செவ்வாய்க்கிழமை நல்ல நாளா,இல்லையா?



தெளிவு பெறு ஓம்

?பதினெட்டு புராணங்களின் பெயர்களை பூஜை அறையில் சொல்லி வழிபட்டால் நல்லது என்று கூறுகிறார்களே, இந்த
18 புராணங்கள் என்னென்ன?
- சிவ.இளங்கோவன், ஈரோடு.

மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், ப்ரஹ்ம புராணம், ப்ரம்மாண்ட புராணம், ப்ரஹ்மகைவர்த்த புராணம், வராஹ புராணம், வாமன புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணம், அக்னி புராணம், நாரத புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்காந்த புராணம் ஆகியவை 18 புராணங்கள். இந்த 18 புராணங்களும் ஸூதபௌராணிகர் என்பவரால் சொல்லப்பட்டு வேத வியாஸரால் எழுதப்பட்டவை.

வெறுமனே இந்த 18 புராணங்களின் பெயர்களை மட்டும் சொல்லி பூஜை அறையில் வழிபடுவதால் எந்த உபயோகமும் இல்லை. புராணங்களும், இதிகாசங்களும் நம்மை நல்வழிப்படுத்துவதற்காக இயற்றப்பட்டவை. அவற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளையும், நீதிநெறிகளையும் நன்கு கற்றறிந்த குருவின் மூலமாக உபதேசம் பெற்று அவற்றை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் மட்டுமே நன்மை பெற முடியும்.
?காசிக்குச் சென்றால் எதையாவது விடத்தான் வேண்டுமா?
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி-17.

ஆசையை விட வேண்டும். அவ்வளவுதான். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் புத்த பகவான். புத்தர் கயை என்னுமிடத்தில் போதி மரத்தினடியில் இந்த ஞானத்தைப் பெற்றார் என்று சரித்திரம் கூறுகிறது. காசி, கயை போன்ற இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தனக்கு மிகவும் பிரியமான பொருட்களை துறக்க வேண்டும் என்ற வழக்கம் தோன்றியது.

நம் மனதிற்கு மிகவும் பிரியமான பொருளை எந்த முறையிலாவது அடைந்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். இதனால் மனிதன் தவறுகள் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அத்தனை பிரியமான பொருளைத் விட்டுவிடுவதன் மூலம் மனம் பக்குவப்படுகிறது. எந்தப் பொருளின் மீது ஆசை தோன்றினாலும், அதனை அடைய முடியாத பட்சத்தில், மிக மிகப் பிடித்தமான பொருளையே விட்டுவிட்டோம், இது எம்மாத்திரம் என்று மனம் ஆறுதல் கொள்கிறது. ஆக, காசிக்குச் செல்பவர்கள் எதையாவது விட வேண்டும் என்பது அபவாதம். ஆசையை விட வேண்டும் என்பதே அதன் உண்மையான உட்கருத்து ஆகும்.

?சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும்போது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே.. ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்? 41, 45, 48 என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு கணக்கினைச் சொல்கிறார்கள். சரியான விளக்கம் தேவை.
- ஜி.மோகன்ராம், கோவிலம்பாக்கம்.

த்ரைபக்ஷிகம் என்பதே ஒரு மண்டலம். அதாவது, மூன்று பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு மண்டல கால அளவு ஆகும். ஒரு பக்ஷத்திற்கு 15 நாட்கள். பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 திதிகளும் அதனை ஒட்டி வருகின்ற பௌர்ணமி அல்லது அமாவாசை நாளும் சேர்ந்த 15 நாட்களை ஒரு பக்ஷம் என்று அழைப்பர். இவ்வாறு மூன்று பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு மண்டல கால அளவு ஆகும். ஆக 15x3 = 45 நாட்கள் கொண்டது ஒரு மண்டலம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு வருடத்தை எட்டு மண்டல கால அளவாக பிரித்துச் சொல்வார்கள்.

இந்தக் கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 8 x 45 = 360 நாட்கள்தான் வரும். ஒரு வருடத்திற்கு 365ரு நாட்கள் ஆயிற்றே என்ற சந்தேகம் எழும். ஒரு மாத காலம் என்று சொல்லும்போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 30 நாட்கள் என்றுதான் பொருள் கொள்வோம். வருடத்திற்கு 12 மாதங்கள் என்றால் 12 x 30 = 360 நாட்களே கணக்கில் வரும். அது போலத்தான் இந்த கணக்கும். தமிழ் மாதங்களில் ஒரு சில நீளமானவையாகவும், ஒரு சில குறுகியனவாகவும் இருக்கும். வைகாசி, ஆனி அல்லது ஆடி மாதங்கள் 32 தேதி உடையனவாகவும், மார்கழி, தை முதலான மாதங்கள் 29 தேதிகள் உடையனவாகவும் அமையக் காண்கிறோம். இந்த கால அளவானது சூரியனின் சுழற்சிக்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.

 அதே போல ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகின்ற காலத்தின் அளவும் விரதம் இருக்கின்ற மாதத்திற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 48வது நாளில் மண்டலாபிஷேக நிறைவு விழாவினைச் செய்யக் கண்டிருப்பீர்கள்.

இந்த கால அளவு கூட விழா நடைபெறுகின்ற மாதத்திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். நீங்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் காலம் குறித்து கேட்கிறீர்கள். கார்த்திகை, மார்கழி முதலியவை குறுகிய மாதங்கள் என்பதால் இந்த கால அளவில் ஒரு மண்டலம் என்பது 42 நாட்கள் என்ற கணக்கில் வரும். இதனைக் கருத்தில் கொண்டே சபரிமலையில் வருகின்ற 16.11.2015 அன்று மண்டல பூஜை துவங்கி 27.12.2015 அன்று நிறைவுபெறுகிறது.

 எவ்வாறு ஒரு தமிழ் மாதம் என்பது 29, 30, 31 அல்லது 32 நாட்களைக் கொண்டதாக அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறதோ, அவ்வாறே ஒரு மண்டலம் என்பதும் அது இடம்பிடிக்கின்ற காலத்திற்கு ஏற்றவாறு அதன் அளவும் மாறுபடுகிறது. இந்த அளவானது 42 முதல் 48 நாட்கள் வரை வரக்கூடும். சராசரியாக கணக்கில்
எடுத்துக் கொண்டால் ஒரு மண்டலம் என்பது 45 நாட்கள் ஆகும்.

?செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா? செவ்வாயை மங்களவாரம் என்றுதானே சொல்கிறார்கள், அந்நாளில் சுபநிகழ்ச்சிகளை
செய்தால் என்ன?
- குமாரசுப்ரமணியன், திருவதிகை.

ஒரு சிலர் செவ்வாய்க்கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. ‘செவ்வாயோ... வெறும்வாயோ...’ என்ற பழமொழியை கிராமப்புறங்களில் கேட்டிருப்போம். செவ்வாய்க்கிழமையில் பேச வேண்டாம், புதன்கிழமையில பேசுவோம் என்று முக்கியமான விவாதங்களையும் செவ்வாய்க்கிழமையில் தவிர்ப்பார்கள். இவ்வாறு செவ்வாயைத் தவிர்ப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான காரணத்தை ஜோதிடம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்ப்போம்.

    நவகிரகங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக அசுப கிரகங்களில் ஒருவராக சித்திரிக்கப்படு
கிறார். இயற்கையில் செவ்வாய், எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். விசுவாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தருவார்.

ஜோதிட ரீதியாக செவ்வாயின் குணம் இதுவென்றால், சாஸ்திரம் செவ்வாய்க்கிழமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அதாவது, செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும்.

தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத்திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் கூட (ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்றவை) செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கிறது. அதனாலேயே திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ..

வெறும் வாயோ...’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம். அதனால் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை தவிர்த்து மற்ற சுபநிகழ்வுகளை செவ்வாய்க்கிழமையில் செய்வது சிலாக்கியமில்லை.

?ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்கிறார்களே... இதன் பொருள் என்ன?- தணிகைவேலன், திருநின்றவூர்.ஓடிப்போனவனுக்கு ஒன்பதிலே குரு என்பது ஏதோ விளையாட்டிற்காகச் சொல்லப்பட்டதல்ல. ஜோதிடப் பெரியோர்கள் இதனைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்துதான் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தற்காலத்தில் இந்த பழமொழியை தவறாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான உண்மையான விளக்கத்தினைக் காண்போம்.

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பார்கள். கடல் கடந்து அயல்நாட்டிற்குச் சென்று பொருள் சம்பாதிக்க வேண்டும் என்பது இதற்கான பொருள். திரைகடல் ஓடியும் என்கிறோமல்லவா., அவ்வாறு ஓடுவதற்கு ஒன்பதாம் இடம் என்பது வலுவாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக அயல்நாடு செல்வதற்கான வாய்ப்பினை ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஒன்பதாம் இடத்தினைக் கொண்டே நிர்ணயம் செய்ய முடியும்.

ஏன் ஒன்பதாம் இடத்தினை ஆராய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது தொழிலைக் குறிக்கும். இதனை ஜீவன ஸ்தானம் என்றழைப்பார்கள். பத்தாம் இடத்திலிருந்து வரிசையாக 1, 2, 3... என்று எண்ணி வர ஒன்பதாம் இடம் என்பது ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் பாவத்தில் இருந்து 12வது ஆக அமையும். அதாவது, மறைவிடம் ஆக அமையும். ஜீவகன் என்றழைக்கப்படும் குரு ஒன்பதில் அமர்ந்தால் அவனது ஜென்ம ஸ்தானத்திலிருந்து வெகு தொலைவில் அயல்நாட்டில் அல்லது கண்ணுக்கு மறைவாக அவனது ஜீவனம் அமையும் என்பதை பொதுப்பலனாகச் சொல்வார்கள்.

ஆக, ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்றால் திரைகடல் ஓடியவன், அதாவது, வெளிநாட்டில் சென்று பணிபுரிபவன் என்பதே பொருள்.மாறாக இதனை கடன் வாங்கி ஊரைவிட்டு ஓடியவன் என்ற பொருளிலோ அல்லது ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியவன் என்ற பொருளிலோ பயன்படுத்துதல் தவறு. ஒன்பதாம் பாவகத்தில் குரு அமரும்போது தனது சிறப்புப் பார்வையை லக்னத்தின் மீது செலுத்தி ஜாதகனை ஒழுக்கம் தவறாது நேரான பாதையில்
நடக்கச் செய்வார். பூர்வ புண்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதில் குரு பகவான் அமையப் பெற்ற ஜாதகன் யோகவானாகவும், ஒழுக்கம் நிறைந்த யோக்யனாகவும் இருப்பான். ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்ற வாக்கியம் அவன் அந்நிய தேசம் சென்று சம்பாதிக்கும் யோகத்தினை உடையவன் என்பதையே குறிக்கும்.

?நவகிரகங்களால் உண்டாகும் தோஷம் நீங்க அந்தந்த ஸ்தலங்களுக்குச் சென்றுதான் பரிகாரம் செய்ய வேண்டுமா... உள்ளூரிலேயே உள்ள ஆலயத்தில் அமைந்துள்ள நவகிரக சந்நதியில் செய்யக்கூடாதா? எதன் அடிப்படையில் இந்த கிரகத்திற்குரிய ஸ்தலம் இதுவென்று நிர்ணயம் செய்கிறார்கள்..?
- கு.சம்பந்தம், சிதம்பரம்.

 உள்ளூரிலேயே பெருமாள் கோயில் இருந்தாலும் திருமலை திருப்பதிக்குச் சென்று பெருமாளை சேவிக்க விரும்புகிறோம். ஆங்காங்கே சுவாமி ஐயப்பனுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டு கேரள முறைப்படி முறையாக பூஜைகள் நடைபெற்றாலும், சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

அவ்வளவு ஏன், அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் சந்நதி அமைந்திருந்தாலும் உங்கள் ஊரான சிதம்பரத்திற்கு வந்து  நடராஜரை தரிசித்தால்தான் முக்தி என்று பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், அந்தந்த பகுதிக்கான ‘ஸ்தான பலம்’தான். நினைத்த இடத்திலெல்லாம் நெல்லையும், கரும்பையும் பயிர் செய்ய முடியுமா? நம் வீட்டிலேயே தக்காளி செடி வைத்து வளர்த்தால் கூட அது ஊட்டியில் விளையும் தக்காளிக்கு ஈடாகுமா? என்னதான் திருநெல்வேலி அல்வாவையும், திருப்பதி லட்டையும் சென்னையிலேயே தயாரித்தாலும் அது அந்தந்த பகுதிகளில் கிடைப்பது போல் ருசிக்குமா?

பல்வேறு இடங்களில் பட்டாசு தயாரிக்கப்பட்டாலும், அது சிவகாசி பட்டாசுக்கு இணையாகுமா? ஆப்பிள் என்றதும் காஷ்மீர் ஆப்பிள்தானே நினைவிற்கு வருகிறது! எத்தனையோ ஊர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டாலும், மகாபலிபுரம் சிற்பத்திற்கு என்று ஒரு தனி மகத்துவம் இருக்கத்தானே செய்கிறது! இயற்கையாக மண்ணில் விளைகின்ற பொருட்களுக்கும், செயற்கையாக மனிதன் தயாரிக்கின்ற பொருட்களுக்குமே இவ்வாறு தனித்தனியாக ஒவ்வொரு ஊரினை நாம் பிரித்து வைத்திருக்கும்போது இறை சக்திகளுக்கும் இவ்வாறு விசேஷமான இடங்களை ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது?

ஒவ்வொரு ஸ்தலமும் ஒவ்வொரு விதமான சாந்நித்தியத்தைப் பெற்றிருக்கும். திருப்பதியிலும், சபரிமலையிலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றால் அதற்கான காரணம் அந்த இடத்தின் ஸ்தான பலமே ஆகும். இவ்வாறு நவகிரகங்களினுடைய சாந்நித்யம் எங்கு நிறைந்திருக்கிறதோ, அதனைக் கொண்டும், அந்தந்த ஸ்தலங்களில் நிகழ்ந்த ஆதாரமுள்ள நிகழ்வுகளைக் கொண்டும், புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்த கிரகத்திற்கு இந்த ஸ்தலம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

உள்ளூரில் உள்ள ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நவகிரக சந்நதியில் கூட நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால்,
ஜாதகத்தில் தோஷம் கடுமையாக இருந்து அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற நிலையில் அந்தந்த ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்வதே கூடுதல் நன்மை தரும். எளிதாகச் சொல்வதானால், சாதாரணமாக ஜூரம், தலைவலி, வயிற்றுவலி என்று வரும்போது உள்ளூரில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து வைத்தியம் செய்து கொள்கிறோம்; அதே நேரத்தில் பைபாஸ் சர்ஜரி, முதுகுத்தண்டுவடத்தில் ஆபரேஷன் என்று வரும்போது பெரிய நகரங்களில் உள்ள சிறப்பு மருத்துவர்களை நாடிச் செல்
கிறோமே, அதுபோல. சாதாரண பிரார்த்தனைகளை உள்ளூரில் உள்ள நவகிரக சந்நதியில் செய்து கொள்ளலாம்; அதே நேரத்தில் சிறப்பு பரிகாரம் என்று வரும்போது அந்த கிரகங்களுக்கு உரிய ஸ்தலங்களில் சென்று செய்து கொள்வதே நல்லது.

?ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வருகிறது. ஆனால், கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி நாளில் மட்டும் ஏன் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது? கார்த்திகை என்பதை முருகப் பெருமானுக்கு உகந்ததாகத்தானே சொல்வார்கள்? அவ்வாறு இருக்க திருவண்ணாமலை உள்பட சிவ ஸ்தலங்களில் தீபம் ஏற்றுவது ஏன்?
- கவிதா கொளஞ்சியப்பன், விருத்தாசலம்.மற்ற மாதங்களில் உண்டாகும்

பௌர்ணமி நாட்களை விட கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு ஏன் இத்தனை மகத்துவம் என்று கேட்டிருக்கிறீர்கள். ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்று குறிப்பிடுவார்கள். நாம் பிறக்கும் நாளன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே நமது ஜென்ம நட்சத்திரமாகவும், சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே நமது ஜென்ம
ராசியாகவும் அமைகிறது. மனிதனின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் முழுமையான தொடர்பு உண்டு.

சந்திராஷ்டம நாட்களில் நம் மனம் சஞ்சலப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி நம் மனதோடு முழுமையான தொடர்பினைக் கொண்ட சந்திரன் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுமையாக வளர்ந்து நின்றாலும், 100 சதவீத பலத்துடன் இருப்பது கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே. அதாவது, ரிஷப ராசியில் உச்ச பலத்துடன் முழு நிலவாக பௌர்ணமிச் சந்திரன் ஒளி வீசுவது கார்த்திகை மாதத்தில் மட்டுமே வரக்கூடிய நிகழ்வாகும். மனோகாரகன் சந்திரன் முழுமையாக பலம் பெற்று சஞ்சரிக்கும் அந்த நாள் நம் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நம் உள்ளத்தில் இருட்டினைப் போக்கி
ஒளியினைப் பாய்ச்சுகிறது. இதன் அறிகுறியாக நம் இல்லங்களில் வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடுகிறோம்.

ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரன் ஆகிய தாய், சூரியனின் நட்சத்திரம் ஆகிய கிருத்திகையில்,
உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம். அதாவது, அம்மை-அப்பனின் இணைவாக, அர்த்த
நாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது என்பதால் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை தீபம் அன்று அருகில் உள்ள சிவாலயத்தில் இறைவனின் சந்நதியிலும், அம்பாளின் சந்நதியிலும் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் கருத்து வேறுபாடு நீங்கி கணவரோடு இணைந்து வாழ்வர் என்று பரிகாரம் சொல்லுவார்கள் விவரம் அறிந்த ஜோதிடர்கள்.

கார்த்திகை தீபம் முருகப்பெருமானோடு எவ்வாறு தொடர்பு பெறுகிறது என்பதையும் அறிந்து கொள்வோம். காமதகனத்தின் போது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்புக் கணைகளில் இருந்து தோன்றிய குழந்தைகளை வளர்க்கும் பணியினை மேற்கொண்டவர்கள் கார்த்திகைப் பெண்கள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் ஸ்தீரீ ஸ்வரூபமே இவர்கள். இவர்களோடு பார்வதி அன்னை தனது அம்சமாக ஒரு சக்தி தேவியையும் இணைத்து ஆறு பெண்களாக நியமித்தார்.

 இவ்வாறு அக்குழந்தைகளை வளர்க்க நியமிக்கப்பட்ட இந்த பெண்களின் பெயர்களை கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய மந்திரத்தில் வரிசையாகக் காணமுடியும். அதனால் இவர்கள் கார்த்திகைப் பெண்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அதோடு, அக்னி எனப்படும் நெருப்பினை கிருத்திகைக்கு உரிய தேவதையாக வேதம் சொல்கிறது, நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்புக் கணைகளில் இருந்து தோன்றிய குழந்தைகளை வளர்த்ததால் இவர்கள் கார்த்திகைப் பெண்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் பொருள் கொள்ளலாம்.

அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஷண்முகன் எனப்படும் ஆறுமுகனாகக் காட்சியளித்த நாளே இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் ஆகும், இதனாலேயே முருகப்பெருமான் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு சதுர்த்தி போல, முருகனுக்கு கிருத்திகை உகந்தது என்பது நாம் அறிந்ததே. பிரதி மாதம் வருகின்ற கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நாள் ஆறுமுகன் அவதரித்த நாளாக அமைவதால் தனிச்சிறப்பு வாய்ந்தது. எனவேதான் கார்த்திகை தீபத்தினை முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களிலும் ஏற்றி வழிபடுகிறார்கள்.