பரப்பிரம்மத்தை நோக்கிய பார்வையே தியானம்!



ஓஷோ தியானத்தின் பாதை

பார்ப்பதையும் கேட்பதையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டுமே நம்முடைய இயல்புகள். நாம் ஏதும் பண்ணாமலிருந்தாலும் இவையிரண்டும் இருக்கும். நமது சுயமான இவ்விரு இயல்புகளும், இடைவிடாது நம்முள்ளேயே உள்ளன. நிரந்தரமாகவும் இடைவிடாமலும் நம்முள் இருப்பதைத்தான் சுய இயல்பு என்கிறோம். இந்த சுய இயல்பு, நம்முடைய படைப்பு அல்ல. இது நம்முடைய அடிப்படை.

நம் அஸ்திவாரம். நாம்தான் இது. நாம் இதை படைப்பது கிடையாது. அதனால் நிலைநிற்கின்றோம். ஆகவேதான், நம்மை நிலைநிறுத்தி வைத்துள்ள இதை, நாம் தர்மம் என்கின்றோம். தர்மா என்றால் சுய இயல்பு. சுயத்தின் இயல்பு. தர்மா என்றால் சத்தியத்தின் இருப்பு. அதுவே ஆன்மா.

அங்கொன்றும் இங்கொன்றுமான நாம் நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கும்நடவடிக்கைகளால், நம்முடைய இந்த இடைவிடாத சுய இயல்பு அமுக்கப்பட்டுள்ளது. சமுத்திரம் அலைகளால் சூழப்பட்டுள்ளதைப் போல, நாம் நம்முடைய நடவடிக்கைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளோம். மேற்பரப்பில் ஒன்றன் மேல் ஒன்றாக
அடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், ஆழத்திலுள்ள சமாச்சாரத்தை மறைத்துள்ளன.

ஒப்புயர்வற்ற சமுத்திரத்தின் அடியாழத்து ரகசியங்களை பைசா பெறாத அலைகள் மறைத்து நிற்கின்றன. மாசுபடாத இறைமை, ஒன்றுக்கும் உதவாத நமது நடவடிக்கைகளால் அமுக்கப்பட்டுள்ளது என்பது, கண்ணில் விழுந்த ஒரு சிறு தூசி மலைகளையே மறைத்து விடுவதும்தான். என்னே ஒரு விந்தை!

ஆனால், அலைகள் இருப்பதனால்சமுத்திரங்கள் காய்ந்து விடுவதில்லை. சொல்லப்போனால் அலைகளிலிருக்கும் அதே உயிர்ப்புத்தான் சமுத்திரத்தின் அடியிலும் நிலைபெற்றுள்ளது. ஞானம் எய்தியவர்கள், அலைகளிலும் சமுத்திரத்தை அடையாளம் காண்பார்கள்.

ஆனால், பிறரோ, அலைகள் அடங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். சமுத்திரத்தின் நிசப்த அமைதியை அவர்களால் அலைகள் அடங்கிய பிறகுதான் காண முடியும். ஆக, அரவமற்ற, சாந்தமும், கருணையும் ததும்பும் சலனமேயில்லாத தூய அறிதல்தான் நம் சுய இயல்பு. சுய இயல்பு என்பதற்குள் நாமே முன்வந்து குதித்து விட வேண்டும். அலைகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் கடலுக்குள் குதித்து விட வேண்டும். நமக்குள் எங்கு சுயம் உள்ளது, நம்முடைய ஆன்மா உள்ளே எங்குள்ளது, இறைமை உள்ளுக்குள் எங்கே உறைகின்றது என்பதை, அதன் ஆழத்துக்குப் போய் நாம் கண்டாக வேண்டும்.

அலைகளற்ற மேலும் சலனங்கள் அற்ற இப்பிரக்ஞை எப்போதும் நம்முள் இடம்பெற்றுள்ளது. ஆனால், நாம்தான் அவ்விடத்தில் இடம்பெறாமல் இருக்கின்றோம்.
அதிலிருந்து நாம் விலகித் திரும்பி நிற்கின்றோம். வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம். உலகத்தை, உலகத்து பொருட்களை நாம் கவனித்துக் கொண்டு நிற்கின்றோம். ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாம் பார்க்கிறோம். எது பார்க்கப்படுகின்றதோ அது உலகம். ஆனால், உள்ளேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே அவன் உலகம் கிடையாது. அதுவே சுயம்பு ஆன்மா.

எந்தப் பொருளை பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பொருளுடன் நாம் பார்க்கும் செயல் அடையாளம் காணப்படுமேயானால், அதுவே சிந்தனை, எண்ணம். ஆனால், பார்க்கும் செயல், பார்க்கப்படும் பொருளோடு சம்பந்தப்படாமல் அந்த பரப்பிரம்மம் நோக்கி திரும்பி இருந்தால், அதுவே தியானம். சிந்தனை அல்லது எண்ணம் என்பதற்கும் தியானம் என்பதற்குமான என்னுடைய வேறுபாட்டினை உங்களால் கிரகிக்க முடிகின்றதா?

‘பார்த்தல்’ என்பது எண்ணத்திலும் இடம் பெறுகின்றது தியானத்திலும் இடம்பெறுகின்றது. ஆனால்,  முன்னதில் பொருள் சார்ந்தும் பின்னதில் அப்படி இல்லாமலும் அமைகின்றது. ஆயினும் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது தியான லோகத்தில் இருந்தாலும் சரி, செயல்களில் உழன்று கொண்டிருந்தாலும் சரி அல்லது அவற்றிலிருந்து சுதந்திரம் அடைந்தவ்ர்களாக ஆகியிருந்தாலும் சரி, ‘பார்த்தல்’ என்பது நிரந்தரம்.

விழித்திருந்தால் நாம் உலகத்தைப் பார்க்கிறோம். தூங்கினால் கனவினைப் பார்க்கிறோம். தியானத்தில் நாம் நம்முடைய சுய ஆன்மாவை பார்க்கிறோம். ஆனால், இம்மூன்றிலும் ‘பார்த்தல்’ நிரந்தரமாய் இடம்பெறுகின்றது.

‘பார்த்தல்’ என்பது நிரந்தரமானது. இடைவிடாதது. இது நம் இயல்பு. எந்நிலையிலும் இதுஇல்லாமல் போவதில்லை. சுயநினைவு அற்ற மயக்க நிலைகளிலும் பார்த்தல் எனும் செயல் உள்ளது. மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்ததும் ‘‘எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே? நான் எங்கே இருந்தேன்? இது என்ன இடம்?’’ என்பார்கள். இதனை தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லும் ஓர் உளறல் என்று நினைக்காதீர்கள். தெரிந்த விஷயத்தைச் சொல்வதுதான் இது.

‘பார்த்தல்’ என்பது முழுமையாக இடம்பெறாமல் போயிருந்தால், ‘நான் எங்கே இருந்தேன்?’’ என்று சொல்வது சாத்தியமில்லை. அப்படி ஆகியிருந்தால், மயக்க நிலையில் நீங்கள் இருந்தபோது கடந்து சென்ற முழுக்காலமும் உங்களைப் பொறுத்த மட்டில் இல்லாத ஒன்றாய் ஆகியிருக்கும். உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாய் அது ஆகியிருக்கவே முடியாது. உங்கள் நினைவில் அது எவ்விதமான தடயத்தையும் விட்டிருக்காது.

ஆனால், நடக்கும் எதையும் தெரிந்து கொள்ள முடியாத ஏதோவொரு நிலையில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். Unconsciousness ஆயினும் இதுவும் அறிதல்தான். பார்த்தல் எனும் செயலும் இதில் உள்ளது. இக்கால கட்டத்தில், உள்ளார்ந்த அல்லது வெளியுலகம் சார்ந்த நிகழ்வுகள் எதையும், ஞாபகம் பதிந்துக் கொள்ளாது.

ஆனால்,உங்களது பார்வை இந்த காலத்தினை நிச்சயம் கவனித்துள்ளது. இந்த இடைவெளியை உங்கள் பார்வை நிச்சயம் அனுபவித்துள்ளது. இந்த இடைவெளியில் ஏற்பட்ட அனுபவத்தின் பதிவு, பிறகு ஞாபகத்துக்கும் தெரிந்த ஒன்றாய் ஆகி விடுகின்றது.

இதே போலத்தான், கனவுகள் கூட இடம்பெற முடியாத ஆழ்ந்த தூக்கங்களில், ‘பார்த்தல்’ தவறாமல் இடம்பெறுகின்றது. தூங்கி எழுந்திருக்கும்போது, ‘கனவுகள் கூட இல்லாமல் ஆழ்ந்து தூங்கினேன்’ என்று நம்மால் சொல்ல முடிகிறதென்றால், இந்த நிலைமையும் கவனிக்கப்பட்டிருக்கிறது
என்றுதான் அர்த்தம்.

இவற்றையெல்லாம் அசை போட்டு நீங்கள் ஒரு சாராம்சத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகள் மாறுபடும். பிரக்ஞையின் போது இடம்பெறும் காட்சிகள் வேறுபடும். ஆனால், இந்த ‘பார்த்தல்’ என்பது மாறுவதில்லை. நம் அனுபவங்களின் எல்லைக்குள் இருக்கும் அனைத்தும் மாறுகின்றன; அனைத்தும் மாறுதலுக்குட்பட்டுள்ளன. ‘பார்த்தல்’ எனும் செயல் மட்டும் எப்போதும் உள்ளது. அனைத்து மாறுதல்களுக்குமான ஒரே சாட்சி, இதுதான். எல்லா ஓட்டங்களுக்குமான சாட்சி. உள்ளே இறைமையாய் உறைந்துள்ளது இது.

ஆகவே, என்றென்றும் இங்குள்ள இந்த ‘தெய்வீகப் பார்வையை’ உணர, அனுபவிக்க. ஒருவருடைய சுயம் எனும் ஆன்மாவை தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒன்று மட்டுந்தான் ஒரு மனிதனின் சுய இயல்பு. மற்ற அனைத்தும் புறமானவை. ஏனைய அனைத்தும் வேற்று கிரக வஸ்து போன்றவை. அவைதான், உலகம். இந்த சாட்சியை, எவ்விதமான புனஸ்காரங்களினாலும், எவ்விதமான வழிபாடு அல்லது பூஜைகளாலும்.

எவ்விதமான மந்திரம் அல்லது தந்திரத்தாலும் எட்டிவிட முடியாது. ஏனெனில் இவை அனைத்திலிருந்தும் இது தனித்து நிற்பது, பிரித்து நிற்பது, இவற்றால் தொடமுடியாதது. பார்க்கக்கூடிய அல்லது பண்ணக்கூடிய அனைத்திலிருந்தும் இது தனித்து நிற்பது. வேறுபட்டது. இதனை எதையாவது பண்ணுவதால் அனுபவிக்க முடியாது. எதையும் பண்ணாமல் இருப்பதால்தான் அனுபவிக்க முடியும்.

செயல்களால் அல்ல, வெறுமனே மாறுவதால்! எந்த விதமான நடவடிக்கைகளும் இல்லாதபோதுதான், பார்க்க எப்பொருளும் இருக்காத போதுதான், இதனை உணர முடியும். சாட்சி மட்டும் தங்கி நிற்க, ‘பார்த்தல்’ மட்டுமே மிஞ்சும்போது இதனை அனுபவித்து விட இயலும். பார்த்தல் எனும் செயலிலிருந்து ஆனால், பார்க்க ஒன்றுமே இல்லாத காலத்தில். அறிதல் எனும் செயலிலிருந்து ஆனால், அறிய ஒன்றுமே இல்லாத காலத்தில், இப்படிப்பட்ட ஒரு பொருளடக்கம் இல்லாத பிரக்ஞையின் எல்லையில், அனைத்தும் அறிந்த பரப்பிரம்மத்தினை அறிய முடியும்.

பார்க்க ஒரு பொருளும் இல்லாத நிலையில் ஞானியின் முன்னாலிருந்த திரை விலகி விழுந்து விடுகின்றது. அறிந்து கொள்ளஒன்றும் பாக்கியில்லாத நிலையில், ‘அறிதல்’ எழுகின்றது, அதாவது, ஞானம் விளைகின்றது. அலைகள் இல்லாதபோது தெரிவதென்ன? சமுத்திரம் மட்டும்தானே? மேகங்கள் இல்லாத போது நீலவானம் மட்டுமே புலர்கின்றது. இந்த சமுத்திரமும். இந்த நீலவானமும், வெற்றிடமாயுள்ள இந்த பிரபஞ்சமும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளன. இவற்றை நாம் அறிந்து கொள்ள விரும்பினால், அது இயலும்.

இப்பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் செல்ல ஒரு பாதையுள்ளது. அதுவும் நம் எல்லோரினுள்ளேயும் இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் அந்தப் பாதையில் எப்படி நடந்து செல்வது என்பதும் தெரியும். ஆனால், அதில் ஒரேயொரு திசையில் நடக்க மட்டுமே நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

ஒரே திசையில் மட்டும் செல்லும் பாதை ஒன்று இருக்கவே முடியாது என்ற உண்மையை நீங்கள் ஒரு தடவையாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஒவ்வொரு பாதையும் இரண்டு திசைகளில் செல்வதைத் தவிர்க்கவே முடியாது. இரண்டு எதிரெதிர் திசைகளில் இப்படி அமையவில்லையென்றால் அது பாதையாகாது.

அப்படியொரு பாதை இருக்க முடியாது. மலைகளும் குன்றுகளும் நிறைந்து தனிமையிலிருக்கும் இந்த பிரதேசத்துக்கு உங்களைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கும் அதே பாதைதான் உங்களை மறுபடியும் உங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்து செல்லப் போகின்றது. வருவதற்கும் போவதற்கும் உள்ளது ஒரே பாதைதான். இரண்டு காரியங்களுக்கும் அதே பாதையே உதவும். பாதை அதேதான். ஆனால், திசைகள் ஒன்றே கிடையாது.

உலகவியலில் நம்மை கட்டி வைத்திருப்பது ஒரு பாதை. சுயத்தை அறிய நமக்கு உதவவுள்ள பாதையும் ஒரே பாதைதான், அதே பாதைதான். ஒரே பாதையே,
சம்சாரம் ஆட்டிப் படைக்கும் உலகவியலுக்கோ அல்லது சுயம் நோக்கிய ஆன்ம பிரதேசத்துக்கோ நம்மைக் கொண்டு செல்கின்றது. திசைகள்தான் மாறுபடுகின்றன. இதுவரை உங்களுக்கு முன்னால் என்ன இருந்ததோ அது இப்போது உங்களுக்குப் பின்னால் அமையும்.

இதுநாள் வரை உங்களுக்குப் பின்னால் இருந்த வஸ்துவை நோக்கி உங்கள் கவனத்தை நீங்கள் இனி திருப்ப வேண்டும். சாலை ஒன்றுதான். நீங்கள் வெறுமனே திரும்ப வேண்டும். முதுகுபுறம் நோக்கி, எதனை நோக்கிக் கொண்டு நீங்கள் இருக்கிறீர்களோ அதன் பக்கமாய் உங்களுடைய முதுகினைத் திருப்பி விட்டு, உங்களுக்குப் பின்னால் என்ன இருந்ததோ அதனை நேராய்ப் பாருங்கள்.

(தொடரும்)
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.