வாழ்வில் வளம் சேர்க்கும் பகவத் விநாயகர்



வேதாரண்யத்தில் ‘பகவர் மகரிஷி’ தன் சீடர்களுடன் வசித்து வந்தார். பகவரின் வயதான தாயார் தான் காலமான பிறகு தனது ‘அஸ்தி’யை, அது எந்த இடத்தில் மலர்களாக மலர்கின்றதோ அந்த இடத்தில் கரைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பகவர் தன் தாயார் காலமான பின் அவரது ‘அஸ்தி’யை எடுத்துக்கொண்டு தன் சீடருடன் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். அவர் ‘திருக்குடந்தை’ வந்து காவிரி நதியில் நீராடியபோது அவரது சீடர் அஸ்தி வைத்திருந்த பெட்டியை திறந்து பார்க்க, அதில் மலர்கள் இருக்கக் கண்டார். பின்னர், குரு கோபிப்பாரோ என்று பயந்து மூடி விட்டார்.

இச்செயல் குருவுக்குத் தெரியாது. காசியில்தான் ‘அஸ்தி’ மலருமென்று எண்ணிய குருநாதர், காசிக்கு வந்த பிறகு பெட்டியைத் திறந்து பார்க்க, அஸ்தி முன்பே மலர்ந்துவிட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுது குருவிடம் சீடர் குடந்தையில் நடந்ததை கூறினார். மீண்டும் பகவர் கும்பகோணம் வந்து, காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ‘அஸ்தி’ மலர்களாக மாறி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று ‘அஸ்தி’யை கரைத்தார்.

திருக்குடந்தை க்ஷேத்ரம் ‘காசிக்கு வீசம்’ அதிகமென்று காட்டியருளிய காவிரிக்கரையில் இருந்த விநாயகரை குடந்தையிலேயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்தக் கணபதிக்கு  பகவத் விநாயகர்’ என்ற பெயர் அமைந்தது!தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தில் அவருடைய தலைமை அமைச்சர் அன்னாஜிராவ் பண்டிதர் நிர்வாகத்தில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டதாக அண்ணாஜிராவ் சிலையுடன் கூடிய கல்வெட்டு தெரிவிக்கிறது. 1906ல் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்று வேண்டியவர்க்கு வேண்டும் வரமளிக்கும் வரப்பிரசாதியாக விநாயகர் விளங்குகிறார். பிள்ளையாருக்கு இருபுறமும் விலைமதிப்பில்லாத இரண்டு யானை தந்தங்கள் அலங்காரத்தில் சாத்தப்படுகின்றன.

- மன்னை ஜி.நிலா