பலன்களை அள்ளித்தரும் கார்த்திகை பௌர்ணமி



கிரிவலம்

கிரி என்பது மலை என பொருள்படும். கோடு, குன்று, பாறை, அறை, கல்,அலகம், சைலம், அத்திரி, தோதாத்திரி முதலிய பதங்களும் மலையைக் குறிக்கும். கிரிவலம் என்பது மலைக்கு வலப்பக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதலாகும். இறைவழிபாடு என்பது காலத்தைக் கடந்த பழமையான ஒரு வழக்கம். 

அதேபோல மலையை வலமாக சுற்றிவந்து வழிபடுவதும் தொன்றுதொட்ட வழக்கமே. இவ்வகையில் கயிலை மலை வழிபடப்பட்டிருக்கிறது. சிவசிந்தனை தோன்றியபோதே கயிலைமலை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது; வழிபாடும் தோன்றிவிட்டது. சூரியன் கயிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்பதை நக்கீரர், ‘உலக முவப்ப வலநோபு திருதருபலா புகழ் ஞாயிறு’ என தன்  திருமுருகாற்றுப்படையில் உணர்த்துகிறார்.

புனிதமான  தலத்தையோ, தீர்த்தத்தையோ, மலையையோ, வனத்தையோ, ஒரு மூர்த்தியையோ, வில்வமரம் போன்ற தெய்வீக மரத்தையோ துளசிச் செடியையோ, தெய்வீகம் பொலிந்த இடத்தையோ சுற்றி வருவது ஆன்மபலத்தை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு பக்தர்கள் ஏதாவது ஒன்றை சாதாரணமாகச் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் அல்லது பிரதட்சணம் என்பர். இதையே பெரிய அளவில் செய்தால் அது பரிக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படுகிறது.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும்படியும் அமைக்கும்போதுதான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே.

ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும்போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. ‘பூசித்த பலனை பிரதட்சணத்தால் அடைக’ என்பார்கள்.

இதனால்தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சணமாவது செய்யுமாறு அறிவுறுத்துவார்கள். திருச்சுற்று கூடக்கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5 சுற்று, 7 சுற்று என பல சுற்றுகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண க்ஷேத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுகளை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிராகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிராகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம்.

பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிராகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத் தைக் காப்பதற்காக தினமும் பலர் நடை பழகுகிறார்கள். இது உடல் நலத்துக்கு மிகவும் நல்லதுதான். ஆனால், ஆன்ம பலமும் அடைய ஆலயங்களையும் மலைகளையும் வலம் வரவேண்டியது அவசியம். சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்கக் கூடிய கோயிலை இறை சிந்தனையுடன் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். இதுபோலவே, கிரிவலம் செல்வதை பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில்கூட மேற்கொள்ளலாம்.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் பாதங்கள் தரையில் அடுத்தடுத்துப் பதிவதால் ரத்த ஓட்டம் சீராக அமையும். ஜாதகத்தில் சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும். நடந்து வழிபட தேக நலனும் கூடும். நாலு பேரோடு  நடக்க, நல்லுறவும் பெருகும். அவனைப் பணிய, அவனடியவரை நினைக்கஅமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.ஒரு சில பக்தர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் இது அக்னித் தலம் ஆகும். இங்குள்ள மலையடிவாரத்தின் கீழ் அருணாசலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள் பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும்.

இந்த மலையைச் சுற்றி வருவது பெரும் புண்ணியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நாளில் திருவண்ணா மலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டு பவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில்தான் அண்ணாமலை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர்.

பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.
பொதுவாகவே திருவண்ணாமலை போன்ற சில கோயில்களுக்கு மட்டுமே பவுர்ணமி அன்று கிரிவலம் செல்கிறார்கள். ஆனால், பவுர்ணமி கிரிவலம் என்பது அனைத்து கடவுளுக்குமே முக்கியமானது. கோயில்களில் மதில் சுவர்கள் சூழ்ந்த பிராகாரங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை என்றால், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை இயற்கையாகவே அமைந்தது.

 திருவண்ணாமலையில் மட்டுமின்றி மலையுள்ள ஊர்களில் எல்லாம், அங்குள்ள ஆலயத்தை தரிசிக்கும் முன்பு மலையை கிரிவலம் வந்து வணங்குவது மிக நன்று. கைலாயத்திலுள்ள கைலாச நாதனையும், தமிழகத்திலுள்ள அண்ணாமலையானையும் மட்டுமின்றி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்மனின் ஆலயங்கள் மலைமீதோ அல்லது மலைக்கு கீழே குடைவரைக்கோயிலாகவோ அமைந்திருந்தாலும் அந்த மலையை பவுர்ணமி நாட்களில் சுற்றி வருவது மிகுந்த புண்ணியத்தைத் தரும். மலைமேல் உள்ள மருந்தே மாமருந்து என்பதற்கு இணங்க சுவாமி அருளால் எல்லா தோஷங்களும் விலகும்.

தற்போது பக்தர்கள் விநாயகரை பிள்ளையார்பட்டியிலும், முருகனை பழநி, திருப்பரங்குன்றத்திலும், பெருமாளை வேலூர் சோளிங்கரிலும், அம்மனை திண்டுக்கல் அபிராமியம்மை கோயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவலம் செல்லத்தக்க மேலும் சில கோயில்கள்: திருவள்ளூர்: திருத்தணி, வேலூர்: சோளிங்கர், ரத்தினகிரி, வள்ளிமலை.

காஞ்சிபுரம்: திருநீர்மலை, சிங்கப்பெருமாள், திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கழுக்குன்றம், திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர், பர்வதமலை, தேவிகாபுரம் கனககிரீஸ்வரர். கிருஷ்ணகிரி: ஓசூர் சந்திரசூடேஸ்வரர்.

சேலம்: வடசென்னி மலை, கஞ்ச மலை; கடலூர்:  பாடலீஸ்வரர், விருத்தாச்சலம், சிதம்பரம் நடராஜர், திருவதிகை வீரட்டானேஸ்வரர்.ஈரோடு: கதித்தமலை, சென்னிமலை; திருச்செங்கோடு: அர்த்தநாரிஸ்வரர்.

பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன். கோவை: வெள்ளியங்கிரி, மதுக்கரை தர்மலிங்ககேஸ்வரர், கிணத்துக்கடவு முருகன், சரவணம்பட்டி, ரத்தினகிரி, செஞ்சேரி மலை. திருப்பூர்: அலகுமலை. திருச்சி: மலைக்கோட்டை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், ஈங்கோய்மலை.கரூர்: தான்தோன்றி மலை, ஐயர் மலை; தஞ்சாவூர்: சுவாமி மலை, நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர். நாகப்பட்டினம்:  சீர்காழி சட்டநாதர்; புதுக்கோட்டை: விராலி மலை, திருமயம் சத்தியகிரீஸ்வரர், தேனிமலை முருகன். மதுரை: திருப்பரங்குன்றம், யானை மலை; திண்டுக்கல்: அபிராமி அம்மன், பழனி. தேனி: பெரியகுளம் கைலாச நாதர்.
சிவகங்கை: பிரான்மலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி. தூத்துக்குடி: கழுகுமலை.

திருநெல்வேலி: பண்பொழில் முத்துகுமாரசுவாமி. கன்னியாகுமரி: வேலி மலை குமாரசுவாமி.
இவை தவிரவும் வேறு பல கோயில்களில் கிரிவலம் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மேல் சட்டை, தலைப்பாகை, காலில் செருப்பு அணியாமல் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவி பாவங்கள் அழிந்துவிடும் என்பது  உண்மை. முடிந்தால் உடையை மற்றும் உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதைத் தவிர்க்கலாம்.

கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்து செல்வதே சிறந்தது. எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்கக் கூடாது, தூங்கக் கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றும்போது பேசிக்கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட கிரிவலம் சுற்றுவதற்காக ஒரு பெரிய குழுவை அழைத்துக்கொண்டு அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் வரும் சிலர் அதை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே கருதி, அதைமட்டும் செய்து விட்டு கோயிலுக்குச் செல்லாமல் ஊர் திரும்பிவிடுகிறார்கள். இது தவறு. முதலில் கோயிலுக்குப் போய் இறைவனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கிரிவலம் சென்று, பிறகு வலத்தை முடித்து மீண்டும் கோயிலுக்குச் சென்று இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுத்தான் ஊர் திரும்பவேண்டும்.

பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால்தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுகிறது.

உதாரணமாக, சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதப்படுகிறது. ‘பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன்’ என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.

தொகுப்பு: என்.பி.கே.