சப்த விடங்கத் தலங்கள்



பூசை. ச. அருணவசந்தன்

ஒரு சமயம் பிள்ளைப்பேற்றை வேண்டித் தவம் செய்த திருமால் தனக்கு சிவபிரான், முருகன், உமாதேவியார் ஆகிய மூவரும் ஒருசேரக் காட்சியளித்ததை மனதில் நினைந்து நினைந்து மகிழ்ந்தார். அக்காட்சியை விசுவகர்மா எனும் தேவதச்சனைக் கொண்டு அழகிய திருவடிவமாகச் செய்து அதனைத் தன் மார்பில் வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தார். பிறகு, திருவடிவத்தை தேவர்களின் நல்வாழ்வின் பொருட்டு இந்திரனிடம் அளித்தார். அவன் இந்திரலோகத்தில் அம்மூர்த்தி யை வைத்துச் சிறப்பான பூசனைகளைச் செய்து வழிபட்டு வந்தான்.

ஒரு சமயம் இந்திரன், தேவலோகத்தின் மீது படையெடுத்து வந்த 'வலன்' எனும் அசுரனை வெற்றிகொள்ள முடியாமல் பூமண்டலத்தையாளும் முசுகுந்த சோழ மன்னனின் உதவியை நாடினான். முசுகுந்தனும் அசுரனைக் கொன்று இந்திரனுக்கு வெற்றியைத் தேடித் தந்தான்.முசுகுந்தனுக்குப் பரிசளிக்க விரும்பிய தேவேந்திரன் அவனிடம் அவன் விரும்பியதைக் கேட்குமாறு கூறினான்.

முசுகுந்தன் தேவேந்திரனிடம் அமரேந்திரனே எம்மிடம் எல்லா செல்வங்களும் நிறைந்துள்ளன. நாம் விரும்புவது நீ வணங்கி வரும் தியாகேசப் பெருமாளின்  திருவடிவத்தை மட்டுமே! அவரை நீ எமக்களித்தால் பூவுலகில் நிலைப்படுத்தி வணங்குவேன் என்றான். தியாகராஜரைப் பிரிய மனமில்லாத இந்திரன் மறுநாள் தருவதாக வாக்களித்தான். அன்றிரவே தியாகராஜரைப் போலவே மேலும், ஆறு உருவங்களைச் செய்து தன் பூஜை மண்டபத்தில் வைத்துவிட்டான்.

மறுநாள் முசுகுந்தனிடம் இந்திரன் ஏழு திருவடிவங்களையும் காட்டி, விரும்புவதை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். முசுகுந்தன் அதைக்கண்டு திகைத்துவிட்டான். என்றாலும், இறைவனின் திருவருளால் உண்மையான திருவடிவினைக் கண்டுபிடித்து அதனையே தருமாறு கேட்டான். இந்திரன் அந்த வேண்டுகோளை மறுக்க இயலாது. மூலத்தியாகருடன் மற்ற ஆறு தியாகராஜர்களையும் சேர்ந்தே அவனிடம் அளித்தான்.முசுகுந்தன் ஒரு பெரிய தேரில் ஏழு தியாகராஜ வடிவங்களையும் எழுந்தருளிவித்துச் சோழநாட்டை அடைந்தான்.

திருவாரூரில் ஏழு அங்கங்களைக் கொண்டதான பெரிய வசந்த மண்டபத்தை நிறுவி அதில் ஏழு தியாகராஜர்களையும் வைத்து நெடுங்காலம் பூசித்தான். பிறகு மூலத்தியாகரைத் திருவாரூரில் அமைத்துவிட்டு மற்ற தியாகராஜர்களைத் திருக்கோளிலி, திருவாய்மூர், திருக்காரவாசல், திருநள்ளாறு, திருமறைக்காடு, நாகப்பட்டினம் ஆறு தலங்களில் எழுந்தருளி வைத்தான். இந்த ஆரூர் உள்ளிட்ட ஏழு தலங்களே சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையாவும் திருவாரூரைச் சார்ந்தே அமைந்துள்ளன.

திருவாரூரில் இருப்பதுபோலவே இந்த ஆறு தலங்களிலும் கருவறையின் தென்கிழக்கில் தனிச்சந்நதியில் பொற்சிம்மாசனத்தில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார். சிம்மாசன மேடையும், மேற்கட்டும் முன்புறம் வீரகட்கங்களும் நேர் எதிரில் உலோகத்தாலான நின்ற இடபமும், அவரைத் தொழுபவராக  (பரவையார் உடனாய) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளனர். இத்தலங்களில் தென்றல் வரும்வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தியாகராஜ மூர்த்திக்கும் தனித்தனி விழாக்களும் தனித்தனி நடனங்களும்  தனித்தனிச் சிறப்புகளும் உள்ளன. அவற்றை அந்தந்தத் தல புராணங்களில் கண்டு மகிழலாம்.இந்த ஏழு தலங்களையும் எளிதில் நினைவிற்கொள்ள உதவும் பாடலொன்று உள்ளது.  அதுசீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறுகாரார் மறைக்காடு காராயில் - பேரானஒத்த திருவாய்மூர் உகந்த  திருக்கோளிலிசத்த விடங்கத் தலம்என்பதாகும்.

திருக்காரவாசல் - ஆதிவிடங்கர்


திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் 'திருக்காறாயில்' என்கிற திருக்காரவாசல். இங்கு சாலையோரத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது.ஆதியில் இந்த இடம் கறுப்புஅகில் மரங்களால் நிறையப்பெற்றிருந்ததால் திருக்காரகில் என அழைக்கப்பட்டது என்றும் அதுவே பின்னாளில் திருமுறைகளில் திருக்காறாயில் என வழங்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். இந்நாளில் அப்பெயர் திரிந்து 'திருக்காரவாசல்' என வழங்குகிறது.

இங்கு அமைந்துள்ள கயிலாயநாயகி உடனாகிய கண்ணாயிரநாதர் கோயிலில் கருவறைக்கு இணையாகத் தியாகராஜர் சந்நதி அமைந்துள்ளது.இந்த சந்நதியுள் விதானத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது சிம்மாசனத்தில் தியாகராஜர் எழுந்தருளி யுள்ளார். முன்புறம் வீர வெண்டையங்களைக் காண்கிறோம்.

(இவருடைய சந்நதியில் முன்னாளில் மரகதலிங்கம் இருந்ததாக அறிகிறோம். இது
இந்நாளில் இல்லை.)தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள் கிரகண புண்ணியகால அபிஷேகங்கள் யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்தத் தியாகராஜர் 'ஆதிவிடங்கர்' என்று அழைக்கப்படுகின்றார். அநாதி யான சிவபெருமான் உலகத் தோற்றத்தின் ஆதியாகவும் இருப்பதையே இப்பெயர் உணர்த்துகிறது.

இவர் ஆடும் நடனம் குக்குடநடனம் எனப்படும். இது போருக்குச் செல்லும் கோழியானது இடமும் வலமும் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துப் பார்த்து முன்னேறியும் சற்று நிதானித்தும் சுழன்றும் தாக்குவதுபோல் ஆடும் நடனமாதலின் குக்குட நடனம் எனப்பட்டது. வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது.இக்கோயில் நகரத்தார் திருப்பணியில் பொலிவுடன் விளங்குகின்றது. பழைய கோயிலை முழுவதுமாகப் பிரித்தெடுத்துவிட்டு நல்ல கருங்கல்லால் கலை வேலைப்பாட்டுடன் தேவகோட்டை முத்துகரு செட்டியார் வகையறாவினரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களாலேயே சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வூர்த் தலபுராணம் வடமொழியில் அமைந்திருந்தது அதனை தேவகோட்டை வித்துவான் சொ.வேலுசாமிக் கவிராயர் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். இது 1924ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியாக உள்ள தோத்திரப்பாக்கள் தேவகோட்டை வித்துவசிகாமணி சிதம்பரஞ் செட்டியாரால் பாடப்பெற்றுள்ளன.இதில் நைமிசாரண்ய சருக்கம் தொடங்கி நாற்பது சருக்கங்களில் தலவரலாறு கூறப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக வடமொழியில் அமைந்த சுவாமி அஷ்டோத்ர சதநாமாவளியும், அம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளியும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் முசுகுந்தன் தியாகராஜரை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்தது அவருடைய சிங்காதனச் சிறப்பு. அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேக முறை, தியாகராஜ ரகசியம் ஆகியன விளக்கமாகத் தனித்தனிச் சருக்கங்களில் கூறப்பட்டுள்ளன.இதில் விடங்கப் பெருமானுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தியாகராஜருக்கு அணிவிக்கப்  படும் தியாகப்பரிவட்டம் என்னும்  துணிகளை விவரிக்கும் பகுதியைக் கூறலாம்.  இதன்படி சதுரவடிவான பூமி தத்துவ பூந்துகில் நான்கும், அரைவட்ட வடிவாயுள்ள நீர்தத்துவ ஆடை ஐந்தும், முக்கோண வடிவான அக்னி, தத்துவ ஆடை மூன்றும், அறுகோண வடிவாயுள்ள வாயுதத்துவ ஆடை மூன்றும் ஆக இருபத்தியொரு ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்று குறித்திருப்பது புதிய
செய்தியாகும்.

மேலும் காறாயில் ஆதிவிடங்கர் வெள்ளைச் செவ்வந்தி மலர்களைச் சிறப்பாக சூடுகின்றார் என்றும் இந்நூல் குறிக்கின்றது.இந்நூலில் உள்ள சிங்காசன விதிச்சருக்கம் தியாகராஜரின் சிம்மாசனத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கூறுகிறது. அதன்படி இச்சிம்மாசனம் நல்ல சந்தன மரத்தால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் கவசமிடப்பட வேண்டும்.

சந்தன மரத்திற்குப் பதிலாகத் தேவதாரு மரத்தை யும் பயன்படுத்தலாம்.  அது மத்திம பலனைத் தருவதாகும். தங்கத் தகடுகளால் கவசம் அமைப்பது உத்தமம் என்றும் வெள்ளியால் அமைப்பது மத்திமம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் நான்கு கால்களும் நான்கு வலிய சிங்கங்களால் தாங்கப்பட வேண்டும். இதன் எட்டு திக்கிலும் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அமையவேண்டும்.

நான்கு பக்கமும் கற்பவிருட்சம் காமதேனு. இடபங்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். நடுவில் மலர்ந்த தாமரையும் அதன் மீது ஸ்ரீசக்கரம் அமைந்திருக்க அதன் நாற்புறமும் பிரம்மா, விஷ்ணு உருத்திரன் மகேசன் முதலிய தேவர்களின் உருவங்கள் அமைந்திருக்க வேண்டும். இது ப்ருதிவி பிரஸ்தாரத்தின் வடிவமாகும். இதன் மீது அமர்த்தியே தியாகராசனைப் பூஜிக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் திருவாரூர் பெருமாளின் சிம்மாசனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தியாகராஜ வழிபாட்டினை விளக்கும் பல அரிய விரிவான செய்திகளை இந்நூல் குறிப்பிடுகின்றது.

நாகப்பட்டினம் - அழகிய விடங்கர்

தஞ்சைத் தரணியின் கிழக்குக் கடற்கரையோர நகரங்களில் ஒன்று நாகப்பட்டினம். இந்த நகரின் மையப்பகுதியில் ‘நாகைக் காரோணம்’ என்ற பாடல்பெற்ற சிவத்தலம் உள்ளது. இங்கு நீலாயதாக்ஷி அம்பிகை உடனாய காயாரோகணேஸ்வரப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் கருவறைக்கு இணையாகத் தெற்கில் தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதில் பெரிய மேடைமீது முத்துவிதானத்தின் கீழ் தியாகராஜப்பெருமான் அழகிய சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்குச் ‘சுந்தரவிடங்கர்’ என்பது பெயராகும். இவருக்கு முன்புறத்தில் இரண்டு வீரகடகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவருடைய நடனம் பாராவார தரங்க நடனம் என்று அழைக்கப்படும். பாராவாரம் என்றால் கடல். தரங்கம் என்றால் அலைகள். கடலின் மீது தோன்றும் அலைகள் கரைமீது சுழன்று வீழ்ந்தும் தணிந்தும் அடிப்பது போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் இவர் ஆடுவதால் தியாகராஜநடனம் பாராவார தரங்க நடனம் என்பாரும் உண்டு.

இவருடைய சந்நதியில் முன்னாளில் கோமேதகத்தால் ஆன அழகிய லிங்கம் பிரதி விடங்க லிங்கமாக வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. அது களவுபோய் விட்டதால் தருமையாதீனக் குருமகா சந்நதிதானத்தால் அளிக்கப்பெற்ற ஸ்படிக லிங்கத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தியாகராஜருக்கு முன்புறம் மகாமண்டபத்தில் உலோகத்தாலான நின்ற நிலையிலுள்ள இடபமும் அவருக்குப் பின்புறம் பரவைநாச்சியார் உடனாய சுந்தரமூர்த்தி சுவாமிகளும் எழுந்தருளியுள்ளனர். தியாகேசருக்கு ஆண்டிற்கு ஆறுகால அபிஷேகத்துடன் கிரகண புண்ணியகால அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சப்தவிடங்கத் தலங்களில் அமைந்துள்ள தியாகராஜர் சந்நதிகளில் மிகவும் பெரியது இதுவேயாகும்.இந்தச் சந்நதி மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ளது.

இவனுடைய 14வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு இக்கோயிலைப் புதுப்பித்தது பற்றியும், மருதமங்களமுடைய மலைமேல் அமர்ந்தவன் என்கிற வானவன் விழுப்பரையன் அழகிய விடங்கருக்குப் பொன்னும் மணியும் ஆபரணங்களும் கொடையாக அளித்ததையும்  குறிப்பிடுகின்றது. பின்னாளில் எழுந்த கடல் நாகைக்காரோண புராணம் முந்திய வரலாற்றை மாற்றி, சாலீக்கள் என்பான். இங்கு தியாகராஜரை எழுந்தருளி வைத்தான் என்று குறிப்பிடுகின்றது.

இப்புராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப்பெற்றதாகும். இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகளை விரிவாகப் பேசுகின்றது. முசுகுந்தன் இங்கு வழிபட்டுத் தமது பிரம்மஹத்திக் குற்றத்தைப் போக்கிக் கொண்டான் என்று இப்புராணம் கூறுகிறது. சுந்தரவிடங்கரைக் ‘காரோணச் சிந்தாமணி’ என்று புராணம் குறிக்கின்றது. இவரை ஓராண்டுகாலம் நினைத்து தொழுவார்க்கு பிள்ளைப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

திருநள்ளாறு - நகவிடங்கர்

சனீசுவரன் சிறப்புடன் எழுந்தருளியுள்ள திருத்தலமாக விளங்கும் திருநள்ளாறு யூனியன் பிரதேசத்திலுள்ள காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.இந்த ஊரின் மையத்தில் போகமார்த்த பூண்முலையாள் உடனாய தர்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு திருவோலக்க மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய தியாகராஜரின் சந்நதி அமைந்துள்ளது. இதனுள் தியாகராஜர் பெரிய வெள்ளி விதானத்தின் கீழ் வெள்ளி மஞ்சத்திலுள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்பாக இரண்டு வீரகட்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவருக்கு நகவிடங்கர் என்ற பெயர் வழங்குகின்றது. நாகவிடங்கர் என்ற பெயரே, மருவி நகவிடங்கர் என வழங்குகிறதென்பர். 'நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே' என்று தேவாரம் குறிப்பதால் இவர் நகவிடங்கர் என்று அழைக்கப்பட்டார் என்பர். மேலும் நகர் என்பதற்கு மலை என்பது பொருள். இவர் மலைபோல கம்பீரமாக இருப்பதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவருடைய சந்நதியில் ஜாதிப்பச்சைக் கல்லாலான மரகதலிங்கம் அமைந்துள்ளது. இதற்கே ஐந்துகால நாட்பூஜைகள் நடைபெறுகின்றன. இவருக்குச் 'செண்பகத்தியாகர்' என்பதும் பெயராகும்.

இவருடைய நடனம் உன்மத்த நடனம் எனப்படும். உன்மத்தம் என்பது பித்துப் பிடித்த நிலையாகும். பெருமான் பித்தனைப்போல் சுழன்று சுழன்று ஆடுவதால் இப்பெயர் பெற்றார்.வைகாசிமாதம் பூரட்டாதியில் கொடியேற்றி தொடர்ந்து வசந்தவிழா தேரோட்டம் பக்தக்காட்சி ஆகியன நடைபெறுகின்றன. விழாவில் தியாகராஜர் பெரிய தேரில் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஆலயத்தின் வடமேற்கில் தியாகராஜர் எண்ணெய்க்காப்பு (அபிஷேகம் கொண்டருளும்) பெரிய மண்டபம் உள்ளது. வசந்த மண்டபம் திருவோலங்க மண்டபம் ஆகியனவும் உள்ளன. வசந்த விழாவின் போது ஆலயப் பிராகாரத்தில் தியாகராஜர் வலம் வந்து எட்டு திசையிலும் கொடியேற்றி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்.

மேலும் திருவிழாவின்போது தியாகராஜர் இக்கோயிலில் அமைந்துள்ள இடையன் - இடைச்சியருக்குப் பக்தகாட்சி அருளும் ஐதீகமும் நடைபெறுகின்றது.கோயிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் சம்பந்த ரோடை என்ற ஒரு ஓடை உள்ளது. இங்கு மலரும் செங்கழுநீர் பூக்களைக் கொண்டே தியாகராஜருக்குத் தினப்பூஜைகள் நடைபெறும் என்றும் கூறுகின்றன.இங்குள்ள தியாகருக்குப் 'புத்திரத்தியாகர்' என்பதும் பெயராகும், நெடுநாளாகப் புத்திரப் பேறு இன்றி வருந்திய இந்திரன் இவரை நோக்கித் தவம் புரிந்தான்.

இப்பெருமான் அவனுக்கு இந்திரலோகத்தில் இன்பத்திற்கு மட்டுமே இடமுண்டு. இனவிருத்திக்கு இடமில்லையாதலால் ஆயிரம் யாகங்களைச் செய்து முடித்து இந்திரனாகும் தகுதி பெற்றிருந்த ஒரு மன்னனை அவனுக்கு மானசமைந்தனாகக் கொடுத்தார். அவனே ஜயந்தன் என்ற இந்திர குமாரனாவான் இந்த ஜயந்தனும் இவரை வணங்கிப் பேறுபெற்றான் என்பர்.திருநள்ளாற்றுப்புராணம் விரிவாகப் பாடப் பெற்றிருந்த போதிலும் அதில் தியாகேசரின் வரலாறு பற்றிய விளக்கங்கள் அதிகம் இல்லை.

தியாகேசர் வழிபாட்டில் முத்திரைகள்:தியாகராஜ வழிபாட்டில் அனேக முத்திரைகள் இடம் பெறுகின்றன. முன்னாளில் பூஜை செய்யும் அர்ச்சகர் முத்திரைகளை மந்திர பூர்வமாகச் சொல்ல ஆலய ஆடற்பணிப் பெண்கள் அந்த முத்திரைகளை அபிநயத்துக் காட்டினர். முத்திரைகள் தெய்வத்தன்மை பொருந்தியதாகப் போற்றப்பட்டன. முத்திரைகளைக் காட்டுவதால் தேவர்கள் மகிழ்கின்றனர் என்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன. இதனால் இதனைக் காட்டும் பெண்கள் சிறப்புடன் போற்றப்பட்டனர். இவர்கள் 'கைகாட்டும் முறைக்காரிகள்' என்றழைக்கப்பட்டனர்.

திருக்கோளிலி -  (திருக்குவளை)

அவனி விடங்கர்


திருக்குவளை என்றழைக்கப்படும் இத்தலம், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள கச்சனத்திலிருந்து 3 மைல் தொலைவில் உள்ளதாகும்.இங்கு ஆலயத்தின் வாயிலில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பிரமன் வெண்மணல் கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டுப் பேறு பெற்ற இடமாகும். சுவாமி பிரமபுரீஸ்வரர் என்றும் அம்பிகை வண்டமர் பூங்குழலாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.கருவறைக்கு இணையாகத் தென்பகுதியில் மகாமண்டபம், திருவோலக்க மண்டபத்துடன் கூடியதான தியாகராஜரின் சபை உள்ளது.

இதில் தியாகராஜர் பெரிய விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றார்.  முன்புறம் இரண்டு வீரகட்கங்கள் உள்ளன. மகாமண்டபத்தில் உலோகத்தாலான நின்ற இடபம் உள்ளது. எதிரே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவையாருடன் எழுந்தருளியுள்ளார்.  மகாமண்டபத்தின் முகப்பின் மீது பள்ளி கொண்டுள்ள திருமால் தனது மார்பில் தியாகராஜரை வைத்துப் பூஜிக்கும் காட்சி சுதைச் சிற்பமாக இடம் பெற்றுள்ளது.

இவருடைய பெயர் அவனி விடங்கர் என்பதாகும். இந்த அவனியைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டுவதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவரை ‘ஊழிப்பரன்’ எனவும், ‘செல்வத்தியாகேசர்’ எனவும் குறிப்பர். தேவாரத்துள் இப்பெருமான் ‘விண்ணுனோர் தொழுதேத்தும் விளக்கு’ என்று குறிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய நடனம் பிருங்கி நடனம் எனப்படும். பூவினில் தேனெடுக்கும் வண்டு அந்தப் பூவைச் சுற்றிச் சுற்றி எழுந்தும் தாழ்ந்தும் பறந்தும் பிறகு பூவில் அமர்ந்து குடைந்து தேன் குடித்து ஆடுவதுபோல் ஆடுதலின் இந்த நடனம் ‘பிருங்க நடனம்’ எனப்பட்டது. இங்கு மரகதக் கல்லால் அமைந்த விடங்கலிங்கம் உள்ளது. அதற்கு நாட்பூஜைகள் செய்யப்படுகின்றன. இவர்மீது திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி உலா' என்ற நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலில் திருக்கோளிலியின் புராணச் சிறப்புகள் தலவரலாறுகள் யாவும் சிறப்புடன் பேசப்படுகின்றன.

இக்கோயிலிலுள்ள பத்தொன்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ மன்னர்கள் காலத்தில் விளக்கிடவும் விழாக்கள் கொண்டாடவும் அடியவர்களுக்கு அமுது செய்விக்கவும், அளிக்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன. இதன்மூலம் இக்கோயிலில் முப்பது வட்டத்துக் காணி உடையார் என்ற சிவப்பிராமணர்கள் இருந்தனர். இவர்களிடம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்ற மன்னனின் 18வது ஆட்சியாண்டில் திருவாதிரை நாள்விழா கொண்டாட 800 பொற்காசு களைக் கொடுத்த செய்தி ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இங்கு முசுகுந்தார்ச்சனை சிறப்பாக நடைபெறுகின்றது. மாசி மகநாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நெல் அட்டித்தரும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அப்போது பஞ்ச மூர்த்திகள் குண்டையூருக்குச் சென்று விழா காண்கின்றனர்.மார்கழியில் தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிப்  பாததரிசனம் அளிக்கின்றார். சித்திரை மாதப்பிறப்பு அயன விழாக்கள் முதலிய நாட்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கோள் என்பதற்குக் குற்றங்கள் என்பது பொருள் இங்கு வழிபடும் அன்பர்களின் கோள் தன்னை இறைவன் நீக்கி அருள்பாலிப்பதால் இத்தலம் கோளிலி எனப்பட்டதென்பர். இறைவன் நவகோள்களாகிய நவகிரங்களில் குற்றங்களை நீக்கி அருள்பாலித்ததால் இத்தலம் கோளிலி எனப்பெயர் பெற்றதென்பர்.இது திருத்தருமபுரி ஆதினத்தின் அருளாட்சிக்கு உட்பட்ட கோயிலாகும்.

திருமறைக்காடு - புவனி விடங்கர்

நாகை மாவட்டத்தின் கடலோர நகரமாக விளங்குவது வேதாரண்யமாகும். இது திருமறைகளில் திருமறைக்காடு என்று போற்றப்பட்ட பழம்பதியாகும். இத்தலத்தின் மையத்தில் யாழைப்பழித்த மென்மொழியாள் உடனாய திருமறைக்காட்டு மணவாளர் (வேதாரண்யேஸ்வரர்) ஆலயம் பெருங்கோயிலாகத் திகழ்கின்றது. இந்த ஆலயத்தில் கருவறைக்கு இணையாகக் கிழக்கு நோக்கியவாறு பெரிய மகாமண்டபம் உள்மண்டபம் ஆகியவற்றுடன் கூடியதாகப் மிகப்பெரிய தியாகராஜரின் தனி ஆலயம் உள்ளது.

இதில் 'புவனி விடங்கர்' என்ற பெயரில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார்.இவருடைய சந்நதியில் 'புவனி விடங்கர்' என்ற மரகதலிங்கம் எழுந்தருளி வைக்கப் பட்டுள்ளது. உயர்வகை ஜாதி மரகதக் கல்லால் அமைந்த இந்த லிங்கம் விலை மதிப்பற்றதாகும். இதற்கு காலையிலும் மாலையிலுமாக இரண்டு வேளைகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.தேர் பழுதுபட்டிருப்பதால் பெருமான் வீதியில் எழுந்தருள்வதில்லை. மற்றபடி வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்களும் கிரகணபுண்ணியகால அபிஷேகங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

இவருடைய சந்நதிக்கு நேர் எதிரில் நின்ற இடபம் உள்ளது. அதற்குப் பின்னணியில் அமைந்த விமானத்தில் இவரைத் தொழுது நிற்பவராக சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளார்.
திருவாரூரில் நடப்பதுபோலவே பெருந்திருவிழாவில் சந்திரசேகருக்குப் பட்டம் கட்டும் 'பட்டோற்சவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.இக்கோயில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றது.

திருவாய்மூர் - நீலவிடங்கர்


திருவாரூரை அடுத்துள்ள திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவாய்மூர். சாலையோரத்திலேயே கிழக்கு நோக்கியவாறு கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தில் முன்புறம் சூரியதீர்த்தம் என்ற பெரிய தீர்த்தக்குளம் உள்ளது.ஒரே பிராகாரம் கொண்ட இக்கோயிலில் கருவறைக்கு இணையாகத் தெற்குப் பிராகாரத்தில் தியாகராஜரின் மண்டபம் அமைந்துள்ளது. இதில் அழகிய பெரிய மஞ்சத்தினுள் அமைந்த சிம்மாசனத்தில் நீலவிடங்கர் என்ற பெயரில் தியாகராஜர் கொலுவீற்றிருக்கின்றார். 

சப்தவிடங்கங்களில் உள்ள விடங்கர்களில் அளவால் சிறிய விடங்கர் இவரேயாவார். மேலும் இவருடைய சந்நதியில் அரிய நீல ரத்தினக் கல்லால் ஆன சிவலிங்கம் விடங்கராக வைத்துப் பூஜிக்கப்படுகின்றது. உயர்ந்த வகை ஸ்படிகலிங்கம் ஒன்றும் உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக ஏறத்தாழ இருபதாண்டு காலமாக இங்கு பெருந்திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. வைகாசி பெருந்திருவிழா ஏகதின உற்சவமாகக் கொண்டாடப்படுகின்றது.  அன்று பகலில் சந்திரசேகரர் தீர்த்தம் கொடுப்பதும் இரவில் பஞ்சமூர்த்தி விழாவும் நடைபெறுகின்றன.  திருவாதிரையின் போது தியாகராஜர் வசந்தமண்டபதிற்கு எழுந்தருள்கின்றார்.

இவருடைய நடனம் கமலநடனம் எனப்படும். தண்ணீர் நிறைந்த குளத்தில் தாமரை மலர் தென்றல் வீசுவதற்கேற்ப ஆடுவதுபோல இவர் ஆடுதலின் இவருடைய நடனம் கமலநடனம்  எனப்பட்டது.  தினமும் மாலையில் சிறப்பு வழிபாடும் அவ்வேளையில் வடையும், புட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இவருடைய கோயில் பொற்கோயில் என்றழைக்கப்படுகிறது. 

திருநாவுக்கரசர் திருவாரூரில் தியாகராஜப்பெருமாள் பவனிவரும் அழகைக் கண்டு பரவசமடைந்து 'ஆதிரை நாளால்' ஆது வண்ணம் என்று பாடியதுபோலவே வாய்மூர் அடிகளான தியாகேசர் பவனி வந்த அழகையும் கண்டு களித்துப் 'பாட அடியார் பரவக்கண்டேன்' என்ற பதிகத்தினை அருளிச் செய்துள்ளார்.

திருவாரூர் விழாவில் பக்தர்கள் பாடியாடி சித்தர்கள் சூழ்ந்து நிற்க, பதினெண் கணங்கள் உடன்வர, விநாயகரும், பார்வதியும் உடன்வர பக்தர்கள் கழல் வலங்கொண்டு உடன்வர, பெருமாள் வலம் வந்தது போலவே இங்கும் வலம் வந்த அழகைக் கண்ணாரக் கண்டு களித்து ‘வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே’ என்று பாடுவது படித்து இன்புறத்தக்கதாகும்.

சிவயோக சாதனையும்  சப்த விடங்கமும்

தியாகராஜப் பெருமான் கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் திருவாரூர் உள்ளிட்ட சப்த விடங்கத்தலங்கள் சைவ சமயத்தில் தனிச் சிறப்பிடம்  பெறுகின்றன. பொதுவாக இவற்றைச் சிவத்தலங்கள் என்ற முறையிலேயே சென்று வழிபடுகின்றோம். சிவயோக சாதனையாளர்களால் இத்தலங்களுக்குச் சிவயோக முறையில் சிறப்பான விளக்கம் தரப்படுகின்றது. அதன்படி இவை மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் உச்சியைத் திற்கும் வாயிலையும் சேர்த்த ஏழு தளங்களைக் குறிக்கும் குறியீடு என்பர்.

மேலும், சிவயோக சாதனையால் எழும் குண்டலினி சக்தியானது ஒரு ஆதாரத்திலிருந்து மறு ஆதாரத்திற்குச் செல்லும் நிலையையே தியாகராஜ நடனங்கள் குறிக்கின்றன என்றும் சிவயோகத் தியானத்தில் தோன்றும் ஒளிக்காட்சியையே விடங்க லிங்கங்கள் உணர்த்துகின்றன என்றும் கூறப்படுகின்றது. அவற்றைப் படிப்படியாக இக்கட்டுரை விளக்குவதைக் காணலாம்.பெறற்கரிய பேரின்பத்தையும், அளவற்ற ஆற்றலையும்  பெறுவதற்குப் பலவகையான நெறிகளைச் சைவசமயம் போதிக்கின்றது. அவற்றுள் ஒன்றே யோக சாதனையாகும்.

பல்வேறு சமயங்கள் பலவகையான யோக சாதனைகளைப் பற்றிப் பேசுவதால் சைவசமயம் பேசும் யோகசாதனை சிறப்புப் பெயரால் சிவயோக சாதனை எனப்பட்டது. இந்த யோகவித்தையைப் பயில்பவர்கள் சிவபெருமானை யோகேஸ்வரனென்றும், 'பரமயோகி' என்றும் அழைத்தனர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருமே தேவாரத்துள் பல இடங்களில் சிவபெருமானைப் 'பரமயோகி' என்று குறித்துள்ளதைக் காணலாம். திருவாரூரில் சிவபெருமான் தியாகராஜ கோலத்தில் ராஜயோகியாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றான் என்று யோக மார்க்கத்தினர் கூறுகின்றனர்.

யோக சாதனையின் முதல்படி, உடலில் கருவாய்க்கும், எருவாய்க்கும் நடுவில் உள்ள மூலாதாரம் என்னுமிடத்தில் பாம்பு வடிவில் சுருண்டு உறங்கிய நிலையில் இருக்கும் மூலாதார சக்தியை விழிப்புறச் செய்து அதனை மேல்நோக்கி எழுப்புவதாகும். இதனை எழுப்புவதற்குக் குருவின் அருளுடன் பிராணாயாமம் என்னும்  மூச்சுக் காற்றுப் பயிற்சியும் தேவையாகும்.

யோக சாதனையால் எழுந்த அச்சக்தியானது, (பின்னர் மூலாதாரத்திற்கு நான்கு விரற்கிடை) மேலுள்ள சுவாதிஷ்டானம், தொப்புளுக்கு நேரேயுள்ள மணிபூரகம், இருதயத்திலுள்ள அநாகதம், கழுத்திலுள்ள விசுத்தி, புருவமத்தியிலுள்ள ஆக்ஞா ஆகிய ஆறு இடங்களில் படிப்படியாக மேலேறிச் சஞ்சரித்துப் பின்னர் கபாலயவாயில் என்னும் பிரமரந்திரம் வழியாக வெளிப்பட்டுத் தலைக்குமேல் உள்ள ஸஹஸ்ராரம் என்னும் இடத்தை அடைந்து இறையின்பத்தை அனுபவிக்கின்றது.

இப்படி மனித உடலில்  உள்ளதாகச் சொல்லப்பட்ட ஆறு ஆதாரங்களும் கபாலவாயில் என்னும் ஏழாவது தலமுமே, பூவுலகில் சப்தவிடங்கத் தலங்களாக உள்ளன என்று கூறப்படுகின்றது. இனி இவை எவ்வாறு சப்தவிடங்கத் தலங்களோடு ஒன்றுகின்றன என்பதைக் காணலாம். இதில் முதலில் சொல்லப்படும் திருவாரூர் என்பது மூலாதாரத் தலமாகும்.

மூலாதாரத்தில் உயிர்ச்சக்தியாகிய குண்டலினி பாம்பு வடிவில்  கிடக்கின்றது என்பதைக் குறிக்கவே அங்கு பாம்புப் புற்றில் பெருமான் வீற்றிருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மூலாதாரத்தின் அதிதேவதை விநாயகர் ஆவார். இவர் மூலாதார கணபதி என்ற பெயரில் திருவாரூரில் தூணொன்றில் எழுந்தருளியுள்ளார்.

இரண்டாவதான சுவாதிஷ்டானம் என்ற ஆதாரத்தைக் குறிக்கும் தலம் திருக்காறாயில் ஆகும். இந்த இரண்டாவதான ஆதாரத்தைக் குண்டலினி சக்தி அடையும்போது யோக சாதனைகளைச்
சுற்றிலும், தெய்வீக மணம் கமழும் அந்தத் தெய்வீக வாசனையில் குறியீடாகவே இத்தலம் கருஞ் சந்தனமாகிய காறாயில் வனம் (கார்+அகில்) என்று அழைக்கப்படுகின்றது.அதனையடுத்து மூன்றாவதான மணிபூரகம் என்னும் ஆதாரம் நாகப்பட்டினம் என்று குறிக்கப்படுகின்றது. கட்டுக்கடங்காத சக்தியுடன் எழுந்த குண்டலினி சக்தி நிதானத்துடன் பாம்புபோல் வட்டமிட்டுச் சஞ்சரிக்கும் இடமாதலின் பாம்பையும், அதன் மணியையும் குறிக்கும் வகையில் இது நாகப்பட்டினம் எனப்பட்டது.

நான்காவது ஆதாரமான அனாகதத்தைக் குறிக்கும் தலம் திருநள்ளாறு ஆகும். ஏழு ஆதாரத்தளங்களில் இது நடுவில் இருப்பதால் (நள்+பாதி). ஆறு வழி பாதிவழியில் இருப்பது என்ற பொருள்பட நள்ளாறு எனப்பட்டது.ஐந்தாவதாக கண்டத்தில் விளங்கும் விசுத்தி என்பது திருக்கோளிலி என்ற தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. குண்டலினி சக்தி அநாகத்திலிருந்து விசுத்திக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாகும். உரியகுருவின்றி இச்சாதனையில் ஈடுபடுபவர்களுக்கு சாதனையில் கடும் மயக்கம் உண்டாகும்.

சமயத்தில் மரணமும் நேரும். இந்த இடத்தில் சாதகன் செல்வதை நெருப்பாலும் மயிர்ப்பாறும் மயிர்ப்பாலமும் என்று சித்தர்கள் பரிபாஷையில் கூறுவர். இதனைக் கடந்து விசுத்தியை அடைந்து விட்டால் குண்டலினி சக்தி வெற்றியடைந்து விட்டது என்றே கூறலாம். குண்டலினி சக்தியின்  குற்றங்களை நீக்கி மேன்மையடைய வைப்பதால் இது கோளிலி எனப்பட்டது (கோள்+ இலி = குற்றமில்லாத இடம்) என்பர்.

ஆறாவது ஆதாரமான ஆக்ஞா என்பதே திருமறைக்காடு எனும் தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது.  புருவமத்தியில் விளங்கும் ஆக்ஞா என்ற ஆதாரத்தில் சக்தியேறி நிற்கும் போது நெற்றிக்கண் என்னும் ஞானக்கண் திறக்கின்றது. இது திறந்து விட்டால் உலகிலுள்ள அனைத்து வேதங்களையும்  சாதகன் ஓதாது உணர்ந்து விடுகின்றான். அதனால் இது வேதவனம் என்றும் மறைக்காடு என்றும்
குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆறு ஆதாரங்களைக் கடந்த குண்டலினி சக்தி கபாலவாயில் வழியாக வெளிப்பட்டு தலைக்கு மேல் பன்னிரண்டு விரற்கிடை தூரத்திலுள்ள ஸஹஸ்ராரத்தை அடையும். ஏழாவதாக விளங்கும் கபால வாயிலே திருவாய்மூர் என்ற தலமாகச் சொல்லப்பட்டுள்ளது. திருவாகிய கடவுட்காட்சிக்கு வாயாக (வழியாக) இருக்கும் காரணத்தால்  இது திருவாய் மூர் என்றழைக்கப்பட்டது.எட்டாவதாக விளங்குமிடமே சிதம்பரப் பெருவெளியாகிய ஸஹஸ்ராரமாகும். இதில் சிவபெருமான் ஓயாது நடனம் புரிகின்றார்.

அதனால்தான் குண்டலினியின் ஆதி இருப்பிடமான திருவாரூரைச் சிதம்பரத்திற்கு மூத்த முதல் திருத்தலம் என்று குறிக்கின்றனர். அதனாலேயே திருவாரூரில் மாலை வழிபாட்டைக் கண்டவர்கள் சிதம்பரத்தில் கலைகளை ஒடுக்கும் நிகழ்ச்சியான அர்த்தசாமத்தையும் காண வேண்டுமென்றும் கூறுகின்றனர். இதன்மூலம் சப்தவிடங்கத் தலங்களின் பெயர்கள் யோக நெறியில் சொல்லப்படும் ஆதாரங்களோடு பொருளால் ஒன்று பட்டு நிற்றலை அறியமுடிகின்றது.

இனி தியாகராஜரின் நடனத்திற்கும், குண்டலினி சக்தி பயணம் செய்வதற்கும் உள்ள தொடர்பைக் காணலாம். குண்டலினி சக்தி மூலாதாரத்தில் விழித்தெழுந்து ஸஹஸ்ராரத்திற்குச் செல்லும் பாதையானது ராஜபாட்டை என்றும் யோகவழி என்றும் குலபதம்  என்றும் பலவாறு அறிஞர்களால் குறிக்கப்படுகின்றது. இவ்வழியில் குண்டலினி சக்தி ஒரே சீராகக் செல்வ தில்லை. முட்டிமோதி பலவகை சோதனைகளைக் கடந்தே வெற்றியை எட்டுகின்றது. இந்தப் பயணத்தின் பல்வேறு நிலைகளே தியாகராஜரின் நடனங்களாகச் சொல்லப்பட்டுள்ளது என்பர் யோகியர்கள்.

மூலாதாரத்தில் விழிப்புற்ற கனல், சுவாதிட்டானத்தை அடைய மேற்கொள்ளும் நிலையே திருவாரூர் தியாகராஜரின் அஜபா நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜெபிக்கப்படாத அஜபாமந்திர முயற்சியில் எழுந்த குண்டலினி கனலாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது. இதனால் சாதகனின் உடலில் வெப்பம் அதிகமாகிறது. இந்த சக்தி கட்டுக் கடங்காமல் நிலை கொள்ளாமல் குதிக்கும் தீக்கொழுந்தினை ஒத்ததாக உள்ளது.

'அஜபா' என்னும் சொல், 'வாய்வழியால் உச்சரிக்கப்படாதது' என்ற பொருளுடையது. நாம் ஒவ்வோர் முறை மூச்சுவிடும்போதும் 'ஸோஹம்' என்னும் மந்திரத்தை மனத்தால் உறைத்து நின்று எண்ணுதலே அஜபா தியானமாகும். இம்முறையில் தியானிக்கையில் ஒரு நாளுக்கு 21,600 முறை இதயத்திலுள்ள சிறு இடைவெளியில் ஏற்படும் அசைவே ஞான நடனமாகும். இவ்வசைவே அஜபா நடனமாகும். இதனையே 'ஊன் நில் ஆவி உயிர்க்கும்பொழுதெல்லாம் - நான் நிலாவி இருப்பன் என் நாதனை' என நாவுக்கரசர் ஆரூர்ப் பதிகத்தில் விளக்கியுள்ளார்.

சுவாதிஷ்டானத்திலிருந்து மணிபூரகம் செல்லும் கதியை உணர்த்துவது திருக்காரவாசல் தியாகரின் நடனமாகிய குக்குட நடனமாகும். இது துள்ளுதல் குறைந்து சண்டைக்குச் செல்லும் கோழி இடமும் வலமும் பார்த்துச் சாய்ந்து சாய்ந்து மிக எச்சரிக்கையுடன் செயல்படுவது போன்று அமைகின்றது. எச்சரிக்கையின்றி செயல்பட்டால் குண்டலினி சக்தி அவிந்து விடுவதுடன் மீண்டும் அதனை எழுப்பக் கடும் முயற்சி தேவை என்பதை இது உணர்த்துகின்றது. கோழியும் அக்னியும் மற்றொரு குறியீடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மணிபூரகத்திலிருந்து - அநாகத்தை அடையும் மனநிலையைக் குறிப்பது நாகைத் தியாகராஜரின் வீசி நடனம் என்கின்ற பாராவார நடனமாகும். முதலில்  மிக்க ஆவலுடன் ஆர்ப்பரித்து  கட்டுக்கடங்காது பயணம்  செய்த குண்டலினியின்  நிலை பின்னர் சற்று அடங்கிச் செயல்பட்டது. இங்கு இன்னும் அடங்கி கடல் அலைகள் கழன்று கழன்று விழுவதுபோல அமைந்திருக்கின்றது.

இதனால் பாராவார தரங்க நடனம் எனப்பட்டது. (பாரவாரம் - அலை, தரங்கம் - கடல்)இதனையடுத்ததாகிய அநாகதத்திலிருந்து விசுக்திக்குச் செல்லும் வழி கடுமையானதென்று முன்னமேயே கூறப்பட்டது. சாதகன் இதில் பயணம் செய்யும்போது இது அவனைப் பயித்தியக்காரனைப் போல ஆக்குகின்றது.

 அது தீர சாதகர்கள் பாகற்காயும்  தூதுவளைக்கீரையும்  உண்ணுகின்றனர். இந்த நிலை உன்மத்த நிலையாதலின் இந்த நடனம் உன்மத்த நடனம் எனப்பட்டது.  இதுவே அநாகதத்தில் வீற்றிருக்கும் நள்ளாற்று நம்பனின் உன்மத்த நடனமாக விளங்குகின்றது. அடுத்ததாக விசுத்தியிலிருந்து ஆக்ஞா என்ற ஆதாரத்திற்குச் செல்லும் வழி சற்று எளியதென்றாலும் அதிலும் பல தடைகளைக் கடக்க வேண்டியதாகிறது.

இந்தப் பயணம் மேலும் கீழும் பக்கவாட்டிலும், வட்டமிட்டும், சுழன்றும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இது பூவினைச் சுற்றி எழுந்தும் தாழ்ந்தும் வட்டமிட்டும் பறக்கின்ற வண்டின் ஆட்டத்திற்கு இணையாகச் சொல்லப்பட்டது. இந்தப் பிரமரநடனம் என்ற வண்டு நடனமே கோளிலிப் பெருமானுக்கு நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைபெற்று எல்லாவற்றையும் உணர்ந்து கொண்ட சக்தி அன்னம் நடப்பதுபோல் அடிமேல் அடிவைத்து அசைந்து அசைந்து சென்று கபாலவாயிலை அடைகின்றது. எனவே, இது ஹம்சபாத நடனம் எனப்பட்டது. இதுவே திருமறைக்காட்டுத் தியாகராஜரின் நடனமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இறுதியாகக் கபாலவாயிலைத் திறந்து கொண்டு மேலேசெல்லும் சக்தி தாமரைமலர் குளத்தின் நீரில் மெல்லிய நீரலைகளுக்கு ஏற்ப ஆடியாடி அசைவதுபோல வருத்தமின்றி எளிதாகச் செல்லுகின்றது. இதனால் இது கமல நடனமாகத் திருவாய்மூர் விடங்கர்க்குச் சொல்லப்பட்டுள்ளது.

இதன்மூலம் குண்டலினி சக்தி பயணம் மேற்கொள்ளும்  பலவகையான நிலைகளைக் குறிப்பதே தியாகராஜரின்  நடனங்கள் என்பதை உணரமுடிகின்றது. ஒளிக்காட்சியும் விடங்கலிங்கமும்இதனையடுத்து சாதகனுக்கு கோயசாதனையின் போது தோன்றும் ஒலி நிலைகளைக் காணலாம்.  யோகப் பயிற்சியின் போது சாதகர்களின் உள்ளுக்குள்ளேயே ஒளி தோன்றுகின்றது.

இந்தச் சாதனை வளர வளர ஒளியின் வண்ணம் மாறி மாறி அமைகின்றது. இதனைக்குறிக்கும் வகையில் தியாகராஜர் சந்நிதியில் வண்ண லிங்கங்கள்  அமைக்கப்பட்டுள்ளன என்பர்.  (இவற்றில் பெரும்பாலானவை இடம் மாறி விட்டன என்றும் அவற்றிற்குப் பதிலாக ஸ்படிகம் அல்லது மரகத லிங்கங்கள் வைக்கப்பட்டன எனவும் கூறுவர்).

யோக சாதகனின் உடலில் குண்டலினி எழுந்ததும்  அவன் தனக்குள்ளே அதிக சூட்டையும் செம்மணியின் ஒளிபரவுவதையும் உணர்கின்றான். அதுவே 'மாணிக்கத்திரள்' எனப்பட்டது. இதனையொட்டியே திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமான் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகின்றார்.இதனைக் கடந்து சுவாதிட்டானத்தை அடையும் போது சாதகன் (ஆரஞ்சு) இளஞ்சிவப்பு வண்ணமான காட்சியைக் காண்கின்றான். அதனைத் தொடர்ந்து மணிபூரகத்தினை அடையும்போது பொன்நிறமான மஞ்சள் ஒளிவெள்ளத்தைக் காண்கிறான். இதனையொட்டியே செம்மஞ்சள் நிறமான கோமேதலிங்கம் நாகப்பட்டினத்தில் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது.

இதனையடுத்த அநாகத்தினை அடையும்போது பச்சை ஒளி தோன்றுகின்றது. இதுவே பச்சைக்கல்லால் அமைந்த திருநள்ளாற்று மரகதவிடங்கராகப் போற்றப்படுகின்றது. இதனையடுத்து அவன் விசுத்தித் தலத்தில் கருநீல நிறத்தைக் காண்கிறான். அதற்கு மேலே புருவமத்தியில்  நீல நிறம் பிரகாசிக்கின்றது. இந்த நீல நிறம்  அறிவுக்கண்ணாக வெளிப்படும். ஆதலின் இது நீலலோகிதம் எனப்பட்டது. அதனையடுத்த கபாலவாயிலில் வெளிறிய நீல நிறம்  தோன்றுகின்றது. இதனைக் குறிக்கவே ஏழாவது தலமான திருவாய்மூரில் வீற்றிருக்கும் தியாகர் நீல விடங்கர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கு நீலக்கல் லிங்கம் வழிபாட்டில் உள்ளது.

இங்கு சொல்லப்பட்டவை ஏழு நிறங்கள் என்றாலும் இதனுள் பின்னால் சொல்லப்பட்ட கருநீலம், நீலம், வெளிர்நீலம் ஆகிய மூன்றுமே நீலநிறத்தின் சாயலேயாகும். எனவே சாதகன் நீலநிற ஒளியைத் தன்னுள் காண்பதே சாதனையின் வெற்றியாகக் கொள்ளப்பட்டது. இந்த வெற்றியை நினைவு கூறவே திருவாரூர் தியாகராஜரின் வலப்பக்கம் நீலநிறப்பாட்டில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்பர்.  மேலும் தியாகராஜருக்கு நீலநிறங்கொண்ட கழுநீர்ப் பூக்களால் (நீலோத்பலம்) அர்ச்சனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு பலவகையிலும் சிவயோக நெறியின் குறியீடாகவே தியாகராஜ வழிபாடு விளங்குவதை யோக அறிஞர்கள் குறித்துள்ளனர். இதுபற்றிய இன்னும் விரிவான விளக்கங்கள் பல நூல்களில் தகுந்த முறையில் விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.விடங்கத் தலங்களில்நவகிரகங்கள்சிவாலயங்களில் நவகிரகங்களை நிலைப்படுத்தி வணங்க பலவகையான முறைகளைப் பூசாபத்ததி நூல்கள் குறிக்கின்றன. இவற்றில் இரண்டு முறைகள் உள்ளன.

முதல்வகை ஆகம முறை என்றும் மற்றது வைதீக முறை எனவும் அழைக்கப்படும். ஆகமநெறிப்படி அமையும் நவகிரகப் பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கச் சுற்றிலும் அமைந்த கிரகங்கள் அவரை நோக்கியவாறோ அல்லது வெளிப்புறம் நோக்கியோ காட்சியளிக்கின்றார். வைதீக முறையில் அமையும் நவக்கிரக பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி நிற்க சுற்றிலும் கிரகங்கள் நாற்திசைகளையும் நோக்கி ஒன்றையொன்று பார்க்காத வண்ணம் நிலைப்படுத்தப்படுகின்றது.

இதற்கு முற்றிலும் மாறாகத் தியாகராஜ ஸ்தலங்களில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் தெற்கு அல்லது மேற்கு நோக்கியவாறு அமைக்கப்படுகின்றன. திருவாரூர், திருக்குவளை, திருவாய்மூர், நாகப்பட்டினம் முதலிய தலங்களில் இந்த அமைப்பைக் காணலாம். (அபூர்வமாகச் சில இடங்களில் 'ட' வடிவிலும் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.  தியாகராஜர் உயிர்களின் கோள்களை நீக்கி இன்பமளிப்பவர். அவருடைய சந்நதியில் நவகிரகங்களின் செயல்பாடுகள் இல்லை. அதனால் அவர்களுடைய வக்கிரங்கள் இன்றி ஒரே வரிசையில் நிற்கின்றனர். தியாகராஜரின் திருவருளால் எல்லோரும் எல்லாமும் பெற்று இனிது வாழ்க!