திருமூலர் மந்திர ரகசியம்



ஆசையை அறுப்பதே உண்மையான ஆனந்தம்!

படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்; வேறுபாடு எதுவும் இல்லை.பசி இருவருக்கும் பொதுவாகத்தானே இருக்கிறது? ஆசை இருவருக்கும் பொதுவாகத்தானே இருக்கின்றன?மேலும் உதாரணமாக...போக்குவரத்துச் சாலைகளில் சிக்னல் (Signal) களில், பச்சை, மஞ்சள், சிவப்பு என (எச்சரிக்கை அறிவிப்பு) விளக்குகள் இருக்கும்.சிவப்பு விளக்கு எரியும்.

அதை ஒட்டி, விநாடிகள் அறிவிப்பும் இருக்கும். வாகனங்கள் வரிசையாகக் காத்துக் கிடக்கும். ஒருசில வாகனங்கள் சந்து பொந்தில் புகுந்து, அனைவரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து தாறுமாறாக நிற்கும்.அவற்றிலும் ஒரு சில...காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பறக்கத் தொடங்கும். அப்புறம் என்ன?
பின்னாலேயே, மற்ற வாகனங்களும் 'பைய்ங் பைய்ங்' என்று கத்திக்கொண்டே 'கிர்' என்று கிளம்பி ஓடும்.

பச்சை விளக்கு வந்தால் என்ன?  வராவிட்டால் என்ன?

இதில், இன்னொரு முக்கியமான விஷயம். பச்சை விளக்கு வரட்டும். எனவே யாராவது காத்திருந்தால், பின்னால் நிற்பவர்கள், "யோவ்! போயேன்யா! நீ போ!  இல்லாட்டி வழியை விடு!" என்று கத்துவார்கள். அதாவது, நீயும் தப்பு செய்! இல்லாவிட்டால், எங்களையாவது தப்பு செய்ய வழிவிட்டு, ஒதுங்கு!

என்பது பொருள்.சற்று நேரப் பயணத்திற்கே இப்படி, எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், நாமும் தவறு செய்து அடுத்தவர்களையும் தவறு செய்யத் தூண்டுவதில், என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? ஒருவேளை சிவப்பு விளக்கு எச்சரிக்கையையும் மீறிப் போகும்போது, காவல்துறை பிடித்துவிட்டால்? யாராவது முக்கியஸ்தர்களை (V.I.P)  உறவாகச் சொல்லி, அல்லது அரசாங்கப் பதவியில் இருப்பதாகவோ சொல்லித் தப்பிக்க வழி தேடுகிறோம்.

தெருப்பயணத்தில்தான் இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்தில்?

தவறுகளையெல்லாம் செய்துவிட்டு, தப்பிக்க வழிதேடிப் பரிகாரங்களை தேடித் தேடிச் செய்கிறோம்.பரிகாரங்கள் என்பவை,  பாவங்களைச் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அல்ல. செய்த பாவங்களின் தண்டனையைத் தாங்கக்கூடிய அளவிற்குச் சற்று சக்தியை வேண்டுமானால் தருமே தவிர, பரிகாரங்கள் மூலம் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது.

என்ன செய்வது? புரிந்தோ, புரியாமலோ எதையோ செய்துகொண்டுதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நம்மைப் பார்த்துத் திருமூலர் சொல்லும் பாடல் இது:
ஆறாங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறாங்கம் ஆகக் குணம் பயில்வோர் இல்லை
வேறாங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
வேறாங்கம் ஆகப் பெருக்குகின்றாரே.

 (திருமந்திரம் -55)

கருத்து: ஆறுவகை பிரிவுகளாக இருக்கிற சமயங்களுக்கு, ஒப்பற்ற வேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை, அம்பிகைக்குத் தன் உடலின் ஒரு பாகத்தை இடமாகத் தந்த பரமசிவனின் அருள் ஆற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. அவர்கள், மறைகளுக்கு மாறானவைகளைப் படித்து, கடைப்பிடித்து அவற்றையே பெரிதாகப் போற்றி, வாழ்நாளை வீண் நாள் ஆக ஆக்குகின்றார்கள். என்ன அறியாமை?வழிபாடுகளை நாம் பலவாறாகச் செய்து வந்தாலும், அவை ஆறு பிரிவுகளுக்குள் அடங்கும். அவை:

சைவம்         -  சிவபெருமானை வழிபடுவது.
சாக்தம்         -  அம்பிகையை வழிபடுவது.
வைணவம்     -  மகாவிஷ்ணுவை வழிபடுவது.
காணாபத்யம்  -  கணபதியை வழிபடுவது.
கௌமாரம்     -  முருகப் பெருமானை வழிபடுவது.
சௌரம்        -  சூரிய பகவானை வழிபடுவது.

இந்த ஆறுவகை வழிபாட்டு முறைகளையும் நமக்கு அறிவுறுத்துபவை - வேதங்கள். அந்த வேதங்களை அருளிச்செய்தவர் சிவபெருமான்.இவ்வாறு சொன்ன திருமூலர், அடுத்து உடனே ‘அம்பிகைக்குத் தன் உடலில், பாதி இடம் தந்த சிவபெருமான்’ என்கிறார். ஏன்?மறைகளை, வழிபாட்டு முறைகளையெல்லாம் என்னதான் நன்றாக அறிந்திருந்தாலும், அந்தப் பூஜைகளின் மூலமாக, நம் லௌகீக ஆசை களை நிறைவேற்றிக்கொள்கிறோம். ஓர் ஆசை நிறைவேறியவுடன் அடுத்த ஆசை, அது நிறைவேறியவுடன் அடுத்தது என்று போய்க்கொண்டே இருக்கிறோமே தவிர, இவற்றையெல்லாம் நமக்கு அருளிய இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம், யாருக்கும் இல்லை.

இறைவனை அடைவதென்றால், ஏதோ இறந்துபோய், மேல் உலகத்தில் இறைவனை அடைவது என்பது பொருளல்ல; இறந்துபோன பிற்பாடு, இறைவன் அடியை அடைவதை யார் பார்த்தார்கள்?ஆகையால், நமது வழிபாட்டின் பயன், நாம் இங்கே இருக்கும்போதே, அமைதி, நிம்மதி, ஆனந்தம் ஆகியவற்றை அடைந்து வாழ்வதுதான். இதுவே, ‘‘இறைவன் திருவடியை அடைவது என்பதற்கு உண்மையான பொருள்.

இறைவனைப் பற்றிய இந்த உண்மையை அறியாமல், அனைத்தையும் தரும் கோடீஸ்வரனிடம் போய், ‘‘6 இட்லியும் அரை கிலோ பருப்பும் கொடு!’’ என்று கேட்பதைப்போல, கோயில் கோயிலாகப் போய் ஆண்டவனிடம், ‘‘அதைக்கொடு! இதைக்கொடு!’’ என்று கேட்கிறோமே தவிர, ‘‘அமைதி, நிம்மதி, ஆனந்தம் ஆகிய வற்றைக் கொடு!’’  என்று யாருமே கேட்பதில்லை.

பொருட்களில் இருந்து, மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைய முயல்கிறோமே தவிர, பரிபூரணமான இறைவனிடமிருந்து ஆனந்தத்தையோ, நிம்மதியையோ பெற மாட்டேன் என்கிறோம்.இதையே, ‘குணம் பயில்வார் இல்லை’ என்கிறார் திருமூலர்.அடுத்து, ‘கூறங்கம் ஆகக் குணம் பயில்வோர் இல்லை’ என்கிறார் திருமூலர். அதாவது, அம்பிகை தன் திருமேனியில் பாதி இடம் தந்த பரமசிவனின் அந்த எளிமையை, அந்த குணத்தை புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்று வருந்துகிறார் திருமூலர். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.

எந்த நேரமும் இறைவனை விட்டு பிரியாதவள் அம்பிகை. அதன் காரணமாகவே அம்பிகையை, ராமநாதபுரத்தில் திருவாடானை கோயிலில், ‘பாகம் பிரியாள்’ என்ற பெயரில் வழிபாடு செய்துகொண்டிருக்கின்றார்கள்.பரமசிவன் திருமேனியில் பார்வதி பாதி இடம் பிடித்தது எப்படி என்பதைப் புரிந்துகொண்டால், திருமூலரின் வருத்தத்திற்கான காரணம் விளங்கும். ஒருசமயம் பார்வதியும், பரமசிவனும் அமர்ந்திருந்தபொழுது, ‘பிருங்கி’ என்ற முனிவர் தரிசனத்திற்கு வந்தார். அவர் சிவபெருமானை மட்டும் வழிபடும் நியமம் உடையவர். அதனால், அன்று பிருங்கி முனிவர் ஒரு வண்டாக மாறி சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார்.

பார்வதி தேவி பார்த்தார். ‘‘கணவருக்கும் நமக்கும் இடைவெளி இருப்பதால்தானே பிருங்கி முனிவர் இவ்வாறு செய்தார். சிவபெருமானின் திருமேனியில் நான் பாதி இடம் பெற்றவளாக இருந்துவிட்டால், இவரைப் போன்றவர்கள் இப்படிச் செய்ய இயலாதே!’’ என்று தீர்மானித்து, பார்வதி தேவி தவம் செய்து பரமன் உடம்பில் பாதி இடம் பிடித்தார்.அம்பிகையே இவ்வாறு தவம் செய்து சிவத்தைச் சார்ந்திருக்கிறார்.

இத்தகவலைச் சொல்வதன் மூலம் திருமூலர், ‘‘அம்பிகையே அன்போடு தவம் செய்து, அரனாரின் திருமேனியில் அரைப்பங்கு பெற்று வழிகாட்டி இருக்கிறார். இதை அறிந்து ஆண்டவனை அடைய முடியாமல் இருக்கிறார்களே!’’ என்று வருந்துகிறார்.

சரி! சாதாரண மனிதர்கள்தான் இவ்வாறு இருக்கிறார்கள் என்று பார்த்தால், வேதங்களை ஓதி அவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர்கள்கூட, மேலும் மேலும் ஆசை வசப்பட்டு, அதற்கான ஹோமங்கள் எல்லாம் செய்கிறார்கள்.வேதங்களில் சொல்லப்பட்ட ‘கர்ம காண்டம்’ செய்கிறார்களே தவிர, வேதங்களில் உள்ள மற்றொரு பிரிவான ‘ஞான காண்டம்’ என்பதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்.

இறைவனை அறிந்து உணர்ந்து, அந்த இறைவனின் திருவடிகளை அடையாமல், மறுபடியும் பிறவிக்குண்டான காரியங்களையே செய்துகொண்டிருக்கிறார்களே என்று வருந்துகிறோம். அது மட்டுமல்ல! நல்லவற்றிற்கு உண்டானவற்றை  கெட்டதற்கு உபயோகப்படுத்துகிறார்களே என்ற வருத்தமும் திருமூலருக்கு உண்டு.

அடுத்த பாடலில் அதை வெளிப்படுத்துகிறார்.
பாட்டும் ஒளியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பம் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இல்லல் உற்றாரே

(திருமந்திரம் - 56)


கருத்து: பாட்டு இசைக்கருவிகளின் இன்னிசை நடனம் ஆகியவை இவ்வுலகில் தொடர்ந்து நடைபெறும். அவற்றில் திறமைசாலிகள் பல இடங்களுக்கும் சென்று, தங்கள் கலைத்திறனைக் காட்டிப் பொருள் பெறுவார்கள். அவர்கள் செல்லும் இடங்களுக்கு, வேத வல்லுநர்களும் போய், அவர்களோடு மாறுபட்டு நின்று பகைமை கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் பரமனைக் காண வேண்டியதை வைத்து, பொருள் தேட முயல்கிறார்கள். பகை வளர்கிறது. அவ்வளவுதான்.பாட்டு, நடனம் முதலான கலைகளும் வேதங்களும் நமக்குப் பரம்பொருளை உணர்த்துவதற்காகவே உண்டானவை.

அதன் காரணமாகவே, அவை ஆலயங்களில் நிகழ்த்தப் பெற்றன. பிற்பாடு அவை அரசர்களின் சபைகளில் இடம் பிடித்தன. அதன்பிறகு கலைகள், ஜமீன் முதலான செல்வந்தர்களின் பெரும் பெரும் மாளிகைகளுக்கு இடம் பெயர, அந்த மாளிகைகளில் அக்கலைஞர்களுக்குக் கிடைத்த சன்மானங்களையும் புகழையும் கண்டு, வேத வல்லுனரும் கலைஞர்களைப் போலவே, அவர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்றார்கள்.

அப்புறம் என்ன? போட்டிதான்!  பொறாமை தான்! கடவுளுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டிய கலைகளையும் வேதங்களையும், காசு பணம் படைத்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்யத் தொடங்கியதும், ‘என் திறமைதான் உயர்ந்தது’ எனும் போட்டியும் ‘எனக்குத்தான் சன்மானம் அதிகம்’ எனும் வழக்கும் எழுந்தன.கடவுள் விரட்டப்பட்டார்.

உள்ளங்களில் பொருளாசை இடம் பிடித்துப் போட்டி - பொறாமைகள் கிளைத்து எழுந்தன. விளைவு? அமைதியின்மை!இந்த நிலையைப் பார்த்து, திருமூலர் இரக்கப்படுகிறார். வழிகாட்டியிருக்கிறார். அப்பாதையில் பயணம் செய்தால், அமைதி எனும் இடத்தை அதிவிரைவாக அடையலாம்.

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்