உயரமான பாணலிங்கம்



திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பனமங்கலம் என்ற கிராமம். இங்கு வடிவாம்பிகா சமேத வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

இத்தல ஈசன் அருள்பாலிக்கும் பாணலிங்கத்தின் உயரம் 11 அடி 3 அங்குலம். அதில் இரண்டரை அடி உயரம் ஆவுடையார் மீதும் மீதமுள்ள பகுதி ஆவுடையாரின் உள்ளேயும், ஆவுடையாருக்கு அடியிலும் பதிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருமேனியில் பட்டை பட்டையான பதிவுகள் காணப்படுகின்றன. உளிபடாத லிங்கத் திருமேனி இது. சி.செல்வி, திருச்சி

கேரளாவில் ஒரே அகத்தியர் கோயில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பாலராமபுரம் என்ற ஊர் உள்ளது. கைத்தறித்துணி நெய்வதில் இந்த ஊர் பிரபலமானது. இந்த ஊரின் மையப்பகுதியில் அகத்தியருக்கு கோயில் உள்ளது.

கேரளாவில் உள்ள ஒரே அகத்தியர் கோயில் இதுதான் என்று கூறப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட பாலராமவர்மா மன்னர் குடும்பத்துக்கு பட்டு வேட்டிகள், சேலைகள் நெய்ய திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்து இங்கு குடி வைத்தார்கள். அந்தத் தமிழ் நெசவாளர் குடும்பங்கள் இந்த அகத்தியர் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

ஆயுளை நீடிக்கச் செய்யும் அரன்


கோயமுத்தூர் - சத்தியமங்கலம் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் கோவில்பாளையம் என்ற இடத்திலுள்ளது காலகாலேஸ்வரர் ஆலயம். சிறிய கோபுரம். ஒரே பிராகாரம் உள்ள கோயில் இது. ஸ்தல விருட்சம் வில்வம். இந்த வில்வ மரத்தின் காய்கள் உருண்டையாக இல்லாமல் நீள்வட்ட வடிவமாக உள்ளன. இந்த வில்வ மரத்தடியில்தான் விசுவாமித்திரர் மார்க்கண்டேயனுக்கு ‘‘எமனையும் வெல்லும்’’ மந்திரத்தை உபதேசித்ததாகச் சொல்கிறார்கள். ஆயுளை நீடிக்கச் செய்பவர் இந்தக் கோயில் இறைவன்.

 எமன் பூஜை செய்த சிவலிங்கம் ஆலயத்தில் இன்றும் உள்ளது.  கொங்கு நாட்டின் திருக்கடையூர் இத்தலம். இங்குள்ள சிவலிங்கம் நுரையும் மணலும் கலந்தது. இவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்த லிங்கத்துக்குப் பூசப்படும் சந்தனம் வியாதிகளை நீக்கும் என்பது நம்பிக்கை. பிராகாரத்தைச் சுற்றி சூரியன், சந்திரன், பைரவர், மூலகணபதி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவகிரகங்கள் முதலிய சந்நதிகள் உள்ளன. இத்தலத்தில், ஈசனும் கரிவரதராஜரும் இருப்பது சிவ-விஷ்ணு ஒற்றுமையை விளக்குகிறது எனலாம். இறைவி: கருணாகரவல்லி.

திரு இன்னம்பூர்

கும்பகோணத்திலிருந்து திருவையாறு சாலையில் சென்றால் புளியஞ்சேரியை அடையலாம். அங்கிருந்து திருப்புறம்பியம் செல்லும்  சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இன்னம்பூர் உள்ளது. திருப்புறம்பியத்திற்கு முன்னதாக இவ்வூர் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டார். இலக்கண உபதேசம் பெற்றார். ஐராவதம் வழிபட்ட தலம் சம்பந்தர் ஓர் பதிகமும், அப்பர் நான்கு பதிகங்களும் பாடியுள்ளார். இத்தலத்தின் இறைவன்: எழுத்தறிநாதேஸ்வரர், இறைவி: கொந்தர்பூங்குழலம்மை சௌந்தர நாயகி. இத்தலத்தின் தலமரம்: பலா, தீர்த்தம்: ஐராவத தீர்த்தம் ஆகும்.

- கோட்டாறு ஆ.கோலப்பன்