பின்விளைவுகளை அவன் அனுபவிக்கவேண்டியவன்தான்!அர்ஜுனா, போர் புரிவது என்பது ஒரு க்ஷத்ரியனைப் பொறுத்தவரை ஓர் அறம்தான். தன் உயிருக்கும் மேலாக அவன் இந்த அறத்தைப் போற்றி வளர்க்கவேண்டும். வீணாக மனம் கலங்கி இந்த அறத்திலிருந்து நீ வெளிவரலாகாது.

(தொடரும்)

ஸ்வாமி தேஜானந்த மகராஜ்