என்ன சொல்லுது எதிர்காலம்?



கவலைப்படாதீர்கள், நல்லதே நடக்கும்!

? என் பெரிய மகன் பிறந்ததிலிருந்தே பலவித உடல் உபாதைகள் அனுபவித்து வந்தான். இன்ஜினியரிங் படிப்பை முடிக்கவில்லை. நல்ல பேர் புகழுடன் இருந்தவன், இப்போது எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியுள்ளான்.

ஒரு பெண்ணால் அவன் படிப்பு, நல்ல வேலை எல்லாம் குடும்பத்தாரையே உதாசீனப்படுத்துகிறான். அவனுக்கு இதயத்தில் சிறிய பிரச்னை மற்றும் வலிப்பு நோயும் உள்ளது. அவனுக்கும் அவன் மூலமாக எங்கள் குடும்பத்திற்கு நல்ல வழியைக் காட்டுங்கள். 

 - கலைமதி சுகுமார், காட்டுச்சேரி.

உங்கள் மகனின் ஜாதகத்தை சர்வார்த்த சிந்தாமணி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மகன் கும்பலக்னம், சிம்ம ராசியிலே பிறந்திருக்கிறார். பிறக்கும்போதே லக்னாதிபதி சனிபகவான் வக்ரமாகி கும்ப லக்னத்திற்கு எதிரி கிரகமான செவ்வாயின் பார்வையில் அமர்ந்திருந்ததால் பள்ளி அல்லது கல்லூரி படிப்பு தடைபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அதோடு, பூர்வ ஜென்ம தொடர்புள்ள சொந்தபந்தம், உறவுகளெல்லாம் இவர் வாழ்க்கையில் புகுந்து சலனங்களையும், சங்கடங்களையும் ஏற்படுத்தவும் கூடும். அதுமட்டுமில்லாமல் மனோகாரகனான சந்திரனுடன் கேது ராசிக்கட்டத்தில் இருப்பதும், நவாம்ச கட்டத்தில் மனோகாரகன் சந்திரனுடன் ராகு நிற்பதும், கும்ப லக்னத்திற்கு அதிபதியாகிய சனியுடன் நவாம்சத்தில் கேது சேர்ந்திருப்பதால்தான், இவருக்குக் கல்லூரி வாழ்க்கையில் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுக்கிரதசை, சூரியதசை, சந்திரதசை, செவ்வாய் தசை எல்லாம் முடிந்து 15.7.2014 முதல் ராகுதசை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராகு மகாதசை பதினெட்டு வருடங்களுக்கு இருக்கும். அந்த ராகுமகாதசையில் தற்சமயம் ராகுபுக்தி 26.3.2017வரை நடைபெறும்.

 பிறக்கும் போதே ராகு லக்னத்தில் அமர்ந்திருப்பதனாலும், பகைவீட்டில் நிற்பதாலும் இவருடைய நடத்தையை ராகு மாற்றியமைத்துள்ளார். யாரேனும் அன்பாகப் பேசினாலோ அல்லது புகழ்ந்தாலோ அவர்கள் நல்லவர்கள் என்று கருதி அவர்கள் பின்னால் போக வைக்கக்கூடியது ராகு. அதேபோல நவாம்சத்திலும் மனோகாரகன் சந்திரனுடன் இந்த ராகு சேர்ந்திருப்பதால்தான் இந்த ராகுதசை, ராகுபுக்தி காலம் இவருக்கு மிக்க சவாலான காலமாகும். கோச்சார கிரகத்தை அடிப்படையில் இப்போது ஜென்மகுரு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நடத்தை ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். அதன்படி இவருடைய அடிப்படை நடத்தை 2014 டிசம்பர் மாதம் முதல் மாறிவிட்டிருக்கிறது. ஜாதகத்தில் யோகாதிபதியாகிய சுக்கிரன் வலுவாக காணப்படுகிறார். அதாவது, ராசிக்கட்டம், நவாம்ச கட்டம் மற்றும் தசாம்சம் போன்ற முக்கியமான கட்டங்களை பார்க்கும்போது யோகாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்போது இந்த பெண்ணுடன் ஏற்பட்டுள்ள காதல் நிரந்தரமானது அல்ல. இது காதல் அல்ல; இது ஒருவிதமான ஈர்ப்பு.

ராகுதசை, ராகுபுக்திதான் இதற்குக் காரணம். 26.3.2017வரை அவர்கள் இருவருக்கும் அந்த ஈர்ப்பு இருந்து கொண்டிருக்கும். 27.3.2017 முதல் ராகுமகாதசையில் குருபுக்தி தொடங்கும். அதுமுதல் படிப்பு, உத்யோகம்தான் முக்கியம் என்பதை உணர்வார். அதுமுதல் அவருக்கு மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணிற்கும் தெளிவு பிறக்கும். மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல இடத்தில் திருமணம் முடியும்; உத்யோகமும் கிடைக்கும்.

தற்சமயம் மகனுக்கு நிகழ்ந்துள்ள இந்த திடீர் மாற்றம், குழப்பங்களிலிருந்து விடுபடுவதற்கு கும்பகோணத்திற்கு அருகில் அருள்பாலிக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று தரிசித்து வருவது நல்லது. விதவைப் பெண்ணிற்கும் வெள்ளி தானம் கொடுங்கள். ஆதரவற்ற பெண்ணிற்கும் ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். இந்தப் பரிகாரங்களால் ராகுவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கும். எல்லா வகையிலும் நன்மையும் உண்டாகும். அவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு தேர்ச்சியும் பெறுவார். வருங்காலத்தில் நல்ல இடத்தில் திருமணம் முடியும்.

? என் மகளுக்கு 26 வயது. திருமணத்தடை ஏற்படுகிறது. இப்போது செய்யும் வேலை கஷ்டமாகவும், சம்பளம் குறைவாகவும் உள்ளன. வங்கி வேலைக்கான தேர்வை எழுதி இருக்கிறாள். அது கிடைக்குமா? வேறு நல்ல வேலை கிடைப்பதற்கும், திருமணம் நல்லபடியாக நடப்பதற்கும் பரிகாரம் கூறவும். கோபம் குறையவும் வழி கூறுங்கள்.
- ஒரு வாசகர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை ஜாதக அலங்காரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மகள் கன்யா லக்னம், கன்னியா ராசியிலே பிறந்திருக்
கிறார். லக்னாதிபதி புதன் ஜாதகத்தில் உச்சமாகியிருக்கிறார். யோகாதிபதி சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கிறார். ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதி சனி வலுவடைந்திருக்கிறார். முக்கியமான கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் சிறப்பாக இருக்கிறது. ஆனால், கோச்சாரத்தில் 27.12.2014 வரை ஏழரைச்சனி நடைபெற்றது.

இதனால்தான் இதுவரை சரியாக வரன் எதுவும் அமையவில்லை. ஏழரைச்சனி முடிந்தவுடன் ராகு,  ராசியிலேயே வந்து அமர்கிறார். கோச்சார கிரகங்கள் அடிப்
படையில் 2016, மார்ச் முதல் மகளுக்கு நல்ல காலகட்டம் தொடங்குகிறது. லக்னாதிபதி லக்னத்திலேயே இருப்பதால் நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் உண்டு. ஏழாம் அதிபதி அதாவது, மாங்கல்ய ஸ்தானத்திற்குரிய குருபகவான் பத்தாம் வீட்டில் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருப்பதனால், நீங்கள் எச்சரிக்கையுடன் திருமணம் செய்ய வேண்டும். நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய், கேது மூன்றும், லக்னத்திற்கு பன்னிரண்டில் மறைந்திருப்பதால் மகளுடைய மனம், குணத்தை அனுசரித்துப்போகக் கூடிய வரனாகப் பார்க்க வேண்டும்.

 தசாபுத்தி அடிப்படையில் சூரியதசையும், சந்திரதசையும், செவ்வாய் தசை எல்லாம் முடிந்து தற்சமயம் ராகுமகாதசை நடைபெறுகிறது. 27.4.2013 முதல் 3.3.2016 வரை ராகு தசையில் சனிபுக்தி நடைபெறும். இது மிகவும் மோசமான காலக்கட்டமாகும். மகளுக்கு உடல்நலக் குறைவு, தாழ்வுமனப்பான்மை, உத்யோகத்தில் சின்னச் சின்ன அவமானங்கள், மரியாதை குறைவான சம்பவங்கள், நிம்மதியற்ற போக்கு என் ஏற்படக்கூடிய காலக்கட்டம். ஆனால், கோச்சார கிரகங்கள், தசாபுக்திகள் அடிப்படையில் 4.3.2016 முதல் ராகு மகாதசையில் புதன்புக்தி தொடங்குகிறது.

 புதன்  மகளுக்கு லக்னாதிபதியாகவும், ராசிநாதனாகவும் இருப்பதுடன் பிறக்கும்போதே புதன் உச்சம் பெற்று காணப்படுவதால் புதன் புக்தி மிக அருமையான காலக்கட்டமாக இருக்கும். 4.3.2016 முதல் திருமணயோகம் கூடி வருகிறது. அதன் பின்னர் நல்ல உத்யோகமும் கிடைக்கும். சம்பாத்தியமும் அதிகமாகும். நல்ல குடும்பத்திலிருந்து வரனும் வந்தமையும். ஏழுக்குரிய கிரகம் கேந்திராதிபத்திய தோஷம் அடையாத ஜாதகமுள்ள வரனை உங்கள் மகளுக்கு சேர்ப்பது நல்லது. அதனால் மகளுக்கு மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கவும், கோபமெல்லாம் குறையவும் உங்கள் மகளை திருப்பதிக்கு அழைத்துச் சென்று, கீழிருந்து மலைக்கு நடந்து சென்று வெங்கடாஜலபதியை வணங்குங்கள்.

அதனால் தோஷங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறி சந்தோஷமும் நிலைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமைதோறும் ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். எல்லா வகையிலும் உங்கள் மகளுக்கு நல்லது நடக்கும்.

? என் மகள் எம்.ஈ. இறுதியாண்டு படித்து வருகிறாள். அவளுக்கு வேலை வாய்ப்பு எப்படி, எப்போது அமையும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? எப்படிப்பட்ட கணவன் வருவார்? எதிர்காலம் சிறப்பாக அமையுமா? வெளிநாடு செல்லும் யோகம் இருக்கின்றதா?
- ஏ.வள்ளி, திருவெறும்பூர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை யவன காவியம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். விருச்சிக லக்னம், மீன ராசியிலே பிறந்திக்கிறார். றக்கும்போதே லக்னாதிபதி செவ்வாய் கேந்திரபலம் அடைந்து லக்னத்தை பார்ப்பதால்  மகளுக்கு தைரியம், சாதூர்யம், நிர்வாகத்திறமை எல்லாம் உண்டு. ஆயுள்காரகனான சனியும், ஆயுள் ஸ்தானாதிபதியான புதனும் வலுவடைந்திருப்பதால் தீர்க்காயுசு யோகமும் உண்டு. நவாம்சத்திலும் முக்கிய கிரகங்கள் வலுவடைந்திருப்பதால் நல்ல எதிர்காலம் உள்ளது. தசாபுக்திகளின்படி குரு மகாதசை, சனி மகாதசையெல்லாம் முடிந்து தற்சமயம் புதன் மகாதசை நடைபெறுகிறது.

இந்த புதன் மகாதசையில் புதன் புக்தி 7.2.2016 வரை நடைபெறும். கேது புக்தி 4.2.2017 வரை நடைபெறும். புதன் மகாதசை, புதன் புக்தி காலத்தில் ஆரோக்ய குறைவு, முன்கோபம் எல்லாம் இருந்து கொண்டிருக்கும். அதன் பின்னர் வரக்கூடிய கேது புக்தி தசாநாதனாகிய புதனுக்கு பன்னிரண்டாவது வீட்டிலிருப்பதால் அதுவும் சுமாராகத்தான் இருக்கும்.

திருமணத்தை சரியான பொருத்தம் பார்த்துச் செய்வது நல்லது. தசாபுக்திகள் அடுத்தடுத்து சாதகமாக இல்லாததனால் 2016 வருடத்தை விட்டுவிட்டு 2017ல் திருமணம் முடிப்பது நல்லது. 5.2.2017 முதல் புதன் மகாதசையில் சுக்கிரபுக்தி ஆரம்பமாகிறது. இது மூன்று வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்த சுக்கிரபுக்தி காலத்தில் மகளுக்குத் திருமணம் முடிப்பது தான் மிகவும் நல்லது. 2017ல் நல்ல வரன் வரும்; சீரும், சிறப்புமாக திருமணம் முடியும். மகளின் உத்யோக ஸ்தானத்தை பார்க்கும்போது பத்தாம் வீட்டில் அசுரகுருவாகிய சுக்கிரனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியும் அமர்ந்திருப்பதனால் தனியார் துறைதான் சிறப்பாக இருக்கும். அரசு வேலை அமைவது கொஞ்சம் கடினம். ஆனால், நடப்பு தசாபுக்தி, அரசு கிரகமான சூரியனுடன் சேர்ந்த புதன் தசையாக இருப்பதால் நேரடி அரசாங்கப் பணி கிடைப்பது கடினம். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கிடைக்கலாம். ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் கோதண்ட ராகு இருப்பதால் ஆசிரியப்பணி இன்னும் சிறப்பாக இருக்கும்.

எனவே, கல்லூரி ஆசிரியப் பணிக்கான முயற்சிகளில் இறங்கலாம். ஏழாவது வீட்டில் செவ்வாய், எட்டாவது வீட்டில் கேது, ஏழுக்குரியவரான சுக்கிரன் பத்தில் இருப்பதால் மகளுக்குக் கணவர் அந்நியத்தில்தான் அமைவார். புது உறவுதான்; எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தோஷத்திற்கு தோஷம் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை செய்யும் வரன் அல்லது அங்கே வேலை பார்த்து விட்டு தற்சமயம் உள்ளூரில் பணிபுரியும் வரன் வர வாய்ப்புள்ளது.

மகளுக்கு நல்ல வேலை கிடைக்கவும், நல்ல வரன் அமையவும் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். உளுந்தூர்பேட்டைக்கு அருகிலுள்ள பரிக்கல் ஊரில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை ஏதேனும் ஒரு புதன்கிழமை சென்று தரிசித்து வருவது நல்லது. புதன்தசை நடைபெறுவதால், புதன் அஷ்டமாதிபதி தசையாகயிருப்பதால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை பாதியிலே விடக்கூடிய சூழ்நிலையில் இருக்கக்கூடிய ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள்.  அதனால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.

?நான் நிரந்தர வருமானமின்றியும், கடன் தொல்லையாலும் அவதிப்படுகிறேன். தாயாரை உடன் வைத்துப் பராமரிக்கும் பாக்கியம் இல்லை. எனக்கு எப்போது நல்ல நேரம் வரும்? சொந்த வீடு அமையுமா? கடன் தொல்லை எப்போது தீரும்?
 - சங்கரநாராயணன், குரோம்பேட்டை.

உங்களின் ஜாதகத்தை பிருகத் ஜாதகம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மிதுன லக்னம், தனுசு ராசியில் பிறந்திருக்கிறீர்கள். லக்னாதிபதியான புதனும், பூர்வபுண்யாதிபதி சுக்கிரனும் ஆறாவது வீட்டில் மறைந்து கேதுவுடன் சேர்ந்திருப்பதால்தான் வருமானத்தில் ஏற்றம், இறக்கம் இருக்கிறது. சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டில் லக்னாதிபதியும், சுகாதிபதியான புதன் மறைந்திருப்பதாலும் ஏதேனும் ஒருவகையில் கடன் பிரச்னை, பணப் பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

பூர்வ புண்ணிய ஸ்தானமும் மங்கிப் போனதால்தான் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகிறீர்கள். மூன்றில் இருக்கும் செவ்வாயும், பதினொன்றில் இருக்கும் குருவும் மனதைரியத்தையும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  உங்களுக்கு கேதுதசை, சுக்கிரதசை, சூரியதசை, சந்திரதசை, செவ்வாய் தசை எல்லாம் முடிந்து தற்சமயம் ராகு மகாதசையில் ராகுபுக்தி 26.8.2016 வரை நடைபெறும்.

இதுவரை நடைபெற்ற கிரகதசைகள் எதுவுமே சரியில்லாததால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டேயிருந்தது. 27.8.2016 முதல் தொடங்கும் குருபுக்தி ஓரளவு பணவரவையும், நிம்மதியையும் தரும். ராசிக்கட்டத்தில் ராகு லக்னத்திற்கு பனிரண்டில் மறைந்திருந்தாலும், ராசிக்கு ஆறாவது வீட்டிலும் நவாம்சத்தில் லக்னத்திற்கு பத்தாவது வீட்டிலும் இருப்பதால் குருபுக்தி காலம் பணவரவை தரக்கூடியதாக இருக்கும். 55 வயதிற்கு பின்னர் சொந்தவீடு அமைய வாய்ப்பிருக்கிறது. கடன் பிரச்னையும் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

 மாதுர்காரகன் சந்திரன் மற்றும் மாதுர் ஸ்தானாதிபதி புதன் ஆகிய இருவரும் ஜாதகத்தில் பலவீனமாக இருப்பதால்தான் தாயை தாங்கும் பாக்கியம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தற்சமயம் தொடங்கியுள்ள ராகுதசையில் நற்பலன்கள் அதிகரிக்க திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான வைகுண்டத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை ஏதேனும் ஒரு ஏகாதசி திதியில் நெய் தீபமேற்றி தரிசித்து வாருங்கள். உங்கள் பிறந்தநாளில் ஆதரவற்ற பிள்ளைகள் வாழும் குழந்தைகள் காப்பகம் சென்று ஆடை தானம் செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.

?என் மகன் பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண்தான் பெற்றான். இப்போது டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியர் சேர்ந்துள்ளான். இதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல வேலைக்குச் சென்று வாழ்க்கையில் சிறப்பாக வருவானா? அவன் நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளையாக வளர அவன் பெயர் ராசியை ஆராய்ந்து கூறவும்.
 - ரா.சந்திரா.

உங்கள் மகனின் ஜாதகத்தை சுகர் நாடி எனும் ஜோதிட சிகாமணி என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். விருச்சிக லக்னம், மகர ராசியில் பிறந்திருக்கிறார். வாக்கு ஸ்தானாதிபதி குரு மந்தனாகிய சனியுடன் சேர்ந்து லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் மறைந்ததாலும் நினைவில் நிறுத்துமிடமான ஐந்தாம் வீட்டில்
அங்காரகனாகிய செவ்வாய் அமர்ந்ததாலும், மனோகாரகன் சந்திரன் கேதுவுடன் நின்றதாலும் வாக்கு ஸ்தானத்தில் சுகபோக கிரகமான சுக்கிரன் நின்றதாலும்தான் கல்வியில் ஆர்வம் இல்லாமல் போனது.

அதோடு 24.12.2014 முதல் தொடங்கிய ராகுமகாதசை 5.9.2016 வரை, ராகுபுக்தியுடன் நடைபெறும். இது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலக்கட்டமாக இருந்ததால்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போய்விட்டது. மின்னனு கிரகமான ராகுவின் தசை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அவரை நீங்கள் டிப்ளமோ கம்ப்யூட்டர் படிப்பில் சேர்த்தது நல்லதுதான். 6.9.2016 முதல் குருபுக்தி தொடங்கயிருப்பதாலும் தசானாதனாகிய ராகுவுக்கு பத்தாவது வீட்டில் குரு அமர்ந்திருப்பதாலும் அதுமுதல் மகன் கல்வியில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவார்.

டிப்ளமோவையும் நல்ல வகையில் முடிப்பார். நல்ல வேலையும் கிடைக்கும். வாழ்க்கையில் ஒழுக்கமாகவும், உயர்வாகவும் உங்கள் மகன் விளங்க  திண்டிவனத்திற்கு அருகிலுள்ள திருவக்கரையில் அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தரிசித்து மகன் பெயருக்கு குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். உங்கள் மகன் உங்கள் உறவினர்கள் மெச்சும்படி சிறந்து விளங்குவார்.