தீபாவளிப் பரிசு!



கஜ(மகா)லட்சுமிகளின் பார்வை (அட்டை உட்பட) தீபாவளி நாளில் கிடைத்திருப்பது எங்களுக்குப் பெரிய கொடுப்பினை. தெளிவு பெறுஓம் பல ஐயங்களைப் போக்குகிறது. அர்த்த நாரீஸ்வரர் துதி சொல்லி மகிழ்ந்திட எளிமையாக அமைந்திருந்தது. கந்தசஷ்டி நாளில் ஆறுமுகனின் திருப்பள்ளியெழுச்சி வெளியிட்டிருப்பது மனநிறைவைத் தந்தது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

தித்திக்கும் தீபாவளித் திருநாளுக்குரிய திருமகளாம் மகாலட்சுமியைக் குறித்து விளக்கமாகவும் விவரமாகவும் எளிமையாகவும் வெளியிட்டு அனைத்து ஆன்மிகம் வாசகர்களையும் ஆனந்தப் படுத்தியதையே தங்கள் இதழின் தீபாவளிப் பரிசாக நாங்கள் ஏற்று மகிழ்கிறோம்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

சீனிப்புட்டு பெற்று சீரான வாழ்வருளும் பழவூர் நடராஜப் பெருமான் ஆலயத்தைப் பற்றிய கட்டுரையைப் படிச்சுப்புட்டு இந்த திருத்தலத்திற்கு இம்புட்டு சிறப்புக்களா என்று அதிசயித்தேன்! தீபாவளியன்று இனிப்பு யாகம் கட்டுரையில் பல்வேறு அபூர்வ தகவல்களைப் படித்த போது தீபாவளிப் பலகாரங்களையும், இனிப்புகளையும் சுவைத்தது போன்ற நிறைவு ஏற்பட்டது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

‘இன்றும் நாளையும்’ தலையங்கம் எல்லோருக்கும் பொதுவான கருத்தைத் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது, தள்ளிப் போகும் காரியங்களினால் ஏற்படும் ஏமாற்றமும், தவற விட்டதால் ஏற்படும் பயமும், குழப்பத்தில் ஏற்படுத்திக் கொள்கிற முடிவாகும். இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு ஆண்டவனைப் பிரார்த்திப்பதின் மூலம் ஏற்படும் நன்மையையும் இன்றைய பொழுதை வீணாக்காமல் உபயோகமாக கழிக்கவேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்தியது.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

தீபாவளி பற்றிய இவ்வளவு தகவல்களா! திருச்செந்தூர் தீரன் திருப்பள்ளியெழுச்சி படித்தபின் அந்தக் குமரனை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் எழுந்தது. தங்கள் இதழ் மூலம்தான் நாங்கள் எவ்வளவு ஆன்மிக விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம்! வாழ்த்துகள்
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்
.
தீபாவளி இதழ் படிக்க படிக்க தெவிட்டாத தேனமுதாய் இருந்தது. அட்டைப்படம் கொள்ளை அழகு. தெளிவு பெறுஓம் வாசகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். உள்ளதை உள்ளபடி சொல்லும் ராசிபலன் பகுதியும் ஜமீன் கோயில்கள் தொடரும் அருமையிலும் அருமை.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

மகாலட்சுமி தரிசனம் மனதை மகிழச் செய்தது. எத்தனை எத்தனை லட்சுமிகள் தரிசனம்! படிக்கும் போதே லட்சுமிகடாக்ஷம் கிட்டிய உணர்வினைத் தந்தது. வாஸ்து தொடரில் இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியும் என்ற தகவல் புதுமையாக இருந்தது. பிரசாதங்கள் பகுதியில் இடம்பெற்ற இஞ்சி சாறு சாக்லேட் பர்பியை செய்து சுவைத்தோம். வித்யாசமாகவும் அருமையாகவும் இருந்தது. நன்றி.
- ரஞ்சனா நரசிம்மன், சைதாப்பேட்டை.

பகவத்கீதை எளிமையாகவும், இனிமையாகவும் உள்ளது. பாமரர்களும் புரிந்து கொள்ளும் நடையில் சுவாமி தேஜானந்த மகராஜ் அவர்கள் விளக்குகிறார். அவருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
- காளிதாஸ், சிதம்பரம்.

கல்வெட்டு சொல்லும் கதைகள் பல அறியாத தகவல்களைத் தெரிவிக்கின்றன. திருமந்திர ரகசியம் சுவாரஸ்யமாக உள்ளது. திருப்பூர் கிருஷ்ணன் தொடர் பிரமிக்க வைக்கிறது. முக்கனிகளையும் ஒன்றாய் சுவைத்த உணர்வு ஏற்படுகிறது.
- உஷா ராஜகோபாலன், திருச்சி.

பக்தித்தமிழ் தொடரும் அதில் இடம் பெறும் ஓவியங்களும் மனதை விட்டு அகலவே மறுக்கின்றன. அதேபோன்று மகாபாரதம் கட்டுரையையும், ம.செ.வின் மணியான ஓவியத்தையும் படித்துக்கொண்டே, பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டுகின்றன.
- ரமா வெங்கடேஷ், திருப்பதி.