அமிர்த கலசத்துடன் வெளிப்பட்ட லிங்கப் பெருமான்



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - குடவாசல்

கங்கையிற் புனிதமாய காவிரி நதியின் கிளைகளான கடுவாய் ஆறும் (குடமுருட்டி), சோழ சூடாமணியாறும் இருபுறமும் சூழ நடுவண் அமைந்த தேவாரத்தலம் திருக்குடவாயில். இவ்வூரின் குடவாயில் என்ற அழகிய பழம்பெயர் காலப்போக்கில் மருவி குடவாசல், கொடவாசல் என மக்கள் வழக்காயிற்று. கோயில்களின் நகரம் எனப் பெறும் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையின் நடுவே இப்பேரூர் திகழ்கின்றது.

இச்சாலையில் குடந்தையிலிருந்து பயணம் செய்வோர் திருச்சிவபுரம், கலயநல்லூர், புகழ்த்துணை நாயனார் பூசித்த அழகாபுத்தூர், திருநறையூர் சித்தீச்சரம், திருச்சேறை, நாலூர் மயானம், குடவாயில், தலையாலங்காடு, திருப்பெருவேளூர், கரைவீரம், விளமர் ஆகிய தேவாரத்தலங்களைத் தரிசித்து ஆரூரை அடையலாம். சோழப் பேரரசர்கள் காலத்தில் சந்திரியசிகாமணி வளநாட்டின் செற்றூர் கூற்றத்தில் இவ்வூர் திகழ்ந்ததாகச் சோழர் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலச் சோழ மன்னர்களின் கோநகரமாக விளங்கிய குடவாயிற்கோட்டம், சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக விளங்கி இருந்துள்ளது. குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்கப்புலவர் இவ்வூரின் சிறப்புகள் பற்றி நற்றிணை, அகநானூறு போன்ற சங்கப் பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பழம் பெருமை பல பெற்ற இவ்வூரின் நான்கு ராஜ வீதிகளின் நடுவே அமுத தீர்த்தம் என்ற குளக்கரையின் கீழ்பாரிசத்தில் மேற்கு நோக்கிய ஆலயமாகக் கோணேச்சரம் என்ற சிவாலயம் காட்சி நல்குகின்றது.

பெருங்கோயில் என்ற வகைப்பாட்டில் அமைந்த கோயில்கள் வரிசையில் இவ்வாலயமும் ஒன்றாம். திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பெருங்கோயில்களின் சிறப்புரைத்துள்ளனர். கோச்செங்கனான் என்ற சோழ மன்னன் எடுத்த மாடக் கோயில்களின் வரிசையில் இவ்வாலயமும் இடம் பெற்றுள்ளது.

திருமதில்களோடு மூன்று பெரும் திருச்சுற்றுகள் (பிராகாரங்கள்) சூழ நடுவே உயரமான கட்டுமலைமேல் சிவனார் கோயில் கொண்டுள்ளார். மேற்கு நோக்கிய
இவ்வாலயத்துக் கோபுரவாயில் கடந்து உள்ளே நுழையும்போது துவஜஸ்தம்பம் பலிபீடம், இடபம் ஆகியவற்றைக் கடக்கும் போது நம் முன் காட்சி அளிப்பது பெரியநாயகி என்னும் அம்பிகையின் திருக்காம கோட்டமே. இவ்வாலயத்தில் தனித்த துர்க்கை வடிவம் இடம் பெறவில்லை.

பெரிய நாயகியே இங்கு துர்க்கையாகவும் அருட்பாலிக்கின்றாள். இரண்டாம் கோபுரம் கடந்து உள்திருச்சுற்றில் வலம் வரும்போது ஆலயத்துக் கணபதியார், தேவாரமூவர், இலக்குமி, கந்தவேள், சண்டீசர், நவகிரகங்கள், அட்டமாதர்கள், தட்சிணாமூர்த்தி என்று அந்தந்த தெய்வங்களின் திருமேனிகளை அவரவருக்குரிய சிற்றாலயங்களில் தரிசிக்கலாம். முன்பு மலைக்கோயிலில் மேலே இருந்த நடராசர், சிவகாமி அம்மைத் திருமேனிகள் கட்டுமலையின் அடிவாரத்தில் தற்போது காசி விஸ்வநாதரோடு தனிச்சந்நதியில் காட்சி நல்குகின்றனர்.

கட்டுமலை மீது முதலாம் திருச்சுற்று விளங்குகின்றது. அங்கு கோணேசபெருமானின் பெரிய லிங்கவுருவம் மூலவராக இடம் பெற்றுள்ளது. சதுர பீடத்தின் நடவண் கோணேசலிங்கம் கம்பீரமாகக் காட்சி நல்குகின்றது.

இப்பெருமானை திருஞானசம்பந்தர் போற்றி இரண்டு பதிகங்களைப் பாடியுள்ளார். ‘குன்றன் குழகன் குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே’, என்றும் ‘குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே’ என்றும் அப்பெருமானின் புகழினை அப்பதிகங்களில் கூறியுள்ளார்.

‘குடவாயில் கோயில் மேய கோமானை ஒளிர் பூந்தமிழ்மாலை உரைத்த பாடல் இவை’ என ஞானசம்பந்தப் பெருமானாரே அப்பதிகப் பாடல்களின் சிறப்பைக் கூறியுள்ளார். திருநாவுக்கரசரும், அருணகிரியாரும் இத்தலத்துச் சிறப்புகளைத் தம் பாடல்களில் ஏத்தியுள்ளனர்.இப்பூவுலகில் ‘‘கோணேசம்’’ என்ற பெயரில் இரண்டு சிவாலயங்கள் மட்டுமே விளங்குகின்றன. ஈழநாட்டு (இலங்கை) சிவத்தலங்களில் மிகு சிறப்புடன் பேசப்பெறும் ஆலயங்கள் வரிசையில் கோணேசம் ஒன்றாகும். சோழநாட்டின் இந்த கோணேசம் முன்பு செங்கற் தளியாக இருந்துள்ளது.

இதனை கோச்செங்கணான் மாடக் கோயிலாக மாற்றி அமைத்தான். கோச்செங்கணான் காலத்திற்கும் முந்தய மிகச் சேய்மையான கோயில் இதுவாகும். புராணங்கள் இப்பதியின் தொன்மைச் சிறப்பினை வெகுவாக விரித்துரைக்கின்றன.

கோணேஸ்வர மாகாத்மியம் என்ற பெயரில் தஞ்சாவூர் அரண்மனை நூலகத்தில் கிரந்த ஏட்டுச் சுவடிகள் சிலவுள்ளன. சைவ புராணமான ருத்ரசம்ஹிதையில் கோணேச தலத்தின் புராண வரலாறு, தீர்த்தங்களின் சிறப்பு, கும்பகோணத் தலத்துடன் உள்ள தொடர்பு ஆகியவை சிறப்புற உரைக்கப் பெற்றுள்ளன. கருடபகவானால் இத்தலம் தோற்றுவிக்கப் பெற்று வழிபடப் பெற்றது என்பது இப்புராணத்தின் சாராம்சமாகும்.

காச்யப முனிவரின் மனைவியரான விநதை, கத்ருதேவி என்ற இரு பெண்களுக்கு முறையே கருடனும், கார்க்கோடகன் என்ற பாம்பும் புதல்வர்களாகப் பிறந்தனர். இளையாளின் சூழ்ச்சியால் விநதை பல துன்பங்களுக்கு ஆளானாள். விநதையின் துன்பத்தைப் போக்க, முன்பு பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் இருந்த கலசத்தை தேவருலகம் சென்று முயன்று பெற்று வந்தான் கருடன்.

பூலோகத்தில் அமிர்த கலசத்துடன் குடவாயில் அருகே பறந்து வந்தபோது மகாபயங்கரன் எனும் அசுரன் கருடனுடன் போரிட முனைந்தான். அவனுடன் போரிட எத்தனித்த கருடபகவான் தான் எடுத்து வந்த அமிர்த கலசத்தை தரையில் பரப்பப் பெற்ற தர்பையின் மீது வைத்து விட்டு அசுரனுடன் சமர் புரிந்தான்.

அசுரனை வென்ற கருடன் தான் தர்ப்பையின் மீது வைத்த அமுத கலசத்தை எடுக்க முயன்ற போது அது அங்கிருந்த புற்றினுள்ளே அழுந்தி புதைந்து கொண்டிருந்தது. கோபமுற்ற கருடன் தன் அலகினாலும் கால்களாலும் புற்றினைப் பிளக்க முற்பட்ட போது உள்ளிருந்து அமிர்த கலசத்துடன் லிங்கப்பெருமான் வெளிப்பட்டார்.

 பட்சிராஜனைப் பார்த்து ‘உன் மூலம் இத்தலத்தில் நான் வெளிப்பட விரும்பியதால் இவ்வாறு செய்தேன்’ என்று கூறி அருட்பாலித்தார். இறைவனின் ஆணைப்படி கருடன் அந்த இடத்திலேயே திருக்கோயில் எடுத்து வழிபட்டான். அவ்வாலயமே திருக்குடவாயில் திருக்கோயிலாகும்.நைமிசாரண்ய முனிவர்கள் ஆவலுடன் கேட்க சூதமுனிவர் கோணேச தலத்தில் உள்ள தீர்த்தங்களின் பெருமையை எடுத்துரைத்தார்.

கங்கை முதலான ஒன்பது தீர்த்தங்களும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் மகநட்சத்திரத்திலும் இருக்கும் நாளில் (மகாமகம்) கோணேசர் கோயில் முன்புள்ள அமிர்த தீர்த்தத்தில் முதலில் மூழ்கி அங்குள்ள ஆதிகஜானனர் என்ற விநாயகரையும், அம்பாளையும், கோணேசரையும் துதித்த பின்பு கலய நல்லூரிலும், கும்பகோணத்திலும் நீராடி புனிதம் பெற்றனர் என்றும் தலபுராணம் விவரிக்
கின்றது.

சிவபுராணத்தின் ருத்ரசம்ஹிதையின் ஸ்நான மாகாத்மியத்தில் கோணேஸ்வர மாகாத்மியம் நூற்றொன்றாவது படலமும், நூற்று இரண்டாவது படலமும் இத்
தலத்தின் பெருமைகளையும் தீர்த்த பெருமைகளையும் கூறுகின்றன. பிரளய காலத்தில் நீரில் மிதந்து வந்த அமிர்த கலசம் சிவனருளால் மூன்று பகுதிகளாக பிரிந்து கும்பத்தின் மத்திய பாகம் குடந்தையிலும், அடிப்பாகம் கலய நல்லூரிலும், வாய்ப்பாகம் வன்னிதேசமான குடவாயிலிலும் விழுந்து லிங்கமாயின என்று அம்மாகாத்மியம் விவரிக்கின்றது.

திருஞானசம்பந்தர் திருநாதேச்சரத்து பதிகத்தில் கருடனைத் தண்டித்து பின்பு அருளிய சிவபெருமானின் புகழை எடுத்துரைத்துள்ளார். கருடனுக்கு சிவ
பெருமான் அருளியதைத் திருநாவுக்கரசரும் தம் தேவாரப் பாடலில் குறித்துள்ளார். கருடனால் எடுக்கப் பெற்ற திருக்குடவாயில் கோணேஸ்வரத்தை பிற்காலத்தில் செங்கணான் உள்ளிட்ட சோழர்கள் காலங்காலமாக திருப்பணிகள் செய்து புதுப்பித்தனர்.

கோணேசர் ஆலயத்து ஆடவல்லான் திருமேனி கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒன்றாகும். அத்திருமேனிக்குத் தனித்த பத்ரபீடம் ஒன்றினைக் களக்காடு என்ற ஊரினைச் சார்ந்த ஒருவர் செய்தளித்தார். அப்பீடத்தில் அவர் தம் சிறிய உருவத்தை அமைத்துள்ளதோடு, பெரிய புடைப்பு எழுத்துக்களில் ‘‘களக்காடுடையார் மாலதாழ் மார்பன்’’ என்ற பெயரினையும் வார்க்கச் செய்துள்ளார். திருவாரூரில் பதிகம் பாடிய திருநாவுக்கரசர் ஆரூர் ஈசனை ‘மாலதாழ் மார்பன்’ என்று அப்பதிகப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதனையே பெயராக கொண்ட களக்காட்டு சிவ அன்பர் இப்பீடத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். களக்காடு என்னும் ஊர் குடவாயிலுக்கு அருகே உள்ளது.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15ம் ஆட்சி ஆண்டில் இவ்வாலயச் சுவரில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுச் சாசனத்தில் குற்றாலம் என்ற ஊரினைச் சார்ந்த ‘திருச்சிற்றம்பலமுடையான் ஆன காராணை விழுப்பரையன்’ என்பார் குடவாயில் உடையாரின் பெருந்திருக்கோயிலில் உள்ள பெரிய நாச்சியாருக்கு ஆபரணங்கள் செய்வதற்கு அளித்த பொற்கொடை பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் குறிப்பிடும் ‘‘பெருங்கோயில்’’ என்ற இவ்வாலய அமைப்பு பற்றிய குறிப்பினை சோழனின் இச்சாசனம் ‘பெருந் திருக்கோயில்’ என்றே குறிப்பது நோக்குதற்குரியதாகும். பிற்காலத் திருப்பணிகளின் போது இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் பல சிதைந்து விட்டன. தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் நிகழ்ந்த திருப்பணிகளின்போது இவ்வூர் அருகே சிதைந்து கிடந்த சமண ஆலயம் ஒன்றின் கற்களை எடுத்து வந்து நுழைவு வாயில் கோபுரத்தை எடுத்துள்ளனர்.

அப்போது அந்த சமண ஆலயத்திலிருந்த சில துண்டு கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து இவ்வாலயத்தில் இடம் பெற்றுள்ளன. செவ்வப்ப நாயக்கர் பொறித்துள்ள இவ்வாலயத்துக் கல்வெட்டு ஒன்றில் இறைவனின் பெயர் ‘குடவாசல் அழகர் தம்பிரானார்’ என்றும் அம்மையின் பெயர் ‘பெரிய நாச்சி’ என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. குடவாயில் என்ற இவ்வூரின் பழம்பெயர் கி.பி. 16ம் நூற்றாண்டில் ‘குடவாசல்’ என மருவியதை இக்கல்வெட்டுச் சாசனம் மூலம் அறிய முடிகிறது.

முனைவர் குடவாயில்

பாலசுப்ரமணியன்